
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5 முதல் நடைபெற்று வருகிறது. ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான கருத்து மோதல் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல; அவசியமானதும்கூட. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயகக் கடமை. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிப்பதும், மாற்றுக் கொள்கைகளை முன்வைப்பதும் ஆளுங்கட்சியின் பொறுப்பு.
சட்டப்பேரவையில் கிண்டலும் நகைச்சுவையும் புதிதல்ல. அரசியல் விமர்சனத்துக்குள் நகைச்சுவை கலப்பதும் அவையின் ஜனநாயகப் பண்பாட்டின் ஒரு பகுதிதான். எதிர்த்தரப்பினரும் ரசித்து சிரிக்கும் வகையில் நடந்த அரசியல் நையாண்டிகளுக்கு பேரவையில் நீண்ட வரலாறு உண்டு. ஆனால் இன்று தனிநபரை இழிவுபடுத்துதல், எதிராளியின் குணாதிசயங்களைச் சாடுதல், நக்கல், கோபம், தேவையற்ற குறுக்கீடுகள் ஆகியவை விவாதத்தின் முக்கிய இடத்தைப் பிடிப்பது கவலையளிக்கிறது. இவை சமூக வலைத்தளங்களில் சில நிமிடங்கள் ‘வைரல்’ ஆகலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் அங்குலம் அளவுக்காவது முன்னேறுமா?
தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் பல உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை நடைமுறை, அவை மரபு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நுணுக்கங்கள் ஆகியவற்றில் அனுபவம் குறைவாக இருக்கலாம். அவர்கள் முற்றிலும் புதிய அரசியல் சூழலில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுள்ளனர். எனவே பல ஆண்டுகள் சட்டப்பேரவை அனுபவம் கொண்ட அரசியல்வாதிகளின் முதிர்ச்சியை முதல் நாளிலேயே அவர்களிடம் எதிர்பார்ப்பது நியாயமானதல்ல.
ஆனால் இதே காரணத்தால், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தின் அளவுக்கு இணையான அரசியல் பொறுப்பையும் விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அதிகாரம் என்பது பதவி மட்டுமல்ல; மக்களுக்காக அளிக்கப்பட்ட பொறுப்பு. அதேபோல், நீண்ட சட்டப்பேரவை அனுபவம் கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் புதிய பொறுப்பு உள்ளது. ஆளுங்கட்சியை வெறுமனே தாக்குவது அல்ல; ஆட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான இடங்களில் திருத்தம் செய்ய வலியுறுத்துவதும் அவர்களின் கடமை.
ஆளுங்கட்சியினர் விமர்சனத்தை ஏற்கத் தயாராக இல்லாத சூழலில், இதனை நிறைவேற்றுவது எளிதல்ல. இருந்தாலும் ஜனநாயகம் என்பது எதிர்ப்பையும் விமர்சனத்தையும் கருத்தில் கொள்வதில்தான் உயிர் பெறுகிறது.
நிதியமைச்சர் மட்டுமின்றி பல அமைச்சர்களும் தமிழில் பேசுவதிலும் படிப்பதிலும் தடுமாறுகிறார்கள். அதனை ஒரு புதிய உறுப்பினர் தனது கன்னிப் பேச்சில் குறிப்பிட்டதற்காக அவர் மீது கடுமையான எதிர்வினை தேவையா என்பது கேள்விக்குறி. அவரும் புதிய உறுப்பினர்தானே என்பதையும் ஆளுங்கட்சி கணக்கில் எடுத்திருக்க வேண்டும். அமைச்சர்கள் எதிர்க்கட்சியினருக்கு மட்டும் பதிலளிப்பவர்கள் அல்லர்; மக்களுக்கும் பதிலளிக்க வேண்டியவர்கள். அவையில் அவர்கள் பயன்படுத்தும் சொற்களும், உடல்மொழியும், எதிர்வினையும், அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதமும் மக்களால் மதிப்பிடப்படும்.
இந்தச் சூழலில் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலையிட்டு, புதிய உறுப்பினரின் பேச்சைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறி சூழலின் வெம்மையைக் குறைக்க முயன்றது வரவேற்கத்தக்கது. அதேபோல், “எதையும் சொல்லிவிடலாம்; ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றுவது சுலபமல்ல. மூன்று மாதம்தானே ஆகிறது” என்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் நகைச்சுவையான தலையீடும் பதற்றத்தைக் குறைத்தது. இத்தகைய அரசியல் நிதானம்தான் அவைக்குத் தேவை.
புதியவர்கள் என்பதற்காக இங்கிதமற்ற செயல்பாடுகளை முடிவில்லாமல் சகித்துக்கொள்ள முடியாது. தண்ணீரில் இறங்கித்தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும் என்பதுபோல, ஆட்சியிலும் செயல்பட்டுத்தான் அனுபவம் பெற முடியும். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் கவனம் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் ஆட்சியின் ஒவ்வொரு தவறும், தாமதமும் சாதாரண மக்களையே பாதிக்கின்றன.
கூட்டத் தொடக்க நாட்களில் இறுக்கமான முகத்தோடு இருந்த முதலமைச்சர், தற்போது அவையின் சூழலுக்குப் பழகி சிரிக்கத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி. இந்த மாற்றம் அவையின் நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்க வேண்டும். முதலமைச்சரின் ஒவ்வொரு சொல்லும் செயல்பாடும் அரசின் அரசியல் பண்பாட்டை நிர்ணயிக்கும்.
ஆக்கப்பூர்வ விவாதத்துக்காக, தொழிலாளர்களின் உரிமைகள், விவசாயிகளின் வருமானம், கிராமப்புற வேலைவாய்ப்பு, இளைஞர்களின் வேலையின்மை, பெண்களின் பாதுகாப்பும் பொருளாதார சுதந்திரம், ஏழைகளின் வீடு, உணவு, பொதுக்கல்வி, பொதுச்சுகாதாரம், விலைவாசி உயர்வு, சமூகநீதி, சாதி ஒடுக்குமுறை, கார்ப்பரேட் ஆதிக்கம், தனியார் மயமாக்கல், ஒன்றிய அரசின் நிதிப் பங்கீடு மற்றும் மாநில உரிமைகள் போன்ற ஏராளமான பிரச்சினைகள் கொட்டிக்கிடக்கின்றன.
சட்டப்பேரவையின் கண்ணியத்தைப் பாதுகாப்பது பேரவை மரபைக் காப்பது மட்டும் அல்ல; ஜனநாயகத்தை மக்களின் வாழ்வோடு இணைப்பதாகும்.