
கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் தெனாலிராமன் என்று ஒருவர் இருந்தார். இவர் நகைச்சுவைக் கருத்துகள் கூறுவதுடன் அரசருக்கு உரிய ஆலோசனை கூறும் இடத்திலும் இருந்தார்.
அரசர் குடிமக்கள் அனைவரும் குதிரைகளை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒவ்வொருவருக்கும் ஒரு குதிரை குட்டியையும், அதன் பராமரிப்புக்கும், கொள்ளும், புல்லும் வாங்குவதற்குரிய தொகையினையும் மாதந்தோறும் வழங்கி வந்தார்.
அனைவரும் குதிரைக் குட்டிகளை வாங்கிச் சென்றது போல தெனாலிராமனும் குதிரைக் குட்டியும் அதற்குண்டான பராமரிப்புச் செலவுத் தொகையினையும் பெற்றுச் சென்றார்.
பொதுமக்கள் அனைவரும் குதிரைகளை நன்கு பராமரித்து அரசு கொடுத்திட்ட செலவுத் தொகையினை குதிரைக்கே செலவழித்து, கொள்ளும், புல்லும் வைத்து குதிரைகளை கொழுகொழு என வளர்த்து வந்தனர்.
புத்திசாலி தெனாலிராமன் குதிரைக் குட்டியை நான்கு சுவருக்குள் அடைத்து வைத்து, கை நுழையும் அளவிற்கு துவாரத்தை வைத்தார். குதிரைக்குத் தேவையான கொள்ளும் வாங்கவில்லை- புல்லும் வாங்கவில்லை. தினசரி குளிப்பதற்கு செல்லும் ராமன்- குளித்து முடித்து வரும்போது ஒரு கைப்பிடி அளவு புல்லை பிடுங்கி வந்து துவாரத்தில் வழியே நீட்ட, பசிக் கொடுமையால் தவிக்கும் குதிரை லபக் என புல்லைக் கவ்வித் தின்னும்.
இந்நிலை நீடித்த நிலையில், அரசர் அமைச்சரை பொதுமக்கள் குதிரைகளை வளர்ப்பது குறித்து கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். அமைச்சரும் ஒவ்வொரு வீடாக சென்று, குதிரை வளர்ப்பு குறித்து ஆய்வு செய்து சபாஷ் போட்டபடி தெனாலிராமன் வீட்டிற்கு வந்தார்.
அமைச்சர் குதிரையை பார்க்க வேண்டும் என்றார்
அமைச்சரை அழைத்துச் சென்று, துவாரத்தினைக் காண்பித்து, “இதன் வழியே குதிரையை பாருங்கள்” என்றார். அமைச்சரும் மிகுந்த ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் துவாரத்தின் வழியே முகத்தை நீட்டினார். அமைச்சரின் நீண்ட தாடி பறிபோனது. முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட “ஆ…!”வென அலறித் துடித்தார்.
“ராமன் குதிரை பொல்லாதக் குதிரை” என அரசரிடம் அறிக்கையும் கொடுத்தார். அரசருக்கு இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது – தெனாலிராமன் ஏதோ சூது செய்துள்ளார்- இதனை வெளிப்படுத்த வேண்டுமே என யோசித்து, வளர்ப்புக் குதிரைகள் அனைத்தையும் ஓரிடத்தில் அணிவகுக்கச் செய்து பந்தயம் வைத்தார். எக்குதிரை முதலில் வருகின்றதோ, அக்குதிரைக்கு முதல் பரிசாக பெரும் தொகையும் அறிவித்தார். குதிரை வளர்ப்பவர்கள் அனைவரும் தங்களின் குதிரைகளின் மீது அமர்ந்து பந்தய மைதானத்துக்கு வந்தனர்.
வத்தலும் தொத்தலுமாக, எலும்புகள் எல்லாம் வெளியே தெரியும் படியாக இருந்த குதிரையை தெனாலிராமன் இழுத்து வருவதைக் கண்டு எல்லோரும் நகைத்தனர். குதிரைகள் வரிசையாக பந்தயக் கோட்டில் அணிவகுத்து நின்றன. அவற்றில் தெனாலிராமனின் குதிரையும் ஒன்று.
கொடி அசைத்து பந்தயம் தொடங்கப் பெற்றது – ராமன் குதிரை மீது அமர்ந்து, நீண்ட குச்சியின் முனையில் பசுமை நிறைந்த புல்லைக் கெட்டியாக கட்டி குதிரைக்கு முன்னே நீட்டினான்.
பசியால் துடித்துக் கொண்டிருந்த குதிரை புல்லை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆவலில் ஓடியது, மிக வேகமாக ஓடியது. அக்குதிரையே முதலிடம் பெற்று, பொற்காசுகளை அள்ளிச் சென்றான் தெனாலிராமன்.
இக்கதை இன்று நம் நாட்டை ஆளும் பிரதமர் நரேந்திர மோடியார்க்கும், தமிழ்நாட்டை ஆளும் ஜோசப் விஜய் ஆகிய இருவருக்கும் மிக பொருத்தமாக அமையும்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசின் மகத்தான சாதனை என்பது மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம். ஆண்டுக்கு 100 நாள் வேலை. திட்டத்திற்கான நிதி முழுவதையும் ஒன்றிய அரசே ஏற்கும். நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
2014 இல் புண்ணியவான் மோடி ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தார். பயனற்ற திட்டம் என்றார்- மக்கள் வரிப்பணம் பாழாகிறது என்றார்- ரத்து செய்ய முடியவில்லை. நிதியை ஆண்டுதோறும் குறைத்தார்- பயனாளிகள் எண்ணிக்கையினையும் படிப்படியாக குறைத்தார். அவரது ஆத்திரம் தீரவில்லை. ‘மகாத்மா’ என்றால் மோடிக் கும்பலுக்கு வேப்பங்காய் கசக்கும் என்பது 1948 ஜனவரி 30-ல் நாடு உணர்ந்ததுதான்.
மகாத்மா உயிருடன் இல்லையென்றாலும், அவரது திருப்பெயர் நாடெங்கும் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது, இருக்கின்றது, இருக்கும்.
மோடிக்கு பிடித்த பெயர் காந்தி அல்ல – மாறாக கோட்சேவைத்தான் மிகவும் பிடிக்கும். வேலை திட்டத்திற்கான காந்தியின் பெயரை நீக்கினார்- யார் வாயிலும் நுழையாதபடி விபிசி ராம்ஜி எனப் பெயர் இட்டார். வேலை நாட்கள் 100 அல்ல – 125 என்று அறிவித்தார்- செலவுத் தொகையில் 60% மட்டுமே ஒன்றிய அரசு கொடுக்கும்- மீதியை மாநில அரசில் ஈடுகட்ட வேண்டும் என்றார்.
56 இன்ச் மார்பளவு கொண்ட மோடியே, உங்களுக்கு மனசாட்சி என்று உண்மையில் ஒன்று இருக்கின்றதா? என்று கிராமப்புற மக்கள் கேட்கின்றார்கள்.
100 நாள் வேலை திட்டத்தில் எந்த ஒரு மாநிலத்திலாவது – ஏதேனும் ஒரு குக்கிராமத்திலாவது – ஒரு தொழிலாளிக்கு நூறு நாள் முழுமையாக வேலை கொடுத்ததுண்டா? 2014 ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை எந்த மாநிலத்திலும் – எந்த கிராமத்திலும் – எந்த ஒரு தொழிலாளிக்கும் உண்மையாக வேலை வழங்காத பித்தலாட்ட மோடி அரசு – 125 நாள் என்று வாய் கூசாமல் பொய் பேசுவதை என்னவென்று சொல்வது?
மாநிலங்களில் வசூலாகும் மொத்த வரியையும் வாரிச்சுருட்டி பகல் கொள்ளையனை போன்று அபகரித்து செல்கிறது மோடி அரசு.
மாநிலங்கள் மாமன்னரிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி எங்களுக்கு பிச்சை போடுங்கள் என்று மன்றாடி நிற்கின்றன. இந்நிலையில் மாநிலங்கள் தங்களின் பங்காக 40%ஐ எங்கிருந்து ஈடுகட்டும்?
தங்களின் உற்ற தோழனாக இருக்கக்கூடிய அதானி, அம்பானி வகையறாக்களுக்கு வரிச்சலுகை வழங்கி, அவர்கள் மென்மேலும் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க வழிவகை காணும் மோடி அரசாங்கம்,
நாட்டின் துன்பத்தில், துயரத்தில் அல்லல்படும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வயிற்றில் ஈவு இரக்கமின்றி அடிக்கின்றார் மோடி.
ஒருவேளை கஞ்சிக்கு வழி வகுத்த திட்டத்தில் இரக்கமின்றி மண்ணை அள்ளிப் போட்டார் மோடி என்றால் – அவருக்கு நானும் சற்றும் சளைத்தவன் அல்ல என்று கூறுகின்றார் முதலமைச்சர் ஜோசப் விஜய்!
மோடி 125 நாள் என்றால், “நான் 150 நாள் வேலை தருவேன்” என்றார் விஜய்!
கவர்ச்சியான திட்டத்தை அறிவித்து அதன் அடுத்த பாராவில், ஆனால் என்றால் ஆபத்து என்று அர்த்தம். அப்படித்தான் விஜய் அவர்களும் 150 நாள் வேலை என்று அறிவித்துவிட்டு, தற்போது என்ன சொல்கிறார்? 125 நாள் பணி முடித்தவர்களுக்கு 150 நாள் என்கிறார்.
100 நாள் வேலையே முழுமையாக பணிகள் வழங்காத நிலையில், பிரதமரோ 125 நாள் என்றார் – முதல்வரோ 150 நாள் என்கின்றார்.
தெனாலிராமனை விஞ்சி விட்டார்கள் மோடியும், விஜயும்!
கிராமப்புற பாட்டாளிகளே! தங்களின் வாழ்நாளில் ஏழ்மையைத் தவிர வேறு ஏதும் காணாத உழைப்பாளி மக்களே!!
உழைப்பைத் தவிர வேறு எந்த சுகத்தையும் அறிய முடியாத அவலத்தில், வறுமையின் கோரப்பிடியில், ‘வெந்ததைத் தின்று – விதி வந்தால் சாவு’ என்ற மனநிலையில் வாழ்ந்து மடியும் கோடிக்கணக்கான மக்களே!
நாம் பெற்ற உரிமைகள், சலுகைகள் என எதுவாயினும் போராடி பெற்றவை ஆகும். கொடிய அடக்குமுறைகளையும் சித்திரவதைகளையும் எதிர்த்து நின்று சமர் புரிந்து ரத்தம் சிந்தி பெறப்பட்டவை ஆகும்.
பன்னெடுங்காலமாய் போராடிப் பெற்ற மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு சட்டத்தை பறிப்பதற்கு மோடிக்கும், விஜய்க்கும் அதிகாரம் இல்லை-இல்லவே இல்லை.
அமைப்பாய் அணி திரள்வோம்!
நம்மை காக்கும் செங்கொடியை உயர்த்தி பிடிப்போம்!!
ஆண்டுக்கு 200 நாள் வேலை- தின ஊதியம் ரூபாய் 700 என்ற நம் சங்கத்தின் தீர்மானத்தை உரக்க முழங்குவோம்!
ஒன்றுபட்டு சமர் புரிந்து வஞ்சகச் சதிவலைகளை அறுத்தெறிந்து போர்க்களம் காண்போம்!
வெற்றி ஒன்றே எங்கள் குறிக்கோள் என்று முஷ்டியை உயர்த்துவோம் வாரீர்!!