வாக்குரிமை காப்போம்! தேசத்தைக் காப்போம்! ஞானேஷ்குமார் வெளியேறும் வரை ஓய மாட்டோம்!
ராம்லீலா மைதானத்தில் பெருந்திரள் பேரலை

தலைநகர் டெல்லியில் நவம்பர் 1 அன்று, இந்தியா அணியின் ‘சலோ டெல்லி’ — ‘வாக்கைக் காப்போம், தேசத்தைக் காப்போம்’ (வோட் பச்சாவ், தேஷ் பச்சாவ்) மாபெரும் பேரணி நடைபெற்றது. ராம்லீலா மைதானமே மனிதக் கடலாக மாறியது.

நவம்பர்-1 காலை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ(எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, பிரியங்கா காந்தி, அபிஷேக் பானர்ஜி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய வாத காங்கிரஸ் (சரத்) தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா அணித் தலைவர்கள் கூடினர்.
அவர்கள் திறந்த பேருந்தில் அங்கிருந்து மிண்டோ சாலை – கன்னாட் பிளேஸ் சந்திப்புக்கு வந்து, பேரணியைத் தொடங்கினர். அவர்கள் சென்ற திறந்த பேருந்தைச் சூழ்ந்தவாறு, அங்கு திரண்டிருந்த மக்களும் நடந்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) என்ற பெயரில் நாடு முழுவதும்13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டதைக் கண்டித்தும், சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கையை முற்றாக ரத்து செய்ய வேண்டும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் முழக்கமிட்டனர்.
பல்வேறு கட்சிக் கொடிகளுடன் பெருந்திரளானோர் பேரணியில் பங்கேற்ற போதும், மூவண்ணக் கொடியும் “எங்கள் வாக்கு எங்கே?” என்ற கேள்வியும் ஒரே மாதிரியாக ஒலித்தன.
நாடு முழுவதும் மாதக்கணக்கில் நடந்து வரும் இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்தியா அணியின் ஒட்டுமொத்தத் தலைமையும் ஒரே மேடையில் அணிவகுத்து நின்றது. வாக்குத் திருட்டுக்கு எதிராகவும் தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்க வலியுறுத்தியும் குரல் கொடுத்தது.
வாக்குத் திருட்டுக்கு எதிரான இந்த மாபெரும் பேரணியை முடக்குவதற்கான முயற்சிகளையும் டெல்லி காவல்துறை மேற்கொண்டது.
இதற்காக 10 ஆயிரம் காவலர்களும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர்; ராம்லீலா மைதானம் 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களும் ட்ரோன்களும் பொருத்தப்பட்டன. காவல்துறையின் இந்த அச்சுறுத்தல்களையும் மீறி பெருந்திரளானோர் பேரணியில் பங்கேற்றனர்.
