கட்டுரைகள்

கூட்டாட்சிக்கான உரத்த குரல் குரியன் ஜோசப் குழு!

த.லெனின்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1, இந்தியாவை “மாநிலங்களின் ஒன்றியம்” என்று அழைக்கிறது. இதன் பொருள், வலிமையான, மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் நிலைத்திருக்க முடியாது என்பதாகும்.

இது மிகத் தெளிவானது பிரச்சனைகளுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களால் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். உள்ளூர் பிரச்சனைகளான சட்டம் ஒழுங்கு, கல்வி, கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளிட்ட துறைகளை மாநிலங்கள் கையாள வேண்டும் என்பதும், பாதுகாப்பு,வெளியுறவு போன்ற முக்கியத் துறையின் பிரச்சனைகள் மட்டுமே ஒன்றிய அரசின் வசம் இருக்க வேண்டும் என்பதாகும்.

த.வெ.க அரசின் பார்வையின்மை!

ஜோசப் குரியன் தலைமையிலான குழு கே. அசோக் வர்தன் ஷெட்டி இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி மற்றும் தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு செயல்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் விதிகளையும், பல்வேறு துறைகளில் ஒன்றிய-மாநில உறவுகளைப் பாதிக்கும் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் உத்தரவுகளையும் ஆராய்ந்து மீளாய்வு செய்வதற்கும், அரசுக்கு உரிய தீர்வைப் பரிந்துரைப்பதற்கும் இது அமைக்கப்பட்டது என்றாலும்,இந்தக் குழு, ஒன்றிய-மாநில உறவுகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் ஒரு அமைப்பாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளின் தன்மை மற்றும் நோக்கத்தோடு இக்குழு ஒன்றுடன் ஒன்று பொருந்தும் தன்மையையும் கொண்டுள்ளது.

எனவே, இதனை கவனமாகப் பரிசீலித்த பின்னர், உயர்நிலைக் குழுவின் சேவைகளை உடனடியாக நிறுத்துவதற்கு அதாவது இந்தக் குழுவைஅரசாங்கம் கலைத்துவிட்டது.

குரியன் ஜோசப் குழு

‎இக்குழு தனது முதல் அறிக்கையை 2026 பிப்ரவரியில் அரசிடம் சமர்ப்பித்தது. இரண்டாவது அறிக்கையை 2027 மே மாதத்திற்குள் அளிக்க வேண்டிய நிலையில், 2026 ஆகஸ்ட் 7 அன்று தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தைத் த.வெ.க. அரசு மறுசீரமைத்தது. அப்போது, ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான விவகாரங்களை ஆராயும் பணியை, சட்டப் பணிகள் ஆணையத்திடம் த.வெ.க. அரசு ஒப்படைத்தது. மறுபுறம், அலுவலக உதவியாளர்கள், கணக்காளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கான பணியிட ஒப்புதல் காலாவதியான நிலையில், புதிய பணியாளர்களை நியமிப்பதற்கு நீதிபதி குரியன் குழுவுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் குரியன் தலைமையான குழு செயல்படுவதற்கு மறைமுகமாக தடை விதித்த த.வெ.க-வின் விஜய் அரசு, இப்போது இக்குழுவை வெளிப்படையாக கலைத்துள்ளது அவ்வளவுதான்!. இது பாசிச மோடி அரசுக்கு உதவுவது அல்லாமல் வேறு என்ன?

ஆனால் உண்மை என்ன? இந்தக் குழு ஏன் அமைக்கப்பட்டது?

இக்குழு உருவாக்கப்பட்டதன் காலம் மிகவும் முக்கியமானதாகும். ஒரே நாடு- ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே மொழி என்று மாநில அரசுகளின் அனைத்து உரிமைகளையும் பறித்து ஒழித்துக் கட்டும் மோடி – அமித்ஷா பாசிச கும்பலுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக தான் நீதிபதி குரியன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது என்பதை காண வேண்டும்.

பரிந்துரைகள்

ஆளுநர்களை நியமிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவரையே நியமிக்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 155ஐத் திருத்த வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

மேலும், ஆளுநருக்கு ஒரேயொரு, நிலையான, புதுப்பிக்க இயலாத ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகு அவர்கள் குடியரசு துணைத் தலைவர் அல்லது குடியரசுத் தலைவர் பதவிகளைத் தவிர வேறு அரசமைப்பு சட்டப் பதவிகளுக்கு தகுதி அற்றவர்களாக்கப்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

ஆளுநரின் பதவிக் காலம் முடிந்துவிட்டால், அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே அந்தப் பதவியை வகிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானத்தால் ஆளுநரை நீக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அப்படி நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மீது குடியரசுத் தலைவர் 14 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

எல்லை மாற்றங்கள்

ஒரு மாநிலத்தின் எல்லைகளையோ அல்லது பெயரையோ மாற்றுவதற்கு முன்பு ஒன்றிய அரசு மாநிலத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற வகையில் சட்டப்பிரிவு 3-ஐத் திருத்த வேண்டும். (காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டதை நினைவில் கொள்ளுதல் நலம்)

சட்டமியற்றல்

ஒன்றிய அரசு மட்டும் அரசியலமைப்பை மாற்றுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். பெரிய மாற்றங்களுக்கு, அனைத்து மாநிலங்களிலும் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.

கல்வி

தங்களின் பள்ளிகளையும் தேர்வுகளையும் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் வகையில், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

மொழிக் கொள்கை

அலுவல் பணிகளுக்கு ஒரே ஒரு மொழியை முன்னிறுத்துவதற்குப் பதிலாக, ஆங்கிலம் மற்றும் தமிழ், மராத்தி, தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி போன்ற மாநில மொழிகள் இரண்டையும் பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் இக்குழு வலியுறுத்தியுள்ளது.

அரசமைப்பும் அதிகார பரவலாக்கமும்

தமிழ்நாட்டைச் சார்ந்த விடுதலைப் போராட்ட வீரரும், அரசியலமைப்புச் சபை உறுப்பினராக பங்கேற்ற கே.சந்தானம், “இந்தியா சிதைந்து குழப்பத்தில் வீழ்வதைத் தவிர்க்க வேண்டுமானால், ஒரு வலிமையான ஒன்றிய அரசு இன்றியமையாதது. ஆனால், வலிமையை முறையான அரசியலமைப்பு அதிகார வரம்புடன் சமன்படுத்துபவர்களுடன் நான் உடன்படுவதில்லை. மறுபுறம், இந்தியாவின் பரந்து விரிந்துள்ள மாபெரும் மக்கள் தொகை தொடர்பாக மத்திய அரசு அதிகப்படியான கடமைகளைத் தன் மீது ஏற்றுக்கொள்வதன் மூலம், அது சரிசெய்ய முடியாத அளவிற்கு பலவீனமடைந்துவிடும் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். அத்தியாவசியமான அகில இந்திய விஷயங்களில் கவனம் செலுத்தி, அரசாங்கத்தின் மற்ற துறைகளில் மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சியை வழங்குவதன் மூலமே, நாடாளுமன்றமும் மத்திய அரசும் உண்மையாக வலிமையாக இருக்க முடியும்” என்று ஒன்றிய, மாநில உறவுகள் குறித்துப் பேசி உள்ளார்.

குழுவைப் பாராட்டி கருத்துகள்

“அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள், மத்திய-மாநில உறவுகள் மற்றும் ஆளுகை, வளர்ச்சி ஆகியவற்றின் மீதான அதன் தாக்கம் பின்னணி முக்கியமானவை. பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் என்ற முறையில், இவற்றில் பல விடயங்கள் பட்டியல் பழங்குடியினரின் நலன் மற்றும் வளர்ச்சியில் நேரடித் தாக்கம் கொண்டிருப்பதை நான் உணர்கிறேன், மேலும் என் தரப்பிலிருந்து சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவேன்.” என்கிறார் ஒன்றிய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு டோக்கன்சாஹு முக்கியமான பகுதிகளை உள்ளடக்கிய இந்த அறிக்கையின் விரிவான தன்மை பாராட்டுக்குரியதுடன், நமது தேசத்தின் ஜனநாயகக் கட்டமைப்பு மீதான ஆழ்ந்த அக்கறையையும் பிரதிபலிக்கிறது என்கிறார். இருவரும் பாஜகவைச் சார்ந்தவர்கள் ஆனாலும் இதை வரவேற்கிறார்கள்.

நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் அறிக்கை, இந்தியாவின் ஒன்றிய-மாநில உறவுகளின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சிக்கு ஒரு சரியான நேரத்தில் அமைந்த, மதிப்புமிக்க பங்களிப்பாகும். அதன் பகுப்பாய்வுகள் நுணுக்கமானவை, அதன் காரணங்கள் நன்கு நிறுவப்பட்டவை, மேலும் அதன் பரிந்துரைகள் அனைத்து அரசியலமைப்புப் பதவிகளில் உள்ளவர்களாலும் தீவிரமாகவும் பாரபட்சமின்றியும் பரிசீலிக்கப்படத் தகுதியானவை எனக் கூறியுள்ளார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெ. செலமேஸ்வர்.

கூட்டாட்சியை வலுப்படுத்த அமைக்கப்பட்ட ஆணையங்கள்!

சர்க்காரியா ஆணையம் (1983): “மாநிலங்களுக்கிடையிலான மன்றத்தை” வலுப்படுத்தக் கோரிய முதல் முக்கிய ஆய்வு ஆகும். இதன் காரணமாக மாநிலங்களிடை மன்றம் உருவாக்கப்பட்டது.

பஞ்சி ஆணையம் (2007)

நாடாளுமன்றத்தால் குடியரசுத் தலைவர் நீக்கப்படுவதைப் போலவே, மாநில சட்டமன்றத்தாலும் ஆளுநர்கள் நீக்கப்பட வேண்டும் என்று அது மிகச் சிறப்பாக பரிந்துரைத்தது.

ராஜமன்னார் குழு (1969)

மாநிலங்களுக்கு அதிக சுதந்திரம் அளிப்பதற்காக, ‘பொதுப் பட்டியலை’ (பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள்) ஒழிக்கக் கோரிய தமிழ்நாட்டின் ஒரு ஆரம்பகால, துணிச்சலான முயற்சி என்று இன்றும் பார்க்கப்படுகிறது.

இப்படி கூட்டாட்சிக்கு குரல் கொடுத்து காட்டாட்சிக்கு முடிவு கட்ட உருவாக்கப்பட்ட குரியன் ஜோசப் குழுவை ஜோசப் விஜய் அரசு கலைப்பது எந்த வகையில் நியாயம்?

திமுக இக்குழுவை அமைத்தது என்பதற்காகவே அதனை கலைப்பது அரசியலை, மாநில உரிமைகளை அதன் உண்மையான நோக்கில் சிந்திக்காததே ஆகும். இவற்றையெல்லாம் சட்ட ஆணையமே பார்க்கும் என்பது ஒரு வடிகட்டிய பொய் ஆகும். எனவே கலைக்கப்பட்ட இந்த குழு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் அதையே தமிழ்நாடும் எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்படுமா விஜய் அரசு?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button