
ஜனசக்தியில் இப்படி ஒரு தலைப்பா என்று நீங்கள் வியக்கக் கூடாது. இதைப் பொதுக் கூட்டத்திலேயே பேசியவர் தமிழ்நாட்டின் மதிப்புக்குரிய முதலமைச்சர் மாண்புமிகு விஜய் அவர்கள்!
வீர, தீர, சாகசச் செயல்களைத் தனி ஆளாக நிகழ்த்தும் கதாநாயகர்களை மையமாகக் கொண்ட தமிழ்த் திரைப்படங்களின் உச்சக் காட்சியில், கழுத்து நரம்புகள் புடைக்க, கேட்பவர்களின் செவிகள் கிழிந்து போக, கதாநாயகர்கள் உரத்தக் குரலில் வசனம் பேசுவார்கள்.
அப்படி ஒரு வசனத்தை, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில், நமது முதலமைச்சர் ஒரே டேக்கில் பேசி முடித்தார்.
ஏப்ரல் மாதம் வரை, நான் எனது உச்சத்தை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்திருக்கிறேன் என்றார். ‘ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம்’ என்று அவருக்கு அணுக்கமானவர்கள் சொன்னார்கள். மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர், அந்த 200 கோடி ரூபாயை எட்ட 1666 ஆண்டுகள் வேலை பார்க்க வேண்டி இருக்கும்!
இப்போது ஒரு சாமானியன் ஆட்சிக்கு வரக்கூடாதா? என்று “பேதாஸ் சாங்”பாடுகிறார். அதுதான் ஆட்சிக்கு வந்தாயிற்றே!
அப்புறம் திமுக ஆபாசமாகப் பேசுகிறது. என் தாயை இழிவு படுத்தினார்கள். தமிழ்நாட்டின் தாய்மாரை, சகோதரிகளைக் கேவலமாக பேசுகிறார்கள் என்று ஒரு ‘தாய்மார் சென்டிமென்ட்’ வைத்தார்.
‘அப்பா’வைப் பற்றி பேசியவர் முதலமைச்சர்தான். ‘அதை அம்மாவிடம் கேட்க வேண்டும்’ என்றவர் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். அவர் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமல்ல, பெயரைச் சொல்லக்கூட பயம்.
தி.மு.க. ஆட்சியில் கட்டிய பாலத்தில் நின்று பார்த்தார் என்று முன்னாள் ஆளும்கட்சி சொன்னதைச் சுட்டிக்காட்டி, உங்கள் சொந்தப் பணத்திலா கட்டினீர்கள் என்று சரியாகவே கேட்டார். ஆனால் தமிழ்நாட்டின் அத்தனை செலவுகளையும் தனது சொந்தப் பணத்திலிருந்து தான் இன்றைய முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார் என்று அவர் கட்சித் துண்டு அணிந்தவர்கள் ரீல் ரீலாய் போடுகிறார்கள்! இல்லை, அது மக்களின் வரிப்பணம் தான் என்று சொல்வதற்கு அவர்கள் கட்சியில் ஆளே இல்லை.
பரந்தூர் விமான நிலையத்தைத் தடுத்து விவசாயிகளைக் காப்பாற்றி விட்டேன் என்கிறார். கையகப்படுத்திய நிலங்களை எல்லாம் விவசாயிகளிடம் தந்து விட்டாரா என்ன?
‘விவசாயிகளிடம் தர மாட்டோம், அங்கு சிப்காட் கொண்டு வரப் போகிறோம்’என்று அவரது ஆட்சி சொல்கிறது. விமான நிலையத்துக்காக கையகப்படுத்திய நிலங்களைத்தான் விவசாயிகள் இழந்தார்கள். இப்போது சிப்காட் தொழிற்சாலைக் கழிவுகளால், அதனால் மாசுபடும் தண்ணீரால், காற்றால், நிலத்தால், கையகப்படுத்தப்படாத சுற்றி இருக்கும் இதர விளைநிலங்களும் பாழாய்ப் போகப்போகின்றன.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டாக சேர்ந்து ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற வலியைத் தாங்க முடியாமல்தான், நேற்றைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், இன்றைய த.வெ.க. வேட்பாளருமான மரகதம் குமரவேல் த.வெ.க.வுக்கு வந்தாராம்.
118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை காண்பித்தால்தான் அழைப்பேன் என்று ஆளுநர் பிடிவாதம் செய்தார். அப்போது, 234 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால்தானே 118பேர் ஆதரிக்க வேண்டும், அ.தி.மு.க.வின் 20 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை 214 ஆகக் குறைக்கிறோம்; த.வெ.க.+ காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையே ஆட்சி அமைக்கப் போதுமானது என்ற நிலையை ஏற்படுத்துகிறோம்; ஆட்சி அமைக்க வழி செய்கிறோம் என்று சொல்லி பதவி விலகியிருந்தால், நாமும் அவர் சொல்வதை நம்பலாம்.
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கட்சி, விசிக, ஐயூஎம்எல் எம்.எல்.ஏ.க்கள் எட்டு பேர் ஆதரித்ததால்தான் ஆளுநர் அழைத்தார். ஆட்சி அமைத்தாயிற்று.
பிறகு ஆதரவு கொடுத்த கட்சிகளின் மீது நம்பிக்கை இல்லாமல், அவர்களை கழற்றி விடுவதற்காக, அவர்கள் இல்லாமல் ஆட்சியைத் தொடர்வதற்காக, அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுத்தார்கள்.
ராஜினாமா செய்தவர்களை இடைத்தேர்தலில் மீண்டும் நிறுத்தி வெற்றி பெற வைக்க நான் பரப்புரை செய்கிறேன் என்று விஜய் கூறியதாக, வைகோ அம்பலப்படுத்தி இருக்கிறார்.
ஆட்சி அமைக்கப்பட்டு விட்டதை உறுதிசெய்து பின்னர்தான், அ.தி.மு.க. மீது இவர்களுக்கெல்லாம் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது? அந்தக் கோபத்தில்தான் பதவியை ராஜினாமா செய்தார்கள் என்று கூறுவது யாரின் காதில் பூ சுற்றும் வேலை?
திமுக தமிழ்நாட்டின் பாஜகவாம், பாஜக இந்தியாவின் திமுகவாம். திமுகவும். பாஜகவும். அதிமுகவும் கூட்டுச் சேர்ந்து விட்டனவாம்.
பாஜக உள்ளே வந்துரும் என்று சொல்வது ‘பூச்சாண்டி காட்டும்’வேலையாம். ஆளுநர் ஆட்சி மூலம் பாஜக உள்ளே வந்து விடக்கூடாது என்று கம்யூனிஸ்டுகள் கருதியதால் தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆட்சிக்கு வந்தபின்பு அது வெறும் ‘பூச்சாண்டி’ஆகிவிட்டதா?
தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்வதற்கு அவ்வப்போது இப்படி பட்டும் படாமல் பேச வேண்டிய கட்டாயம் அவருக்கு!
ஆனால், சமூக நீதி அமைச்சர் வன்னிஅரசு, சட்டப்பேரவையில் மோடி, அமித்ஷா பெயரை குறிப்பிட்டபோது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அனலில் பட்ட புழுவைப் போலத் துடியாய் துடித்து, உடனே அந்தப் பெயர்களை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவைத் தலைவரிடம் கேட்டு நீக்கினாரே! நேரலை ஒளிபரப்பில் தவெக தொடை நடுங்குவதை ஊரே பார்த்ததே!
தவெக, திமுக இரண்டுக்கும் இடையே தான் போட்டி என்று ஏற்கனவே சொல்லி வந்ததை இப்போது விஜய் விரிவுபடுத்துகிறார்.
இது ஹிட்லரின் பாசிசப் பாணி. என்னை ஆதரிக்காதவன் எல்லாம் எனக்கு எதிரி என்றார் ஹிட்லர். இவர் அதைக் கொஞ்சம் மாற்றி, “என்னை ஆதரிக்காதவர்கள் எல்லாரும் திமுகதான்” என்கிறார்.
“இளம் பெண்களை ஒருத்தன் இத்தனை வருஷமா சீரழிச்சிக்கிட்டு இருக்கான். ஸ்டாலின் அங்கிள் வாயைத் திறங்க! ‘மற்றும் பலரும்’ ஏன் வாயை திறக்கல?” என்று கேட்டார் விஜய்.
ரெண்டு வருடமாக இவரும் அங்கங்கே போய் சிலரை, பலரை, சாகடித்து கூட்டம் நடத்திக் கொண்டுதானே இருந்தார். இத்தனை ஆண்டுகளாக இவர் ஏன் வாயைத் திறக்கவில்லை?
‘வழக்கை முடித்து வைக்க மாட்டேன். மேலும் விசாரணை நடத்துங்கள்’என்று நீதிபதி மறுப்பதற்கு முன்பாக, 100 நாள் இருந்த இந்த ஆட்சி வாயில் என்ன வைத்திருந்தது?
டெல்லியில் கூட விஜய் பெயரைச் சொல்ல வைக்கும் வல்லமை பெற்ற, ‘வாய்ஸ் ஆப் காமன்’, ‘ரூட் மாஃபியா’போன்ற சமூக வலைத்தளக் கம்பெனிகளின் வாய் ஏன் திறக்கவே இல்லை?
நீதிபதி உத்தரவால் தவிர்க்க முடியாதபடி மறுவிசாரணை வந்துவிட்டது.
“விஜய் தோண்டி எடுத்து வெளியே கொண்டு வந்து விட்டான்” என்று நெஞ்சறியப் பொய் சொல்வது, என்ன சொன்னாலும் தனது ரசிகர் கூட்டம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறது.
‘மற்றும் பலர்’, ‘மற்றும் பலர்’என்று இடையிடையே பேசி வந்தார். பொடி வைத்து பேசுகிறாராமாம்!
“திமுகவோடு மறைஞ்சு மறைஞ்சு வேலை செய்யும் எல்லோருக்கும் சொல்கிறேன். விஜய்யைத் தொடாதீங்க! அந்த ‘மற்றும் பலரு’க்கு பாடம் புகட்டுங்கள் மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
“அந்த ‘மற்றும் பலரா’லும் ஒன்னும் கிழிக்க முடியாது!” என்றும் சவால் விட்டார்.
எங்கள் தலைவரை “ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது! இவர் தான் நிரந்தர முதல்வர்! நிரந்தர பொதுச்செயலாளர்” என்றெல்லாம் வாய் கிழியப் பேசியதையும், சுவர்களிலெல்லாம், நீளம் நீளமாய் எழுதி, ஆளும் கட்சிகள் ஆட்டம் போட்டதையும் இதே தமிழ்நாடு ஏற்கனவே பார்த்திருக்கிறது.
விஜய் சொன்னதையே அவருக்கு நாம் திருப்பிச் சொல்வோம்.
“வாழ்க்கை ஒரு வட்டம்”. (நம் தகுதிக்கு நாம் ‘டா’ போடக்கூடாது).
கீழே இருப்பவன் மேலே போவான், மேலே இருப்பவன் கீழேயும் வருவான்!