Uncategorizedதலையங்கம்

திமாகி நக்சல்களும் டுபாக்கூர் பிரதமரும்

ஜனசக்தி தலையங்கம்

இந்த ஆண்டு தீபாவளியை, சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில், சிஆர்பிஎப் வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடினார்.

நக்சல்கள், மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதற்காகவே இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றாராம். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் சத்தீஸ்கரில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் சொன்னார்.

ஆனால் நக்சல்கள் என்ற பெயரில் அங்கு கொல்லப்பட்ட பழங்குடியினர், அரசு கொள்கைகளை ஆட்சேபித்துப் பேசியவர்கள், சாதாரண பொதுமக்கள் எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை. ஏனென்றால் அதற்கு எந்த கணக்கும் இல்லை.

அடுத்து ‘திமாகி” நக்சல்களை தோற்கடிக்க வேண்டும் என்று அந்த வீரர்களிடம் பிரதமர் வலியுறுத்தினார்.

“நாட்டுக்குள் சுற்றித் திரியும் ‘திமாகி’ நக்சல்கள் (மனதளவில் நக்சல்) நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளில் ஊடுருவி உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு தோற்கடிக்க வேண்டும். நமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும்” என்றார் அவர்.

யூதர்களை ஒழிக்க வேண்டும் என்று நாஜிப்படையிடம் ஹிட்லர் பேசியதைப் போன்றது அது!

“உலக வங்கி அறிக்கையின் படி, கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி இந்தியர்கள் தீவிர வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை” என்று தன் தோளைத் தானே தட்டிக் கொண்டார் பிரதமர்.

தீவிர வறுமை என்பது என்ன? வேலைக்கும், வருவாய்க்கும் உத்தரவாதம் இல்லாமல், பாதுகாப்பான இருப்பிடம் இல்லாமல், கல்வி மருத்துவ வசதிகள் இல்லாமல், ஒரு குடும்பம் நாளொன்றுக்கு ஒரு வேளை மட்டுமே உணவருந்தக் கூடிய நிலைதான் தீவிர வறுமை.

இப்போதும் அந்த நிலையில் 8 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர் சொல்லும் தீவிர வறுமையில் இருந்து மீண்ட 50 கோடி இந்தியர்களுக்கு, நாளொன்றுக்கு இரண்டு வேளை உணவு கிடைக்கிறது! ஊட்டச்சத்துள்ள உணவு, கழிப்பறை வசதியுடன் கூடிய பாதுகாப்பான வீடு, கல்வி மருத்துவம் எல்லாம் இன்னும் அவர்களுக்குக் கனவு தான்!

1993ல் சீனாவில் 83.5 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்த போது, இந்தியாவில் 42.9 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்தார்கள்.

ஆனால் 2019-ல் சீனா தீவிர வறுமையை முற்றாக ஒழித்தது. இப்போது சீன மக்களின் தனிநபர் வருமானம் ஆண்டொன்றுக்கு 13,33,209 ரூபாய். இந்தியாவில் தனி நபர் வருமானம் 3,58,584 ரூபாய்). அதாவது சீனாவில் ஒரு தனி நபரின் வருமானம், ஐந்து இந்தியர்களின் தனிநபர் வருமானத்துக்கு சமம்.

இந்தியாவில் தீவிர வறுமை குறைந்ததற்கு, அதாவது பட்டினிச் சாவு நேராமல் பாதுகாக்கப்பட்டதற்கு, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் (அதாவது 100 நாள் வேலை) ஒரு முக்கியமான காரணம். அதையும் இப்போது மோடி அரசு சீர்குலைத்து விட்டது.

ஆனால் பிரதமரோ ஜன்தன் வங்கி கணக்குகள் தான் காரணம் என்று பிரதமர் சொல்கிறார்.

2014 ஆகஸ்ட் 28ஆம் தேதி துவக்கப்பட்ட கணக்குகளில் 20 கோடி கணக்குகள் செயல் இழந்து விட்டன.

மீதமுள்ள 39 கோடி கணக்குதாரர்களுக்கு அரசு செய்த நிதி உதவி என்ன? கொரோனா காலத்தில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் பெண்களின் கணக்குகளுக்கு மட்டும், மாதம் ரூபாய் 500 வீதம் மொத்தம் ரூபாய் 1500 அனுப்பப்பட்டது. இதுவா வறுமையைத் தீர்த்தது?

இந்தியா விடுதலை அடைந்து 80 ஆண்டு காலத்துக்குப் பின்னும், மூன்று வேளை உணவும், வீடும், கல்வி, மருத்துவமும் தராத நிலை இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதா?

ஒரு பக்கம் அதானி, அம்பானிகள், உலகப் பெரும் கோடீஸ்வரர்களாக உயர, இந்திய மக்களில் 60 சதத்தினர் ஏழைகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பது சரியல்ல என்று சொல்பவர்கள், நாட்டின் ஜனநாயகத்தை குலைக்கும் ‘திமாகி நக்சல்’களாம். இவர்களை அழித்து ஒழிக்குமாறு ராணுவத்துக்கு கட்டளை இடுகிறார்!

வறுமையில் கிடக்கும் மக்களுக்கு மதவெறி ஊட்டி, இரண்டு கூறாகப் பிரித்து நிறுத்தி மோத விடுகிற, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டையே விற்று வருகிற மோடியின் அடாத செயல்களைக் கண்டித்தால் ராணுவத்தை வைத்து அழித்து விடுவாராம்!

உலக வரலாற்றில் ஹிட்லர்கள் வெற்றி பெற்றதில்லை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button