அறிக்கைகள்

கமல்ஹாசன், இளையராஜாவுக்கு “திரைப்படத்தில் சிறந்த பங்களிப்பிற்கான” விருது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

“திரைப்படத்தில் சிறந்த பங்களிப்பிற்கான விருது” பெற்ற திரை கலைஞர்கள் கமல்ஹாசன், இளையராஜா ஆகியோருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகநாயகன் என மக்களால் போற்றப்படுகின்ற மிகச் சிறந்த நடிகரான திரை கலைஞர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கும், இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களுக்கும், 2026 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக, “திரைப்படத்தில் சிறந்த பங்களிப்பிற்கான “விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

திரு கமல்ஹாசன் அவர்கள் தனது தனித்துவமான நடிப்பாற்றலால், திறமையால், படைப்பாற்றலால், புதுமைகளை புகுத்தும் அற்புதத் திறமைகளால் தமிழ்த் திரைப்படத்தை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தியவராவார். தமிழக மற்றும் இந்தியத் திரைப்படத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.

திரு இளையராஜா அவர்கள் ஓர் கடைகோடி கிராமத்தில் பிறந்திருந்தாலும், தனது சகோதரர் பாவலர் வரதராஜன் அவர்களது குழுவில் இணைந்து, பொதுவுடைமை இயக்கத்தின் மேடைகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவராவார். அன்னக்கிளி திரைப்படத்திற்கு இசை அமைத்ததின் மூலம், திரைப்படங்களில் அறிமுகமாகி, பல்வேறு மொழிப் படங்களுக்கும் இசை அமைத்து இந்தியா முழுவதும் புகழ்பெற்றவராவர்.

இளையராஜா அவர்கள் மார்ச் 8, 2025 அன்று லண்டனில் தனது முதல் மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான “Valiant” (சிம்பொனி எண் 1) இசையை அரங்கேற்றி, முழு மேற்கத்திய சிம்பொனியை உருவாக்கி, நேரலையில் நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

“திரைப்படத்தில் சிறந்த பங்களிப்பிற்கான” விருதுகளை பெற்றுள்ள மிகச் சிறந்த கலைஞர்களான, திரு.கமல்ஹாசன் அவர்களும், திரு.இளையராஜா அவர்களும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

திரு.கமல்ஹாசன் அவர்களும், திரு.இளையராஜா அவர்களும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button