கொடைக்கானல் சட்டக் கருத்தரங்கம்

இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பில் இரண்டு நாட்கள் சட்டக் கருத்தரங்கம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரில் ஹார்ட்வெல் காம்பவுண்ட் எஸ்டேட்டில் கடந்த 23.10.2026 மற்றும் 24.10.2026 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
கருத்தரங்கத்திற்கு இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கு.சாமிதுரை தலைமை வகித்தார்.
இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.கே.மதுசூதனன் வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கத்தின் தொடக்க உரையை தேசியப் பொதுச்செயலாளர் மூத்த வழக்கறிஞர் கே.முரளிதரா இணையவழியில் தொடங்கி வைத்து உரையாற்றினார். கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்து மாநிலப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மு.அ.பாரதி எடுத்துரைத்தார். கொடைக்கானல் நகராட்சி நகர்மன்றத் தலைவர் பா.செல்லதுரை, நகர்மன்றத் துணைத் தலைவர் கே.பி.என்.மாயக்கண்ணன், திண்டுக்கல் மாவட்ட ஏஐடியூசி துணைத் தலைவர் ஏ.பி.மணிகண்டன், கொடைக்கானல் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் தங்கமணி, செயலாளர் பாபு உள்ளிட்டோர் கருத்தரங்கை வாழ்த்தி உரையாற்றினர்.
முதல் நாள் அமர்வு:-
‘திருக்குறளும் சட்டமும்’ என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதியரசர் ஏ.ஏ.நக்கீரன், ‘நடுவர் மன்ற நடவடிக்கைகளில் இணக்க தீர்வு’ என்ற தலைப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த பயிற்சியாளர், சமரசத் தீர்வாளர் எஸ்.அருணாச்சலம், ‘பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம்’ குறித்து மாநில தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கு.சாமிதுரை ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இரண்டாம் நாள் அமர்வு:-
‘அடிப்படை உரிமைகள் ஒரு கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், ‘நவீனப் போக்கில் குற்றவியல் வழக்கு விசாரணை’ என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், ‘நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் மற்றும் அவற்றின் தாக்கங்கள்’ குறித்து ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தேசியச் செயலாளர் டி.எம்.மூர்த்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து 26 மாவட்டங்களை சேர்ந்த 87 வழக்கறிஞர்கள் கருத்தரங்கில் பங்கேற்று பயிற்சி பெற்றனர். கருத்தரங்கில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் அனைவருக்கும் மேனாள் நீதியரசர் ஏ.ஏ.நக்கீரன் அவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வழக்கறிஞர் இசை மன்றத்தின் பொறுப்பாளர் வழக்கறிஞர் ஓ.ராமன் மற்றும் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் கே.ஆர்.ராமமூர்த்தி நன்றியுரையுடன் சட்டக் கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.
இரண்டு நாட்கள் சட்டக் கருத்தரங்கில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1).தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் 1957 இல் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கும் சார்நிலை நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 1976இல் குற்றவியல் நீதிமன்றங்களிலும் 1982 இல் உரிமையியல் நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சி மொழியானது. 2006 இல் அன்றைய தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வரவேண்டும் என்பதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வர வேண்டும் என்பது தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2). தெலங்கானா மாநிலத்தில், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களது தொழில் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் ‘Telangana Advocates Protection Act, 2026’ என்ற புதிய சட்டம் ஜூன் 2, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம், வழக்கறிஞர்களுக்கு எதிரான வன்முறை, தொழில் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் தவறான வழக்குகளை எதிர்கொள்ளும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோல் தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை பணியை பாதுகாக்கும் வகையில் விரிவான தமிழ்நாடு வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் (Tamilnadu Advocates Protection Act) இயற்ற வேண்டும்.
3).தமிழ்நாட்டில் உள்ள வழக்கறிஞர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் வழக்கறிஞர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் சேமநல நிதி ரூபாய் 10 லட்சமாக உள்ளதை உயர்த்தி ரூபாய் 25 லட்சம் ஆக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4).தமிழகத்தில் உள்ள நீதித்துறையில் புதிய பணியிடங்களை உருவாக்கவும், காலிப் பணியிடங்கள் நிரப்பிவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5).பார் கவுன்சிலில் பதிவு செய்த இளம் வழக்கறிஞர்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்க வேண்டும். பெண் வழக்கறிஞர்களுக்கான நலத்திட்ட ஆரம்பகால வழக்கறிஞர் பணிக்காலத்தில் மாதம் ரூ.10,000 நிதியுதவியும், மகப்பேறு காலத்தில் மாதம் ரு. 5,000 உதவியும் வழங்க வேண்டும்.
6).கீழமை நீதிமன்றங்களில் கட்டாய இ-ஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்த படுவதற்கு முன்பு அதற்கான கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தவும், இ-ஃபைலிங் செய்வதற்கு சேவை மையங்கள் தொடங்க வேண்டும்.
– மு.அ.பாரதி