
மரபுக் கலையின் பின்னணியில் விரியும் காதல், காமம், சாதி, ஆணாதிக்கம், மூடநம்பிக்கை ஆகியவற்றின் உளவியல் நாடகம்தான் கோந்தல் மராத்தி திரைப்படம்.
இயக்கம், திரைக்கதை: சந்தோஷ் தவாகர், இசை: இளையராஜா, ஒளிப்பதிவு: அமலேந்து சௌத்ரி, நடிப்பு: கிஷோர் கதம், இஷிதா தேஷ்முக், யோகேஷ் சோஹோனி, நிஷாத் போயர்
இந்தியாவின் கிராமப்புற வாழ்க்கையையும் அதன் மரபுகளையும் பின்னணியாகக் கொண்டு, மனித மனத்தின் இருண்ட பக்கங்களைத் தோலுரித்துக் காட்டும் திரைப்படங்கள் அரிது. அந்த வகையில் இயக்குநர் சந்தோஷ் தவாகரின் மராத்தியத் திரைப்படமான ‘கோந்தல்’ குறிப்பிடத்தக்க படைப்பாக வெளிப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புறச் சடங்கான ‘கோந்தல்’ நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு, ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களின் வழியாக ஒரு கிராமத்தின் சமூக உறவுகளையும் அதிகாரப் போட்டிகளையும் மனிதர்களின் ஆசைகளையும் இயக்குநர் நுட்பமாகச் சித்தரிக்கிறார். மகாராஷ்டிரத்தின் கிராமங்களில் குடும்பத் தெய்வங்களை வழிபட்டு, அவற்றின் அருளைப் பெறுவதற்காக இரவு முழுவதும் பாடல், நடனம், இசை, கதைசொல்லல் ஆகியவற்றுடன் நடத்தப்படும் பாரம்பரியச் சடங்கே கோந்தல்.
திரைப்படத்தின் கதை ஒரு புதுமணத் தம்பதியின் திருமணத்திற்குப் பிந்தைய கோந்தல் நிகழ்ச்சியைச் சுற்றி நகர்கிறது. சுமன் (இஷிதா தேஷ்முக்), ஆனந்த் (யோகேஷ் சோஹோனி) ஆகியோரின் திருமண வாழ்க்கையின் தொடக்கமாக நடைபெறும் இந்தச் சடங்கில், வெளியே பக்தியும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கின்றன.
ஆனால் அதன் உள்ளே பொறாமை, பழிவாங்கும் உணர்வு, காமம், அதிகாரவெறி, காதல், ஏமாற்றம் எனப் பல்வேறு உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன. பணக்காரக் குடும்பத்தின் அதிகாரமும் கிராமத்தின் செல்வாக்கு மிக்கவர்களின் ஆதிக்கமும் சாதாரண மக்களின் வாழ்க்கையை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பதும் கதையின் முக்கியமான பின்னணியாக அமைகிறது.
இந்தத் திரைப்படத்தின் முக்கியமான அரசியல் மற்றும் சமூகப் பரிமாணம் ஆணாதிக்கச் சமூக அமைப்பின் மீதான விமர்சனமாகும். சுமன் தனது விருப்பத்திற்கு மாறாகத் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படுகிறாள். அவளுடைய காதல், பாலியல் விருப்பம், வாழ்க்கைத் தெரிவுகள் ஆகியவற்றுக்கு சமூகத்தில் உரிய இடமில்லை. அவளைச் சுற்றியுள்ள ஆண்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான ஆண்மையின் பிரதிநிதிகளாக வருகின்றனர்.
உடல் வலிமையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் சர்ஜேராவ், மென்மையான இயல்புடைய ஆனந்த், பெண் வேடமணிந்து கோந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சாஹேப்ராவ் என மூன்று பாத்திரங்கள் வழியாக ஆண்மை குறித்த சமூகத்தின் வழக்கமான வரையறைகளையும் இயக்குநர் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
இந்தச் சூழலில் சுமன் வெறும் காதல் கதையின் நாயகியாக மட்டும் இல்லாமல், ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளுக்குள் தனது விருப்பத்திற்கான இடத்தைத் தேடும் பெண்ணாகவும் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் அவளுடைய போராட்டம் முழுமையான விடுதலையாக மாறுகிறதா என்ற கேள்வியையும் திரைப்படம் எழுப்புகிறது.
கோந்தல் சடங்கு இத்திரைப்படத்தில் ஒரு பின்னணிக் காட்சியாக மட்டும் இடம்பெறவில்லை. அதுவே கதையின் இயக்கச் சக்தியாக மாறுகிறது. மக்களின் பக்தி, மத நம்பிக்கை, சடங்குகளின் மீதான ஈடுபாடு ஆகியவை எவ்வாறு சிலரால் தங்களுடைய அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை இயக்குநர் நுட்பமாகக் காட்டுகிறார்.
சடங்கின் புனிதத்தன்மைக்கும் அதைச் சுற்றி நடைபெறும் மனிதர்களின் சுயநலச் செயல்களுக்கும் இடையிலான முரண்பாடுதான் படத்தின் மிக முக்கியமான கருத்தியல் அம்சம். மதம், மரபு, பக்தி ஆகியவற்றின் பெயரால் சமூகத்தில் நிலவும் அநீதிகளை நியாயப்படுத்த முடியுமா என்ற கேள்வியை இத்திரைப்படம் நம்முன் வைக்கிறது.
திரைப்படத்தின் தொடக்கத்தில் சுமார் 25 நிமிடங்கள் இடைவெளியின்றி ஒரே காட்சியாகப் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க சாதனை. பல்வேறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதோடு, கிராமத்தின் இரவுநேரச் சூழலையும் பார்வையாளர்களுக்குள் பதிய வைக்கிறது.
மின்சார விளக்குகளின் செயற்கையான வெளிச்சத்தைத் தவிர்த்து, தீப்பந்தங்கள், விளக்குகள், நெருப்பு ஆகியவற்றின் இயல்பான ஒளியைப் பயன்படுத்தியிருப்பது படத்திற்கு தனித்துவமான காட்சியமைப்பை வழங்குகிறது. அமலேந்து சௌத்ரியின் ஒளிப்பதிவு இரவின் இருளையும் மனிதர்களின் மன இருளையும் ஒன்றோடொன்று இணைக்கிறது.
இளையராஜாவின் பின்னணி இசை மிகுந்த பாராட்டுக்குரியது. “கோந்தல்” படத்திற்கு இளையராஜா தமது வழக்கமான நடைமுறையைத் தாண்டி இந்த படத்திற்கு இசையமைத்த நிகழ்வை ‘வெரைட்டி இந்தியா’ (Variety India) ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் சந்தோஷ் தவாக்கர், ‘‘83 வயதான இசையமைப்பாளர் இளையராஜா ‘கோந்தல்’ (Gondhal) கலை நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பதற்காக சென்னையிலிருந்து நாசிக்கில் உள்ள அந்த கிராமத்திற்கு நேரில் பயணம் செய்து இரண்டு நாட்கள் அங்கே தங்கி இருந்து, அந்த மரபை நேரில் அனுபவித்த பின்னரே படத்திற்கான இசையை உருவாக்கினார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிஷோர் கதம், இஷிதா தேஷ்முக், நிஷாத் போயர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு வலிமை சேர்க்கிறது. குறிப்பாக, சுமன் பாத்திரத்தில் இஷிதா தேஷ்முக் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும், பீவாபா பாத்திரத்தில் கிஷோர் கதமின் அனுபவமிக்க நடிப்பும் குறிப்பிடத்தக்கவை.
படத்தின் காட்சியமைப்பும் தொழில்நுட்ப நேர்த்தியும் சிறப்பாக இருந்தாலும், நாட்டுப்புறச் சடங்குகளின் நீண்ட காட்சிகள் அனைவருக்கும் ஒரே அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தாமல் போக வாய்ப்பு உள்ளது. இருப்பினும், வழக்கமான வணிகத் திரைப்படங்களின் சட்டகத்திற்குள் சிக்காமல், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் பண்பாட்டையும் அதன் சமூக முரண்பாடுகளையும் திரையில் கொண்டுவந்துள்ள துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.
‘கோந்தல்’ என்பது ஒரு நாட்டுப்புறச் சடங்கைப் பற்றிய ஆவணப்படமோ, வெறும் காதல் கதையோ, திகில் திரைப்படமோ அல்ல. ஒரு கிராமத்தின் ஒரே இரவு நிகழ்வுகளுக்குள் மனித ஆசைகள், அதிகாரப் போட்டிகள், ஆணாதிக்கம், மத நம்பிக்கைகள், சமூக ஒடுக்குமுறைகள் ஆகியவற்றை இணைத்துக் காட்டும் சமூக உளவியல் திரைப்படம். வெளிச்சம் நிறைந்த சடங்கின் நடுவே மனித உறவுகளின் இருளைத் தேடுகிறார் இயக்குநர். புனிதமானதாகக் கருதப்படும் மரபுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மனிதர்களின் சுயநலத்தையும் அதிகார அரசியலையும் வெளிப்படுத்துகிறார்.
இந்தியத் திரைப்படங்கள் பெரும்பாலும் கிராமப்புற வாழ்க்கையைப் பசுமையான நினைவுகளாகவோ, கொண்டாட்டங்களாகவோ சித்தரிக்கும் நிலையில், அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் பேசும் முயற்சியாக ‘கோந்தல்’ முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவின் 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரைப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் இப்படத்தின் தனித்துவத்தை உணர்த்துகிறது.
பண்பாட்டைப் போற்றுவது என்பது அதன் எல்லா அம்சங்களையும் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வதல்ல; அதன் உள்ளே மறைந்திருக்கும் மனிதநேயத்திற்கு எதிரான அம்சங்களையும் கேள்விக்குட்படுத்துவதே உண்மையான பண்பாட்டுப் புரிதல். அந்த வகையில், ‘கோந்தல்’ பார்க்க வேண்டிய, பார்த்த பின்னரும் விவாதிக்க வேண்டிய திரைப்படம்.