தமிழகம்

மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது!

டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ கவன ஈர்ப்புத் தீர்மானம்

வன உரிமைச்சட்டத்தின் அடிப்படையில், பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுடைய நிலங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும், மேகமலை வருசநாடு மக்களைப் பாதுகாக்க வேண்டும். அங்கிருந்து வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என 17.8.2026 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அவை வருமாறு:

தேனி மாவட்டம் மேகமலை வருசநாடு பகுதியில் 7 ஊராட்சிகளில் 3, 4 தலைமுறைகளாக பூர்வீகக் குடிமக்கள் வாழ்ந்து வருகின்றனர். புலிகள் சரணாலயம் என்ற பெயரில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டு, புலிகள் சரணாலயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆக்கிரமிப்பாளர்களால் பாதிப்பு உள்ளது என்று ஒரு பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் சார்பாக உரிய தகவல்கள் தெரிவிக்கப்படாத காரணத்தினால், அங்கு வாழும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

மாநிலக் காவல்துறை ஒத்துழைக்காவிட்டால், துணை இராணுவத்தைக் கொண்டு அந்த மக்களை வெளியேற்ற வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை இராணுவம் கொண்டு வெளியேற்ற வேண்டும் என்பது மிகவும் கவலையாக இருக்கிறது.

அந்த மக்கள் தங்கள் குடியிருப்புக்கான பட்டா, உழும் நிலங்களுக்கான பட்டா வேண்டும் என 60 ஆண்டு காலமாக ஆட்சியாளர்களிடம், அதிகாரிகளிடம், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலமுறை மனுக்கள் கொடுத்தும், அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், இன்றைக்கு அவர்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.

மாநில அமைச்சரவை கூடி பட்டா வழங்கலாம் என்று அரசாணை பிறப்பித்திருந்தால், இன்றைக்கு அந்த மக்களுக்கு பட்டா கிடைத்திருக்கும். அதை 60 ஆண்டு காலமாக ஆட்சியாளர்கள் செய்யவில்லை என்பதை இந்த அவையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தேனி மாவட்டம் மட்டுமல்ல, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் யானைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம் என்று அறிவிக்கப்பட்டு, பூர்வீகக் குடிமக்களை, வனச்சட்டத்தை முன்வைத்து வெளியேற்றுகின்ற நடவடிக்கையை வனத்துறை செய்து வருகிறது.

ஆகவே தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் அந்த மக்களை வெளியேற்றக்கூடாது, அந்த மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக 1924ல் இருந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அந்த மக்களை வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

2006 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வன உரிமை சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அந்த வன உரிமைச்சட்டத்தின்படி யாரெல்லாம் 1980 க்கு முன்புவரை வனங்களில் குடியிருக்கிறார்களோ, சாகுபடி செய்கிறார்களோ, அந்த பழங்குடி மக்களுக்கு, மலைவாழ்மக்களுக்கு வனஉரிமைச்சட்டம் 2006ன் படி பட்டா வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இருக்கிறது.

அந்த வன உரிமைச்சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதுமுள்ள பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுடைய நிலங்களுக்கு இந்த அரசு பட்டா வழங்க வேண்டும், மேகமலை வருசநாடு மக்களைப் பாதுகாக்க வேண்டும். அங்கிருந்து வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அந்த மக்களுக்கு 2006 வன உரிமைச்சட்டத்தின்படி இந்த அரசு பட்டா வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அரசின் கவனத்தை ஈர்த்து அமர்கிறேன்.” -இவ்வாறு டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button