வாக்குத் திருடனே! பதவியை விட்டு விலகு!
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தியா கூட்டணி கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தில் ஏற்பட்டுள்ள தீவிரமான முறைகேடுகள், 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது, படிவம்-6 ல் ஒருதலைபட்சமாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது உள்ளிட்ட விவகாரங்களைக் கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தியும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்றது.
நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் இருந்து நிர்வாசன் சதன் பகுதியில் அமைந்துள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அப்போது, “வாக்குத் திருடனே, பதவியை விட்டு வெளியேறு!” (வோட் சோர், கத்தி சோட்!) என்ற முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசியச் செயலாளர் பி. சந்தோஷ்குமார் எம்.பி., பி.பி.சுனீர்
எம்.பி., வை.செல்வராஜ் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்ரா ராம், ஜான் பிரிட்டாஸ், வி. சிவதாசன், ஏ.ஏ. ரஹீம், சு. வெங்கடேசன், ஆர். சச்சிதானந்தம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சார்பில் சுதாமா பிரசாத் எம்.பி.யும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் பேராசிரியர் மனோஜ் குமார் ஜா, கேரள காங்கிரஸ் (மணி) சார்பில் ஜோஸ் கே. மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்தத் தேர்தல் ஜனநாயக நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் பிஜுஜனதா தளமும் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றது வரவேற்கத்தக்க முடிவு என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
டி.ராஜா கேள்வி
இந்தப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேசினார். அப்போது:
“பாஜக ஆட்சியில் நமது ஜனநாயகத்திற்கு என்ன நடக்கிறது? தேர்தல்களே முறைகேடாக நடத்தப்பட்டால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது? தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரே அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல், அதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள பொறுப்பின்படி செயல்படவில்லை என்றால், ஜனநாயகம் எங்கே இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் அரசமைப்புச் சட்டப் பொறுப்பு ஆகியவை குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வாக்குத் திருடர் தேர்தல் ஆணையர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் பி. சந்தோஷ் குமார் கூறுகையில், ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். “ஞானேஷ் குமார் தலைமையில், தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற பதவியே ‘வாக்குத் திருட்டு தேர்தல் ஆணையர்’ என்பதாக மாறியுள்ளது” என்று அவர் குற்றம்சாட்டினார்.

வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்குவதும், படிவம் 6-ஐத் தேர்தல் ஆணையம் தானாகவே மாற்றியதும் மிகவும் கவலைக்குரிய விஷயங்கள் என்று உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், தேர்தல் ஆணையம் வெளிப்படையாகச் செயல்படுகிறதா, சுதந்திரமாக இயங்குகிறதா, அரசியலமைப்புச் சட்டப்படி நடக்கிறதா என்ற அடிப்படைக் கேள்விகள் எழுந்துள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
மூன்று முக்கியக் கோரிக்கைகள்
தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மையையும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையையும் பாதுகாக்க இந்தியா கூட்டணி முன்வைத்துள்ள மூன்று முக்கியக் கோரிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளும் தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான அடிப்படைத் தேவைகள் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சிபிஐ எம்.பி.க்கள் கைது
போராட்டத்தில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான பி. சந்தோஷ் குமார், பி.பி. சுனீர் மற்றும் மக்களவை உறுப்பினர் வை. செல்வராஜ் உட்பட இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை பாஜக அரசு காவல்துறையைக் கொண்டு தடுத்து நிறுத்துவது, அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டிருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“தேர்தல் மோசடிகள் குறித்த கேள்வி எழுப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் தடுத்து நிறுத்துவதாலும், அவர்களிடம் காவல்துறை அத்துமீறி நடந்து கொள்வதாலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையோ, இந்தியா கூட்டணியையோ, ஜனநாயகத்திற்காகக் குரல் எழுப்பும் மக்களின் குரலையோ ஒருபோதும் மௌனமாக்க முடியாது” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.
தேர்தல்களில் நேர்மை
தேர்தல்களில் நேர்மையும், நம்பகத் தன்மையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையாகும். எனவே, தேர்தல் ஆணையம் எந்தவொரு அரசியல் தலையீட்டுக்கும் இடமளிக்காமல், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டும் செயல்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வாக்குரிமையைப் பாதுகாப்பது, தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டுவது மற்றும் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றுக்காக இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றுபட்டு முன்வைத்துள்ள கோரிக்கைகளுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நிற்கும் என்றும் தெரிவித்துள்ளது.
“வாக்குரிமையைப் பாதுகாப்போம்; தேர்தல் ஜனநாயகத்தைக் காப்போம்; அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்” என்ற உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.