தலையங்கம்

நல்லறம் நாடுக!

தலையங்கம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கும், முதலமைச்சருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.

த.வெ.க.வுக்கு 108 சட்டப்பேரவை உறுப்பினர்களை மக்கள் தந்தனர். ஆனால் அறுதிப் பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை. தனிப்பெரும் கட்சி என்பதை அங்கீகரித்து, ஆட்சியமைக்க அழைக்காமல், 118 உறுப்பினர்களுக்கு மேல் பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபித்தால் மட்டுமே பதவியேற்க அழைக்க முடியும் என பல முறை த.வெ.க. தலைவரை ஆளுநர் திருப்பி அனுப்பினார். ஆர்எஸ்எஸ் – பாஜக ஒன்றிய அரசின் அரசியல் கருவியாக, கொல்லைப்புற வழியாக ஆளுநர் ஆட்சி எனும் பெயரால் பாஜக கையில் தமிழ்நாட்டைத் தள்ள முயற்சி நடந்தது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, தமிழ்நாடு – எதிர் – டெல்லி என்பதையே முதன்மைத் தேர்தல் முழக்கமாக வைத்தது. அந்தக் கூட்டணி தோல்வியுற்றது என்பதற்காக, பொருள் பொதிந்த அந்த முழக்கத்தைத் தூக்கி எறிந்து விட முடியாது. பாஜகவின் மறைமுக ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் பொறுப்புள்ள அரசியல் கடமையை நிறைவேற்ற வேண்டிய தேவையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை உணர்ந்தன. அதே அணுகுமுறையை வி.சி.க.வும், ஐ.யூ.எம்.எல்.கட்சியும் மேற்கொண்டன. நான்கு கட்சிகளின் எட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரித்ததால் த.வெ.க. ஆட்சியமைக்க 120 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. ஆளுநரின் தடைகளைத் தகர்த்து ஆட்சியமைக்க அழைக்க வேண்டிய கட்டாயத்தை இது ஏற்படுத்தியது.

பதவியேற்பு விழா நிறைவில், முதல்வர் விஜய் நிகழ்த்திய உரை, கட்சித் தலைவரின் உரை போலவே அமைந்தது. கஜானா காலியாக இருக்கிறது, 10 லட்சம் கோடிக்குமேல் கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள், என்ன இருக்கிறது என்று இனிமேல்தான் பார்க்க வேண்டும் என்று கூறியதை அரசியல் அறிந்தவர்கள் ஏற்க மாட்டார்கள். இடைக்கால நிதிநிலை அறிக்கை தெளிவாக நிதிநிலையை வெளிப்படுத்தி இருந்தது.

500 யூனிட் மின்சாரத்துக்குள் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது, அவர்களது வாக்குறுதிக்கு எதிரானது என்றாலும், வருவாய் குறைந்த மக்களுக்கே மானியம் என்பது சரியானதுதான். ஆனால், வருவாய் குறைந்த குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை திமுக அரசு மேற்கொண்டபோது, அதற்கு எதிராக பெரும் கூச்சல் எழுப்பப்பட்டது.

சிங்கப் பெண் திட்டம், போதைப்பொருள் ஒழிப்பு போன்றவை என்ன விளைவை ஏற்படுத்தப் போகின்றன என்று காத்திருந்து பார்க்க வேண்டும். பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது சரியல்ல என அனைவரும் சுட்டிக்காட்டியதை அரசு ஏற்று, இனி நிகழாமல் பார்த்துக் கொள்வதாக கூறியது ஏற்கத்தக்கது. ஆனால் “நடந்தது நியாயமானதுதான், இதுதான் புதிய ஆட்சி முறை” என சமூக வலைத்தளங்களில் அந்தக் கட்சியினர் கொண்டாடியது, எதைச் செய்தாலும் கொண்டாடும் பிம்ப அரசியல் தமிழ்நாட்டில் நிலை கொள்ளும் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

பதவியேற்ற கையோடு, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களையும், மற்ற பல கட்சித் தலைவர்களையும் முதல்வர் சந்தித்தது ஆரோக்கிய அரசியலாகப் பார்க்கலாம். முந்தைய அரசின் நலத்திட்டங்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்டதாக மு.க.ஸ்டாலின் பின்னர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவரும் உடனிருந்து உரையாடியது, தமிழ்நாட்டில் நீண்ட காலமாகத் தொலைந்துபோன அரசியல் பண்பாடு மீட்டெடுக்கப்படுவதைக் குறித்தது.

அதேநேரத்தில், அஇஅதிமுகவைப் பிளந்து வந்தவர்களையும் சந்தித்து, அதில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் துண்டு.

அணிவித்துப் பாராட்டியது மறைந்திருக்கும் உண்மைகளுக்கு வெளிச்சமிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அணுகமாட்டோம் என்ற வாக்குறுதி கரைந்துவிட்டது.

ஒரு சோதிடரை, அரசு அதிகாரியாக (சிறப்புப்பணி) நியமித்தது குறித்து, எழுந்த கண்டனங்களுக்குப் பின்னால் அந்த நியமனத்தைத் திரும்பப் பெற்றது, இந்த அரசு மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இது தொடக்கநிலைத் தடுமாற்றம் என்று கொள்ளலாம். ‘எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு’.

பதவியேற்ற முதல்வர் பேசும் போது ஊழலற்ற ஆட்சியைத் தருவேன், யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்றார். நம்பிக்கை வாக்கெடுப்புக்குப்பின் உரையாற்றிய முதல்வர், சமூக நீதி, சமநீதி, மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளில் அரசு உறுதியாக நிற்கும் என்றார். முந்தைய அரசின் நலத்திட்டங்கள் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

நல்லறம் நாடினால், அரசை வாழ்த்தி நயம்புரிவர் தமிழ் மக்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button