இந்தியா

ஞானேஷ் குமாரே பதவி விலகு

புதுடெல்லியில் சிபிஐ மனிதச் சங்கிலி!

பதிமூன்று கோடி வாக்குகளைப் பறிப்பதற்குக் காரணமான தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும், போராட்டக் களமான ஜந்தர் மந்தரை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்.27-ம் நாளன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புதுடெல்லியில் மனிதச் சங்கிலி நடத்தியது. கட்சியின் தலைமையகமான அஜாய் பவனிலிருந்து, ஐடிஓ வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து கைகோத்து நின்று, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஆதரவாகத் தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

வாக்குரிமையிலிருந்து மக்களைத் திட்டமிட்ட முறையில் விலக்குவதற்கும், வாக்களிப்பது என்ற அடிப்படை ஜனநாயக உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும் எதிராகப் பொதுமக்களிடையே பெருகிவரும் கோபத்தை இந்த மாபெரும் மனிதச் சங்கிலிப் பங்கேற்பு வெளிப்படுத்தியது.

தோழர்களிடையே கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா உரையாற்றினார். “ஞானேஷ் குமார் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பது, நமது தேர்தல் ஜனநாயகத்தின் நம்பகத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். அவர் பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

காலம்காலமாக போராட்டங்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடமான ஜந்தர் மந்தர், திடீரென அந்தப் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஜனநாயக எதிர்ப்புக் குரல்களின் வரலாற்றுச் சிறப்புமிக்கக் களத்தை மூடுவதற்கான இந்த முயற்சி, மக்கள் இயக்கங்கள் மீது பாஜக அரசின் அதிகரித்துவரும் சகிப்புத்தன்மையின்மையையும், போராடுவதற்கான உரிமையைத் திட்டமிட்டு ஒடுக்குவதையும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.

மக்களின் தேர்தல் உரிமையும், அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பும் உரிமையும் மறுக்கப்படும் நிலையில் ஜனநாயகம் உயிர் வாழ முடியாது. சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான அரசமைப்புச் சட்டப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், இதுவரை கண்டிராத நம்பகத்தன்மை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

எனவே எஸ்ஐஆர் நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும்; ஜந்தர் மந்தர் மீண்டும் திறக்கப்பட வேண்டும்; ஜனநாயகத்தின் நலனையும் அரசமைப்புச் சட்டத்தின்படி பொறுப்பேற்க வேண்டிய கடமையையும் கருத்தில் கொண்டு ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று இந்த மனிதசங்கிலிப் போராட்டம் வலியுறுத்தியது.

சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா, தேசியச் செயலாளர்கள் அமர்ஜீத் கவுர், பி. சந்தோஷ் குமார் எம்.பி., ராமகிருஷ்ண பாண்டா, டாக்டர் கிரீஷ் சர்மா, ஆனி ராஜா, கே. பிரகாஷ் பாபு, கே. ராமகிருஷ்ணா; மற்றும் பி.பி. சுனீர்; எம்.பி. தில்லி மாநிலச் செயலாளர் பேரா. தினேஷ் வர்ஷ்னே, இந்திய மாதர் தேசிய சம்மேளனப் பொதுச் செயலாளர் நிஷா சித்து; அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜன் கிஷ்சாகர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் வி.எஸ். நிர்மல்; அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத் தலைவர் ரௌஷன் குமார் சின்ஹா, பொதுச் செயலாளர் சுக்ஜிந்தர் மகேசரி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத் தலைவர் விராஜ் தேவங் உள்ளிட்டோர் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்களுடன் சிபிஐ மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தலைவர்களும், ஊழியர்களும், செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், வாக்குரிமையை உறுதிப்படுத்தவும், குடியரசின் அரசியல் சாசன அடித்தளங்களைச் சீர்குலைக்கும் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்துப் போராடவும், மக்கள் உறுதியாக இருப்பதைப் பறைசாற்றும் வலிமையான போராட்டமாக இது அமைந்தது.

வாக்குத் திருட்டுக்கு எதிராகவும், வெளிப்படைத்தன்மை, சுதந்திரம், பொறுப்புணர்வு கொண்ட தேர்தல் ஆணையத்தை உறுதிப்படுத்தவும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், குடிமைச் சமூக அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button