தமிழகம்

கோவையில் மாணவன் அடித்துக் கொலை: சட்டத்தை நடைமுறைப்படுத்த யார் தடங்கல்?

க.மாரிமுத்து எம்.எல்.ஏ கேள்வி

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்த காவல்துறைக்கும், நீதிமன்றத்துக்கும் யார் தடங்கல்? என்ன தடை? என்று சட்டப்பேரவையில் க.மாரிமுத்து எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.

கோவை கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் 17.8.2026 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் க.மாரிமுத்து எம்.எல்.ஏ கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அவை வருமாறு:

“நான் ஒரு தந்தையாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். பெத்த மனம் பித்து என்று சொல்வார்கள். பிள்ளை மனம்கூட கல்லாக இருந்துவிடும். ஆனால், கோயம்புத்தூர் மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்டபோது, அந்தத் தாயும், தந்தையாரும் ஊடகங்கள்முன் சொன்ன செய்தியை உன்னிப்பாக கவனித்துப் பார்த்தேன். கலங்கித்தான் போனோம். 3ஆம் ஆண்டு இஞ்சினியரிங் படிக்கிற பிள்ளை.

போதைப்பொருள் புழக்கம் குறித்து காவல்துறையில் தகவல் சொன்னார் என்பதற்காக, போதைப் பழக்கத்தை யார்யாரெல்லாம் கையாளுகிறார்கள் என அடையாளம் சொன்னார் என்பதற்காகவே அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று சொல்லுகிறார்கள்.

ஆட்சி மாற்றம் வந்திருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் உங்களைத்தான் தேர்ந்தெடுத்திருக் கிறார்கள். இந்தக் காவல்துறை பொறுப்பற்ற முறையில் இருக்கிறதோ என்று இந்த மாமன்றத்தில் நான் மீண்டும் கவலையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

போதைப்பொருள் பிரச்சனையைத் தீர்க்கவே முடியாதா? கடுமையான சட்டங்கள் வந்திருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்த காவல்துறைக்கும், நீதிமன்றத்துக்கும் யார் தடங்கல்? என்ன தடை?

அந்த மாணவனுக்கு நீதி வேண்டும். அந்த மாணவன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாணவச் சமுதாயமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

தேவைப்பட்டால், தனி சட்டங்களைக் கொண்டுவருவதற்குக்கூட இந்த அரசு தயாராக இருக்க வேண்டும். சட்டம் கொண்டுவருவது மட்டுமல்ல, அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தனி ஆளுமை வேண்டும்.

அந்த ஆளுமை உங்களிடம் இருக்கிறது என்று தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். செய்வீர்களா என்று நான் கேட்கிறேன்.

கோவையில் மாணவன் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று இந்த மாமன்றத்தில் வேண்டி, விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

அதோடு இன்னொன்றையும் சொல்லுகிறேன், திருவொற்றியூரில் ஒரு பள்ளி மாணவன் இறந்துபோயிருக்கிறான். அந்தக் குடும்பம், அந்தத் தாயினுடைய மனநிலையை இந்த அவை பரிசீலிக்க வேண்டும்.

தளி சட்டமன்றத் தொகுதியில் சித்தாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பெட்டமுகிலாளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள்.

எனவே, இந்த அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கடந்துபோய்விடக் கூடாது. உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

காவல்துறை சீர்திருத்தம் செய்யப்பட வேண்டுமோ என்று நான் வினாக்களை எழுப்பி, சம்பந்தப்பட்ட அமுதன் உள்ளிட்ட பாதிக்கப்பட்டிருக்கிற அந்தப் பிள்ளைகளுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர இந்த அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இழந்துபோயிருக்கிற அந்தக் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு மட்டுமல்ல, நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசு தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.” – இவ்வாறு க.மாரிமுத்து எம்.எல்.ஏ பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button