கட்டுரைகள்தமிழகம்

எல் நினோ எச்சரிக்கையும் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டும்

ஆனந்த் பாசு

2026–-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட், ‘சூப்பர் எல் நினோ’ அபாயத்தை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அதனை எதிர்கொள்ள சில திட்டங்களை அறிவித்துள்ளது.

‘காலநிலை மாற்றம்’ வேளாண்மையின் மையப் பிரச்சினையாக மாறிவரும் நிலையில், இதனை அரசே ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பட்ஜெட்டின் அணுகுமுறை பெரும்பாலும் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்டதாக உள்ளது; விவசாயிகளின் வருமானம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற அடிப்படை கேள்விகளுக்கு உரிய பதிலை வழங்கவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றம்.

‘எல்நினோ’ என்பது வெறும் வானிலை மாற்றம் அல்ல. பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வால் உருவாகும் இந்த நிகழ்வு, இந்தியப் பருவமழையின் தன்மையை மாற்றக் கூடியது. தமிழ்நாட்டில் மழைப்பொழிவு குறைதல், நீர்த்தேக்கங்களின் இருப்பு சரிவு, நிலத்தடி நீர் வறட்சி, வெப்ப அலைகள், பயிர் சேதம், கால்நடை தீவனப் பற்றாக்குறை போன்ற தொடர் விளைவுகளை இது ஏற்படுத்தக்கூடும்.

ஒன்றிய அரசின் மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் வறட்சி அபாயப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், காலநிலை மாற்றத்தை வெறும் வேளாண் உற்பத்தி சவாலாக அல்லாமல், வாழ்வாதார நெருக்கடியாக அணுக வேண்டியது அவசியமாகிறது.

இந்தப் பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான விவசாய ஆலோசனை, நீர்ப்பாசன மேம்பாடு, விரிவாக்கச் சேவைகள், அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் பயனுள்ள முயற்சிகளாக இருப்பினும், தொழில்நுட்பம் ஒரு கருவி மட்டுமே; அது சமூகப் பாதுகாப்புக்கான மாற்றாக இருக்க முடியாது. வானிலை முன்னறிவிப்பு தொழில்நுட்ப ரீதியாக விவசாயிக்குக் கிடைக்கலாம்; ஆனால் மழை பொய்த்தால் ஏற்பட்ட வருமான இழப்பை அது ஈடுசெய்யாது.

இந்தப் பட்ஜெட்டில் மாவட்ட வாரியான வறட்சிக்கான செயல் திட்டம் இல்லை; பயிர் சேதத்திற்கு தானியங்கி இழப்பீட்டு முறை இல்லை; பயிர்க் காப்பீட்டை வலுப்படுத்தும் திட்டம் இல்லை; வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான கடன் மறுசீரமைப்பு அல்லது வட்டித் தள்ளுபடி இல்லை. நிலத்தடி நீர் நிரப்புதல் (Ground Water Recharging), தீவன வங்கிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கான கூடுதல் வேலைவாய்ப்பு, காலநிலை அபாய வருமானப் பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கு தர வேண்டிய முக்கியத்துவம் தரப்படவில்லை.

‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ உள்ளிட்ட விவசாயிகள் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP), கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியம், பயிர் இழப்பீடு மற்றும் பொதுமுதலீட்டை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகள் இன்றைய காலநிலை நெருக்கடியில், காலத்தின் தேவையாக உள்ளன. காலநிலை மாற்றத்தின் பாரத்தை சிறு மற்றும் குறு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் ஏற்றுக்கொள்ளும் நிலையில், அவர்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் சமூகநீதிசார்ந்த கொள்கைகளே இன்றைய தேவை.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது என்பது புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது அல்ல; அது விவசாயியை மையமாகக் கொண்ட பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதாகும். ‘எல் நினோ’ போன்ற நெருக்கடிகள் மீண்டும் மீண்டும் நிகழக்கூடியவை என்பதை உணர்ந்து, தமிழ்நாடு தனது வேளாண் கொள்கையை “காலநிலைத் தாங்குதிறன்” (Climate Resilience) மட்டுமல்ல, “காலநிலை நீதி” (Climate Justice) என்ற தத்துவத்தின் அடிப்படையிலும் மறுசீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button