இந்தியாவின் டேட்டா சென்டர் கொள்கை: டிஜிட்டல் வளர்ச்சியா? இயற்கை வளங்களின் தனியார்மயமா?
ஆனந்த் பாசு

இன்றைய உலகில் நாம் அனுப்பும் ஒவ்வொரு புலனச் (WhatsApp) செய்தியும், முக நூல் (Facebook) பதிவும், வலையொளி (YouTube) காணொளியும், ஒருமித்த செலுத்துகை இணைப்புமுக (Unified Payments Interface like GPay, PayTM etc) பணப் பரிவர்த்தனையும், உரையாடல் முன்பயிற்சி நிலைமாற்றி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளும் எங்கோ ஒரு இடத்தில் சேமிக்கப்பட்டு, தேவைக்கேற்ப செயலாக்கப்பட்டு, நமக்குத் திரும்பவும் வழங்கப்படுகின்றன.
அந்தப் பணியைச் செய்யும் மிகப்பெரிய கணினி வளாகங்களே, இப்போது இந்தியாவில் பேசுபொருளாக மாறியுள்ள “டேட்டா சென்டர்கள்” (Data Centres) ஆகும்.
ஒரு பெரிய நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். யாராவது ஒரு புத்தகத்தைக் கேட்டால், நூலகர் உடனே எடுத்துத் தருவதைப் போல, டேட்டா சென்டர் என்பது கோடிக்கணக்கான மக்களின் தகவல்களை (Data) பாதுகாப்பாகச் சேமித்து, தேவைப்படும் நேரத்தில் நொடிப் பொழுதுக்குள் தந்து உதவும் ஒரு மாபெரும் கணினி நூலகம்.
இதை ஒரு சாதாரண அலுவலகத்திற்குள் அடக்கி விட முடியாது. இது, ஆயிரக்கணக்கான சர்வர்கள் (Servers), மின்சார அமைப்புகள், குளிரூட்டும் கருவிகள், அதிவேக இணைய இணைப்புகள் ஆகியவை ஒரே இடத்தில் இயங்கும் மிகப் பிரம்மாண்டமான ஒரு தொழில்நுட்ப வளாகமாகும்.
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கூகுள் (Google) தேடல், மின் அஞ்சல், வங்கிகளின் இணையப் பரிவர்த்தனைகள், அரசு இணையதளங்கள் போன்ற இவற்றில் ஏதேனும் ஒன்று, சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டால்கூட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் டேட்டா சென்டர்கள் ஓர் இன்றியமையாத தேவை.
ஒரு வீட்டில் ஒரு கணினி இயங்கினால் போதும். ஆனால் ஒரு டேட்டா சென்டரில் இலட்சக்கணக்கான கணினிகள் ஒரே நேரத்தில் இயங்குகின்றன. அதனால் அவை மிக அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. சில டேட்டா சென்டர்கள் ஒரு சிறிய நகரம் பயன்படுத்தும் அளவுக்கு மின்சாரத்தை தினமும் பயன்படுத்துகின்றன. அதே போல கணினிகள் தொடர்ந்து இயங்கும்போது அவற்றிலிருந்து அதிகளவில் வெப்பம் உருவாகிறது. அந்த வெப்பத்தைக் குறைக்க குளிரூட்டும் (Cooling) அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக பெரிய டேட்டா சென்டர் மையங்கள் பெரும் அளவில் தண்ணீரை பயன்படுத்துகின்றன. ஆகவே இவற்றால் ஏற்படும் இடப் பற்றாக்குறை, மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை மக்களைக் கடுமையாக பாதிக்கிறது.
இந்தியா வேகமாக டிஜிட்டல் பொருளாதாரமாக மாறி வரும் சூழலில், செயற்கை நுண்ணறிவு (AI), தூரக் கணிமை(Cloud Computing), இணைய பரிவர்த்தனைகள் ( online transactions), மின்னணு ஆளுகை (e-Governance), இணைய வழி கல்வி / மருத்துவம் ( online education / medicine ) போன்ற அனைத்து பயன்பாட்டிற்கும் டேட்டா சென்டர்கள் அவசியம்.
அதனால் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் டேட்டா சென்டர் முதலீடுகளை பெரும் அளவில் வரவேற்கின்றன. அதே சமயத்தில் டேட்டா சென்டருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புக்குரல் வலுத்து வருகின்றது. ஆனால் அது டேட்டா சென்டர் தொழில்நுட்பத்திற்கு எதிரானது அல்ல; அதன் சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளுக்குக்காகத்தான்.
ஓரிடத்தில் குடிநீருக்கே மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு டேட்டா சென்டர் நாள்தோறும் இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தினால் எதிர்ப்பு எழுவது இயல்புதானே.
இன்னொரு பிரச்னை, டேட்டா சென்டர்கள் செயல்பட மிக அதிகளவில் மின்சாரத் தேவை உள்ளது. இந்த மின்சாரம் பெரும் அளவில், நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் நிலையங்களில் இருந்து வருவதால், கார்பன் வெளியேற்றமும், காற்று மாசுபாடும் அதிகரிக்கிறது. இது ஒரு ஆகப்பெரும் சுற்றுச் சூழல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல இடங்களில் விவசாய நிலங்கள் அல்லது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள நிலங்கள் டேட்டா சென்டர் நிறுவ கையகப்படுத்தப்படுகின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு டேட்டா சென்டர் நிறுவ சுமார் 5,000 கோடி முதலீடு வந்தாலும், (நிரந்தர) வேலைவாய்ப்பு அதிகபட்சமாக சில நூறு பேருக்கே கிடைக்கலாம். அதனால்தான், இவ்வளவு நிலம், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைக் கொடுத்தாலும் மக்களுக்கு வேலைவாய்ப்பு பயன் பெரிதாக இல்லாமல் போகிறது என்ற யதார்த்தம் மக்களைப் போராட வைக்கிறது.
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நோக்கும்போது, டேட்டா சென்டர்கள் வெறும் தொழில்நுட்ப கட்டமைப்பு அல்ல; அவை டிஜிட்டல் முதலாளித்துவத்தின் (Digital Capitalism) முக்கிய கருவிகளாகவும் செயல்படுகின்றன. மக்களின் தகவல்கள் இன்று புதிய “எண்ணெய் வளமாக” கருதப்படுகின்றன. அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன.
இந்த நிலையில் இயல்பாக எழும் கேள்விகள்:
- மக்களின் நிலம் யாருக்காக?
- தண்ணீர் யாருடைய உரிமை?
- மின்சாரப் பயன்பாட்டில் எதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்?
- இயற்கை வளங்கள் மக்களுக்கானதா அல்லது பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கானதா?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்காமல் டேட்டா சென்டர்களை மட்டும் வளர்ச்சியின் அடையாளமாகக் காட்ட முடியாது என்பதே எதிர்ப்பாளர்கள் முன் வைக்கும் வாதமாக உள்ளது.
இதற்கான தீர்வுதான் என்ன?
டேட்டா சென்டர்கள் தேவையற்றவை அல்ல. ஆனால் அவை:
- குடிநீர் பற்றாக்குறை இல்லாத பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும்.
- சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குளிர்விப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.
- சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்.
- சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (Environmental Impact Assessment) வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்.
- பகுதிவாழ் மக்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பும் சமூக நலத் திட்டங்களும் வழங்கப்பட வேண்டும்.
டேட்டா சென்டர்கள் இன்றைய டிஜிட்டல் உலகின் முதுகெலும்பு. ஆனால் அவை உருவாக்கும் வளர்ச்சி மக்களின் இயற்கை வளங்களையும், வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
வளர்ச்சி என்பது கட்டடங்களின் உயரத்தில் அல்ல; மக்களின் வாழ்க்கைத் தரத்தில் அளவிடப்பட வேண்டும். தொழில்நுட்பமும் சமூக நீதியும் இணையும் பாதையில்தான் உண்மையான முன்னேற்றம் உள்ளது.