கட்டுரைகள்வரலாறு

நவம்பர்-11 செங்கொடிச் சங்க ரத்தசாட்சிகள் நினைவுதினம்

பி.ஜெகநாதன்

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழப்படும் கோயமுத்தூரில் மேற்கு மண்டலத்திலேயே முதன் முறையாக “கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ்” என்ற பஞ்சாலை 14.11.1888ல் தொடங்கப்பட்டது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வந்த சர். ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற வெள்ளைக்காரர் இந்த மில்லைத் தொடங்கியதால் இந்த ஆலை “ஸ்டேன்ஸ் மில்” என்றே அழைக்கப்பட்டு வருகிறது. நூல் உற்பத்திக்குப் பொருத்தமான பகுதியாக கொங்கு மண்டலம் இருப்பதால் ஸ்டேன்ஸ் மில்லைத் தொடர்ந்து கோவை நகரம். பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பல பஞ்சாலைகள் உருவாயின.

அந்தக்கால கட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் நிலைமை கொத்தடிமைகளை விட படு மோசமாகவே இருந்தது. காலை ஆறு மணிக்கு முன்பே வேலைக்கு வந்து விட வேண்டும். ஆலையின் எந்தப் பிரிவுகளில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் இடைவெளி இல்லாமல் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு விநாடிகூட நிற்க முடியாது. இயற்கைத் தேவைக்குச் சென்றால்கூட உடனடியாக திரும்பி வந்து வேலை பார்க்க வேண்டும். அக்கம் பக்கம் பேச, பார்க்க முடியாது. அடுத்தவருடன் பேசக் கூடாது. மேஸ்திரிகளின் கொடுமைகளை வர்ணிக்கவே முடியாது. ஒரு நொடி நின்று விட்டால் கூட சுளீரென்று சாட்டையடி விழும்.

காலை முதல் இரவு வரை ஓயாத வேலை. அதற்குப் பிறகும் கூட மேஸ்திரிகள் மனது வைத்தால்தான் வெளியே செல்ல முடியும். இப்படி கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களுக்கு கூலி மாதம் ஆறு ரூபாய், ஏழு ரூபாய்தான் கொடுக்கப்படும். அதையும் கூட சில மில்களில் பணமாகக் கொடுக்காமல் முதலாளிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் சோளம், கம்பு அல்லது ராகியைக் கொண்டு வந்து அளந்து கொடுத்துவிடுவார்கள்.

தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் தாங்கவொணா கொடுமைகளை அறிந்த சி.பி. சுப்பையா, வெள்ளியங்கிரிக் கவுண்டர் போன்ற சில தேசபக்தர்கள் சென்னைக்குச் சென்று வ.உ.சி. அவர்களைச் சந்தித்து கோவைக்கு வந்து தொழிலாளர்களின் துயர் துடைக்க ஆவன செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் கோவைக்கு குடிபெயர்ந்தார்.

பஞ்சாலைத் தொழிலாளர்களைத் திரட்டி தேசபக்தரும் சிறந்த வழக்கறிஞருமான N.S. ராமசாமி அய்யங்காரைத் தலைவராகக் கொண்டு “கோவை தொழிலாளர் சங்கம்” என்ற சங்கத்தை 1920-களில் வ.உ.சி தொடங்கினார். காந்திஜியின் அறைகூவலை ஏற்று சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் N.S. ராமசாமி அய்யங்கார் 1930-களில் கைது செய்யப்பட்டு ஓராண்டு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

N.S. ராமசாமி அய்யங்கார் அவர்கள் சிறை சென்று விட்டதால் சென்னையிலிருந்து நீதிக் கட்சியைச் சேர்ந்த பாசுதேவ் என்பவர் சங்கத்திற்கு தலைவராக்கப்பட்டார். பாசுதேவ் “தொழிலாளர்கள் போராடக்கூடாது. பிரச்சனைகளைப் பேசித்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்கிற முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கையை உடையவர். வேலை நேரம் சம்பந்தமாக ஸ்டேன்ஸ் மில்லில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் முதலாளிக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் அப்போராட்டம் தோல்வியுற்றது.

பாசுதேவின் முதலாளிகள் ஆதரவு நடவடிக்கையால் அதிருப்தியுற்ற தோழர்கள் தொழிலாளர்களுக்காக, தொழிலாளர்களே நடத்தும் ஒரு சங்கம் வேண்டும் என்று கருதினர். சென்னையிலிருந்த ஜீவா, P.ராமமூர்த்தி, ASK அய்யங்கார் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆலோசனையின் பேரில் 1936ம் ஆண்டு செங்கொடிச் சங்கமான “கோவை மில் தொழிலாளர் சங்கம்” (தற்போதைய கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கம்) தொடங்கப்பட்டது.

பஞ்சாலைத் தொழிலாளர்கள் அனைவரும் பாசுதேவ் சங்கத்தை முழுமையாகப் புறக்கணித்து ஒரே சங்கமாக செங்கொடிச் சங்கத்தை நிலைநிறுத்தினர். கொடுமைகளையும், அநீதிகளையும், சித்திரவதைகளையும் அனுபவித்துக் கொண்டு அடங்கி ஒடுங்கி அடிமைகளாய் இருந்த தொழிலாளர்களை அணி திரட்டிப் போராடி அவர்களைத் தலை நிமிர வைத்தது செங்கொடிச் சங்கம்.

தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களை அடக்கி ஒடுக்க முதலாளிகள் பல்வேறு உபாயங்களைக் கையாண்டனர். முன்னணி ஊழியர்களைப் பழிவாங்குவது, பெண் தொழிலாளர்களை பாலியல் பலாத்காரம் செய்வது, ரௌடிகளை வைத்து அடித்து நொறுக்குவது, போலீசை ஏவி அச்சுறுத்துவது போன்ற கொடுமைகளைச் செய்து வந்தார்கள். சில மில்களில் ரௌடிகள் தங்குவதற்கான எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு காக்கிச் சீருடையும்கூட கொடுக்கப்பட்டிருந்தது.

ஸ்டேன்ஸ் மில்லில் ஆட்குறைப்பும், பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் பலாத்காரமும், ரௌடிகளின் அட்டூழியங்களும் அதிகரித்தன. ரீலிங் பிரிவில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு கடுமையான வேலைப்பளு, அபராதம், தற்காலிக வேலை நீக்கம் போன்ற தண்டனைகளை நிர்வாகம் கொடுத்து வந்தது.

மேலும் 16 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். முதலாளியின் இக்கொடுமைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மில் முதலாளி மில்லை லாக் அவுட் செய்துவிட்டான்.

மூன்று மாத காலம் வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வேலை நிறுத்தப் போராட்டத்தை கருங்காலிகளைப் பயன்படுத்தி உடைக்க மில் நிர்வாகம் திட்டம் தீட்டியது. இதற்கு போலீசையும், ரௌடிகளையும் பயன்படுத்த முடிவு செய்தது.

1946ம் ஆண்டு சின்னியம்பாளையம் தியாகிகளை தூக்கு மேடை ஏற்றிய அதே 1946ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதியன்று லாக்-அவுட் விலக்கிக் கொள்ளப்பட்டு ஆலை இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவிப்புச் செய்தது. நிர்வாகத்தின் இந்த சதித்திட்டத்தை முறியடிக்க செங்கொடிச்சங்கம் உறுதி பூண்டது. அதற்கான நடைமுறைத் திட்டங்களும் வகுக்கப்பட்டன. என்ன விளைவுகள் வந்தாலும் அதை சந்தித்து முறியடிக்க ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்களும் தயாராக இருந்தனர். குறிப்பிடப்பட்ட நவம்பர் 11ம் தேதியன்று அதிகாலையிலேயே 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சங்கத்திற்கு முன் அணி திரண்டனர். அனைத்துத் தொழிலாளர்களும் அணிவகுத்து மில் கேட்டை வந்தடைந்தனர்.

மில் கேட்டிற்கு முன்பு கருங்காலிகள் வேலை நிறுத்தத்தை உடைத்துக் கொண்டு மில்லிற்குள் செல்ல தயாராக நின்றிருந்தனர். போலீசார் துப்பாக்கியுடன் வலம் வந்து கொண்டிருந்தனர். இந்த 11ம் தேதியானது வரலாற்றில் இடம் பெற்ற நாளாகும். இரண்டாவது உலகயுத்தம் முடிவுற்றதைக் குறிக்கும் வகையில் அன்று காலை உலகம் முழுவதும் துப்பாக்கி வேட்டு வெடிக்கப்பட்டு 2 நிமிட நேரம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்தியாவில் துப்பாக்கி வேட்டுக்குப் பதில் மின்சார சங்கு (சைரன்) முழங்கியது.

கோவையில் அந்த 11ம் தேதி காலையில் சைரன் ஒலித்து முடிந்ததும் பெண் தொழிலாளிகள் மில்லுக்கு முன்பாகப் படுத்து திட்டமிட்டபடி மறியல் போராட்டத்தை ஆரம்பித்தனர், மில்லுக்கு எதிர்ப்புறத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், பொதுமக்களும் நின்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

போராட்டத்தை உடைக்க சிங்ககாநல்லூரிலிருந்து கதர் குல்லா காங்கிரஸ் கொடி உடன் கொண்டு வரப்பட்ட கருங்காலிகள் மறியல் செய்யும் பெண்களை மிதித்து தாண்டி மில்லிற்குள் செல்ல முயற்சித்தனர். அதைக் கண்டு சினமடைந்த தொழிலாளர்கள் கோபத் தீ கொழுந்து விட்டு எரிய கருங்காலிக் கூட்டம் மீது பாய்ந்து அதை விரட்டியடிக்க ஆரம்பித்தது.

ஆலையின் உள்ளே இருப்பவர்கள் வெளியே வர முடியாமலும், வெளியே இருப்பவர்கள் உள்ளே நுழைய முடியாமலும் வாயிலை அடைத்துக் கொண்டு பெண் தொழிலாளர்கள் அனைவரும் கீழே படுத்துக் கொண்டு மறியல் செய்து கொண்டிருந்தனர். கருங்காலிகள் உள்ளே செல்ல முடியாததால் போலீஸ் அதிகாரிகளும், சில போலீசாரும் கேட்டின் முன்னே வந்து “இங்கு யாரும் மறியல் செய்யக்கூடாது. மீறி நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்கள்.

அதற்கு பதிலடியாக “எங்களது இந்த நிலைக்கு காரணமானவர்களை எதிர்த்துப் போரிட்டால் தான் நாங்கள் எங்கள் உரிமைகளை பெறமுடியும். முதலாளிகளின் கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் இனியும் எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. பொதுமக்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்காக சட்டமும், போலீசும் இருக்குமானால் எங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்க வழி செய்யுங்கள். இதோ இந்த நிமிடமே எங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம். இல்லையேல் வந்த வழியே திரும்பிப் போய் விடுங்கள்” என்று பெண் தொழிலாளர்களுக்கு தலைமையேற்று வந்த பாப்பம்மாள் போலீசை எச்சரித்தார்.

பாப்பம்மாளின் கோபாவேசமான பேச்சைக் கேட்ட போலீசார் செய்வதறியாது திகைத்தனர். எச்சரிக்கை பலனளிக்காமல் போகவே துப்பாக்கியுடன் வந்த போலீசார் படுத்திருப்பது பெண்கள் என்றும் பாராமல் தங்களது பூட்ஸ் காலால் மிதித்துக் கொண்டே உள்ளே செல்ல முயன்றனர். “எங்களை மிதிக்காதே மிருகங்களைப் போல நடத்தாதே. எங்களுக்கு ஒரு முடிவு தெரியாமல் எங்களைத் தாண்டி உள்ளே செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம்” என்று சொல்லி போலீசாரைத் தடுக்க முயற்சித்த பாப்பம்மாளை ஒரு போலீஸ்காரன் தனது துப்பாக்கி முனையிலிருந்த கத்தியால் மாறி மாறிக் குத்தி 6 மாத கர்ப்பிணியாக இருந்த பாப்பம்மாளைக் கொன்று போட்டான்.

இதைக் கண்ட அருகிலிருந்த அம்மு என்ற பெண் தொழிலாளி “அடப்பாவிகளா, பாப்பம்மாவைக் கொன்று விட்டீங்களே! தைரியமிருந்தால் என்னை மீறிச் செல்லுங்கள் பார்க்கலாம்” என்று கூறி வீராவேசத்துடன் எழுந்து நின்றார். அருகிலிருந்த ஒரு போலீஸ்காரன் அம்முவைக் கீழே தள்ளி தனது துப்பாக்கி முனையில் இருந்த கத்தியால் மாறிமாறிக் குத்தி அம்முவையும் கொடூரமாக கொன்று போட்டான்.

சிறிதும் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தைக் கண்டு அருகிலிருந்த தொழிலாளர்கள் அனைவரும் கொதித்தெழுந்தார்கள். போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. உடனடியாகப் போலீசார் தங்களது துப்பாக்கிகளால் தொழிலாளர்களைப் பார்த்து சுடத் தொடங்கினார்கள்.

துப்பாக்கி சத்தம் கேட்டவுடனே சங்க முடிவுப்படி காளீஸ்வரா, சோமசுந்தரா, புரூக் பாண்ட் ஆகிய ஆலைத் தொழிலாளர்கள் தங்களது வேலையை நிறுத்திவிட்டு ஸ்டேன்ஸ் மில்லை நோக்கி ஓடிவந்தனர். மில் கட்டடத்தின் மீதிருந்த போலீசார் அவர்களை நோக்கியும் துப்பாக்கியால் மாறி மாறி சுட்டனர். ரயில்வே பாதையிலும் பலர் படுகாயமடைந்து விழுந்தனர். இந்த இடங்களிலிருந்து ஓடி வந்த தொழிலாளர்களும், ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்களும் கொண்ட பெரிய கூட்டமானது கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு போலீசாரை எதிர்த்துப் போராடினார்கள்.

தொழிலாளர்களுக்கும், போலீசாருக்குமிடையே பலத்த மோதல் ஏற்பட்டு பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அந்தப் பகுதியே ரத்தக் காடாக மாறி போர்க்களம் போல் காட்சி அளித்தது. அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் முதலாளியின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டு வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றது.

தொழிலாளர்கள் உரிமையை மீட்டெடுக்க நடைபெற்ற இந்த வர்க்கப் போரில் போலீசாரின் துப்பாக்கி முனை கத்தியால் குத்தப் பட்டு 2 பெண் தொழிலாளர்களும், மற்றவர்கள் துப்பாக்கிச் சூட்டிலும் மொத்தம் 11 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இக்களப்பலியில் பாப்பம்மாள், அம்முகோபால், M. குள்ளப்பன், N. மந்திரியப்பன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர். பழனியப்பன் ஆகிய 6 பேர் மட்டும் அடையாளம் கண்டறியப்பட்டனர். மற்றவர்களை கண்டறிய இயலவில்லை.

இந்த போராட்டம் நடந்து முடிந்த சமயத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ரயில்பாதையில் ஒரு உடல் கிடப்பதைப் பார்த்த ரயில் எஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி வந்தார். ரயில் பாதையில் கிடந்த உடலை எடுத்து பாதையின் ஓரமாக வைத்தார்.

ரயில் எஞ்சினிலிருந்த சிகப்புக் கொடியை எடுத்து வந்து அந்த உடலுக்கு அருகில் ஊன்றி வைத்து துப்பாக்கிச் சூட்டில் பலியான அந்த உடலுக்கு செவ்வணக்கம் செலுத்தினார். அதன்பின் கொடியை எடுத்துக் கொண்டு அவர் ரயிலை ஓட்டிச் சென்றுவிட்டாா .இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தைக் கண்ட அனைவரும் மெய்சிலிர்த்து நின்றனர்.

தங்களது உயிர்களுக்கு எந்தவிதமான ஆபத்து வேண்டுமானாலும் நேரலாம் என்று அறிந்தும் உரிமைகளை மீட்டெடுக்க செங்கொடிச் சங்கம் காட்டிய திசைவழியில் போராட்டக்களம் புகுந்து இன்னுயிர்களை ஈந்த தோழர்களின் சர்வ பரித்தியாகமும் மகத்தானதாகும். முதலாளித்துவத்தின் கொடிய சுரண்டலுக்கும், அடக்கு முறைகளுக்கும் ஆட்பட்டிருந்த கோவைத் தொழிலாளி வர்க்கத்தை தலை நிமிரச் செய்து அவர்களுக்கு புதியதொரு வாழ்வு கிடைக்கச் செய்வதற்காக செங்கொடிச் சங்கம் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களுக்கு ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் ரத்த சாட்சிகளாக விளங்குகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button