
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குச் சென்னையில் விரிவுபடுத்தப்பட்ட வானூர்தி முனையம் வேண்டுமென்பது பல்லாண்டுகளாகப் பேசப்பட்டு வருவதுதான். ஏறக்குறைய 5000 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தேடி பரந்தூர் பகுதியைத் தேர்வு செய்து, நிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்பட்டு, தொகையும் வழங்கப்பட்டுள்ளன. ஏகனாபுரம் என்ற ஊராட்சி மக்கள் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்துக் கடந்த சில ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடத்திவந்தனர். இந்த நிலையில், இப்போது இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பல நீர்நிலைகளும் நீர்வளங்களும் கொண்ட மேம்பட்ட விளைநிலங்கள் உள்ள பகுதியில், அவற்றை அழித்து வானூர்தி முனையம் அமையவேண்டுமா என்னும் வினா தொடக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு வந்தது. இதனால், சுற்றுச்சூழல் கேடுகள் நிகழலாம் என்னும் அச்சுறுத்தலையும் வல்லுநர் பலர் சுட்டிக்காட்டி வந்தனர். அங்கு வாழும் மக்களுடைய வாழ்நிலை சீரழியும் என்பதும் எடுத்துக்காட்டப்பட்டது.
மறுபுறம், தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றம், பொருளிய வளர்ச்சி போன்றவற்றுக்கான அடிப்படைகளின் தொடக்கப் புள்ளியாகப் போக்குவரவு தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்கித் தரவேண்டும் என்பதும் வலிமையாக எடுத்துரைக்கப்படுகிறது.
மாறுபட்ட கருத்துக்கள்
இவை அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்து இயற்கையாக அமைந்துள்ள நீர்நிலைகளின் இருப்பிற்குத் தீங்கு நேராமாலும், சூழல் மாற்றங்கள் ஏற்பட இயலாமலும், பகுதி மக்களது வாழ்நிலை தாழாமலும் இருப்பதற்கான கலந்துரையாடல்கள் விரிவாக நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்காக அமைக்கப்பட்ட மச்சநாதன் குழு அறிக்கையும் என்னவாயிற்று எனத் தெரியவில்லை.
நிலங்களைக் கையகப்படுத்தும் முனைப்பு ஒரு புறம் தொடர்ந்தது. இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு முழுமையான தொகை வழங்கப்பட்டுவிட்டதால், அந்த இடத்தில் வேறு தொழிற்பேட்டை அல்லது தொழில் திட்டம் கொண்டு வரலாம் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
அரசின் அறிவிப்பில் முரண்கள்
வேளாண் விளைநிலங்களில் உற்பத்திக்குக் கேடு வரக்கூடாது என்பதாலேயே வானூர்தி முனையத் திட்டம் வேறிடத்துக்கு மாற்றப்படுவதாகக் கூறும்போது, அந்த இடத்தில் வேறு தொழில்களை உருவாக்குவது அடிப்படையிலேயே முரணாகத் தோன்றுகிறது.
தொழில் முன்னேற்றமும் பொருளிய வளர்ச்சியும் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு முடங்கிவிடும் என்ற எதிர்ப்புக் குரல் எழுப்புவோர் கூற்றில் முழு உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள போக்குவரவுக் கட்டமைப்புகளும் முழுமையான பற்றாக்குறை நிலையில் இல்லை. வேண்டுமெனில் வேறு இடத்தில் அமைக்கலாம்.
இதைப் போலவே, வேளாண் நிலங்கள் காக்கப்பட்டன என்ற மகிழ்ச்சியிலும் நேர்மையைக் காண முடியவில்லை. அந்த நிலங்கள் மீளவும் விளைநிலங்களாக மாறப் போகின்றனவா என்கின்ற உறுதி இல்லை. அத்துடன், அங்கு வேறு தொழில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது, வேளாண் உற்பத்தி தொடரப்போவதில்லை.
இதிலிருந்து, தொழில் முன்னேற்றம், பொருளிய வளர்ச்சி, வேளாண் பெருக்கம் போன்ற எதிர்கால நடவடிக்கைகளில் அரசுக்கும், அரசின் முடிவினை எதிர்ப்போருக்கும் முழுமையான பார்வையும் கருத்தும் எதிர்நோக்குக் கொள்கைகளும் இல்லை என்பது உறுதியாகிறது.
உணவு உற்பத்தி அடிப்படையாகும்
பரந்தூர் என்ற இயற்கை அமைவிடம், வானூர்தி முனையத்துக்கு ஏற்றதா அல்லது வேளாண்மை உற்பத்தி தொடரவேண்டுமா என்பது குறித்துத் தகுந்த முறையில் ஆய்வு செய்து முடிவு காண்பதில் மாற்றுக் கருத்தில்லை.
பரந்தூர் மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் பின்புலத்தில், தொழில் முன்னேற்றம், வேளாண் வளர்ச்சி ஆகிய இரண்டும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்படுகின்றனவா என்பதுதான் இங்கு எழுந்துள்ள அடிப்படை வினாவாகும்.
இப்போது தொழில் முன்னேற்றம், பொருளிய வளர்ச்சி என்று முழங்குவோர் வேளாண் வளர்ச்சிக்காக எப்போதாவது தங்கள் குரலை ஒலித்திருக்கிறார்களா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏக்கமே எஞ்சுகிறது.
வேளாண் நிலைத் தன்மையே வளர்ச்சியை உறுதிப்படுத்தும்
மக்கள் தொகையினரில் 60%க்கும் மிகுதியானோர் ஊரகப் பகுதிகளில் வேளாண் தொடர்பான உற்பத்தியோடு பிணைந்து கிடக்கின்றனர். இதனால், இந்திய ஒன்றியத்தின் அல்லது தமிழ்நாடு போன்ற மாநிலத்தின் பொருளிய வளர்ச்சி என்பது வேளாண் உற்பத்தியோடு இணைந்திருக்கிறது.
நாட்டின் கூட்டு உற்பத்தியளவில் வேளாண்மையின் பங்களிப்பு கடந்த 20 ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது என்றாலும், வேளாண்மையே ஒன்றியத்தின் பொருளிய வளர்ச்சியினது நிலைத்தன்மைக்கு அடிப்படையாக உள்ளது என்ற உண்மையையும் புறக்கணித்துவிட முடியாது. இந்தப் பெரும்பான்மை மக்களின் வாங்கும் ஆற்றலைக் கொண்டுதான், இந்திய ஒன்றியத்தின் தொழில் முன்னேற்றமும் பொருளிய வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் உறுதிப்படுகின்றன என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
தொழில் முன்னேற்றத்துக்கான முதலீடுகளை ஈர்க்கப் பல வகையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களைக் கூவியழைத்துப் பல உதவிகளை வாரிவழங்கி, உடன்பாடுகள் கையெழுத்தாகின்றன.
மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் நில ஒதுக்கீடு, தடையில்லா மின் ஆற்றல், நீர் இணைப்பு போன்ற வாய்ப்புகளை மாநில அரசு உருவாக்கித் தருகிறது. இத்தகைய முயற்சிகளுக்கு ஒன்றிய அரசும் துணையாகிறது. வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைக்கின்றன. தொழில் இழப்புகள் ஏற்பட்டால், வெளிப்படையாக அறிவிக்காமல் ஆயிரக்கணக்கான கோடிகளில் வங்கிக் கடன்கள் தள்ளுபடியாகின்றன.
புறக்கணிக்கப்படும் வேளாண்மை
ஆனால், வேளாண் வளர்ச்சிக்கான முயற்சிகள், தொழில் வளர்ச்சிக்கு ஈடாக மேற்கொள்ளப்படுவதில்லை. தொடர்ந்து இழப்புகளைக் கண்டுவந்தாலும், தமிழ்நாட்டில், ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ. 15,000 கோடி அளவில் மட்டுமே உள்ள கூட்டுறவுக் கடன் தள்ளுபடிக்காக நீண்ட போராட்டங்கள் தொடர்கின்றன.
உரங்கள் போன்ற வேளாண் இடுபொருள்கள் குறைந்த விலையில் தரப்பட்டாலும், அதற்கு ஈடாகக் கொள்முதல் விலை குறைக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திப் பொருள்களுக்குத் தாங்களாகவே தக்க விலையினை முடிவு செய்யும் வாய்ப்புள்ளபோது, வேளாண் பொருள்கள் அரசின் கொள்முதல் விலையை எதிர்நோக்கியுள்ளன. உற்பத்திக்கான மின் இணைப்புக்கு இருபது ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. இயற்கை உரங்களைப் பற்றிப் பேசினாலும், அவற்றை உற்பத்தி செய்து தரக்கூடிய அளவில் நுட்பங்களையும் தொழில்களையும் உருவாக்க மாநில, ஒன்றிய அரசுகள் முற்படவில்லை.
பிற நாடுகளில், ஏக்கர் ஒன்றுக்கான உற்பத்தியைவிட, இந்திய ஒன்றியத்தில் உற்பத்தி அளவு குறைந்திருக்கிறது என்று புள்ளிகள் காட்டுகின்றன. இருப்பினும், இதை மேம்படுத்துதற்கான எத்தகைய ஆய்வு முயற்சிகளும் நடக்கவில்லை.
அறுவடை அல்லது உற்பத்தி நிறைவுக் கட்டங்களில் விலை வீழ்ச்சியினைக் கட்டுப்படுத்தவோ அல்லது அவற்றைக் குளிரகங்களில் காக்கவோ எத்தகைய திட்டங்களும் நடைமுறையில் இல்லை. தொழில்களைப் போன்று ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பில்லாமல், பயிர்செய் காலம், இடையில் களையெடுப்புப் போன்ற சீரமைப்புப் பணிகள், அறுவடை போன்றவற்றுக்கு இடையிலும், பருவ காலம் இல்லாதபோதும், ஊரகங்களில் வாழ்கின்ற செய்நுட்ப அறிவு கொண்ட வேளாண் மக்களுக்கும் வேளாண் உடல் உழைப்பினருக்கும் தொடர் வருவாய் தரத்தக்க எத்தகைய ஏற்பாடுகளும் இல்லை.
உற்பத்திப் பொருள் எதுவாக இருந்தாலும் அவற்றைப் பக்குவப்படுத்தி, மேம்படுத்துவதற்கான தொழில்களும் இல்லை; தொழில் நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
வருவாய் வாய்ப்பும் நுகர்வோர் நலனும்
ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். உலகம் முழுதும் உணவுப் பொருள் எதுவாக இருந்தாலும், அவற்றின் உற்பத்திச் செலவுக்கும் மக்களின் வாங்கி பயன்படுத்தும் ஆற்றலுக்குமான இடைவெளி பெரிதாகவே இருக்கிறது. இதனை அந்தந்த நாட்டினுடைய அரசுகள் பல்வேறு உதவிகள் வழியாக ஈடு செய்கின்றன.
உற்பத்தியாளர்களுக்குப் போதிய வருவாய் வரும் வகையிலும், வாங்கிப் பயன்படுத்துவோருக்கு ஏற்ற விலையிலும் கிடைப்பதற்குமான செயல் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. உணவு உற்பத்தியாளர்களது வருவாயும் நுகர்வோர் நலனும் காக்கப்படுகின்றன.
குறைந்த விலையில் உரம் போன்ற இடு பொருள்கள் சிலவற்றைத் தருவது உண்மைதான். ஆயினும், கொள்முதல் விலையினைக் கணக்கிடும்போது, அந்தக் குறைந்த விலை இடுபொருள் அடிப்படையில் விலை முடிவு செய்யப்படுகிறது. இதனால், வேளாண் மக்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எத்தகைய பயனும் கிடைப்பதில்லை.
குரல் தரும் கம்யூனிஸ்ட் கட்சிகள்
கம்யூனிஸ்டுக் கட்சிகளன்றி, வேறு எவரும் இவற்றுக்காகக் குரல் கொடுக்க முன்வருவதில்லை. இதனால், உழைக்கும் ஊரகப் பகுதியினரின் சிக்கல்கள், நகரத்தில் வாழ்வோரை மட்டுமல்ல, ஆட்சியாளரையும் உயர் அலுவலரையும் எட்டுவதில்லை. எட்டினாலும் அவர்கள் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை.
ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி செய்த கட்சிகளாக இருந்தாலும், ஆட்சிக்கு வர முடியாத கட்சிகளாக இருந்தாலும், அவர்கள் தொழில் முன்னேற்றத்தையும் பொருளிய வளர்ச்சியையும் பேசுகிறார்கள். ஆனால், உணவு உற்பத்திக்கான கட்டமைப்புகளை உருவாக்கக் குரல் கொடுப்பதுமில்லை; போராட்டங்கள் நடத்துவதுமில்லை: இயக்கங்களை முன்னெடுப்பதுமில்லை.
போதுமான கட்டமைப்புகள் இல்லாவிட்டால், பொருளிய வளர்ச்சி ஏற்படாது. இதனால், தொழில் தொடங்க முதல் போடுவோர் தயங்குவர் என்று கூறப்படுகிறது. இதுவே வேளாண்மைக்கும் பொருந்தும் என்பதைக் காண அனைவரும் மறுத்து விடுகின்றனர்.
வேளாண் உற்பத்திப் பொருள்களுக்குரிய விலை, அங்காடி ஏற்பாடுகள், மிகை உற்பத்தியின்போது காத்து வைக்கும் குளிரகக் கிடங்குகள், மதிப்புக் கூட்டும் தொழில் அமைப்புகள், உற்பத்தியை மிகுவிக்கும் நுட்பங்களின் அறிமுகம், இயற்கை உரம் போன்ற ஊக்கிகள், மின் ஆற்றல், நீர் வாய்ப்புகள் போன்ற அனைத்தும் முழுமையாக அமைந்தால்தான், உணவு தரும் வேளாண்மையைத் தொடர்வதற்கான மனநிலை உருவாகும். ஊரக உழைக்கும் மக்களும் பயன் பெறுவர்.
பரந்தூர் குறித்த உரையாடல்களில், வேளாண் மக்களுக்கு விடிவு கிடைக்கவேண்டும்.