யுபிஐ பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம்: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சரணடைவா? கொள்கை மாற்றமா?
ம.இராதாகிருஷ்ணன்

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெற்றிகளில் ஒன்றாக ஒருங்கிணைந்த பணப் பரிமாற்றத்திற்கான இடைமுகம் (Unified Payments Interface -– UPI) திகழ்கிறது. இது நாட்டின் பணப் பரிமாற்ற முறையையே மாற்றியமைத்துள்ளது.
கோடிக்கணக்கான மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் கொண்டு வந்துள்ளது. தனியார் ஏகபோக நிறுவனங்களைச் சார்ந்திருக்காமல், உலகத்தரத்திலான டிஜிட்டல் கட்டமைப்பை பொதுத்துறை நிறுவனங்களாலும் உருவாக்க முடியும் என்பதை அது நிரூபித்துள்ளது. ஆனால் இந்த மகத்தான சாதனை இன்று நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. ஒருங்கிணைந்த பணப் பரிமாற்றத்திற்கான இடைமுகத்துக்கு ஏற்பட்ட தோல்வியால் வந்த நெருக்கடி அல்ல; மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டதால்!
அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எழும் கோரிக்கைகளுடன் தொடர்புபடுத்தி, யுபிஐ பரிமாற்றத்திற்கு கட்டணம் விதிப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையாக இருந்தால், இது வெறும் தொழில்நுட்ப அல்லது பொருளாதாரக் கொள்கை மாற்றம் மட்டுமல்ல. மிகப்பெரிய அரசியல் கேள்வியை இது எழுப்புகிறது.
அமெரிக்கப் பெருநிறுவனங்களின் நலன்களுக்காக தமது டிஜிட்டல் இறையாண்மையை இந்தியா அமைதியாக விட்டுக்கொடுக்கிறதா?
உலகின் மின்னணு பணப் பரிமாற்றத்தில் விசா (Visa), மாஸ்டர் கார்டு (Mastercard) போன்ற உலகளாவிய பணப் பரிமாற்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. யுபிஐ அந்த நிலையை மாற்றியது. அனைவருக்கும் இணக்கமான, கட்டணமில்லாத, உடனடியான டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை வழங்கியதன் மூலம், இந்த கார்டு நெட்வொர்க்குகளைச் சார்ந்திருப்பதை யுபிஐ பெருமளவில் குறைத்தது. கோடிக்கணக்கான சிறு வணிகர்களும் நுகர்வோர்களும் கிரெடிட், டெபிட் கார்டுகளில் இருந்து யுபிஐ நோக்கி மாறினர். இதனால் இழப்பைச் சந்தித்தது இந்திய நுகர்வோர் அல்ல; பணப் பரிமாற்றக் கட்டணங்களின் மூலம் வருவாய் ஈட்டும் பன்னாட்டு பணப் பரிமாற்ற நிறுவனங்கள்தான்.
பணப் பரிமாற்றச் சந்தை கைநழுவிப் போவதால், அமெரிக்க அரசாங்கத்தின் மூலம் இந்த பணப் பரிமாற்ற நிறுவனங்கள் அரசியல் அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
தடையற்ற சந்தைப் போட்டி அல்ல
யுபிஐ (UPI) என்பது சிலிக்கான் வேலியின் முதலீட்டிலிருந்து உருவானது அல்ல. இந்தியாவின் பொதுத்துறை வங்கி அமைப்பான நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை ஆதரவு மற்றும் கணிசமான பொதுமுதலீடு மூலம் உருவாக்கப்பட்டது. இந்த உள்கட்டமைப்புக்கு இந்திய வரி செலுத்துவோர் நிதியளித்தனர். பொதுத்துறை வங்கிகள் இதற்கான சூழலை உருவாக்கின. மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
பணப் பரிமாற்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை மீட்டெடுக்கும் நோக்குடன், பணப் பரிமாற்றங்களுக்கு கட்டணம் விதிக்கப்படுகின்றன என்றால், கூட்டு முதலீட்டில் உருவாக்கப் பட்ட பொது உள்கட்டமைப்பை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களின் லாபத்தைப் பாதுகாப்பதற்காக மாற்றியமைக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாது. இதுதான் புதிய தாராளவாதப் பொருளாதாரத்தின் வழமையான தர்க்கம்: செலவை சமூக மயமாக்கு — லாபத்தை தனியார் மயமாக்கு!
டிஜிட்டல் காலனியாதிக்கம்
உலகளாவிய கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு வெற்றிகரமாகச் சவால் விட்ட முக்கியமான சில டிஜிட்டல் தளங்களில் யுபிஐயும் ஒன்றாகும். பெருநிறுவனங்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து இதனைப் பலவீனப்படுத்துவது விதிமுறைகளில் செய்யப்படும் மாற்றம் அல்ல. மூலோபாயப் பின்வாங்கலே.
புதிய பேரரசு போர் தொடுக்க படைகள் தேவையில்லை. வர்த்தக ஒப்பந்தங்கள், அறிவுசார் சொத்துரிமை விதிமுறைகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் நிதித் தொழில்நுட்பம் போன்றவையே போதுமானவையாகும்.
பெருநிறுவனங்கள் நேற்று துறைமுகங்கள், ரயில்வே மற்றும் இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்தின. இன்று டிஜிட்டல் உள்கட்டமைப்பு, பணப் பரிமாற்ற கட்டமைப்புகள் மற்றும் தரவுகளைக் கட்டுப்படுத்த முயல்கின்றன. காலனியாதிக்கத்தின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது..
ஒன்றிய மோடி அரசு முழங்கிக் கொண்டிருந்த “தற்சார்பு இந்தியா” (Atmanirbhar Bharat) எங்கே போனது?
தற்சார்பு என்பது வெளிப்புற வணிக அழுத்தத்திற்கு எதிராக உள்நாட்டு நிறுவனங்களையும் பொதுமக்கள் சார்ந்த அமைப்புகளையும் பாதுகாக்கும் துணிவுடன் செயல்படுவதாகும். இதை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர்த்தகத் தடையாகப் பார்க்கின்றன. இதற்காக இந்தியா தனது வெற்றிகரமான டிஜிட்டல் தளங்களில் ஒன்றை மாற்றியமைப்பது, “தற்சார்பு” என்று பேசியதை வெறும் முழக்கமாக மாற்றிவிடும். பன்னாட்டு பெருநிறுவனங்களின் நலன்களுக்கு ஏற்ப கொள்கை முடிவுகள் தீர்மானிக்கப்பட்டால், பொருளாதார இறையாண்மை எவ்வாறு நிலைத்திருக்க முடியும்?
யார் செலுத்தப் போகிறார்கள்?
பணப் பரிமாற்றக் கட்டணங்களை ஆதரிப்பவர்கள், அவை மிகக் குறைந்த அளவிலானவை அல்லது யுபிஐ அமைப்பின் நீடித்த செயல்பாட்டுக்கு அவசியமானவை என்று கூறலாம். ஆனால் வரலாறு வேறுவிதமாகக் கற்றுத் தருகிறது. பயனர் கட்டணங்கள் ஒருமுறை நிறுவன மயமாக்கப்பட்டுவிட்டால், அவை நீண்ட காலத்திற்கு “சிறிய கட்டணங்களாக” மட்டுமே இருப்பதில்லை. அந்தச் சுமையை பன்னாட்டு பெரு நிறுவனங்கள் சுமக்கப் போவதும் இல்லை.
சிறு கடைக்காரர்கள்,தெருவோர வியாபாரிகள், விவசாயிகள், ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள், கிக் தொழிலாளர்கள்,சாதாரண நுகர்வோர் உள்பட குறைந்த செலவிலான டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தால் அதிகம் பயனடைந்த மக்களே இறுதியில் பெருநிறுவனங்களின் லாபத்திற்கு மானியம் வழங்குபவர்களாக மாறிவிடுவார்கள்.
யாருடைய நலனுக்காக கட்டணம்?
இந்தப் பிரச்சனை வணிகர் தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate -MDR) தொடர்பானதோ, பணப் பரிமாற்றப் பொருளாதாரம் பற்றியதோ அல்ல. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையைத் தீர்மானிப்பது யார்? என்பதுதான் பிரச்சனை. அதாவது, இந்திய மக்களின் நலன்கள் பொதுக் கொள்கையை வழிநடத்துமா? அல்லது சக்திவாய்ந்த அரசாங்கங்களின் ஆதரவுடன் செயல்படும் உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக நலன்களா? என்பது தான் கேள்வி.
அமெரிக்கா தனது தொழில்நுட்பப் பெருநிறுவனங்களைப் பாதுகாக்கிறது. அமெரிக்க டிஜிட்டல் தளங்களை ஐரோப்பா ஒழுங்குபடுத்துகிறது. சீனா தனது உள்நாட்டு டிஜிட்டல் சூழலைத் தீவிரமாகப் பாதுகாக்கிறது. இந்தியா மட்டும் தமது மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனைகளில் ஒன்றைப் பாதுகாக்க ஏன் தயங்க வேண்டும்?
இறையாண்மை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும் தனது மூலோபாய பொது உள்கட்டமைப்பைப் பாதுகாக்கும் அதிகாரம், உரிமை உண்டு.
யுபிஐ என்பது தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட ஒரு மாற்றம் மட்டுமல்ல. பொதுமக்களின் வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களின் திறனையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பொதுச்சொத்து. பொதுத்துறை நிறுவனங்களால் புதுமையை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தது. தனியார் ஏகபோக நிறுவனங்களை விட சிறப்பான தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தி, அரசால் செயல்பட முடியும் என்பதை அது நிரூபித்தது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு என்பது பெருநிறுவனங்கள் வாடகை வருமானம் ஈட்டும் கருவியாக இல்லாமல், பொதுப் பயன்பாட்டுச் சேவையாக இருக்க முடியும் என்பதையும் நிரூபித்தது.
வெளிப்புற அழுத்தத்தின் காரணமாக கட்டணங்களை அறிமுகப்படுத்துவது, பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட் வழமையான புதிய தாராளவாதப் போக்கையே பிரதிபலிக்கும்:
பொது நிறுவனங்கள் மதிப்பை உருவாக்குகின்றன. தனியார் பெருநிறுவனங்கள் லாபத்தை கைப்பற்றுகின்றன. மக்கள் அதன் விலையைச் செலுத்துகின்றனர்.
வங்கித்துறை, காப்பீடு, சுகாதாரம், கல்வி, பொதுப் பயன்பாட்டுச் சேவைகள் எனப் பல்வேறு துறைகளில் நாம் எதிர்கொண்ட இதே தர்க்கம் இப்போது டிஜிட்டல் பொருளாதாரத்திலும் நுழைய முயல்கிறது.
யுபிஐ என்பது வெறும் பணப் பரிமாற்றத் தளம் அல்ல. அது இந்தியாவின் தொழில்நுட்பத் திறன், பொதுத்துறைப் புதுமை மற்றும் பொருளாதார இறையாண்மையின் அடையாளம். இதன் அடிப்படைக் கொள்கைகளை பெருநிறுவனங்களின் வணிக நலன்களுக்காக, நீர்த்துப் போகச் செய்தால், வரலாறு அதை சந்தைச் சீர்திருத்தமாக மட்டும் நினைவு கூராது. பன்னாட்டு ஏகபோக பெருநிறுவன சக்திக்கு டிஜிட்டல் இறையாண்மையை இந்தியா சரணடையச் செய்ததாகவே பதிவு செய்யும்.
இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போவது மக்களின் தேவைகளா? பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் வரவு–செலவுக் கணக்குகளா? இதுதான் இந்தியாவின் முன் நிற்கும் உண்மையான கேள்வியாகும்.
இதற்கான பதில்தான், யுபிஐ கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்யும் பொதுப் பயன்பாட்டுத் தளமாகத் தொடருமா? உலக மூலதனம் பொதுச் சொத்துக்களைப் படிப்படியாகத் தனியார் லாபமாக மாற்றியமைத்ததற்கான மற்றொரு உதாரணமாக மாறுமா? என்பதைத் தீர்மானிக்கும்.