கட்டுரைகள்

சனாதனப் பண்பாட்டுப் படையெடுப்பின் நீட்சியே இந்தி – சமக்கிருதத் திணிப்பு

மே.து.ரா.

ஒன்றிய பா.ச.க. அரசின் பள்ளிக் கல்விக்கான நடுவண் வாரியம் தன்கீழ் இயங்கும் பள்ளிகளுக்குப் புதிய சுற்றறிக்கையினை 2026 ஏப்ரல் 9ஆம் நாள் அனுப்பியுள்ளது. அதில் அடங்கியுள்ள புதிய கூறுகள் இரண்டு மட்டுமேயாகும்.

1. மும்மொழி முறையில். ஏதாவது இரு ஒன்றிய மொழிகளும் ஒரு வெளிநாட்டு மொழியும் மட்டும்தான் கற்பிக்கப்படவேண்டும்.

2. மூன்றாவது மொழி கற்பிக்கப்படுவது 9, 10ஆம் வகுப்புகளிலும் தொடரவேண்டும். பத்தாம் வகுப்பில் அந்த மூன்றாவது மொழிக்குப் பொதுத் தேர்வு இல்லை என்றாலும் ஆண்டு முழுவதும் கற்கவேண்டும்.

ஒன்றிய அரசின் பாடத்திட்டப் பள்ளிகளில் மும்மொழி கற்பிப்பது முன்னரே இருப்பதுதான். பயிற்று மொழியாக ஆங்கிலம் அல்லது இந்தி அமையும்.

இந்தியைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ள மாநிலங்கள் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றன. அங்கு மூன்றாவது மொழி ஒன்றினை எவரும் கற்பதில்லை. இதனை ஒன்றிய அரசும் கண்டுகொள்வதில்லை.

இந்தியைப் புகுத்தப் புதிய விதிகள்

ஆங்கிலம் பயிற்சி மொழியாக உள்ள பள்ளிகளில் இரண்டாவது மொழியாகத் தாய்மொழி அல்லது சமக்கிருதம், செர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளில் ஒன்று கற்பிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட தாய்மொழியினைக் கற்றாகவேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆனால், மூன்றாவது மொழியாக இந்தி மட்டுமே வற்புறுத்தப்படுகிறது.

இரண்டாவது மொழியாகத் தாய்மொழி இருந்தால் மிகுவளவில் விரிவான பாடங்களைப் படிக்கவேண்டியிருப்பதால், பலர் அறிமுகப் பாடங்களை மட்டுமே கொண்ட சமக்கிருதம், செர்மனி, பிரெஞ்சு போன்ற ஒன்றைத் தேர்வு செய்கின்றனர்.

தமிழ்நாடு போலன்றி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றிய அரசின் பாடத்திட்டம் பா.ச.க. பங்கு பெறும் கூட்டணி ஆட்சியால் நுழைக்கப்பட்டிருப்பதால், அங்கு தற்போது பிரெஞ்சு மொழி கற்கும் வாய்ப்புப் பறிபோய்விட்டது.

தற்போதைய புதிய அறிவுறுத்தலில், ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்ட பள்ளிகள் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மொழிகளில் இரண்டினைப் படிக்கவேண்டும் என்பது கண்டிப்பாகிறது. அந்த மொழிகளில் ஒன்று தாய் மொழியாகத்தான் இருக்கவேண்டும் என்பதும் குறிப்பிட்டுக் கூறப்படவில்லை. இருப்பினும், வேறு வழியின்றி இந்தியல்லாத மாநிலங்கள் தங்களது தாய் மொழியினை ஏற்றுக்கொள்ளும்.

ஆனால், மூன்றாவது மொழியாக எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதில்தான் அழுத்தம் அல்லது வற்புறுத்தல் தொடங்குகிறது. ஒன்றிய மொழிகள் ஏதாவதொன்று என்று குறிப்பிட்டாலும், இந்தி, சமக்கிருதம் அல்லாத மொழியினைக் கற்றுத்தரக்கூடிய வாய்ப்புகள் பல மாநிலங்களில் இல்லை. மேலும், இந்த மூன்றாவது மொழியினைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர் அல்லது பெற்றோரிடம் கொடுக்கப்படவில்லை. மாறாக, ஒரு பள்ளி எந்த மொழியினைத் தேர்ந்தெடுக்கிறதோ அதுதான் மூன்றாவதாகக் கற்பிக்கப்படும் என்பதும் இந்திய அரசின் சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையிருந்தாலும், அந்த மொழிகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களைத் தேடுவது எளிதல்ல. அத்துடன், இந்தி அல்லது சமக்கிருதம் படிப்பதால் பயனுண்டு என்றவொரு கருத்து பலர் மனதிலும் புகுத்தப்பட்டிருப்பதால், இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைகள்தாம் உந்தித்தள்ளும்.

ஒன்றிய பா.ச.க. அரசுக்கு இணங்குவதால், பள்ளிக்கு உரிமம் பெறுவது எளிதில் நிறைவேறும். இதைத்தான் பா.ச.க.வின் ஒன்றிய அரசு எதிர்பார்க்கிறது. இதையேதான் சனாதனிகளும் எண்ணுகின்றனர்.

காரணிகளைக் கண்டுபிடிக்கும் ஒன்றிய அரசு

மொழித் திறன், பண்பாட்டுப் புரிதல், தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தல் ஆகியன மூன்றாவது மொழியினைத் திணிப்பதற்கான அடிப்படைகளாகக் காட்டப்படுகின்றன.

இளம் பருவத்தில் மூன்றாவதாக மாற்று மொழியினைக் கற்பதனால் தாய்மொழித் திறன் கூடும் என நினைப்பதோ, ஆங்கில அறிவு மிகும் என எதிர்பார்ப்பதோ நடைமுறையில் பொருந்துவதாகத் தெரியவில்லை. முன்னேறிய நாடுகளில்கூட இத்தகைய உளவியல் முன்னெடுக்கப்படவில்லை.

மூன்றாவது மொழியினைக் கற்கும்போது வெறுப்புத்தான் வளருமேயன்றி, அந்த மொழி இலக்கண, இலக்கியங்களை மேலோட்டமாகப் படித்துப் பண்பாட்டினைப் புரியச்செய்வது பள்ளிப் பருவத்தில் நடக்கக்கூடியதன்று. வேண்டுமெனில், பண்பாடு தொடர்பான நிகழ்வுகளையும் கதைகளையும் அவ்வப்போது பாட வகுப்புகளுக்கு வெளியே கூறுவதே போதுமானதாக இருக்கலாம்.

தேசிய ஒருமைப்பாடு மேம்படுவதற்கு மொழி அறிவு பயன்படும் என்பது ஏற்கத்தக்கதாகப் பட்டறிவு காட்டவில்லை. நாட்டுப் பண் இசைப்பதாலோ, வந்தே மாதரம் பாடுவதாலோ மட்டும் தேசிய ஒருமைப்பாடு மேம்படவில்லை என்பதுபோல, ஒரு மொழியைத் திணிப்பதால் சுமை கூடுமேயன்றித் தேசிய ஒருமைப்பாடு மேம்படாது.

மேலும், ஒன்றிய மொழிகளில் ஏதாவதொன்று என்னும் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள மாணவர் மலையாளம், தெலுங்கு அல்லது கன்னடத்தைத் தேர்ந்தால், வடமாநில மக்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்பட்டுத் தேசிய ஒருமைப்பாடு எங்கிருந்து வரும்? அதைப் போன்று, இந்தி பேசும் மாநிலங்களில் சமக்கிருதத்தை மூன்றாவது மொழியாக ஏற்றால், தென்மாநிலங்களைப் பற்றிய உணர்வுகள் எப்படி மேம்படும் என்பதும் தெளிவாகக் காட்டப்படவில்லை.

இந்தி அல்லது சமக்கிருதத்தை மறைமுகமாகப் புகுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, அதற்கான காரணிகளைத் தேடுவதாக இப்போதைய ஒன்றிய அரசின் முயற்சிகள் அமைகின்றன என்பதில் அய்யமில்லை.

எதிர்காலத்தில் பயன்படாத மொழி எதற்கு?

இங்கு மற்றொன்றையும் புறக்கணித்துவிட முடியாது. பள்ளியில் படிக்கத் தொடங்கும் மாணவர் ஒருவர், மேற்கல்விக்கு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் எதைத் தேர்ந்தேடுக்கப்போகிறார், எங்கு பணியாற்றச் செல்கிறார் என்பனவெல்லாம் எவரும் அறியாதவை. ஆறாம் வகுப்பில், அதுவும் பத்து அகவை கொண்ட இளம் பருவத்தில், எதிர்காலத்தைத் திட்டமிட்டுத் தனக்குப் பயன்படக்கூடிய மூன்றாவது மொழியொன்றைத் தேர்ந்தெடுக்கும் சூழல் அமையப் போவதில்லை.

மேலும், ஒரு மாணவருக்கு எந்த மொழி எதிர்காலத்தில் வேண்டியிருக்கும் என்பதை முடிவு செய்யும் உரிமை பள்ளியை நடத்தும் மேலாண்மையினருக்கு இருக்கக்கூடாது. இங்கு, மூன்றாவது மொழியினைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பள்ளிக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேரும் மாணவருக்கு அந்த உரிமை இல்லை.

எதிர்காலத்தில் பயன்படுமா என்பதை அறியாத நிலையில், மூன்றாவது மொழியினை மாணவரிடம் திணிப்பது, அது எந்த மொழியாக இருப்பினும் ஏற்கத் தக்கதாகத் தெரியவில்லை.

அறிவியல் பயில்வதைத் தடுக்கும் மூன்றாவது மொழி

தற்போது ஒன்றிய அரசுப் பாடத்திட்டப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்றாண்டுகளுக்கு இந்தி கற்பிக்கப்படுகிறது. இதனை ஒன்பது, பத்தாம் வகுப்புகளிலும் தொடர்வதால் அறிவியல் பாடங்களுக்கான காலம் களவாடப்படுகிறது.

எதிர்கால அறைகூவல்களை எதிர்நோக்கியிருக்கின்ற மாணவர்கள், மேற்படிப்புக்கான அடித்தளத்தை அமைக்கும் வாய்ப்பாக அறிவியல் பாடங்களில் முழு மனதையும் செலுத்துவதற்கு மாறாக, மூன்றாவது மொழியொன்றைத் தந்து அவர்களை முடக்குவது ஏனென்று தெரியவில்லை. பத்தாம் வகுப்பில் மூன்றாவது மொழிக்குப் பொதுத்தேர்வுகூட இல்லையென்னும் நிலையில், இது ஏற்புடையதாகவும் தெரியவில்லை.

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில்தான் இவையெல்லாம் முன்னெடுக்கப்படுகின்றன. அறிவியல் நுட்பங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் வளர்ச்சிகளையும் உள்ளடக்கிய புதிய பாடத்திட்டத்தினை அவ்வப்போது மேம்படுத்துவதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை.

கணினி, இணைய வழி அறிமுகங்களால் கற்றல், கற்பித்தல் முறைகளும் மாறுதலுக்கு உள்ளாகி வருகின்றன. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய எத்தகையதொரு புதிய கல்விக் கொள்கையையும் யாரும் மறுக்கப்போவதுமில்லை; எதிர்க்கப்போவதுமில்லை.

இவற்றுக்கப்பால், புதிய கல்விக் கொள்கை என்னும் பெயரில், சமக்கிருதத்தின் வழியாகப் பண்பாட்டைச் செழுமைப்படுத்த வேண்டும் என்பதும், மூன்றாவது மொழியாக வேண்டாத, தொடர்பில்லாத, பயனில்லாத இந்தி, சமக்கிருத மொழிகளைக் கற்கவேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகின்றன. இத்தகைய மொழி, பண்பாட்டுத் திணிப்புகளே பெரிதும் கவலை தருகின்றன; கண்டிக்கப்படுகின்றன.

தாய்மொழி பயிற்சிமொழியாகத் தடை

இங்கு இன்னொன்றையும் புறந்தள்ளிவிட முடியாது. தாய்மொழியில் பயிற்றுவித்தலைத் தேசியக் கல்விக் கொள்கை தெளிவாகப் பரிந்துரைக்கிறது. ஆனால், ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில், அந்தந்த மாநில மொழிகளே பயிற்சி மொழிகளாக இருக்கவேண்டும் என்பது முழுமையாக மறுக்கப்படுகிறது. இதனை வலியுறுத்திப் பள்ளிக் கல்விக்கான நடுவண் வாரியம் எத்தகைய சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை. அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

இந்தி பேசாத மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகளை இரண்டாவது மொழியாகக் கற்பிப்பதற்குக்கூட ஆசிரியர்களைப் பணியமர்த்தவில்லை. ஒன்றிய பாடத்திட்டப் பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் பயிற்றுவிப்பதற்கு வேண்டிய பாட நூல்களையும் உருவாக்க முயற்சிக்கவில்லை.

இப்போதைய சுற்றறிக்கை ஒன்றிய பாடத்திட்டப் பள்ளிகளுக்கு மட்டும்தான். தமிழ்நாட்டில், ஒன்றிய அரசின் பாடத்திட்டப் பள்ளிகள் 875 மட்டுமேயாகும். இது வெறும் 3.16% அளவுதான். ஆயினும், புதிய கணக்கெடுப்பில் 1189 என உயர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

மாறாக, தமிழ்நாட்டில் ஏறக்குறைய 58,000 பள்ளிகள் உள்ளன. இவற்றில், 23,000 அரசுப் பள்ளிகளும் 12,690 தனியார் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளாக இயங்குகின்றன. தமிழ்நாடு அரசின் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுவதால், இந்தப் பள்ளிகளுக்கு ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் சுற்றறிக்கை பொருந்தாது என்பது உண்மைதான்.

ஆனால், இந்தியுடன் தரமான கல்வி தருவதாகத் தற்பெருமையுடன் எடுத்துக்காட்டப்படும் பிஎம்சிறீ பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தனித் திறமையுடன் மேற்கல்விக்குச் சென்றுள்ளனர் என்பது இன்றுவரை உறுதிசெய்யப்படவில்லை. இந்தப் பள்ளிகள் மாவட்டத்துக்கு ஒன்றுதான் என்பதையும் எடுத்துக்கொண்டால், இவற்றின் தாக்கம் பெரிதாகவும் இருக்கப்போவதில்லை. கல்வித் தரத்தில் மேம்பட்டுள்ள தமிழ்நாட்டில் பிஎம்சிறீ பள்ளிகளைவிட மேம்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளிகள் உள்ளன. இவற்றை பிஎம்சிறீ பள்ளிகள் இதுவரை விஞ்சவில்லை.

இந்த நிலையில், நிதி நிறுத்தம் வழியாக, பிஎம்சிறீ பள்ளிகளுக்கு ஒப்புதல் பெறுவதிலும், இந்தி, சமக்கிருதத் திணிப்பை ஏற்கச் செய்வதிலும் ஒன்றிய பா.ச.க. அரசு காட்டும் முனைப்புகளை முளையிலேயே கிள்ளியெறியாவிட்டால், புதிய ஆட்சிக்கு அழுத்தம் தரும் நிலைமைகள் உருவாகிவிடும்.

சனாதனப் பண்பாட்டுப் படையெடுப்பின் நீட்சியே இந்தி – சமக்கிருதத் திணிப்பு என்பதைப் பண்டைய நாளிலிருந்து தமிழர்கள் புரிந்துள்ளனர். புதிய ஆட்சியினருக்கும் புரியவைக்கவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button