
கர்நாடக மாநில வனப்பகுதியில், மாடுகளைத் தேடிச் சென்ற மூன்று தமிழக விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, சட்டமன்றத்தில் 18.8.2026 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசியதாவது:
“கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள், தங்களுடைய கால்நடைகள் வீடு திரும்பாததால், கடந்த 14ஆம் தேதி அவற்றைத் தேடி வனப்பகுதிக்குச் சென்றிருக்கின்றனர்.
அப்போது கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் அந்தோணிசாமி, ஜான் பீட்டர், குமார் ஆகிய 3பேரும் உயிரிழந்தனர். உடன் சென்ற நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கர்நாடக வனத்துறையின் இந்த அராஜகப் போக்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். சுட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் சார்பாக ஒரு கோடி ரூபாய் கர்நாடக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கு மத்திய புலனாய்வுத்துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட வேண்டும்.
தமிழர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஆந்திரா வனப்பகுதியில் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த காயங்கள் மறைவதற்குள் கர்நாடகா மாநிலத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழர்களுடைய உயிரை துப்பாக்கிக் குண்டுகள் தீர்மானிக்கக் கூடாது. ஆகவே, இதற்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிடவேண்டும் என தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அரசின் கவனத்தை ஈர்த்து அமர்கிறேன்.” – இவ்வாறு டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேசினார்.