கட்டுரைகள்

தேர்தலின் நம்பகத்தன்மைக்கு வாக்குச்சீட்டு முறையே தீர்வு

மே.து.ரா.

வாக்கு எந்திரங்களின் நம்பகத் தன்மை அண்மைக் காலங்களில் அய்யத்துக்கிடமாகி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திருடப்பட்டன அல்லது திருத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. ஊடகங்கள், பொது அமைப்புகள் மட்டுமல்லாமல், மக்களிடமும் அய்யங்கள் எழுந்து வருகின்றன.
நுட்ப வளர்ச்சி

யினால் கையாள்வதற்கு எளிதாகவும் உடனடியாக முடிவுகளை அறிவிப்பதற்கும் ஏதுவாக வாக்கு எந்திரங்கள் உள்ளன என்பது உண்மைதான்.

இருந்தாலும், வாக்கு எந்திரங்கள் குறித்த அச்சங்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றுவிட்டன.

உரிமையில்லாத உச்ச நீதிமன்றம்

ஆனால், உச்ச நீதிமன்றம் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அய்யங்களையும் அச்சங்களையும் அகற்றுவதற்கு மாறாக, தீர்ப்பு என்ற அளவில் அனைத்தையும் மூடி மறைக்க முனைந்து தனது கடமையை முடித்துக்கொண்டது.

உண்மையில், நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு வாக்கு எந்திரங்களைப் பயன்படுத்துவதா அல்லது முந்தைய முறையில் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்துவதா என்பது குறித்த முடிவுகளை எடுக்கக்கூடிய உரிமையும் கடமையும் பொறுப்பும் வேண்டலும் உச்ச நீதிமன்றத்திடம் இல்லை. குற்றம், உரிமை உள்ளிட்ட வழக்குகளைப் போன்றோ, அரசமைப்புச் சட்ட விளக்கங்களை தருகின்ற வினாக்களைப் போன்றோ இது இருக்கவில்லை.

மக்களின் அய்யங்களையும் அச்சங்களையும் போக்கி, எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் நாடாளுமன்றம் எடுக்கவேண்டிய அடிப்படை முடிவாகும் இது. மக்களாட்சி முறையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் சார்பாளர்களே தங்களுக்கான தேர்வு முறையை வகுத்துக்கொள்ளவேண்டும்.

அண்மைய திருத்தப் பணிகளுக்குப் பின்னர் தற்போது ஏறக்குறைய 99.1 கோடி பதிவு பெற்ற வாக்காளர்கள் இந்திய ஒன்றிய அளவில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. வாக்குரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற முறைமைகளைக் கடைப்பிடிக்கின்ற நாடுகளில் உள்ள கூட்டு எண்ணிக்கையில் இந்த மக்கள் தொகை அளவு 44.5% என்றும் கூறப்படுகிறது. இந்தப் பெரும் எண்ணிக்கையினைப் பார்க்கின்றபோது, குறையில்லாமலும், குற்றச்சாட்டு எழாமலும், நேர்மையுடனும், சார்பின்றியும், நடுநிலையுடனும், நம்பகத்தன்மையுடனும் முறைப்படி தேர்தல் நடத்துவது என்பது மிகப் பெரிய அறைகூவலாகும்.

அதே வேளையில், விண்ணப்பம் தருதல், பரப்புரை, தேர்தல் நடத்துதல், வாக்களிக்கும் நடைமுறை, முடிவுகளை அறிவித்தல் போன்ற ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுடைய நம்பிக்கையைப் பெறுவதும் அடிப்படை வேண்டலாகும்.

வாக்களிக்கும் எந்திரம், வாக்குச்சீட்டு முறை என எவ்வாறு தேர்தல் நடந்தாலும், நம்பகத்தன்மையே இங்கு அடிப்படையாக அமைகிறது.

உச்சநீதிமன்றம் என்ன கூறுகிறது?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாக்குச்சீட்டு முறையை ஏற்க முற்றிலுமாக மறுத்த உச்ச நீதிமன்றம், அதற்கான பல்வேறு காரணிகளை அடுக்குகிறது. அத்துடன், வெற்றி பெற்றோர் எந்திரம் முறையை ஏற்பதாகவும்,

தோல்வியுற்றோர் அதை எதிர்ப்பதாகவும் குறை காண்கிறது. வென்ற பல வேட்பாளர்களையும் உள்ளடக்கிய எதிர்க்கட்சிகள்தாம் எந்திர வாக்குமுறையில் பதியப்பட்ட வாக்குகளைத் திருத்தி, முடிவுகள் மாற்றப்பட்டதாக எதிர்க்கின்றனர் என்பதை உச்ச நீதிமன்றம் காணத் தவறிவிட்டது. அத்துடன், ஆளும் கட்சியினரைத் தவிர வேறு எவரும் அண்மைக் காலங்களில் எந்திர வாக்குமுறையை ஏற்கவில்லை என்பதை முற்றிலுமாக உச்ச நீதிமன்றம் மறந்துவிடுகிறது.

பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்க்கும்பொழுது, ஆளும் கட்சிக் கூட்டணிக்கு வாக்களித்தோர் 40%க்கும் குறைவாக இருப்பதையும், எதிர் வரிசையில் இருப்போர் 60% அளவிற்கு மேலாக இருப்பதையும் உச்ச நீதிமன்றம் ஏனோ மறைத்துவிடுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் முடிவுகள்

01. பழைய வாக்குச்சீட்டு நடைமுறைக்குத் திரும்ப இயலாது

02. வாக்காளர் எண்ணிக்கை 97 கோடி (அன்றைய நிலையில்) அளவில் இருப்பதால், வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்துவது நடைமுறையில் எளிதல்ல

03. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்ற சிக்கல்கள் எழுகின்றன

04. வாக்கு எந்திரப் பதிவு முறை தாள் பயன்பாட்டை மிகவும் குறைக்கிறது

05. வாக்கு எந்திர முறையில் விரைவாகவும் எளிதாகவும் எண்ணி முடித்து, முடிவுகளை அறிவிக்க முடிகிறது

06. வாக்களித்த வேட்பாளரின் சின்னம் கண்ணாடிப் பேழைக்குள் குறுஞ்சீட்டில் காட்டப்படுவதால், அதன் உண்மைத்தன்மை தெரிகிறது

07. ஆனாலும், அந்தக் குறுஞ்சீட்டினை எண்ண நீண்ட காலம் பிடிக்குமென்பதால், அனைத்துத் தொகுதிகளிலும் 100% அதை எண்ணுவது இயலாது

08. மாறாக, எண்ணுவதற்கான செலவினை முறையிடும் வேட்பாளர் ஏற்றுக்கொண்டால், அப்போது முழுமையாக எண்ணலாம்

09. வாக்களிப்புக் காலம் நிறைவடைந்த பின்னர் திருட்டு வாக்களிப்பதைத் தவிர்க்க, அந்தச் சின்னம் உள்ள குறுஞ்சீட்டில், வாக்களிக்கும் காலத்தை (மணி, மணித்துளி விவரங்கள்) அச்சிடத் தற்போது உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது

10. நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தல்கள் அல்லாது மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் வாக்கு எந்திரங்களைப் பயன்படுத்துவது வற்புறுத்தப்படவில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.

பொருத்தமில்லாத காரணிகள்

ஏறக்குறைய 100 கோடி மக்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிட ரூ. 3500 கோடியிலிருந்து ரூ. 4000 கோடி வரை ஆகலாம் என மதிப்பிடப்படுகிறது. அதுவல்லாமல், 10,000 டன் அளவிலான தாள் வீணாகிறது என்றும், இதற்காக 20 லட்சம் டன் அளவுக்கு மரங்கள் வெட்டப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

தேர்தல்களை நடத்த மக்களின் வரிப்பணம் பத்தாயிரம் கோடி கூட்டாகச் செலவாகிறது என்ற கணக்கும் காட்டப்படுகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் சேர்ந்து ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேலாகச் செலவிட்டதாகவும் ஒரு மதிப்பீடு உள்ளது.

இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அரசு செலவு செய்யும் பத்தாயிரம் கோடி ரூபாய் என்பது பெருந்தொகை அன்று.

மாறாக, வாக்கு எந்திரங்களுக்கான வன்பொருள், மென்பொருள், அவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள், பழுது நீக்குதல் போன்றவற்றுக்காகச் செலவிடும் தொகையினை வாய்ப்பாக அனைவரும் மறந்துவிடுகின்றனர்.

நம்பகத்தன்மையே அடிப்படை

பத்தாயிரம் கோடி ரூபாய் வாக்குச் சீட்டுக்காகச் செலவிட்டாலும், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை நிலைநிறுத்தவும், தேர்தல் முடிவுகளை ஏற்கவும், தேர்தல் முறையில் நம்பிக்கை ஏற்படவும் வாய்ப்புகள் அமையும்போது, இது பெருந்தொகை என்று கூற முடியாது.

இன்று தாள் பயன்பாடு என்பது பெருகிக்கொண்டுதான் செல்கிறது. அன்றாடம் வெளிவரும் ஆங்கிலம் மற்றும் பிற ஒன்றிய மொழிகளின் நாளிதழ்கள், பருவ இதழ்கள், பாடநூல்கள், பொது நூல்கள், ஆவணங்கள், குறிப்பேடுகள் என்று பல வகையான பயன்பாடுகளுக்குப் பெருமளவிலான தாள் வகைகள் செலவாகின்றன.

தாள் உற்பத்தியாளர் அமைப்பின் மதிப்பீட்டின்படி, இந்திய ஒன்றியத்தில் ஆண்டுக்கு இரண்டரைக் கோடி டன் தாள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் மதிப்பு ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி ரூபாயாகும். இதனோடு ஒப்பிடும்போது, பத்தாயிரம் கோடி டன் தேர்தலுக்குச் செலவாகிறது என்பது மிகச்சிறு அளவாகும்.

தேர்தல் முடிவுகளை அடுத்து வாக்குச்சீட்டுகளின் வேண்டல்கள் நிறைவடைந்த பின்னர். இவற்றை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதால், மீண்டும் தாள் உற்பத்தி வாய்ப்பு ஏற்படுகிறது என்பதையும் நோக்கவேண்டும்.

வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது என்பது அண்மை காலங்களில் மிகக் குறைந்துவிட்டது. மிகு காவல், வாக்குச்சாவடிச் செயல்பாடுகளை ஒளிப்பதிவு செய்வது, வேட்பாளர்களின் ஒத்துழைப்பு போன்றவற்றால் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது ஏதாவது ஒன்றிரு இடங்களில் நடக்கலாம்.

இதைப் போலவே, வாக்கு எந்திரப் பயன்பாட்டிலும், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது தொடர்கிறது என்பதையும் புறக்கணித்துவிடக்கூடாது.

அத்துடன், வாக்குப் பதிவின்போது, எந்திரங்கள் பழுதடையும் சிக்கலால், வாக்களிப்பையே ஒத்திவைக்கும் அவல நிலை ஏற்படுகிறது.

குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், வாக்குகளை எண்ணுவதும் முடிவுகளை அறிவிப்பதும் ஒன்றிரண்டு நாள் தள்ளிப்போவதைத் தவிர வேறு ஏற்கக்கூடிய காரணிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

தேர்தல் தொடங்குவதற்கு இரண்டு திங்கள்களுக்கு முன்னர் தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்து விடுகின்றன. வேட்பு விண்ணப்பம் தாக்கல் நாள், தேர்தல் நாள் ஆகியவற்றுக்கிடையிலும் ஏறக்குறைய மூன்று வாரங்கள் இடைவெளி உள்ளது. இதைப் போன்றே தேர்தல் முடிந்த பின்னர் எண்ணிக்கை பல வாரங்கள் கழித்து நடைபெறுகிறது. இந்தச் சூழ்நிலையில், தேர்தல் முடிவினை அறிவிக்க மேலும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் தள்ளுவதால் குடி மூழ்கிப் போகப் போவதில்லை. ஆனால், மக்களிடம் நம்பிக்கை தோன்றுகிறது.

நுட்பத்தையும் முறிக்கும் நுட்பம்

வாக்கு எந்திர முறையில், அறிவியல் நுட்பத்தினால், திருட்டும் திருத்தமும் மேற்கொள்ள வழியில்லை என்று தேர்தல் ஆணையம் கூறுவதும் ஏற்கக் கூடியதாகத் தெரியவில்லை. அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வரின் கொளத்தூர் தொகுதி மறுஎண்ணிக்கையில், பல நுட்பக் குழப்பங்கள் ஏற்பட்டிருந்ததைக் காண முடிந்திருக்கிறது.

உலகத்தையே தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு, நுட்ப வளர்ச்சியில் மேன்மை பெற்ற நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் படை, உளவு, வெளிநாட்டுத் தொடர்புகள் போன்ற வலைதளங்களுக்குள் நுழைந்து, பல அரிய விவரங்களை வெளிப்படுத்த முடியும் என்பதை ‘விக்கிலீக்சு’ காட்டியுள்ளது. இது மட்டுமில்லாமல், சின்னஞ்சிறு நாடான வடகொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளின் படை, உளவு மற்றும் நிதி நிறுவனங்களின் வலைதளங்களுக்குள் நுழைந்து குழப்பங்களை உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டினை வளர்ந்த நாடுகளே கூறிவருகின்றன.

இந்த நிலையில், இந்தியத் தேர்தல் முறையில் உள்ள வாக்கு எந்திரங்களை மட்டும் யாரும் திருட முடியாது, திருத்த முடியாது என்று கூறுவது ஏற்கத்தக்கதாக இல்லை. ஒரு நாட்டின் அரசாட்சியைக் கைப்பற்றி, அனைத்தையும் தன் பிடிக்குள் கொண்டுவரக்கூடிய ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில், நுட்ப அறிவைக் கொண்டு திருட்டுத் திருத்தங்களைச் செய்ய முடியாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை. இது சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும் பொருந்தும்.

வளர்ந்த நாடுகளில் தொடரும் வாக்குச்சீட்டு முறை

நுட்ப அறிவிலும், பொருள் வளத்திலும் முன்னேற்றம் கண்டுள்ள ரசியா, சீனா, அமெரிக்கா, செர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, சப்பான், தென்கொரியா உள்ளிட்ட பலப்பல நாடுகளில் வாக்குமுறையைப் பொறுத்தமட்டில் எந்திரங்களை ஏற்பதற்கு மாறாக வாக்குச்சீட்டு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்ளவேண்டும்.

எந்திரப் பதிவின்போது தெரிகின்ற குறுஞ்சீட்டுச் சின்னம் 20 அல்லது 30 நாள்களில் தானாக மறைந்துவிடும் என்பதால், நீண்ட காலம் நிலைக்காத அந்தக் குறுஞ்சீட்டினை நம்ப முடியாது; ஏற்கவும் முடியாது. தேர்தல் வழக்குகள் ஆண்டுக் கணக்கில் நீடிப்பதால், இந்தக் குறுஞ்சீட்டுகள் பயன்படாமல் போகின்றன.

மறுவாக்கு எண்ணிக்கை போன்ற நிலைமைகளில், வாக்குச்சீட்டுகள் மட்டுமே உண்மைகளை உறுதியாகத் தெளிவுபடுத்தும் என்பதையும் காணலாம்.

மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்புவதால், வேறு எத்தகைய தடையும் தீங்கும் ஏற்படப் போவதில்லை. எனவே, வாக்குச்சீட்டு முறை மீண்டும் வரவேண்டும் என்னும் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button