இந்தியா

“மாற்றம் தேவை” நாடு தழுவிய நடைபயணம்: இடதுசாரித் திசையில் நாடு திரும்ப வேண்டும்

பொதுச்செயலாளர் டி.ராஜா நிறைவுரை

மாற்றம் தேவை நடைபயணப் பரப்புரை ஆகஸ்ட் 6 முதல் 15 ஆம் தேதி வரை நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. கட்சித் தோழர்கள் அனைவரும் மக்களைச் சந்தித்து பரப்புரையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நாடு தழுவிய “மாற்றம் தேவை’ நடைபயண பரப்புரை நிறைவு நிகழ்ச்சி – பொதுக் கூட்டம், சென்னை புரசைவாக்கத்தில் 15.06.2026 அன்று நடைபெற்றது. மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் மு.வரதன் தலைமை தாங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, “மாற்றம் தேவை’ நடைபயண பரப்புரையை நிறைவு செய்து சிறப்புரை ஆற்றினார். அவை வருமாறு:

“இந்தியாவுக்கு சுதந்திரம் சும்மா வந்துவிடவில்லை. இந்தச் சுதந்திரத்துக்காகப் போராடி இருக்கிறோம். குறிப்பாக கம்யூனிஸ்ட்கள் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து செயல்பட்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடைபெற்றப் போராட்டங்களில் கம்யூனிஸ்ட்கள் தூக்குக் கயிறை முத்தமிட்டவர்கள், துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கிக்கொண்டவர்கள், சிறைச்சாலை சித்தரவதைகளை அனுபவித்தவர்கள், உயிர்நீத்தவர்கள்.

கம்யூனிஸ்ட்கள்தான் நாட்டுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என முழக்கமிட்டுக் களத்திலே நின்றார்கள். கம்யூனிஸ்ட்களின் அளப்பரியத் தியாகத்தால் தான் விடுதலை பெற்றிருக்கிறோம். சுதந்திரத்தைப் போற்றுகிறோம்.

சுதந்திரத்துக்கு எந்த வகையிலும் பாடுபடாத, சுட்டு விரலைக்கூட அசைக்காத ஆர்.எஸ்.எஸ் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. வரலாற்றின் கேலிக்கூத்து என்று சொல்வார்களே, அதுதான் நடந்திருக்கிறது.

1925ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியும் 1925ல் தொடங்கப்பட்டது. தொடக்கப்பட்ட நேரத்திலேயே சதி வழக்கைச் சந்தித்த இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம்தான் என்பதை நான் பெருமையோடு சொல்கிறேன்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் கருவிதான் பாஜக.

இந்த பாஜக ஓர் அரசியல் கட்சி இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் செயல்படும், ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சுதந்திர இந்தியா இன்றைக்கு பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறது.

இந்தியா பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட நாடு. பல தேசிய இனங்கள் இருக்கின்றன. பல்வேறு மொழிகள் இருக்கின்றன. பல்வேறு கலாச்சாரங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் உள்ளடக்கித்தான் இந்தியா என்ற நாடு உலக அரங்கில் பயணிக்கிறது. இது ஒரு பன்முகப் பரிமாணம் கொண்ட நாடு என்று வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது, பாராட்டப்படுகிறது.

ஆனால், இந்தியாவை நிலைகுலைய வைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பன்முக இந்தியாவை ஒற்றைத் தன்மை கொண்ட இந்தியாவாக மாற்றத் துடிக்கிறது. அதனால்தான் இந்தியா பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். பிடியிலிருந்து இந்தியா காப்பாற்றப்பட வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜக அகற்றப்பட வேண்டும்.

நாடு நல்லதொரு மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும். இந்த மாற்றம் வரலாற்றுத் தேவையாக இருக்கிறது. இந்த மாற்றத்தை நோக்கி மக்கள் போராட வேண்டும். மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும் என்பதற்காகத் தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் 6ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தை, நடைபயண இயக்கத்தை அனைத்து மாநிலங்களிலும் நடத்தி இருக்கிறது. இன்றைக்கு (ஆகஸ்ட் 15) அந்த இயக்கம் நிறைவு பெறுகிறது.

ஆனால், இந்த அரசியல் இயக்கம் முடிகிறது என்று சொல்கிறபொழுது அது ஏதோ முடிவுக்கு வருகிறது என்று நீங்கள் கருதுவது கூடாது. முடிவுக்கு வருகிறபொழுது அது இன்னொரு தொடக்கத்துக்கு வழிகோலுகிறது.

செப்டம்பர் முதல் தேதி டில்லியில் ஒரு மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது. டில்லி இந்தியாவினுடைய தலைநகரம். அந்த தலைநகரத்தில் செங்கொடிப் பேரணி நடைபெற இருக்கிறது.

மணிப்பூரிலிருந்து மகாராஷ்டிரா வரை, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை எல்லா மாநிலங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் இயக்க போராளிகள், புரட்சியாளர்கள் டில்லியை நோக்கி வருவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.

சில மாநிலங்களில், ஆளும் பாஜக அரசாங்கம், ரயில்வே அமைச்சகம் தனி ரயில் விடுவதைக்கூட அனுமதிக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளை அடைத்து விட்டது. இருந்தபோதிலும், கட்சி ஆதரவாளர்கள், போராளிகள் திட்டமிட்டபடி டெல்லியை அடைகிறோம் என்ற உறுதியுடன் பயணிக்க இருக்கின்றனர். டெல்லி தலைநகரம் செங்கொடிகளின் பேரணியை எதிர்கொள்ள இருக்கிறது. மோடி அரசாங்கத்துக்கு இது ஓர் எச்சரிக்கையாக அமைய இருக்கிறது.

டெல்லி – செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் மோடி எழுப்பிய முதல் பிரச்சினையே டிமாகி நக்சலைட்.

டிமாகி நக்சலைட்ஸ் என்றால் என்ன பொருள்? “நக்சல்பாரிகளை ஒழித்திருக்கிறோம், ஆனால் நக்சல்பாரிகள் மனநிலையில் இருப்பவர்கள் நாட்டுக்கு எதிராக இருக்கிறார்கள்” என்று மோடி பேசினார்.

நக்சல்களின் மனநிலையில் இருக்கிற மக்கள் என்று பார்த்தால், இந்தியாவில் இருக்கிற, பாடுபடுகிற, உழைக்கக் கூடிய மக்கள் அனைவரும் இந்த ஆட்சிக்கு எதிராக சிந்திப்பவர்கள்தான். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று போராடுபவர்கள்தான்.

அதை எப்படி மறுப்பது?

மோடி அரசாங்கம் பின்பற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகளால் தான், நாடு இன்றைக்கு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது.

நக்சல் மனோபாவம் கொண்டவர்கள் என்று பேசுகிற மோடியை கேட்கிறேன்,

இந்தியாவை ஒரு மதவாத நாடாக மாற்ற வேண்டும், இந்தியாவை ஓர் ஒற்றைப் பரிமாண நாடாக மாற்ற வேண்டும் எனத் துடிப்பது ஆர்.எஸ்.எஸ்.தான். வலதுசாரி பிற்போக்கு சக்திகள்தான். அவர்களைப் பற்றி பிரதமர் மோடி பேச மாட்டார்.

இந்திய சுதந்திரத்துக்கு எதிராக இருப்பவர்கள் யார்?

நக்சல்பாரிகள் என்று பேசுகிறீர்களே, நக்சல்பாரிகளின் போராட்ட வழிமுறையில் எங்களுக்கு வேறுபாடு உண்டு. ஆனால், நக்சல்பாரிகள் ஆட்சியாளர்களைத்தான் கேள்வி கேட்கிறார்கள். ஆட்சியாளர்கள் பின்பற்றுகிற கொள்கைகளைத்தான் கேள்வி கேட்கிறார்கள்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். அதைச்சார்ந்த அமைப்புகள் எல்லாம் இந்தியாவினுடைய ஆட்சி அதிகாரத்தையே மாற்ற வேண்டுமென்று விரும்புகிறார்கள். திருவாளர் மோடி, இதற்குப் பதில் சொல்லத் தயாரா?

பாஜக அரசாங்கம் மக்கள் விரோத அரசாங்கம். அது பின்பற்றும் கொள்கைகள் நாட்டு நலனுக்கு எதிரான கொள்கைகள். மக்கள் நலனுக்கு எதிரான கொள்கைகள்.

அதனால்தான் இந்தியாவை ஒரு மாற்றுப் பாதைக்குக் கொண்டு செல்லவேண்டும். அந்த மாற்றுப் பாதைக்கான போராட்டத்தைத் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி இயக்கங்களும் தீவிரமாக நடத்தி வருகின்றன.

நம்முடைய சுதந்திர இந்தியா எல்லோருக்குமான இந்தியாவாக, எல்லோரும் எல்லா வாழ்வாதாரங்களைப் பெற்று நலமோடு வாழ்கிற இந்தியாவாக அமைய வேண்டும்.

அப்படிப்பட்ட இந்தியா உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாற்றம் வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறது.

அந்த மாற்றம் இடதுசாரிப் பக்கமான மாற்றமாக இருக்க வேண்டும்.

சோசலிச சமுதாயத்தைப் படைப்பதற்கான மாற்றமாக அமைய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” -இவ்வாறு பொதுச்செயலாளர் டி.ராஜா உரையாற்றினார்.

இந்த “மாற்றம் தேவை’ நடைபயண பரப்புரை நிறைவு நிகழ்ச்சி – பொதுக் கூட்டத்தில், மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் நடைபயண பரப்புரை இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.சிவா, த.கு.வெங்கடேஷ் வேம்புலி, எஸ்.ஏழுமலை, லி.உதயக்குமார் மற்றும் இரா.தமிழ்பெருமாள், செண்பகம், திவ்யா, தனலட்சுமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button