மாநில செயலாளர்

இளைஞர், மாணவர் போராட்டம் தொடரும்!

மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேச்சு

சென்னையில் ஜந்தர் மந்தர் 2.0 போராட்டத்தில் திரண்டிருந்த மாணவர்கள், இளைஞர்களிடையே 2ஆம் நாளான 23.10.2026 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசியதாவது:

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் இங்கே இருக்கிறார்கள். பல்வேறு இடர் மிகுந்த சூழலிலும் போராட்டங்களை நீங்கள் முன்னெடுக்கிறீர்கள். இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இந்தியாபோல் பலகட்சி இயங்கும் முறை கொண்ட நாடு இல்லை. இந்தியாபோல் பன்முகம் பேணுகிற நாடு உலகில் வேறு இல்லை. இந்தியாபோல் ஒரு கூட்டிசைவு நாடு உலகில் இல்லை. இந்தியா போல் ஒரு நல்லிணக்க நாடு உலகில் இல்லை. இந்தியாபோல் சட்டத்தின் ஆட்சிமுறை நிலவுகிற நாடு உலகில் இல்லை. இவ்வளவு சிறந்த ஒரு தேசம், இரண்டு தூண்களில் கட்டப்பட்டிருப்பதாக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறுவார்.

ஆனால், இந்தத் தேசத்துக்கான இரண்டு தூண்கள் இருக்கிறது. ஒன்று மதச்சார்பின்மை. உலகின் வேறு எந்த நாட்டிலும் காணக் கிடைக்காத இந்த பன்முகத்தின் அடித்தளமாக மதச்சார்பின்மை நிலவுகிறது.

இந்தியாவில் பல நூறு மொழிகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவுக்கு என்று ஒரு மொழி இல்லை. சட்ட வடிவில் இல்லை. இந்தியாவில் பல நூறு மதங்கள் இருக்கின்றன. இந்தியாவுக்கு என்று ஒரு மதம் இல்லை. பல நூறு கலாச்சாரங்கள் இருக்கின்றன. இந்தியாவுக்கு என்று ஒரு கலாச்சாரம் இல்லை. எனவேதான், உலகத்திலேயே இந்தப் பன்முகத்தை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். இந்த பன்முகத்தின் அடித்தளமாக இருக்கின்ற மதச்சார்பின்மையை ஒன்றிய அரசு குறிவைக்கிறது. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். குறி வைக்கிறது. எனவே, இந்தப் போர் மதச்சார்பின்மையைப் பாதுகாக்கிற போர். டாக்டர் அம்பேத்கர் போன்ற மேதைகள் சொல்கின்ற அடுத்த தூண் வாக்குரிமை.

இந்தியாவினுடைய பொருளாதாரத்தில் சமத்துவம் நிலவவில்லை. 30, 40 கோடி பேர் உழைப்பதை 4பேர் சுரண்டுகிறார்கள். தேசத்தின் பிடியில் இருக்க வேண்டிய செல்வங்கள் தனி நபர் மடியில் சுரண்டல் வடிவில் இருக்கிறது. இதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது. நாடாளுமன்றமும், சட்டமன்றமும் இதுபற்றிப் பேச அஞ்சுகிறது. எனவே, பொருளாதாரத்தில் ஜனநாயகம் இல்லை. சமத்துவம் இல்லை.

சமூகத்தில் சமத்துவம் இல்லை. ஜனநாயகம் இல்லை. சமூகத்தில் ஆண் உயர்வு, பெண் தாழ்வு இன்றுவரை. பிறப்பால் ஒருவர் உயர்வு, இன்னொருவர் தாழ்வு. எனவே, சமூகத்தில் ஜனநாயகம் இன்னும் மலரவில்லை. வடிவம் பெறவில்லை. பொருளாதாரத்தில் ஜனநாயகம் இன்னும் மலரவில்லை. வடிவம் பெறவில்லை. நம்மிடம் இருக்கிற ஒரே ஜனநாயகம், ஒரே சமத்துவம் நம் கரங்களில் இருக்கிற வாக்குச்சீட்டுக்கு ஒரே மதிப்பு.

ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்பது ஜனநாயகத்தின் குறியீடாக, சட்டத்தின் ஆட்சிமுறையின் குறியீடாக, பலகட்சி இயங்கும் முறையின் குறியீடாக விளங்குகிறது.

ஒருவரின் வாக்குரிமையைப் பறிப்பதே சட்டப்படி குற்றம். 13 கோடி பேரின் வாக்குரிமையைப் பறித்திருக்கிறார். இது உள்துறை அமைச்சருக்குத் தெரியும். பிரதமருக்குத் தெரியும். ஆனால், ஏதும் தெரியாத பார்வையாளர்கள்போல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தலைநகரில் போராடுகிறார்கள், நாடு முழுதும் போராட்டம். நல்லறிஞர்கள் பலர் எதிர்க்கிறார்கள். எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன. இதில் எதற்கும் பதில் இல்லை. எதற்கும் அரசியல் மறுமொழி இல்லை. இந்தியாவில் ஏதும் நடக்காததுபோல் நாட்டின் பிரதமர் கண்களை மூடிக்கொள்கிறார்.

எனவேதான், மாணவர்களும், இளைஞர்களும் போராட்டக் களங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களைத் தூண்டிவிடுவதாகச் சொல்கிறார்கள்.

  • எந்தப் போராட்டங்களும் தூண்டி விடுவதால் ஏற்படுவதில்லை.
  • போராட்டங்கள் யாவும் தன்னியல்பானவை.
  • போராட்டங்கள் அறிவோடு சம்பந்தப்பட்டவை.
  • தன்னியல்பில் தன்னுணர்வோடு சம்பந்தப்பட்டவை.
  • போராட்டங்கள் நீதி சம்பந்தப்பட்டவை.
  • போராட்டங்கள் விடுதலை சம்பந்தப்பட்டவை.
  • போராட்டங்கள் பகுத்தறிவு சம்பந்தப்பட்டவை.
  • போராட்டங்கள் சமூக அறிவியல் சம்பந்தப்பட்டவை.
  • எனவே, மாணவர்களும், இளைஞர்களும் நாடுமுழுதும் நடத்துகின்ற இந்தப் போர் – ஜனநாயக உரிமைகளுக்கானப் போராட்டங்கள்.
  • இந்தப் போராட்டங்கள் தொடர வேண்டும்.
  • மாணவர், இளைஞர் தொடங்கிய இந்தப்போரில் விரைவில் ஒன்றிய அரசு தோற்கும். இந்தியா முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் வெற்றிபெறுவார்கள்.

டில்லியில் துணை இராணுவத்தைக் கொண்டுவந்து அச்சுறுத்துவது என்பது நாட்டின் இராணுவத்தையே கேள்விக்குள்ளாக்குவது.

பல நாடுகளில் இராணுவம் அரசியல் தலையீடுகள் செய்யும். இந்திய இராணுவம் அவ்வாறு அரசியல் தலையீடு செய்வதில்லை. அத்தகைய பெருமையை இன்றைக்கு நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும் சிதைக்கிறார்கள்.

போராடுகிற மாணவர்கள் இந்தியக் குடிமக்கள். ஒன்றிய அரசு நேர்மையாகச் சந்திக்க வேண்டுமே தவிர, இராணுவம் மூலம் எதிர்கொள்ளக் கூடாது. இராணுவத்தைக் கொண்டுவந்து நிறுத்துவது சட்ட விரோதம்.

இந்திய நாடாளுமன்றத்தின் மிகச்சிறந்த விருதைப்பெற்றவர் தோழர் இந்திரஜித் குப்தா. அவர் உள்துறை அமைச்சராக இருந்தார்.

நக்சலைட்டுகளை ஒடுக்க இராணுவத்தைப் பயன்படுத்தலாம், விமானத்தைப் பயன்படுத்தலாம் என்று காவல்துறை அதிகாரிகள், அரசு கூடி முடிவெடுத்தபோது, உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா தலையிட்டு, “உள்ளூரில் மக்கள் போராடுகிறபோது, இராணுவத்தை அதிலே ஈடுபடுத்துவது சட்ட விரோதம்-இராணுவம் தலையிடக் கூடாது” என்று அடித்துச் சொன்னார். அன்றைக்கு இருந்த இராணுவத் தளபதியும் அதில் இராணுவத்தைப் பயன்படுத்தவில்லை.

இன்றைக்கு துணை இராணுவத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். இந்தியாவின் இராணுவத்தின் சிறப்புகளைக் கேள்விக்குள்ளாக்கும்.

நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பல ஆயிரக்கணக்கான நக்சலைட்டுகளைச் சுட்டுக் கொன்றுவிட்டு, சுதந்திர தின விழாவிலே, நக்சலைட்டுகளை இல்லாமல் செய்துவிட்டோம் என்று பேசுகிறார்கள். அதிலே என்ன பெருமை இருக்கிறது? நக்சலைட்டுகள் உள்ளூர் மக்கள். பழங்குடிகள். அவர்களுக்குத் தேவை கல்வி. அவர்களுக்குத் தேவை வீடு. அவர்களுக்குத் தேவை நிலப்பிரபுக்களின் படைகளிடமிருந்து பாதுகாப்பு. அவர்களுக்குத் தேவை நிம்மதியான வாழ்வு.

இந்தக் கோரிக்கைகள் அப்படியே கிடப்பில் இருக்கின்றன. ஆனால், நக்சலைட்டுகளைக் கொன்றுவிட்டோம் என்று நாட்டின் பிரதமரே பெருமைப் பேசுகிறார். அதோடு நிறுத்தியிருக்கலாம், “நக்சலைட்டுகளைக் கொன்றுவிட்டோம், நக்சல் கருத்தியல் வாழ்கிறது” என்கிறார். அதாவது கம்யூனிஸ்ட்கள் இன்னும் இருக்கிறார்கள் என்கிறார். இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்கிறார்.

தேவைப்பட்டால், அவர் விரும்பினால், அதிகாரம் அவரிடம் இருக்கிறது. நாடுமுழுவதும் இருக்கிற கம்யூனிஸ்ட்களைக் கணக்கெடுத்து, அவர்கள்மீது நாட்டின் பிரதமர் போர் தொடுக்கலாம், நக்சலைட்டுகளைக் கொன்றழித்ததுபோல் எங்களையும் கொன்றழிக்க அவர் முனையலாம்.

  • அப்போதும் நாங்கள் விடுதலையின் பக்கம்
  • ஜனநாயகத்தின் பக்கம்.
  • நீதியின் பக்கம்
  • உரிமையின் பக்கம்

என்பதை இடதுசாரிகள் உரக்கக் குரல் எழுப்புவோம் என்பதை நாட்டின் பிரதமருக்கு நாங்கள் அறிவுறுத்த விரும்புகிறோம்.

போராட்டங்களை போலீஸ், இராணுவம் கொண்டு மிரட்டக் கூடாது. அதற்கு மாறாக, மிகச்சிறந்த ஜனநாயக வடிவம் கொண்ட ஒரு நாடு, அந்தப் போராட்டங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். போராட்டங்களைக் கண்டு அஞ்சக்கூடாது.

  • நூறு ஆண்டு கால வரலாற்றில், கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில் நடத்திய போராட்டங்களில்
  • எப்போதும் நாட்டிற்கு தீமை ஏற்பட்டதில்லை.
  • உழைக்கிற மக்களுக்கு தீமை ஏற்பட்டதில்லை.
  • சட்ட முறைமைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டதில்லை. நான் சொல்வது 100 ஆண்டு கால வரலாறு.
  • போராட்டங்கள் யாவும் நாட்டின் நலன் சார்ந்தவை.
  • ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய, தொழிலாளர்கள் நலன் சார்ந்தது.
  • எனவே, இடதுசாரி மாணவர்கள் துவக்கி இருக்கிற இந்தப் போராட்டமும் ஜனநாயகத்திற்கானது, தேசத்தின் எதிர்காலத்துக்கானது.

தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்வது, நீங்கள் மிகத் துணிச்சலாக நள்ளிரவில்கூட இடதுசாரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கலாம். எந்த நேரத்தில் நீங்கள் அனுமதி அளித்தாலும், ஒரு சிறு பொருள், தனி நபர்களின் பொருள், சொத்துகள் சேதமடையாது.

அரசின் புள்ளிவிவரம் சொல்கிறது, இலட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டாலும் இடதுசாரி மாநாடுகளில் அங்கே கடைகள் திறந்திருக்கின்றன.

ஒரு பத்து இலட்சம்பேரை எங்களால் திரட்ட முடியும். நாட்டின் எந்தப்பகுதியிலும் திரட்ட முடியும். இடதுசாரிகள் இணைந்தால்.

மார்ச் 23 நீங்கள் திருச்சிக்கு வாருங்கள்- பாருங்கள் எங்கள் அணிவகுப்பை. பல லட்சக்கணக்கான மக்களை எங்களால் திரட்ட முடியும்- திரட்டிக் காட்டுகிறோம்.

நண்பர்களே, தோழர்களே,

இந்தப்போர் நாட்டுக்கானப் போர். எதிர்காலத்துக்கானப் போர். இதனால் கல்வி பாதிக்காது. எந்த இடதுசாரி மாணவர்களும் கல்வியில் சோடைபோனவர்கள் அல்ல. இந்தியா முழுதும் நீங்கள் குறிப்பெடுத்தால், இந்த சங்கங்களில் இருந்து பயில்கின்ற மாணவர்கள் யாரும் குறைந்த மதிப்பெண் பெற்றதாக வரலாறே இல்லை.

எனவே, இந்த அமைப்புக்கு மாணவர்கள் வரலாம். குழந்தைகள் வரலாம். கல்விச்சாலைகள், கல்லூரிகள் சொல்லித் தராத நல்இயல்புகள், நற்சிந்தனைகள் சொல்லித் தருகிற, பல்கலைக்கழகத்தையும் தாண்டிய பல்கலைக்கழகம் இடதுசாரிகளின் மாணவ, இளைஞர் அமைப்புகள். இந்தக் கொடிபிடித்த ஒரு மாணவனின் நாவிலும் பெண்ணைப்பற்றிய தவறான வார்த்தைகள் வராது.

இடதுசாரி மாணவர், இளைஞர் இயக்க வரலாறில் ஒருபோதும் பெண்களைக் கேலிப்பொருளாகப் பார்த்ததுமில்லை, ஏளனமாக அவர்களைப் பேசியதுமில்லை. அவர்கள் ஆணுக்குச் சமம். அறிவியல்பூர்வமாக ஆணுக்கு நிகர். எல்லா உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. இந்தச் சிந்தனையை வளர்த்தெடுக்கிற இன்னொரு பல்கலைக்கழகம்தான் இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகள்.

எனவே, உங்கள் வீடுகளில் இருக்கிற பெண்களை இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகளுக்கு அனுப்புங்கள். பல்கலைக்கழகமும், கல்லூரியும் சொல்லித்தராத மானுட இயல் கல்வியை சொல்லித்தருகிற மகத்தான பல்கலைக்கழகம் இது. உங்கள் போராட்டம் வெல்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

– ந.கதிரவன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button