தலையங்கம்

புதிய திருப்பத்துக்கான மாணவர் எழுச்சி

ஜனசக்தி தலையங்கம்

வேலையில்லாத இளைஞர்களை “கரப்பான்பூச்சிகள்” என்று இந்தியத் தலைமை நீதிபதி சொல்ல, அந்த இழிசொல்லையே, எதிர்ப்பின் அடையாளமாக மாற்றி, அபிஜித் திப்கே என்ற இளைஞர் ‘கரப்பான் ஜனதா கட்சி’ யை 16.05.2026ல், சமூக வலைத்தளத்தில் தொடங்கினார். சமூக அழுத்தங்களால் வேதனையடைந்திருந்த இளைஞர்கள் லட்சக்கணக்கில் அதில் சேர அது பெரும் சக்தியாக உருவெடுத்தது.

நீட் தேர்வு கேள்வித்தாள் 2024ல் சிலருக்கு மட்டும் முன் கூட்டியே கிடைத்தது. இதனால் சில மாணவர்கள் பயனடைந்ததை உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்டது. ஆனால் மறு தேர்வுக்கு உத்தரவிடவில்லை. அதன் பின்னர் இந்த ஆண்டும் கசிந்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வியமைச்சர் தர்மேந்திரப் பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சோனம் வாங்சுக் 28.06. 2026ல் உண்ணாவிரதம் துவக்கினார்.

‘நீட்’ மட்டும் அல்ல, SSC, UGC-NET, காவல்துறை ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பல போட்டித் தேர்வுகளிலும் கேள்வித்தாள் கசிவு, முறைகேடுகள் தொடர்ந்து நடக்கின்றன.

இந்தத் தேர்வுகளுக்கு ஒரு மாணவர் 2,3 ஆண்டுகள் தயாராகிறார். குடும்பம் லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கிகிறது. மனஅழுத்தத்தைச் சந்திக்கிறார். அதில் சிலருக்கு முன்கூட்டியே வினாத்தாள் கிடைத்தால், திறமையின் மதிப்பு குறைகிறது. சம வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. முழு தேர்வு முறையின் மீதும் நம்பிக்கை சிதைகிறது. அதனால்தான் இதனை மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்க முடியாது. இது நீதி சார்ந்த, சமூகப் பிரச்சினை.

இது ஒரு மாணவர் போராட்டம் மட்டுமல்ல; வேலைவாய்ப்பின்மை, தேர்வு முறைகேடுகள், கல்வியின் வணிகமயமாக்கல், இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தின் வெளிப்பாடு. எனவேதான், சில நூறுகளாகத் துவங்கிய மாணவர்-இளைஞர்களின் எண்ணிக்கை ஆயிரங்களாய், லட்சமாய் விரிவடைந்துள்ளது.

2020ல் நடந்த விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு, பெரிய போராட்டமாக உருப்பெற்றும், மோடி அரசு போராட்டக்காரர்களுடன் பேசத் தயாரில்லை. அடிமை இந்தியாவில், பிரிட்டிஷ்காரன் போராட்டங்கள் மீது கொண்ட அனுகுமுறையையே, அதை விட மோசமான முறையில் மோடி அரசு செயல்படுத்துகிறது. அடக்குமுறையால் ஒடுக்கிவிட முனைகிறது.

அதையும் தாண்டி, இது சீனா, பாகிஸ்தான் தூண்டுதல் என்று அதன் சமூக ஊடகப் பிரச்சாரகர்கள் பேசுகிறார்கள். சீனா, பாகிஸ்தான் தூண்டுதல் என்றால், “எல்லாம் வல்ல” மோடி அரசு அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். மாணவர்களின் மெய்யான கோரிக்கைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவது, தேசபக்தியை முன்னிறுத்தி, நாட்டுக்கு ஆபத்து என்று கூக்குரலின் மூலம் போராட்டக்காரர்களின் நம்பகத்தன்மையைச் சந்தேகத்துக்கு உள்ளாக்குவது, ஜனநாயக வழியிலான எதிர்ப்பை “வெளிநாட்டு சதி” என்று சித்தரித்து அரசுக்கு ஆதரவைத் திரட்டுவது என்று ஆர்எஸ்எஸ்-பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள்தான் உண்மையில் அரசியல் சதியாகும்.

அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது போலீசார், துணை ராணுவப் படையினர் மட்டுமின்றி,சீருடை அணியாத நபர்களும் நடத்திய தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, தண்ணீர் பீய்ச்சி தாக்குதல் ஆகியவை ஒரு ஜனநாயக நாட்டிற்கு அவமானம்.

இந்த நாட்டின் இளைஞர், மாணவர் குரலுக்கு மதிப்பில்லையா? நீதி கேட்டால் தடியடிதானா பதில்? ஒரு பெற்றோராகப் பார்க்கும்போது, “கல்விக்காக அனுப்பிய என் குழந்தை காயமடைந்து திரும்ப வேண்டுமா?” என்ற பதற்றமும் வேதனையும் நெஞ்சை நொறுக்குகிறது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். சட்டத்தை மீறுதல், வன்முறை அல்லது தேசத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் வேறு. அமைதியான எதிர்ப்பு அல்லது ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை; தேசத்துரோகம் ஆகாது.

எதிர்கால தலைமுறையின் கனவுகளை தடியடியால் நொறுக்க முடியாது. இந்த தாக்குதலுக்கு உத்திரவிட்டவர்களும், அதைச் செயல்படுத்தியவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். காயமடைந்த மாணவர்களுக்கு உரிய மருத்துவ உதவி, இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மேலும், இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.

தேர்வு முறைகேடுகளுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைப்பதும், இதற்குக் காரணமானவர்கள் ‘ மீது நடவடிக்கை எடுப்பதும், அடக்குமுறையைக் கைவிட்டு போராடுபவர்களோடு ஜனநாயக உரையாடலைத் தொடங்குவதும் ஒன்றிய அரசின் தவிர்க்க முடியாத கடமையாகும்.

இல்லையெனில், இந்த இளைஞர் எழுச்சி இந்திய ஜனநாயக வரலாற்றில் புதிய திருப்பத்தை உருவாக்கும்; மக்கள் இயக்கமாக வளர்ந்தெழும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button