கம்யூனிஸ்ட்டுகள் மீது குறை சொல்லும் முன் ஆதவ் அர்ஜுனாவுக்கு நிதானம் தேவை
தேர்தல் பரப்புரையில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவுறுத்தல்

கம்யூனிஸ்ட்டுகளின் நூறாண்டு வரலாற்றில், எந்த நீதிமன்றத்திலும் எந்தக் காவல் நிலையத்திலும் ஊழல் புகார்கள்கூட பதிவு செய்யப்படவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுராந்தகம் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் 22.09.2026 அன்று ஈடுபட்ட மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அவை வருமாறு:
கேள்வி: திமுக ஆட்சியின் போது, அவர்கள் நிறைய ஊழல் செய்திருக்கிறார்கள், கம்யூனிஸ்ட் கட்சி இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பதைப் பற்றி?
பதில்: மிகமிகத் தவறானது. பிழையானது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற தவறுகளுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்கக் கூடாது. கடந்த ஆட்சியில் தொகுதி உடன்பாடு அவ்வளவுதான். இந்த ஆட்சியை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம் அவ்வளவுதான்.
ஐந்து ஆண்டுக்குப் பிறகு நீங்கள் செய்கிற தவறுகளுக்கு நாங்களா பதில் சொல்ல வேண்டும்? நாங்கள் அளித்த ஆதரவு ஜனநாயகத்திற்காக. எனவே இது போன்ற கேள்வியே பிழையானது. தவறானது.
அமைச்சர் பொறுப்பில் இருக்கிறவர்கள், நிதானமாக ஒருமுறைக்கு இருமுறை கம்யூனிஸ்டுகள் மீது குற்றச்சாட்டுகளைச் சொல்கிற போது கொஞ்சம் நிதானித்துப் பேசுங்கள். எங்கள் மீது எந்த விமர்சனங்கள் வந்தாலும் அதனை ஏற்கிறோம். எத்தகைய தாக்குதல் ஆளும் வர்க்கத்திடமிருந்து வந்தாலும், அதை எதிர்கொள்கிற அரசியல் ஆற்றல் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு உண்டு.
நூற்றாண்டு கால எங்கள் அரசியல் வாழ்வில், ஒருபோதும் நாங்கள் கையூட்டு பெற்றது இல்லை; கையூட்டை வேடிக்கை பார்த்ததும் இல்லை. எனவே, சகோதரர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேரம் கிடைக்கிறபொழுது கம்யூனிஸ்ட் வரலாற்றைச் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் படித்துக் கொஞ்சம் முதலமைச்சருக்குச் சொல்ல வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நூறாண்டு கால வரலாற்றில் ஒரு நீதிமன்றத்திலும் ஊழலுக்காகக் கம்யூனிஸ்ட்டுகள் தண்டிக்கப்பட்டதில்லை. இந்தியாவில் பெரிதும் சிறிதுமாக 85 லட்சத்திற்கு மேற்பட்ட நீதிமன்றங்கள் இருக்கின்றன. பல லட்சக்கணக்கான காவல் நிலையங்கள் இருக்கின்றன. இந்த 100 ஆண்டுகளில் ஒரு கம்யூனிசத் தலைவர் மீதுகூட ஊழல் குற்றச்சாட்டு பதிவாகவில்லை, இந்தியாவில் இருக்கிற எந்தக் காவல் நிலையத்திலும், எந்த நீதிமன்றத்திலும் ஊழலுக்காக ஒரு கம்யூனிஸ்ட் தலைவர்கூடத் தண்டிக்கப்பட்டதில்லை.
இந்த நல்ல செய்தி நாம் பெரிதும் மதிக்கும் விவிலியத்தில் இல்லை. நமது புராணங்களில் இல்லை, இதிகாசங்களில் இல்லை. இவற்றில் எல்லாம் இல்லாத மகத்தான சாதனையைக் கம்யூனிஸ்ட்டுகள் 100 ஆண்டுகளில் பதித்திருக்கிறோம். நேரம் கிடைக்கிறபோது சகோதரர் ஆதவ் அர்ஜுனா, அவர் சார்ந்த சகாக்கள் கம்யூனிஸ்ட்டுகளின் நூறாண்டு வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி: தவெக ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வீர்களா?
பதில்: இல்லை. தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது ஜனநாயகத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு. பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள், அந்த மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து நாங்கள் எடுத்த முடிவு. மக்கள் அதிகாரத்தில் ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக எங்கள் கட்சி எடுத்த முடிவு.
எனவே ஆதரவு என்பது கட்சி எடுத்த முடிவு. ஆதரவை விலக்கிக்கொள்கிற சூழல் ஏற்படுமேயானால், அது குறித்து அப்போது கட்சி முடிவெடுக்கும்.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வெளியில் இருந்து ஆதரிக்கிறோம், கூட்டணியில் இல்லை. கவிழ்க்கிற சிந்தனையுடையவர்கள் நாங்கள் அல்ல. கல்லடிக்கிற சிந்தனை, நிர்பந்தங்கள் தருகிற சிந்தனை உள்ளவர்கள் நாங்கள் அல்ல. அதற்கு மாறாக ஆதரவளித்தாலும் அல்லது எங்கள் ஆதரவு தேவையில்லை என்றாலும் நாங்கள் அரசின் பக்கம் அல்ல, உழைக்கும் மக்களின் பக்கம், ஏழைகளின் பக்கம். இதனை உரக்கச் சொல்வோம், எப்பொழுதும் சொல்வோம். எந்த நேரத்திலும் ஆட்சியைக் கவிழ்க்கிற சிந்தனைகள் எங்களுக்கு இல்லை, கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை.
அதேநேரத்தில் மதச்சார்பின்மையில் இந்த அரசு உறுதியாக இருக்க வேண்டும். ஏழைகள், உழைக்கும் மக்கள், தமிழக நலனில் உறுதியாக இருக்க வேண்டும். அதில் இடறுகிற போது, தடுமாறுகிற போது நாங்கள் எதிர்த்துப் போராடுவோம், குரல் கொடுப்போம்.
ஒருவேளை அதுபோல ஒரு நெருக்கடி ஏற்பட்டால், மதச்சார்பின்மையைக் கடந்து சென்று ஒன்றிய அரசுடன் த.வெ.க. நகருமேயானால், ஆதரவைத் தொடருவது குறித்து கட்சி உரிய முடிவை எடுக்கும்.” – இவ்வாறு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

