மாநில செயலாளர்

மக்களோடு உரையாடும் தார்மீகம் இடதுசாரிகளுக்கே உண்டு!

மாநிலச் செயலாளர் கடிதம்

அன்பார்ந்த தோழர்களே வணக்கம்!

தாராபுரம், மதுராந்தகம் இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தொடர்கின்றன. புதுவையிலும் தட்டாஞ்சாவடி தொகுதியில் நமது கட்சி இடதுசாரிக் கட்சிகளோடு இணைந்து போட்டியிடுகிறது.

தாராபுரம், மதுராந்தகம், தட்டாஞ்சாவடி மூன்று தொகுதிகளிலும் நேரில் சென்று பணிகளில் ஈடுபட்டபோது தோழர்களின் ஆர்வமும், நமது நட்பு சக்திகளின் விருப்பங்களும் வெளிப்பட்டன.

தாராபுரத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து அவர்களை மக்கள் சூழ்ந்து பாராட்டுகிறார்கள். எளிய மக்களின் சட்டமன்றக் குரலாக அவரைக் கருதுகிறார்கள்.

மூன்று தொகுதிகளிலும் மக்களோடு நமது வேட்பாளர்கள் சுகந்தி, லட்சுமணன், சலீம் உரையாடல் செய்கிறார்கள்.

மக்களை முகம் பார்த்து சந்தித்து உரையாடும் தார்மீகம், அரசியல் தார்மீகம் நமக்கு உண்டு.

இடைத்தேர்தல் பதவி, பண மோகங்களால் திணிக்கப்பட்டது. நாம் பார்வையாளராக இருக்க முடியாது. தேர்தலை அரசியல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்கிறோம்.

மக்களை நீண்ட நெடுங்காலம் அரசியலுக்கு அப்பால் நிறுத்தும் முயற்சிகள் தொடர்கிறது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் மக்களை திரட்டிப் பேசும்போது அரசியலுக்கு அப்பால் நின்று பேசுகின்றார்கள்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான்.

அரசியல் சமத்துவத்தின், அரசியல் ஜனநாயகத்தின் அடித்தளம் வாக்குரிமைதான்.

ஒருவருக்கு ஒரு வாக்கு – ஒரு மதிப்பு!

சமூகத்திலும், பொருளாதாரத்திலும் இவ்வாறு இல்லை. அசமத்துவம்தான் நிலவுகிறது. முதலாளித்துவ திசைவழிதான் தொடர்கிறது.

இதற்கு விதிவிலக்காக மக்களின் வாக்குரிமை திகழ்கிறது.

இதனையும் பிஜேபி ஆட்சியாளர்கள் குறிவைத்து சிதைக்கிறார்கள்.

தேர்தல் தலைமை ஆணையர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் கைப்பொம்மையாக மாறிவிட்டார்.

13 கோடி வாக்காளர்களை நீக்கி, ஜனநாயகத்தைப் படுகொலை செய்துள்ளனர்.

இதனைக் கண்டித்து தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரியும், பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்தப் படுகொலைக்கு பொறுப்பேற்க வலியுறுத்தியும் இடதுசாரிகளின் நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது.

அக்டோபர்-1 மாநிலம் முழுவதும் இடதுசாரிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தோழர்களே,

4, 5 தேதிகளில் கட்டடத் தொழிலாளர்கள் மாநாடு-கோவில்பட்டியில்.

9, 10, 11 தேதிகளில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில மாநாடு-ஓசூரில்.

அதற்கடுத்து,

இடதுசாரிகளின் மாநிலம் தழுவிய பேரணி – தோழர் ஆர். நல்லகண்ணு படத்திறப்பு – இடையில் மாநிலக் குழுக் கூட்டம் – இப்படி ஏராளமான கட்சிப் பணிகள்.

நமது மாவட்டக் குழுத் தோழர்கள், முன்னணித் தோழர்கள் – வர்க்க – வெகுஜன அமைப்புத் தலைவர்கள் என பலரும் இடைத்தேர்தலில் பணியாற்றுகின்றார்கள்.

தாராபுரம் நமக்கு தளம் நிறைந்த பகுதி அல்ல – இருப்பினும் அதன் அனுபவம் எழுச்சியூட்டுகிறது.

மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி எங்கேயும் மக்கள் நம் மீது முகம் சுளிக்கவில்லை.

செங்கொடி ஏந்திய தோழர்களுக்கு இரு கரம் கூப்பி முகமன் கூறுகிறார்கள்.

காசு, பணங்களைக் கொண்டு வாக்குரிமையை விலை பேசும் கூட்டத்தினர் முன் – அதிகாரங்களை-ஜாதி-மதங்களை தேர்தல் முதலீடுகளாய் பாவிக்கின்ற அரசியல் கட்சிகளின் முன்-

கொள்கை வீரர்கள் – லட்சியப் பதாகை – கிராமங்கள் தோறும் சுடர் விடுகிறது

முதல் சுற்றிலேயே – வேட்பாளர்களின் அறிமுகத்திலேயே – நாம் தார்மீக வெற்றி பெற்றுள்ளோம்.

நாட்டை இடது பக்கம் திருப்பும் மகத்தான அரசியல் போரில் – இடைத்தேர்தல் ஓர் பயிற்சிக் களம்.

முன்னேறுவோம் தோழர்களே பாடுபடும் மக்களின் சுடர்க் கொடியை உயர்த்துவோம்!

தோழமையுடன்
மு.வீரபாண்டியன்
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button