கட்டுரைகள்

துணைவேந்தர் தேர்வை முடக்குவது யார்?

மே.து.ரா.

தமிழ்நாட்டிலூள்ள 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அன்றாட அலுவல்கள் வழக்கம்போல் நடப்பது போலத் தோன்றினாலும், தலைமையில்லாமல் ஆய்வுச் செயல்பாடுகளும் வளர்ச்சிப் பணிகளும் பெரிதும் முடங்கிக் கிடக்கின்றன.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டங்களின் வாயிலாகவே அரசு சார்பிலான பல்கலைக்கழகங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. அத்தகைய சட்டங்கள் ஆளுநரின் முறையான ஒப்புதல் பெற்றே நடைமுறைக்கு வந்துள்ளன. துணைவேந்தர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதற்கான தெளிவான விதிகள் அந்தந்தப் பல்கலைக்கழகச் சட்டங்களில் தெளிவாக வகுக்கப்பட்டிருக்கின்றன. முதல் கட்டம், துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவினை அமைப்பதாகும். இந்தத் தேடுதல் குழுவில் யார் இடம்பெறவேண்டும் என்பதை ஒவ்வொரு பல்கலைக்கழகச் சட்டமும் வரையறுத்துத் தந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, பழம்பெருமை கொண்ட சென்னைப் பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் தேடுதல் குழுவில் மூன்று உறுப்பினர்கள் இருப்பர். பல்கலைக்கழக ஆட்சி குழு (சிண்டிகேட்), பேரவை (செனட்) ஆகியன ஒவ்வொரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும். மாநில ஆளுநர் ஒரு உறுப்பினரை முன்மொழிவார். ஆளுநரின் உறுப்பினர் அழைப்பாளராக இருக்கும் இந்தத் தேடுதல் குழு பரிந்துரைத்த மூவரில் ஒருவரைத் துணைவேந்தராக ஆளுநர் தேர்ந்தெடுப்பார்.

குறிப்பிட்ட பல்கலைக்கழகம், மாநில அரசு, ஆளுநர் என்னும் கட்டமைப்புக்கு அப்பால் உள்ள, பல்கலை நிதி நல்கை ஆணையம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனம் அல்லது அமைப்பு சார்பில் தேடுதல் குழுவில் உறுப்பினர் பங்கு பெறும் வாய்ப்பு இதுவரை ஏற்படவில்லை. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் சட்டங்களும் அதை ஏற்கவில்லை.

இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டத்தின் 163(1) பிரிவின்படி, ஒரு மாநிலத்தின் ஆளுநர் தனது ஒவ்வொரு செயலிலும் மாநில அமைச்சரவையின் அறிவுரையை ஏற்றுத்தான் நடந்தாகவேண்டும். இதனை உச்ச நீதிமன்றமும் மறுக்கவில்லை.

ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஆளுநர் என்ற பொறுப்பில் மட்டுமே நீடிக்கிறார். இந்த நிலையில், ஆளுநர் என்ற முறையில் அவர் அமைச்சரவையின் அறிவுரையை ஏற்றுத்தான் தேடுதல் குழு உறுப்பினரையும் துணைவேந்தரையும் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற நடைமுறை ஏறக்குறைய 1980கள் வரை சிக்கலை ஏற்படுத்தவில்லை. ஒன்றிய அரசிலும் மாநில அரசிலும் வேறுவேறு கட்சிகள் பொறுப்பேற்றிருந்தாலும், ஆளுநர்கள் தங்களது எல்லைகளைப் பல்கலைக்கழக அளவில் பெரிதும் மீறவில்லை.

அடுத்து, வேந்தர் பொறுப்பு ஏதோ தனிப்பட்டுத் தங்களுக்குக் கிடைத்ததாக எண்ணித் தாங்களாகவே ஆளுநர்கள் தம்விருப்புடன் துணைவேந்தர் தேர்வில் தலையிடத் தொடங்கினர். அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் இதற்குத் துணை நின்றன.

இதனால், மாநிலங்களில் மாற்றுக் கட்சி ஆட்சி ஏற்பட்டபோதெல்லாம், அந்த மாநிலங்களில் சிக்கல்கள் வெடித்தன. தமிழ்நாடு என்றில்லாமல், கேரளம், மேற்கு வங்கம், கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இந்தப் போக்கு நிலைகொண்டது.

இது தொடர்வதை அறிந்தும் உச்ச நீதிமன்றம் உறுதியான தீர்வினைத் தராமல் அவ்வப்போது ஆளுநர்களின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் இடைக்கால முடிவுகளில் முடித்துக்கொண்டது.

இதற்கிடையில், பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையம், துணைவேந்தர் தேர்வுக்கான சில வரையறைகளை மாற்றியமைத்தது. பல்கலைக்கழகத்தின் கல்வி சார்ந்த பொறுப்புடன், மேலாண்மைத் தலைவராகவும் விளங்கும் துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு உரிமையும் கடமையும் பொறுப்பும் பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்துக்கு வழங்கப்படாவிட்டாலும், அத்துமீறிச் செயல்பட முனைந்தது. கல்வி அல்லது ஆய்வில் தொடர்புடையோர் மட்டுமே துணைவேந்தராக முடியும் என்ற நிலையை மாற்றி, வணிகம், தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோரும் துணைவேந்தராகலாம் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்துடன், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தின் உறுப்பினர் ஒருவரும் இடம்பெறவேண்டும் எனத் தன்னை முன்னிறுத்த விழைந்தது.

இதனைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தின் உறுப்பினரும் இடம்பெற்றால்தான், தேர்வுப் பட்டியலிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுப்பேன் என்று அடம்பிடிக்கத் தொடங்கினார்.

தி.மு.க. அரசு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டத்தின் அடிப்படையில், மாநில நிதியிலிருந்து நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மாநிலங்களிடமிருந்து பறித்துவிடக்கூடாது என்று எடுத்துக் கூறியது. இதனை ஆளுநர் ரவி ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால், அன்றைய தி.மு.க. அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைப் பணியமர்த்தும் பொறுப்பை மாநில அரசுக்கு மாற்றி வழங்கி, பத்துப் பல்கலைக்கழகச் சட்டங்களில் திருத்தங்களைக் கொணர்ந்தது. இந்தத் திருத்தங்களுக்கு ஆண்டுக் கணக்கில் ஒப்புதல் தர மறுத்த ஆளுநர் ரவி, மீளாய்வு செய்யுமாறு திரும்பவும் சட்டப்பேரவைக்கு அனுப்பினார்.

மீண்டும் அதே திருத்தங்களுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவை நிறைவேற்றப்பட்டன. மீளாய்வுக்குப் பின்னர் மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவுகளை ஆளுநர் மறுப்பின்றி ஏற்கவேண்டும் என்பது அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 கூறும் விதியாகும். இதற்கு மாறாக ஆளுநர் ரவி, மீளாய்வுக்குப் பின்னர் நிறைவேறிய சட்டத் திருத்தங்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு வழக்குத் தொடுத்தது.

இவற்றை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற நீதியர்கள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு 08-04-2025இல் தெளிவான தீர்ப்பொன்றை வழங்கியது. சட்டப்பேரவை மீளாய்வுக்குப் பின்னர் நிறைவேற்றிய சட்ட வரைவுகளுக்கு ஆளுநர் மறுப்பில்லாமல் ஒப்புதல் தந்தாகவேண்டும் என்பதை உறுதிப்படுத்தி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதைச் செல்லாது என அறிவித்ததுடன், அரசமைப்புச் சட்டம் பிரிவு 142 தந்திருக்கும் சிறப்புரிமையைப் பயன்படுத்தி, சட்டத் திருத்தங்கள் அனைத்துக்கும் 18-11-2023 அன்றே ஆளுநர் ஒப்புதல் தந்ததாகக் கருதவேண்டுமென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையையும் பிறப்பித்தது.

இதனால், பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களைப் பணியமர்த்தும் உரிமை மாநில அரசிடம் வந்தது. துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் வழக்கம் போல் தொடங்கின.

பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் விதி 7.3இல் உள்ளது போல, திருத்தப்பட்ட சட்டங்களில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஆணையத்தின் உறுப்பினர் இடம்பெறவில்லை; இந்த வகையில், மாநில அரசே துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் சட்டத் திருத்தங்கள், ஒன்றிய அரசின் சட்ட முறைமைகளுக்குப் புறம்பாக இருப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தின் 2025 கோடை விடுமுறைக் கால அமர்வில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் உரிமை பெற்றிருக்கவில்லை. அத்துடன் உடனடி வேண்டல் ஏதேனும் இருந்தால் மட்டுமே விடுமுறைக் கால நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியும். இவற்றை மதிக்காமல் தொடுக்கப்பட்ட வழக்கில், வழக்கம்போல் நீதியர்கள் சாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு தடையாணை வழங்கியது.

ஒன்றிய அரசு, மாநில அரசு சட்டங்களுக்கிடையே வேறுபாடுகள் இருப்பின், ஒன்றிய அரசின் சட்டங்களே செல்லும் என்னும் அரசமைப்புச் சட்ட பிரிவு 254(1) இதற்குச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால், துணைவேந்தர்களை மாநில அரசே தேர்ந்தெடுக்கும் உரிமை பறிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 254(1) எத்தகைய குழப்பமும் இல்லாமல் தெளிவாக உள்ளது. நாடாளுமன்றம் இயற்றுகின்ற சட்டத்துக்கு மாறாக மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்றும் சட்டம் இருந்தால் மட்டுமே ஒன்றிய அரசின் சட்டம் முன்னுரிமை பெறும்.

ஆனால், பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தின் வழிகாட்டு முறைமைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அன்று. அதுவொரு பரிந்துரை மட்டுமேயாகும். இத்தகைய பரிந்துரைகளோ, அரசாணைகளோ சட்டப்பேரவை நிறைவேற்றும் சட்டங்களை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது என்பது தொடக்கநிலைப் பாடம். இதனைக்கூடக் கணக்கில் கொள்ளாத நீதியர்கள், தங்களது மனதுக்கேற்ற மறுப்பை வழங்கிவிட்டனர்.

இந்தத் தடையானையை எதிர்த்து அன்றைய தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.

விடுமுறைக் கால நீதிமன்றத்துக்கான வழக்கல்ல இது என்பதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், வழக்கினை மீண்டும் ஆய்வுக்குட்படுத்த உயர்நீதிமன்றத்திற்குத் திருப்பியனுப்பியது. திருத்தச் சட்டங்கள் செல்லுமா, செல்லாதா என்பது குறித்து முடிவு காணாமல், மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியபோதும், உயர் நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை துணைவேந்தர்களைப் பணியமர்த்தக் கூடாது என்ற உறுதிமொழியையும் மாநில அரசிடம் பெற்றுக்கொண்டது.

விடுமுறைக் கால நீதிமன்றம் வழங்கிய தடையாணை செல்லாது என முடிவானவுடன், மாநில அரசுக்குள்ள உரிமை தானாகவே வந்திருக்கவேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த உரிமையைத் தராதது வியப்புதான்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. துணைவேந்தர் பணியமர்த்தலும் நடைபெறவில்லை. துணைவேந்தர் தேர்வு என்பது நீதிமன்றங்களே உருவாக்கிய தடையாக அமைந்துவிட்டது.

தற்போது பொறுப்பேற்றிருக்கும் விசய் அரசு மாநிலத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் நிலைக்குத் தாழ்ந்திருப்பதாகவே தெரிகிறது. ஆளுநருடன் ஒத்துப்போவதையே காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த புதிய உயர் கல்வித் துறை அமைச்சர் விரும்புகிறார். அத்துடன், பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தின் உறுப்பினரை இணைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், பல்கலைக்கழகச் செயல்பாடுகளில் ஆளுநருக்குப் பங்குள்ளதால் அவரது அறிவுரைகளை பெறவேண்டும் என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

மாநில அமைச்சரவையின் அறிவுரையின்றி ஆளுநர் செயல்பட முடியாது என்ற புரிதலும் அவருக்கில்லை. துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மாநில அரசுக்கு வழங்கிய சட்டங்கள் குறித்த வழக்கு எப்போது உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்படும் என்பது தெரியவில்லை. வழக்கு வந்தாலும், மாநில அரசின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, ஆளுநரின் கருத்துக்கு ஏற்பத் தலையாட்டும் நிலைபாட்டையே தமிழ்நாடு அரசு எடுக்கும் என்பது தற்போது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button