தலையங்கம்

வெறும் திரைப்பட விவகாரம் அல்ல!

தலையங்கம்

“திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” ஆவணப்படம் புதுக்கோட்டையில் திரையிடத் தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு கலை இலக்கிய அமைப்பு இந்த ஆவணப்படத்தை திரையிடப்பட ஏற்பாடு செய்திருந்தது. இதனைத் திரையிட முதலில் ஒப்புக்கொண்ட அரங்கின் உரிமையாளர், பின்னர் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று சொல்லி மறுத்துவிட்டார்.

பின்னர் மாற்று அரங்கை ஏற்பாடு செய்தபோது காவல்துறை வந்து திரையிடக் கூடாது என்று தடுத்துள்ளது. அதற்கான எழுத்துபூர்வமான உத்தரவைக் கேட்டபோது அவர்கள் தரவில்லை. எல்லாமே வாய்மொழியாகச் சொன்னாலும், திரையிட விடாமல் உறுதியாகத் தடுத்ததாக ஏற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அந்தப் படத்தை திரையிடுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே சென்னையில் திரையிடப்பட்டுள்ளது. யூ-டியூபிலும் வெளியிடப்பட்டு ஏராளமானவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் மிகப் பழைமையான ஊர். சைவம், சமணம், பெளத்தம், இஸ்லாம் என எல்லா மதங்களும் அங்கு நிலைத்திருந்ததற்கான சான்றுகள் இப்போதும் இருக்கின்றன. இந்து, முஸ்லீம் விழாக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. இரு மதத்தவரும் ஒருவருக்கொருவர் உதவுவர்; சின்ன உரசல் கூட வந்ததில்லை.

இந்த ஆவணப்படம், திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள இந்து-–முஸ்லிம் உறவுகள், தர்கா–-கோவில் எல்லை தொடர்பான சர்ச்சைகள், கார்த்திகை தீபம் தொடர்பான வழக்குகள், மற்றும் அவற்றின் அரசியல் பரிமாணங்களைப் பற்றிப் பேசுகிறது.எல்லாவற்றையும் விட முக்கியமானது உள்ளூர் மக்களின் நேர்காணல்கள்தான்.

ஒரு படம், வன்முறையைத் தூண்டுகிறதா? குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டுகிறதா? தவறான தகவலை திட்டமிட்டு பரப்புகிறதா? என்பவையே சட்ட ரீதியான முக்கிய கேள்விகளாகும்.

முழுக்க முழுக்க பொய்யாகப் புனையப்பட்ட கதைகளை, உண்மைச் சம்பவம் போல சித்தரித்து, மதவெறியைத் தூண்டும் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கேரளா ஸ்டோரி’ போன்ற படங்கள் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பால் திரைக்கு வந்தன. அவை உண்மை நிகழ்வுகள் அல்ல என்று பெரும் கண்டனங்கள் எழுந்த பின்பு, இது ஒரு கற்பனைக் கதை என்று, டைட்டிலில் ஒரு வாசகம் சேர்க்கப்பட்டது. ஆனாலும், இந்தப் படங்களுக்கு ஒன்றிய அரசு விருதுகளை வழங்கியது.

ஆனால், திருப்பரங்குன்றம் தொடர்பான நீண்டகால வழக்குகள், அவற்றில் வெளிவந்த தீர்ப்புகள், வரலாற்றுக்குறிப்புகள், உள்ளூர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படத்தை ஏன் காரணமே சொல்லாமல் அரசு தடுக்கவேண்டும்? “மேலிட உத்தரவு” என்று காவல்துறை சொன்னதாகத் தெரிகிறது. அந்த மேலிடம் எது?

தமிழ்நாட்டில் பல அரசுகள் தங்களை கருத்துரிமையின் ஆதரவாளர்களாகக் கூறினாலும், நடைமுறையில் “சாத்தியமான எதிர்ப்பு” என்ற காரணத்தால் நிகழ்வுகள் தடுக்கப்படுவது புதியதல்ல.

மத விவகாரங்கள் அரசியல்மயமாகிவிட்டன. திருப்பரங்குன்றம் போன்ற இடங்கள் இனி வெறும் வழிபாட்டுத் தலங்கள் அல்ல; அவை அரசியல் அடையாளப் போராட்டங்களின் களமாக மாறியுள்ளன. எனவே அவற்றைப் பற்றிய ஆவணப்படங்களும் அரசியல் சர்ச்சையாக மாறுகின்றன.

எழுத்துப்பூர்வ உத்தரவு இல்லாமல் வாய்மொழியாகத் தடை விதிக்கப்பட்டது, நிர்வாக வெளிப்படைத்தன்மை பற்றிய கவலைகளை எழுப்புகிறது. “தடை” பல நேரங்களில் எதிர்மறை விளைவையே தரும்

ஏற்கனவே இணையத்தில் கிடைக்கும் ஒரு ஆவணப்படத்தை அரங்கில் திரையிடத் தடுக்கும்போது, அதைப் பற்றி மேலும் அதிகமானோர் அறியத் தொடங்குகிறார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகே பலர் அந்த ஆவணப்படத்தைத் தேடிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

சட்ட அடிப்படை, மற்றும் ஆவணப்படத்தின் முழு உள்ளடக்கம் ஆகியவை வெளிப்படையாக ஆய்வுக்குட்படுத்தப்படாத வரை இறுதியான தீர்ப்பை வழங்க முடியாது. ஒரு ஜனநாயக சமூகத்தில், கருத்தை எதிர்கொள்ளும் வழி எதிர்-கருத்தாக இருக்க வேண்டும்; நிர்வாகத் தடை முதன்மையான கருவியாக மாறக்கூடாது

இந்த நிகழ்வு, ஒரு சாதாரண திரைப்பட விவகாரம் அல்ல. தமிழ்நாட்டில் கருத்துரிமை, காவல்துறையின் அதிகார வரம்பு, மத–அரசியல் உணர்வுகள் மற்றும் அரசியல் நிர்வாகத்தின் இயல்பு ஆகியவற்றுக்கு இப்போது புதிய வடிவம் தரப்படுகிறதா எனும் கேள்வி இயல்பாக எழுகிறது. பாரம்பரியமான மத நல்லிணக்கத்தையும், மக்களின் ஒற்றுமையையும் பாதுகாக்க, திமுக ஆட்சிக்காலத்தில் “நாங்கள் விளைவுகளைச் சந்திக்கத் தயார்” என்று எதிர்கொண்ட காவல்துறை, இப்போது “யு-டர்ன்” போடுகிறது.

இது போன்ற சர்ச்சைகளை விரும்பாததால்தான் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்று சிலர் கூறுவது பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைப்பதைப் போன்றது. உண்மையிலேயே மக்கள் அவ்வாறு நினைத்திருந்தால், பாஜக இப்படிப் படுதோல்வி அடைந்திருக்காது.

மௌனம் எப்போதும் காப்பாற்றிவிடாது. தமிழ்நாடு அரசு பேசியே ஆகவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button