கட்டுரைகள்

மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு: ‘நீட்’ நீக்கமே நிலையான தீர்வு

மே.து.ரா.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்த விவரங்கள் வெளிப்பட்டதால், மே மூன்றாம் நாள் நடந்த தேர்வுகள் நீக்கப்பட்டு, மீண்டும் மே 21ஆம் நாள் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது.

‘நீட்’ என அழைக்கப்படும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இந்திய ஒன்றியம் முழுவதும் உள்ள மருத்துவம், பல் மருத்துவம் போன்ற பல்வேறு உடல் நலம் சார்ந்த படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது.

தொடரும் வினாத்தாள் கசிவுகள்

ஒன்றிய அரசு தொடர்புள்ள தேசியத் தேர்வு முகமை 2019ஆம் ஆண்டிலிருந்து ‘நீட்’ தேர்வினை நடத்திவந்தாலும், இதன் வெளிப்படைத் தன்மையும் நம்பகத் தன்மையும் பல அய்யங்களை எழுப்பிவந்தன. தேர்வெழுதும் இடத்தினைத் தொலைவில் உள்ள மாநிலங்களில் ஒதுக்குதல், தேர்வெழுத வரும் மாணவ, மாணவியரின் ஆடை அணிகலன்களைக் களையச் செய்து கெடுபிடியுடன் இழிவு செய்தல் போன்ற அத்துமீறல்கள் எப்போதும் குறையவில்லை.

ஒவ்வோராண்டும் ஏதோவொரு வகையில் ஆங்காங்கே வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தும், அவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கித் தள்ளிப் புறக்கணித்தது.

ஆனால், இந்த ஆண்டு இராசத்தான், கேரளா, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு உறுதிப்பட்டதால் வேறு வழியின்றி மறு தேர்வு நடத்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலியே பயிரை மேய்ந்ததுபோல வினாத்தாள் உருவாக்கும் பணியில் இருந்த பேராசிரியர்கள் இருவரே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அரசமைப்புச் சட்டத்துக்கு மாறான தலையீடுகள்

வினாத்தாள் உருவாக்கும் பணியில் இருப்போர் பயிற்சி நிறுவனங்களை நடத்தக்கூடாது என்ற விதிகளையும் மீறி மறைவாக இவர்கள் பயிற்சி வகுப்புகளையும் நடத்திவந்துள்ளனர். தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை ரூபாய் பத்து லட்சங்களுக்கு மேல் பெற்று விற்றுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்ததைப் பலருக்கும் விற்று வினாத்தாள்களை விற்பனைப் பொருளாக்கிவிட்டனர். இந்த இரண்டு பேராசிரியர்களுடன் பலர் தளைப்படுத்தப்பட்டுள்ளனர்

இதை ஏன் ஒன்றிய அரசு விடாப்பிடியாக நடத்திக்கொண்டிருக்கிறது?

அரசமைப்புச் சட்டத்தில், உயர் கல்வித் தரத்தினைப் பேணும் உரிமை மட்டுமே ஒன்றிய அரசுக்குத் தரப்பட்டுள்ளது (இணைப்பு 7, எண் 66). ஆனால், மாநில அரசின் பொறுப்பில் உள்ள அன்றாட நடைமுறை மற்றும் மேலாண்மைப் பணிகளில் ஒன்றிய அரசு தலையிட்டு வருகிறது. இதில், நுழைவுத் தேர்வும் சேர்க்கிறது.

பயிற்சி நிறுவனங்களுக்குப் பணியும் பா.ச.க.

பல்வேறு படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுப் பயிற்சி நடுவங்களைப் பெருமளவில் நடத்திக்கொண்டிருக்கின்ற ராசத்தானில் உள்ள கோட்டா நகரமும் தற்போது கேரளா, மராட்டியம் போன்றவற்றில் மிகுந்துவரும் பயிற்சி நடுவங்களும் நுழைவுத் தேர்வினை பா.ச.க.வின் ஒன்றிய அரசு வழியாக அழுத்தம் கொடுத்துத் தொடரச் செய்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

ஒன்றிய அரசைப் பொருத்தவரை, மேல் சாதியினரும் செல்வம் படைத்தோரும் பயனடைகின்ற நுழைவுத் தேர்வில் ஈடுபாடு காட்டுவதில் வியப்பில்லைதான்.

2022இல் வினாத்தாள் கசிந்தபோது, இசுரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருட்டிணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பல பரிந்துரைகளைத் தந்தும், அவற்றைத் தேசியத் தேர்வு முகமை கடைப்பிடிக்கவில்லை.

இன்னும் தெளிவாகச் சொன்னால், அப்படி அந்தப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டிருந்தாலும் வினாத்தாள் விற்பனை தடுக்கப்பட்டிருக்கப் போவதில்லை.

தேர்வு நடக்கும் இடங்களுக்கு நேரிடையாக வினாத்தாள்களை இணையவழி அனுப்பி, அங்கேயே வினாத்தாள்களை அச்சிட்டுக்கொள்வது, தாள் போன்ற எழுதுபொருள்களைப் பயன்படுத்தாமல் நேரடியாகக் கணினிவழியில் தேர்வு நடத்துவது, ஒரு மாணவன் எவ்வளவு முறை ‘நீட்’ தேர்வினை எழுதலாம் என்பதைக் கட்டுப்படுத்துவது போன்ற பரிந்துரைகள் வினாத்தாள் கசிவுக்குத் தீர்வாக அமையவில்லை. ஏனெனில், இவை வினாத்தாள் உருவாகும்போது ஏற்படும் திருட்டை நிறுத்துவதற்கான பரிந்துரைகளாக இருக்கவில்லை.

வினாத்தாள் உருவாகும் இடத்திலேயே கள்ளர்களும் கயவர்களும் இருக்கின்றனர். அவர்களிடம் பெருந்தொகை கொடுத்து வாங்கித் தங்களது மாணவர்களுக்குத் தருகின்ற வளமான பயிற்சி நடுவங்களும் காத்திருக்கின்றன.

தகுதியைக் காணாத நுழைவுத் தேர்வு

இந்த நிலையில், வினாத்தாள் கசிவு என்பதற்கு மேலாக நுழைவுத் தேர்வில் தகுதி உறுதி செய்யப்படுகிறதா என்பதைத்தான் முதலில் காணவேண்டியுள்ளது. தகுதிக்கும் அப்பால், இந்தத் தேர்வு எப்படி நடத்தப்படுகிறது என்பதையும் பார்க்கவேண்டும்.

மாணவரின் தகுதியினைக் கண்டறிந்து மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது என்ற கூற்று நடைமுறையில் உண்மையாகவும் தெரியவில்லை.

அரசு அல்லாத தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு அல்லாத இடங்களுக்கு லட்சக்கணக்கில் பெருந்தொகை கட்டணம் கட்டினால் மட்டுமே இடம்பெற முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஊர்ப்புறத்தில் இருக்கின்ற ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெருந்தொகையினைக் கல்விக் கட்டணமாகச் செலுத்த முடியாதபோது, அவர்கள் மிகுமதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் சேர முடிவதில்லை.

அப்போது மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற செல்வ மாணவர்கள் ‘நீட்’ தேர்வினை எழுதிய ஒரே அடிப்படையில் மட்டும் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், பல மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பாத நிலையில் 0 (சுழி) அல்லது அதற்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்கூட மருத்துவ மாணவர்களாக மாறுகின்றனர்.

தகுதியினை நிலைநாட்டுவதற்கான நுழைவுத் தேர்வு என்பது இங்கு ஒரு மோசடி நாடகமாகவே நடத்தப்பட்டு வருகிறது.

நுழைவுத் தேர்வு என்னும் நுட்பமான மோசடி

மருத்துவ நுழைவுத் தேர்வு 180 வினாக்களுடன் 720 மதிப்பெண்களைக் கொண்டது. இயற்பியல் 45 வினாக்கள், வேதியல் 45 வினாக்கள், உயிரியல் 90 வினாக்கள் என அமைந்து ஒவ்வொரு பொருத்தமான விடைக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். இந்த நிலையில் வெறும் 0 மதிப்பெண் அல்லது அதற்கும் கீழ் ஒருவர் பெறமுடியும் என்றால், அவரது தகுதி எப்படியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இத்தகையோரும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் இருப்பின் சேரலாம் என்று ஒன்றிய அரசே அறிவிக்கிறது என்றால் தகுதி வெறும் கண்துடைப்புதான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒன்றிய அரசின் 11, 12ஆம் வகுப்புப் பாடத்திட்டம்தான் நுழைவுத தேர்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஏறக்குறைய 85% மாணவர்கள் தங்களது மாநிலப் பாடத்திட்டத்திலேயே பயில்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்வோராவர்.

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டாலும், தாங்கள் பள்ளிகளில் படிக்காத அல்லது அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படாத ஒரு பாடத்தில் தேர்வினை எழுதவேண்டும் என்று வற்புறுத்துவது வஞ்சம் நிறைந்ததாகும்.

ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தைப் படிப்போராக இருந்தால், தாங்கள் படித்ததையே, தாங்கள் ஏற்கெனவே தேர்வு எழுதிய பாடத்தையே மீண்டும் எழுதும்போது பயன் பெறுகின்றனர்.

எளியோரை ஒதுக்க ஏற்படுத்திய முறைகேடு

மாநில அரசு நடத்தும் 11, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் ஒன்றிய அரசுக்கு நம்பிக்கை இல்லை என்று எடுத்துக்கொள்வதைவிட, பலரை ஒதுக்க ஒரு வாய்ப்பு என்பதே பொருந்துகிறது.

இணையான வாய்ப்பினைக் கொடுக்காமல், பாடத்திட்ட முரண்களை நுழைத்து, அவற்றின் வழியாகத் தகுதியைக் காண்போம் என்று கூறுவதே அடிப்படையில் மாணவர்களை ஏமாற்றுவதாக அமைகிறது. முறைகேடு என்பதே முழுதும் பொருந்தும்.

இவற்றுக்கு மாறாக, கற்கும் அறிவின் ஆழம், முடிவெடுக்கும் ஆற்றல், மதிப்பிடும் கால அளவு, மதிப்பிடும் முறை, ஆய்வுத் திறன் ஆகியவற்றை அளவுகோல்களாகக் கொண்ட தேர்வு முறை ஒன்றிருந்தால், அது பொருந்துவதாகக்கூட இருக்கலாம்.

ஆயினும், நமது பள்ளிகளில் விவரங்களை அறிந்துகொள்வதுதான் பள்ளி, கல்லூரிகளின் அடிப்படை நோக்கமாகும்.

மாணவர்களுக்குக் கற்றுத் தராத அல்லது அவர்களது பாடத்திட்டத்தில் இல்லாத தகுதி அளவுகோல்களைப் புகுத்துவதுகூட இயற்கை நெறிகளுக்கு முரணானதாகவே அமைந்துவிடும்.

பொருத்தமில்லாத. ஏமாற்றும், அலைக்கழிக்கும் நுழைவுத் தேர்வினை முழுமையாக நீக்கிவிட்டு, மாறாக 10, 11, 12ஆம் வகுப்புகளில் பெறும் மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்குச் சேர்க்கை நடைபெறுவதுதான் தொடர்ந்து தகுதியினைத் தக்கவைத்துக்கொள்ளும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையாகும். இந்தப் பொறுப்பினை மாநில அரசுகள் செம்மையாகச் செய்துவிடும்.

தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நுழைவுத் தேர்வினை முற்றிலும் அகற்றுவதுதான் முழுமையான தீர்வாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button