ஒரு லட்சம் கோடி முதலீடு வந்திருக்கிறது என்றால்.. ஆண்டுக்கு எடுத்துச் செல்லும் லாபம் எவ்வளவு?
மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கேள்வி

ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாக தமிழ்நாடு அரசு சொல்கிறதே, அந்த நிறுவனங்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா? ஒரு லட்சம் கோடி முதலீடு போட்ட நிறுவனங்கள், ஆண்டுக்கு எவ்வளவு லாபம் எடுத்துச் செல்கின்றன? என்பதை பிரதமரும் முதலமைச்சரும் சொல்ல வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாற்றம் தேவை நடைபயணப் பரப்புரை ஆகஸ்ட் 6 முதல் 15 ஆம் தேதி வரை நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. இந்தப் பரப்புரையின் நிறைவு நிகழ்ச்சி – பொதுக் கூட்டம், சென்னை புரசைவாக்கத்தில் 15.06.2026 அன்று நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உரையாற்றினார். அவை வருமாறு:
“மாற்றம் தேவை என்பதுதான் நடைபயண இயக்கத்தின் முழக்கம். கட்சி மாறுவதல்ல மாற்றம், ஆட்சி மாறுவதல்ல மாற்றம், முதலமைச்சர், பிரதமர் மாறுவதல்ல மாற்றம், நிலவுகிற சமூக அமைப்பிலிருந்து நாடு – முன்பைவிட முற்போக்கான பாதையில் மாற வேண்டும். அதுதான் மாற்றம்.
நம்மைப் பொறுத்தவரை நிலவுவது முதலாளித்துவ சமூகம். 10 கோடி பேர் உழைத்தால், 10 பேர் சுரண்டுகின்றனர். அதைச் சட்டம் வேடிக்கை பார்க்கிறது.
நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது.
பெண்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன.
சாதி ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன.
மதப்பாகுபாடுகள் தொடர்கின்றன.
இனச்சண்டைகள் தொடர்கின்றன.
இவை இல்லாமல் மானுடர் அனைவரும் ஓர் நிறை, ஓர் குலம் என்கிற சிந்தனையில் நாடு திரும்புவதுதான் நல்ல மாற்றம்.
நிலவுகிற முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து, நாடு சோசலிசப் பாதைக்குத் திரும்ப வேண்டும். அதைத்தான் நாம் இடது மாற்று என்கிறோம்.
இந்திய விடுதலைப் போரின் தியாகிகள் அந்தக் கனவோடுதான் நாட்டின் விடுதலைப்போரிலே களமாடினார்கள். இன்றுள்ள முதலாளித்துவ சமூகத்திற்காக அல்ல.
எனவேதான் நண்பர்களே, தோழர்களே, நாட்டை இடதுபக்கம் திருப்ப வேண்டும்.
அத்தகைய மாற்றத்தை முன்மொழிந்தபடி 10 தினங்கள் இந்தியா முழுவதும் நடைபயண பரப்புரையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டிருக்கிறது.
இந்தியாவில் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதா? இதைப் பற்றி நாட்டின் பிரதமரோ, தமிழ்நாட்டின் முதலமைச்சரோ எதுவும் பேசவில்லை. சுதந்திர தின விழாவில்-கொடி ஏற்றி வைத்திருக்கிறார்கள்.
40 கோடி மக்களுக்கான வாங்கும் சக்தி- 4 பேரிடம் இருக்கிறது. 40 கோடி பேர் உழைப்பதை 4 பேர் சுரண்டுகிறார்கள்.
இதைப்பற்றி பிரதமர் பேசுகிறாரா? எப்படி நாடு முன்னேறிவிடும்?
கோடிக்கணக்கான மக்கள் உழைக்கிறார்கள்- 5 குடும்பங்கள் உழைப்பைச் சுரண்டுகின்றன- நாடு கடந்த நிறுவனம் சுரண்டுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர்கூட, புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறார்- நாம் அவரை ஆதரிக்கிறோம்.
அவர்கூட ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாகச் சொல்கிறார். சரி. அந்த ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தது நல்லது. அந்த நிறுவனங்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா?
அவர்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி முதலீடு போடுகிறார்களா? 6 மாதத்துக்கு ஒரு முறை போடுகிறார்களா?
ஒரு லட்சம் கோடி முதலீடு போட்டால், அவர்கள் கொண்டு செல்கிற லாபம் எவ்வளவு?
நாட்டின் பிரதமரும் இதைப் பற்றிப் பேச மறுக்கிறார்- முதலமைச்சரும் இதைப்பற்றிப் பேச மறுக்கிறார்.
ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துவிட்டோம் என்று சொல்கிறீர்கள். அவர்கள் ஆண்டுக்கு கொண்டு செல்கிற லாபம் எவ்வளவு?
முன்னர் இருந்த ஆட்சியும் சரி, இப்பொழுது இருக்கிற ஆட்சியும் சரி- முன்னர் இருந்த பிரதமரும் சரி, இன்றைக்கு இருக்கிற பிரதமரும் சரி- நாடு கடந்த நிறுவனங்கள், பெரிய முதலாளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் போடுகிறார்கள். அதில் இடம்பெற்றிருப்பது என்ன என்பது உங்கள் இரண்டு பேருக்கு மட்டும் தெரிந்தால் போதுமா? நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டாமா?
அவர்கள் போடுகிற மூலதனம் எவ்வளவு? கொண்டு செல்கிற லாபம் எவ்வளவு?
100 ரூபாய் போட்டால், லட்சம் ரூபாய் லாபமாகச் செல்கிறது.
அதனால் இந்த நாடு முன்னேறி விடாது. நாடு கடந்த நிறுவனங்களால், நாடு கடந்த முதலாளிகளால் இந்தியா முன்னேறாது.
அதற்கு மாறாக தற்சார்பில்தான் நாடு முன்னேறும்.
அந்தத் தற்சார்பு குறித்து நாட்டின் பிரதமரும் பேசவில்லை, நம்முடைய சகோதரர் மாண்புமிகு விஜய் அவர்களும் பேசவில்லை.
நாட்டின் பிரதமருக்கு இருக்கிற கவலையெல்லாம் நக்சல்- நக்சலைட்டுகள். நக்சலைட்டுகளைச் சுட்டுக்கொன்று விட்டோம், ஒழித்துவிட்டோம் என்று பெருமை பேசுகிறார்.
நக்சலைட்டுகள் யார்? நக்சல் பாதையை நாங்கள் ஏற்கவில்லை; அந்தச் சகோதரர்கள் ஆயுதத்தைக் கீழே போட்டு ஜனநாயகத்துக்குத் திரும்ப வேண்டும் என்று கம்யூனிஸ்ட் பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
ஆனால், நக்சல் யார்? நாடு கடந்த பயங்கரவாதியா? இந்த மண்ணில் பிறந்தவர்- பழங்குடிகள்- தொல்குடிகள்- அலைகுடிகள்- ஏழைகள்- தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்.
மக்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு, உள்துறை அமைச்சரும், பிரதமரும் சுதந்திர தின விழாவில் நக்சலைட்டுகளை ஒழித்துவிட்டோம் என்கிறார்கள். நக்சல் இந்த மண்ணின் புதல்வர்கள். ஏழைகள்- மலைமக்கள். நிலப்பிரபுக்களை எதிர்த்து அவர்கள் போராடுகிறார்கள். நீதிக்காக, உரிமைக்காகப் போராடுகிறார்கள்.
அவர்களைச் சுட்டுக்கொல்வது வீரமா? உலகத்தின் மிகப்பெரிய இராணுவம் இந்திய இராணுவம். உலகின் மிகப்பெரிய இராணுவம், போலீஸ் நக்சல்களைச் சுட்டுக்கொல்வது பெருமையா? நாட்டின் பிரதமர் சுதந்திர தின விழாவில் அதைச் சொல்கிறார்.
அடுத்த வரியில் சொல்கிறார், நக்சல்களைக் கொன்றுவிட்டோம்; ஆனால், நக்சல் மனப்பான்மை உள்ளவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்கிறார். வாழத்தான் செய்வார்கள்.
ஒரு சிறுவன்- அவன் தலித், ஒடுக்கப்பட்டவன், பழங்குடி- அவன் நிழல் இன்னொரு மனிதன் மீது படுவதால்- தீட்டு? உன் நிழல் என் மீது பட்டுவிட்டது என்று அடித்தே கொல்கிறார்கள். பிறப்பால் நீ தாழ்வு – எனவே, உன் நிழல் என் மீது பட்டுவிட்டது. எனவே, நீ வாழக் கூடாது என்று அடித்தே கொன்றால், அதைப் பார்க்கிறவனுக்கு, கேட்கிறவனுக்கு என்ன மனநிலை வரும்?
அநீதிகளை எதிர்ப்பதுதான் நக்சல் என்றால், அது அனைவரின் மனதிலும் வாழ்கிறது. பேராசிரியர் மனங்களிலே வாழ்கிறது. நல்ல கவிஞர்களின் மனங்களில் வாழ்கிறது. நாட்டிற்காகப் போராடத் துடிக்கிற இளைஞர்களின் மனங்களில் வாழ்கிறது.
அநீதிகளை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?
ஒரு பெண், நம்மோடு பிறந்த சகோதரிக்கு துன்பம் நேரும் என்று சொன்னால், அந்தத் துன்பத்தை உருவாக்குகிறவர் யாராக இருந்தாலும், அந்த அநீதியை எதிர்த்துப் போராடி அந்தப் பெண்மையைப் பாதுகாக்கிறோம் அல்லவா? அதற்குப் பெயர் என்ன? அதைதான் நக்சலிசம் என்கிறார்கள்.
ஆயுதம் தாங்குகிறவர்களை நீங்கள் அழித்துவிட்டீர்கள். இப்போது நக்சல் இல்லை. ஆனால், அநீதிகளை எதிர்க்கிறவன் நக்சலாக இருக்கிறான்.
அநீதிகளை எதிர்ப்பதுதானே கல்வி? கல்வியின் நோக்கம் என்ன? அநீதிகளை எதிர்ப்பது. விடுதலைப் பக்கம் நிற்பது. புதிய நீதியைப் பேசுவது.
ஆனால், நாட்டின் பிரதமர் அதையெல்லாம் கடந்துவிட்டு, நாடு வளர்ச்சி அடையும்- இராணுவத்தில் தன்னிறைவு- பீரங்கி, குண்டு….என்கிறீர்களே!
நாட்டில் எத்தனைக் கோடி மக்கள் ஏழைகள்! வீடில்லாதவர்கள்- உணவு இல்லாதவர்கள்- கல்வி மறுக்கப்பட்டவர்கள்- இடைநிலையிலேயே கல்வியை நிறுத்தியவர்கள் எத்தனை பேர்? நாட்டின் பிரதமர் அவர்களே, இந்தப் புள்ளிவிவரம் இருக்கிறதா?” – இவ்வாறு மு.வீரபாண்டியன் உரையாற்றினார்.