மாநில செயலாளர்

நாம் வெல்வோம்! பரப்புரைகளை துவக்குங்கள்

மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடிதம்

அன்பார்ந்த தோழர்களே வணக்கம்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு முடிவிற்கிணங்க, நாடு முழுவதும் 10 தினங்கள் நடைபயண இயக்கம் மேற்கொண்டோம்.

நாடு முதலாளித்துவ பாதையிலிருந்து – இடது பக்கம் திரும்ப வேண்டும். மாற்றத்தை நோக்கிய நமது முன்னோர்கள் முன்மொழிந்த முழக்கமது.

நாம் முன்னெடுக்கிறோம்.

இந்தியா முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கில் செப்டம்பர் 1-ல் புதுடில்லியில் அணிதிரண்டனர்.

எழுச்சி மிகுந்த நிகழ்வு அது.

ஓர் உண்மையான இந்தியாவை முன்னிறுத்திய மாபெரும் நிகழ்வு அது!

தமிழ்நாடு இனி இடது பக்கம் எனும் சமூக அறிவியல் முழக்கத்தை இடதுசாரி ஒருங்கிணைப்புக்குழு முன்மொழிந்துள்ளது.

இதனை வழிமொழிய வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் பொறுப்பு!

தமிழ்நாடு இதுகாறும் – ஏராளமான முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. பல்வேறு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.

அனைவரையும் கரம் கூப்பி வணங்குகிறோம்.

ஆனாலும், நிலவும் முதலாளித்துவ சமூக அமைப்பு அப்படியேதான் நிலவுகிறது.

செல்வ வளங்களைப் பெருக்கும் மக்கள் வறுமையில், ஏழ்மையில்.

அதனைச் சுரண்டுவோர் செல்வச்செழிப்பில்.

இடைவெளி அதிகரித்த வண்ணம் உள்ளது.

நாடு தனியார் மயத்தை நோக்கி வேகமாக நகர்கிறது.

இது முதலாளிகளின் நாடு அல்ல!

மக்களின் தேசம் – அதிலும் உழைக்கும் மக்களின் தேசம்.

மேலாதிக்கம், போர், சுரண்டல், ஏற்றத்தாழ்வு என்பது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விதி.

இந்த விதியை உழைக்கும் மக்கள் இயக்கத்தால் மாற்றுவோம் – இடது பக்கம் திருப்புவோம்.

இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பே இடது பக்கம் தானே!

ஜனநாயகம், மதச்சார்பின்மை, விடுதலை, நீதி, சோசியலிசம் எனும் கொள்கைப் பிரகடனம் யாவும் இடது கருத்தியல்தானே, இடது அரசியல் முழக்கம் தானே!

நாட்டின் திசை இடது பக்கம் என்றாலும், அதனைத் தடுத்து நிற்பவர்கள் வலதுசாரிகள் – பி.ஜே.பி.யும், நாட்டின் பிரதமரும் வலது பக்கம். போரினை விரும்புவோர்- சுரண்டல், பாலின பாகுபாடு, சமத்துவமின்மை, ஆதிக்கம், மூலதனப்பெருக்கம், இயற்கை மீது சூறையாடல் – எனும் யாவும் வலது பக்கம்.

போரற்ற நீடித்த அமைதி, விடுதலை, காலனிய எதிர்ப்பு, இயற்கை பாதுகாப்பு, கொள்ளையிடும் மூலதன எதிர்ப்பு, சமத்துவம், சமூக நீதி எனும் உயர் காரணிகள் யாவும் இடது பக்கம்!

நாம் நம்பிக்கையோடு கூறுவோம் தமிழ்நாடு இனி இடது பக்கம்!

அக்டோபர் 15 பிரம்மாண்ட பேரணிக்கு திட்டமிட்டோம், இடையில் இடைத்தேர்தல், இதனால், பேரணி தேதி தள்ளி வைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இடைத்தேர்தல் திணிக்கப்பட்டது. த.வெ.க.-வை நாம் வெளியிலிருந்து ஆதரிக்கிறோம்.

அது மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிப்பது. மக்கள் அதிகாரத்தில் ஆளுநர் பிஜேபி அமர்ந்து விடக்கூடாது.

நாம் அமைச்சரவையில் இல்லை – கூட்டணியில் இல்லை – எந்த கூட்டணியிலும் இருக்க வேண்டிய சூழல் தற்போது இல்லை.

எனவே, இடைத் தேர்தலை வேடிக்கை பார்க்க முடியாத சூழல் –

இடதுசாரிகள் களம் காண்கிறோம்.

நமக்கு ஒரு வாய்ப்பைக் கோருகிறோம்.

தாராபுரத்தில் தோழர் லட்சுமணன் இடதுசாரிகள் சார்பில் நமது கட்சி வேட்பாளர் களம் காண்கிறார்.

அவர் கட்டடத் தொழிலாளி – எளிய மக்களின் போராட்டங்களில் முன் நிற்பவர். அவருக்கு தொகுதி மக்கள் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம் – வாகை சூட வேண்டுகிறோம்.

அதேபோல், தோழர் சுகந்தி இடதுசாரிகள் சார்பில் சிபிஎம் வேட்பாளர் – களம் பல கண்ட போராளி. அவருக்கு மதுராந்தகம் தொகுதி மக்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வாகை சூட வேண்டுகிறோம்.

தோழர்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் – இரு தொகுதியும் இடதுசாரிகள் தொகுதி – இரண்டிலும் உழைக்க வேண்டும். மக்களை சந்திப்போம்.

வேட்பாளர்களை அறிவிப்பதே ஓர் உளவியல் போர்தான் – உளவியல் போட்டிதான்.

இதில் இடதுசாரிகள் வென்று நிற்கிறோம்.

அதாவது ஜாதி, மதங்களை முன்மொழியாத –
காசு பணங்களை முன் மொழியாத –
கட்சித் தாவலை முன் மொழியாத –
கொள்கை வழி வேட்பாளர்கள் என்பதில்
முதல் சுற்றிலேயே நாம் வென்று நிற்கிறோம்.

நாம் வெல்வோம்! பிரச்சார இயக்கங்களை துவக்குங்கள் தோழர்களே!!

தோழமையுடன்
மு.வீரபாண்டியன்
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button