
உணவுப்பொருட்களின் விலை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம், உணவுப் பணவீக்கம் உயர்விலும் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்படும் பெரும் துயரைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதில் இந்தியாவில் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.54 விழுக்காடாக உயர்ந்து, கடந்த 23 மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்தில் 2.07 விழுக்காடாக இருந்த சில்லறை பணவீக்கம் 2026 செப்டம்பரில் 5.54 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதேபோன்று உணவுப் பணவீக்கம் 7.74 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
வரம்பை மீறி அதிகரிக்கும் பணவீக்கம்

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (Consumer Price Index – CPI) அடிப்படையிலான பணவீக்கம், இந்த ஆண்டு ஜனவரியில் 2.74 விழுக்காடாக இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் உயர்ந்து ஜூனில் 4.38 விழுக்காடாகவும், செப்டம்பரில் 5.54 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் 4 விழுக்காடு வரம்பை பணவீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாகத் தாண்டியுள்ளது; அதன் 6 விழுக்காடு உச்சநிலை வரம்பையும் பணவீக்கம் நெருங்கி வருகிறது.
உணவுப் பணவீக்கம் இன்னும் வேகமாக அதிகரித்து வருகிறது. 2026 ஜனவரியில் 2.13 விழுக்காடாக இருந்த உணவுப் பணவீக்கம், ஏப்ரலில் 4.20 விழுக்காடு, ஜூனில் 5.32 விழுக்காடு, ஆகஸ்டு மாதத்தில் 5.97 விழுக்காடு என அதிகரித்து, செப்டம்பரில் 7.74 விழுக்காட்டை எட்டியுள்ளது. ஒரே மாதத்தில் உணவுப் பணவீக்கம் 1.44 விழுக்காடு உயர்ந்துள்ளது.
பணவீக்கம் உயர்ந்தால் என்ன ஆகும்?
பணவீக்கம் (Inflation) என்பது, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை கால ஓட்டத்தில் உயர்வதைக் குறிக்கும். விலைகள் உயரும்போது, அதே பணத்தால் முன்பு வாங்கக்கூடிய பொருட்களை இப்போது குறைவாகவே வாங்க முடியும். அதாவது பணத்தின் வாங்கும் சக்தி குறைகிறது.
ஒரு எளிய உதாரணம்: கடந்த மாதம் ரூ.100க்கு ஒரு கூடை காய்கறி வாங்கினோம். அதே கூடை காய்கறிக்கு இந்த மாதம் ரூ.105 கொடுக்கிறோம் என்றால், பணவீக்கம் சுமார் 5 விழுக்காடு. நாம் வைத்திருந்த ரூ.100 க்கு இப்போது முன்பு இருந்த அளவு பொருட்களை வாங்க முடியாது.
பணவீக்கத்தைக் கணக்கிட நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index – CPI) பயன்படுகிறது. இதில் உணவு, எரிபொருள், வீடு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றின் விலை மாற்றங்கள் அடங்கும்.
உணவுப் பணவீக்கம்
உணவுப் பணவீக்கம் (Food Inflation) என்பது உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வதைக் குறிக்கிறது. இதில் அரிசி, கோதுமை, பருப்பு, காய்கறிகள், பழங்கள், சமையல் எண்ணெய், பால், முட்டை, இறைச்சி போன்ற பொருட்கள் இடம்பெறுகின்றன இந்த உணவுப் பணவீக்கத்தை அளவிட நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (CFPI) பயன்படுகிறது.
உணவுப் பணவீக்கம் அதிகரிக்கும்போது, குடும்பங்கள் உணவுக்காக அதிகம் செலவிட நேரிடும். இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரித்து நேரடியான பாதிப்பு ஏற்படும். விலை அதிகரித்தாலும் உணவுப் பொருட்களை வாங்காமல் தவிர்க்க முடியாது. ஆனால் தங்களுடைய தேவைகளை மக்கள் சுருக்கிக் கொள்வர்.
முதலிடத்தில் தமிழ்நாடு

ஆகஸ்ட் மாதத்தில் 5.92 விழுக்காடு பணவீக்கத்துடன் தெலுங்கானாவுக்கு (6.27%) அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, செப்டம்பரில் 6.81 விழுக்காட்டுடன் முதலிடத்துக்கு வந்துள்ளது. ஒரே மாதத்தில் 0.89 விழுக்காடு புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதேபோன்று இந்திய சராசரி பணவீக்கத்தை (5.54%) விட தமிழ்நாட்டின் பணவீக்கம் 1.27 விழுக்காடு அதிகமாகும்.
உணவுப் பொருட்களின் விலை உயர்விலும் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் உணவுப் பணவீக்கம் 10.62 விழுக்காடு. இது இந்திய உணவுப் பணவீக்கத்தை (7.74%) விட 2.88 விழுக்காடு அதிகமாகும். உணவுப் பணவீக்கத்தில் முதல் ஐந்து இடங்களில் தமிழ்நாட்டுடன் தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மேலும் அதிக சுமை
கிராமப்புற பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 5.24 விழுக்காட்டில் இருந்து செப்டம்பர் மாதத்தில் 6.08 விழுக்காடாக உயர்ந்துள்ளது; நகர்ப்புற பணவீக்கம் 4.31 விழுக்காட்டில் இருந்து 4.88 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கிராமப்புற உணவுப் பணவீக்கம் 6.17 விழுக்காட்டில் இருந்து 8.06 விழுக்காடாகவும், நகர்ப்புற உணவுப் பணவீக்கம் 5.64 விழுக்காட்டில் இருந்து 7.18 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது. இதனால் வருமானத்தின் பெரும் பகுதியை உணவுக்கே செலவிடும் கிராமப்புறக் குடும்பங்கள் மீதே மேலும் அதிக சுமைகள் விழுகின்றன.
அரிசி விலை உயர்வு
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வே உணவுப் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. 26 கிலோ மூட்டை முதல் வகை சன்ன ரக அரிசி ரூ.1600-லிருந்து ரூ.2200 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 25 கிலோ சிவாஜி பொன்னி அரிசி ரூ.1,800-லிருந்து ரூ.2,400 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு ஓராண்டுக்குத் தேவைப்படும் சுமார் 95 லட்சம் டன் அரிசியில், 70-80 லட்சம் டன் தமிழ்நாட்டிலேயே விளைவிக்கப்படுகிறது. எஞ்சியவை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வருகின்றன. இந்த ஆண்டு அந்த மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளது. காவிரியில் போதுமான நீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு குறுவை, சம்பா விளைச்சல் பாதிப்பு, 25 கிலோ வரையிலான பொட்டல அரிசிக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு, மழை குறைவு போன்ற காரணங்களால் அரிசி விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், “உணவுப் பொருட்களுக்கு உண்மையான தட்டுப்பாடு இல்லை. சிலர் விலை உயர்வு குறித்து ‘மாயத்தோற்றத்தை’ உருவாக்குகின்றனர்” என்று தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் பி.வெங்கடரமணன் கூறியுள்ளார்.
“அரிசி இருப்பு போதுமான அளவு இருக்கிறது. சம்பா அறுவடைக்குப் பின்னர் ஜனவரியில் விலை உயராது” என அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், இந்தியாவிலேயே அதிகமாக விலைவாசி உயர்ந்திருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பதை அரசின் புள்ளிவிவரங்களே காட்டுகின்றன. இதனை எப்படிப் பார்ப்பது?
அமைச்சரின் வாக்குமூலம்

உணவுத்துறை அமைச்சர் “உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு இல்லை” என்று கூறுவது உண்மையில் முக்கியமான வாக்குமூலம். அரிசி இருப்பு போதுமானதாக உள்ளது, உற்பத்தி சிறிது குறைந்தாலும் நாட்டில் பட்டினி கிடக்கும் அளவுக்குப் பற்றாக்குறை இல்லை. அப்படியானால் விலை ஏன் உயர்கிறது? ஏனெனில் முதலாளித்துவத்தில் பொருட்கள் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய உற்பத்தி செய்யப்படுவதில்லை; லாபம் ஈட்ட உற்பத்தி செய்யப்படுகின்றன. விலை உயர்வு என்பது வியாபாரிகள், ஆலை உரிமையாளர்கள், ஊக வணிகர்கள் ஆகியோருக்கு லாபம். “மகாராஷ்டிராவில் உற்பத்தி 5-7% குறையும்” என்ற வதந்தியே விலையை இரட்டிப்பாக்க போதுமானது — ஏனெனில் ஊக வணிகம் (speculation) பற்றாக்குறையை உருவாக்கி லாபம் பார்க்கிறது. அமைச்சர் சொல்லும் “மாயத்தோற்றம்” என்பது உண்மையில் முதலாளித்துவ லாபப் பொறிமுறையின் இயல்பான செயல்பாடு.
போர், எண்ணெய், பணவீக்கம் — ஒரே சங்கிலி
அமெரிக்கா–ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 103 டாலரைத் தாண்டியது. இது தற்செயலான பின்னணி அல்ல. ஏகாதிபத்தியப் போர் என்பது முதலாளித்துவ நெருக்கடியின் நேரடி வெளிப்பாடு. போர்ச் செலவுகள், எண்ணெய் விலை உயர்வு, போக்குவரத்துக் கட்டண உயர்வு — இவை அனைத்தும் இறுதியில் உணவு விலையாக மாறி தொழிலாளியின் தட்டில் வந்து விழுகின்றன. உலகின் ஆளும் வர்க்கங்கள் தங்கள் போட்டிப் போர்களுக்கான செலவை உழைக்கும் மக்களிடமிருந்தே வசூலிக்கின்றன.
உணவு கிடைப்பது அடிப்படை உரிமை
ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் உடனடியாக சந்தையில் தலையீடு செய்ய வேண்டும் என்பது விலைவாசி உயர்வை ஓரளவுக்கு கட்டுப்படுத்த உதவும். இந்திய மாநிலங்களிலேயே விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை தவிர்ப்பதற்கு உதவலாம். ஆனால் விலை உயர்வை உருவாக்கும் லாபப் பொறிமுறையை மாற்றிவிடாது.
இதற்கு, உணவு உற்பத்தி, விநியோகம், விலை நிர்ணயம் ஆகியவை லாபத்திற்காக அல்ல, மக்களின் தேவைக்கானதாக இருக்க வேண்டும். அதாவது, உணவு முறையை முதலாளித்துவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.
உணவு என்பது லாபத்திற்கான பொருளாக இருக்கக் கூடாது. அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய உரிமை. அதற்கு உணவு உற்பத்தியையும் விலையையும் மக்களே கட்டுப்படுத்த வேண்டும். அத்தகைய சமூக அமைப்புக்காக உழைக்கும் மக்கள் போராட வேண்டும்.