
நம் பெரும் நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை, நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன், கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தொடங்கி, பொதுச் செயலாளர்வரை சுதந்திர தின விழாவில் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி மகிழ்ந்தார்கள்.
மகிழ்ச்சி மட்டுமல்ல, புதியதோர் சமுதாயத்தை, பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்குவோம். புதியதோர் மாற்றத்தை, மக்களுக்கான மாற்றத்தை உருவாக்குவோம், போரற்ற உலகை படைப்போம் என சபதம் ஏற்றனர்.
ஆனந்த சுதந்திரம் அடைவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என்று சூளுரைத்துள்ளனர். ஆம்! ஆனந்த சுதந்திரம் வேண்டும்!
சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள் உருண்டோடி விட்டன என்பதும் உண்மைதான். ஆனால், ஆனந்த சுதந்திரம் என்பது அனைவருக்கும் கிடைக்கவில்லை என்பதுதான் பேருண்மை!
நாட்டின் தலைநகரில் உள்ள பிரம்மாண்டமான செங்கோட்டையில், ஆண்டுதோறும் நாட்டின் பிரதமர்கள் தேசிய கொடியேற்றுவது வழக்கமான ஒன்று. நரேந்திர மோடி நாட்டின் பிரதமரான பின்பு, 2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று, மோடி கொடியேற்றி வருகின்றார்.
கொடி ஏற்ற அவர் வருகிற போது, ஒவ்வொரு ஆண்டும் ஓர் உடை தரித்து வருவார். அத்தகைய படங்களை எல்லாம் ஆண்டு வாரியாக நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
நாடகங்களில், திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு ஆடை அணிவித்து, அலங்காரம் செய்து, அவர்கள் ஏற்கும் கதா பாத்திரங்களுக்கு ஏற்ப மேக்கப் போடுவார்கள். “மேக்கப்மேன்” என்று தனியாக ஒருவர் இருக்கின்றார்.
திரைப்படத்தில், நாடகத்தில் மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, எவ்வாறு உடை அணிந்து செல்ல வேண்டும் என்பதனை மேக்கப்மேன் தான் முடிவு செய்கின்றார். தலைவர்கள் சுற்றுப் பயணம் செல்லும் போது, மேக்கப் மேன்களும் உடன் செல்கிறார்கள்.
அதுபோன்று மேடைதோறும் மோடிக்கும் அலங்காரம் செய்து, தலையில் சிவப்பு முண்டாசு கட்டி அனுப்பி வைத்தனர். அவரும் மேடை ஏறி முழக்கமிட்டார்.
முழக்கமிட முற்படுவதற்கு முன்பு, நிலைக் கண்ணாடியில் நின்று தனது அலங்காரம் சரியாக இருக்கின்றதா என்பதனை சரி பார்த்து தான் வந்திருப்பார்.
அவரது சட்டை மேல் அணிந்திருந்த வண்ணமயமான சொட்டர். அதன் மேல் குத்தப்பட்டிருந்த தேசியக்கொடி சரியாக உள்ளதா என சரி பார்க்காமல் வந்து விட்டார் போலும், அது தலைகீழாக உள்ளது.
அவரது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., விடுதலை பெற்று 52 ஆண்டுகள் வரை தேசியக் கொடியை ஏற்றுக்கொள்ளவில்லை. காவி நிறத்தில் மட்டுமே கொடி இருக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்தவர்கள். அத்தாய் ஈன்ற அமைப்புகள், எந்த அளவுக்கு தேச பக்தி கொண்டவர்கள் என்பது குறித்து, நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை நன்கறிந்தவர்கள் அறிவார்கள்.
பிரதமரின் தேசபக்தி குறித்து நமக்கு கவலை இல்லை. அவர் ஆற்றியுள்ள பேருரை குறித்துத்தான் நாம் கவனம் கொள்ள வேண்டும்.
ஏனெனில், அவர் சாதாரணமானவர் அல்ல. 147 கோடி மக்களை கொண்ட மாபெரும் தேசத்தின் தலைமை அமைச்சர்.
நாடு வளருகிறது, வளர்ந்து கொண்டே இருக்கின்றது. வரும் 2047-இல் நாம் சுதந்திர தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும். அதற்கு எல்லாரும் உழைக்க வேண்டும் என்பது அவரது உரையின் முற்பகுதி.
நாடு கடந்த 80 ஆண்டுகளில் வளர்ச்சி பெற்றுள்ளதுதான் ஆனால், அதனால் பயன்பெற்றவர்கள் யார் என்பதே கேள்வி.
கடந்த 12 ஆண்டு கால மோடியின் ஆட்சியால் எத்தகைய வளர்ச்சியை பெற்றது? மோடியின் ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட உருவாக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, பொதுத் துறையின் பல்வேறு லாபம் ஈட்டக்கூடிய நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. இதுதான் வளர்ச்சியா?
இந்தியாவில் வேளாண் பெருமக்கள் உணவு தானிய உற்பத்தியைப் பெருக்குகிறார்கள். அந்நிய நாடுகளில் கையேந்தும் நிலையை மாற்றி, தன்னிறைவு பெறச் செய்தார்கள்.
உணவு தானிய உற்பத்தியில் நாடு வியக்கத்தக்க தன்னிறைவு பெற்றது. ஆனால், உற்பத்தியில் ஈடுபட்ட, பாடுபட்ட விவசாயிகளின் நிலை என்ன ஆனது? அவர்களை தற்கொலை செய்துகொள்ள வைத்ததுதான் வளர்ச்சியா?
விவசாயிகளை, தொழிலாளர்களை, மற்ற ஏனைய மக்களையும் மேலும், மேலும் கடனுக்கும், வறுமைக்கும் தள்ளுவதுதான் வளர்ச்சியா?
சிறு, குறு தொழில்கள் அனைத்தும் சின்னாபின்னமாகிவிட்டன, எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளன. இது வளர்ச்சியா?
நீட் நுழைவுத் தேர்வு என்ற பெயரால், நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி என்கிற கனவை சிதைத்து, அவர்களை தற்கொலைக்குத் தள்ளுவதுதான் வளர்ச்சியா?
அனைவருக்கும் கல்வி என்கிற கொள்கைக்கு முடிவு கட்டி, குறிப்பிட்ட சாராருக்குத்தான் கல்வி என்கிற தேசிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாகத் திணித்து, மாணவர்களை கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற்றுவதுதான் வளர்ச்சியா?
இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை உருவாக்க உருப்படியானத் திட்டம் இல்லை என்ற நிலை ஒரு பக்கம், மறுபக்கம் வேலையில் இருப்பவரை வெளியேற்றுவதுதான் வளர்ச்சியா?
மோடியின் வளர்ச்சி யாருக்கு? 12 ஆண்டுகள் ஆட்சியால் வானளவு வளர்ந்திருப்பவர்கள் யார்?
அவருக்கு மிக நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி போன்றவர்களின் அபரிமிதமான வளர்ச்சி, மோடி ஆட்சியின் சாதனையாகும்!
நாட்டின் செல்வ வளங்களை உண்டு, செரித்து வளர்ந்துள்ள அவர்களது தனிப்பட்ட வளர்ச்சியை மறுப்பதற்கு இல்லை, அதனை ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சி என்று, காதில் பூ சுற்றுவதை நாட்டு மக்கள் எப்படி ஏற்பார்கள்?
பிரதமர் மோடியின் உரையில் நிறைவுப் பகுதி என்பது சித்தாந்தம் குறித்து,
வனப் பகுதியில் வாழும் மக்களுக்கு எதிராக ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் கொடூரமானவை.
வனத்தைப் பாதுகாப்பது அரசு அல்ல, மாறாக அப்பகுதியில் வாழும் அப்பாவி பழங்குடி மக்கள்.
எக்குற்றமும் அறியாத, செய்யாத அம்மக்களை, வனங்களை பாதுகாக்கிற வன தேவதையாக விளங்கிய அம்மக்களை, வனத்தில் இருந்து வெளியேற்றி, கொள்ளை ஒன்றையே கொள்கையாக கொண்ட நிறுவனங்கள், கொள்ளையடிப்பதை தடுத்து, வனத்தை பாதுகாத்த மக்களை இரக்கமற்ற முறையில், வனப் பகுதிகளில் இருந்து வெளியேற்ற அரசுகள் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கைகள் எழுதி மாளாது!
வனத்தில் வாழும் மக்களுக்கு குடிநீர் இல்லை, மருத்துவம் இல்லை, கல்வி இல்லை, சாலையில்லை. மொத்தத்தில் அவர்களது அடிப்படை தேவைகள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் சிறிதும் கவலைப்படவில்லை.
அவர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் புத்தகங்களாக உள்ளன. பயன் ஏதும் இல்லை!
அத்தகைய மக்களுக்கு ஆதரவாக, ஆதரவற்ற மக்களுக்கு ஆறுதலாக வேறு வழியின்றி ஆயுதமேந்திப் போராடியவர்களை, ஒட்டு மொத்தமாக அழித்தொழிக்க ஒன்றிய அரசு உறுதி பூண்டது.
2026 மார்ச் 3-க்குள், முற்றாக அழித்தொழிப்போம் என ஒன்றிய உள்துறை அமைச்சர் பகிரங்கமாகவே அறிவித்தார்.
பழங்குடி மக்களுக்கு ஆதரவாகப் போராடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அவர்கள் போராட்டத்திற்கு தேர்ந்தெடுத்த பாதை தவறு என்று விமர்சிக்கலாம். ஆனால், அவர்கள் சுயநலமானவர்கள் என்று யாராலும் கூற முடியுமா?
அவர்கள் ஏற்றுக் கொண்ட லட்சியத்தில் எவரேனும் குறை காண முடியுமா? அவர்கள் மிகச் சிறந்த அரசியல்வாதிகள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. அவர்களது உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பை எள் முனையளவுகூட சந்தேகிக்க முடியாது.
அப்படிப்பட்டவர்கள் அரசுடன் பேசத் தயார் என வெள்ளைக் கொடியைக் காட்டினார்கள். நேர்மையான அரசாக, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடைய அரசாக, மக்களின் மீது அக்கறை உள்ள அரசாக இருந்தால், அவர்களை அழைத்துப் பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும்.
மாறாக அரசு, தனது ஆயுதப்படையை கொண்டு, அநியாயமான முறையில், அவ்வளவு பேரையும் சுட்டுப் படுகொலை செய்தது.
இத்தகையக் கொடூரக் கொலைகளை நியாயப்படுத்தி, சுதந்திர தின விழாவில் நாக்கில் நரம்பின்றி பேசுகின்றார் மோடி.
அத்துடன் அவர் நிற்கவில்லை, காட்டில் உள்ளவர்களை அழித்து விட்டோம், இனி நாட்டில் உள்ளவர்களை பதம் பார்ப்போம் என்கிறார்.
நாட்டில் நடைபெறும் போராட்டங்களை, மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை, மக்கள் முன் அம்பலப்படுத்துவதை மோடி அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
மக்களைப்பற்றிச் சிந்திப்பதே குற்றம். சிந்தித்தால் அவர்கள் நக்சல்கள் என்று ‘திமோகி நக்சல்’ என்ற புதிய சொல்லை அவர் முன்வைக்கிறார்.
சித்தாந்த ரீதியான நக்சல்கள் நாட்டில் வன்முறையை, அராஜகத்தை உருவாக்க வாய்ப்புகளைத் தேடி வருவதாக குற்றம் சாட்டுகின்றார்.
சித்தாந்த ரீதியான சவால் நீடிப்பதாக சொல்கின்றார். ஆம்! சவால்தான் – மார்க்சியத்திற்கும், மனு தர்மத்திற்குமான சவால்தான். இந்த சவாலில், மக்கள் யார் பக்கம் என்பதனைக் காலம் கண்டிப்பாகத் தீர்மானிக்கும்!
அது ஒருபோதும் மோடியின் பக்கம் அல்ல, மார்க்சியத்தின் பக்கமே என மக்கள் தீர்ப்பு எழுதும் காலம் தொலைவில் இல்லை.