உலக செய்திகள்

உலக மக்களுக்கான ஒரு கியூப பெண்ணின் திறந்த கடிதம்

இகாய் ரோமே

உலகின் மனிதகுலத்திற்கும், தாய்மார்களுக்கும், எல்லை கடந்த மருத்துவர்களுக்கும், உண்மையை மதிக்கும் பத்திரிகையாளர்களுக்கும், இன்னும் நீதியை நம்பும் அரசுகளுக்கும் நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

என் பெயர் கோடிக்கணக்கான மக்களின் பெயரைப் போலவே ஒரு சாதாரண பெயர். எனக்கு பிரபலமான குடும்பப் பெயரும் இல்லை, பெரிய பதவியும் இல்லை. நான் ஒரு சாதாரண கியூப பெண். ஒரு மகள், ஒரு சகோதரி, என் நாட்டை நேசிக்கும் ஒரு தேசபக்தர்.

இந்தக் கடிதத்தை நான் உடைந்த இதயத்துடனும் நடுங்கும் கைகளுடனும் எழுதுகிறேன். ஏனென்றால் இன்று எங்கள் மக்கள் அனுபவித்து வருவது ஒரு சாதாரண நெருக்கடி அல்ல. அது மெதுவாகவும் திட்டமிட்டும் நடைபெறும் ஒரு கொலை. வாஷிங்டனில் இருந்து குளிர்ந்த மனதுடன் திட்டமிடப்பட்ட ஒரு கொடூரம். ஆனால் உலகம் அதை பார்க்காதது போல திரும்பி நிற்கிறது.

என் தாத்தா பாட்டிகளுக்காக நான் முன்வைக்கும் குற்றச்சாட்டு

கியூபாவில் பல முதியவர்கள் முன்கூட்டியே மரணம் அடைகிறார்கள். காரணம், எங்களிடம் வளங்கள் இல்லாததால் அல்ல. இது திட்டமிட்ட தடை.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு தேவையான மருந்துகள் நாட்டுக்குள் வர முடியாமல் தடுக்கப்படுகின்றன.

கியூபாவுக்கு மருந்துகள் விற்க விரும்பும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அவை மிரட்டப்படுகின்றன, துன்புறுத்தப்படுகின்றன. அவர்களது அரசுகள் மௌனமாக இருக்கின்றன.

அந்த நேரத்தில், ஒரு கியூப தாத்தா மார்பைப் பிடித்துக் கொண்டு மருந்துக்காக காத்திருக்கிறார். மரணம் எப்போது வரும் என்று தெரியாது. ஆனால் பொருளாதாரத் தடை அவரை எப்போது தாக்கும் என்று நிச்சயமாக தெரியும்.

என் குழந்தைகளுக்காக நான் முன்வைக்கும் குற்றச்சாட்டு

கியூபாவில் சில மருத்துவமனைகளில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான இன்க்யூபேட்டர்கள் எரிபொருள் இல்லாததால் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு எந்த நாடுகள் கியூபாவிற்கு எண்ணெய் விற்கலாம், எந்த நாடுகள் விற்கக் கூடாது என்று முடிவு செய்கிறது. அதனால் புதிதாக பிறந்த குழந்தைகள் தங்கள் உயிரைக்காப்பாற்ற போராடுகின்றன.

வாஷிங்டனில் உள்ள ஒரு அலுவலகத்தில் கையெழுத்திடப்படும் உத்தரவு, அமெரிக்காவின் கரையிலிருந்து வெறும் 90 மைல் தூரத்தில் இருக்கும் ஒரு குழந்தையின் அழுகையைவிட அதிக மதிப்புடையதாக பார்க்கிறது.

உலக சமூகம் எங்கே?

குழந்தைகளின் உரிமையைப் பாதுகாக்கும் அமைப்புகள் எங்கே?

கியூப குழந்தைகள் வாழத் தகுதியற்றவர்கள் என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்களா?

திட்டமிட்ட பசிக்கான குற்றச்சாட்டு

கியூபாவில் பசி ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. அது அமெரிக்க அரசின் அரசியல் கொள்கையின் விளைவு.

60 ஆண்டுகளாக இந்த பொருளாதாரத் தடையை அமெரிக்கா தொடர்கிறது. ஒவ்வொரு நிர்வாகமும் அதை புதுப்பித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் காலத்தில் அது இன்னும் கடுமையாக்கப்பட்டது. மார்கோ ரூபியோ போன்ற அரசியல்வாதிகள் அதை இரக்கமின்றி செயல்படுத்துகின்றனர்.

உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்குக் காரணம் எங்களுக்கு பணம் இல்லாததால் அல்ல. எங்களால் உணவை வாங்க முடியும். ஆனால் அவர்கள் வாங்க விடுவதில்லை.

உணவு கொண்டு வரும் கப்பல்கள் தடுக்கப்படுகின்றன.

வங்கிப் பரிவர்த்தனைகள் முடக்கப்படுகின்றன. தானியங்கள், கோழிக்கறி, பால் போன்றவற்றை விற்கும் நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படுகிறது.

அவர்கள் இதை “பொருளாதார அழுத்தம்” என்று அழைக்கிறார்கள்.

நான் இதை “பசியை பயன்படுத்தும் பயங்கரவாதம்” என்று அழைக்கிறேன்.

எங்கள் மருத்துவர்களுக்காக நான் முன்வைக்கும் குற்றச்சாட்டு

உலகம் முழுவதும் தொற்றுநோயால் சிக்கியிருந்த காலத்தில் பல நாடுகளுக்கு சென்று மனிதர்களின் உயிரைக் காப்பாற்றியவர்கள் கியூப மருத்துவர்கள்.

ஆனால் இன்று அவர்கள் தங்கள் நாட்டில் சிரிஞ்சுகள் இல்லாமல், மயக்க மருந்து இல்லாமல், எக்ஸ்ரே கருவிகள் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இது எங்களுக்கு திறமை இல்லாததால் அல்ல.

நாங்கள் தயாரிக்கத் தெரியாததால் அல்ல.

பொருளாதாரத் தடையால் மூலப்பொருட்கள், உதிரி பாகங்கள், தொழில்நுட்பங்கள் கிடைக்க முடியாததால் தான்.

எங்கள் விஞ்ஞானிகள் COVID-19க்கு எதிராக ஐந்து தடுப்பூசிகளை உருவாக்கினர். ஒன்று அல்ல, ஐந்து. எந்த உதவியும் இல்லாமல். அனைத்து தடைகளையும் மீறி. ஆனால் அந்த சாதனைக்காகவே ஏகாதிபத்தியம் எங்களை தண்டிக்கிறது.

உலகிற்கு நான் சொல்ல விரும்புவது

கியூபா உங்களிடம் பிச்சை கேட்கவில்லை.

கியூபா உங்களிடம் படைவீரர்களைக் கேட்கவில்லை.

கியூபா உங்களிடம் எங்களை நேசிக்கச் சொல்லவில்லை.

கியூபா கேட்பது ஒன்றே ஒன்று — நீதி.

எங்கள் மக்களின் துன்பத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

இந்த பொருளாதாரத் தடையை அதன் உண்மையான பெயரால் அழையுங்கள்.

அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்.

“உரையாடல்” மற்றும் “ஜனநாயகம்” என்ற பெயரில் எங்கள் கழுத்தை இறுக்கும் அரசியலை நம்ப வேண்டாம்.

எங்களுக்கு தொண்டு தேவையில்லை.

எங்களை வாழ அனுமதியுங்கள்.

மௌனமாக இருக்கும் அரசுகளுக்கு

நீங்கள் மௌனமாக இருந்தாலும் வரலாறு உங்களைப் பொறுப்பேற்கச் செய்யும்.

பொய் பேசும் ஊடகங்களுக்கு –தடைகளில் கையெழுத்திட்டு எங்களுக்கு மரண தண்டனை வழங்குபவர்களுக்கு எதிரான உண்மை எப்போதும் வெளிவரும்.

கியூப மக்கள் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.

மனிதாபிமானம் இன்னும் உள்ளவர்களுக்கு

கியூபாவைப் பாருங்கள். எங்களுக்கு என்ன செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

பிறகு உங்களை நீங்களே கேளுங்கள்.

“நான் வரலாற்றில் எந்தப் பக்கத்தில் நிற்கப் போகிறேன்?”

ஒரு சிறிய தீவிலிருந்து எழும் குரல்

இந்தச் சிறிய தீவிலிருந்து, ஆனால் பெரிய மனம் கொண்ட மக்களின் நாட்டிலிருந்து, ஒரு சாதாரண கியூப பெண் இந்தக் கடிதத்தை எழுதுகிறாள்.

இந்த வார்த்தைகள் உங்களைத் தொட்டால் அதை பகிருங்கள்.

உங்களுக்கு 10 நண்பர்கள் இருந்தாலும் பரவாயில்லை, 10,000 நண்பர்கள் இருந்தாலும் பரவாயில்லை.

இது ஒரு சூரிய அஸ்தமனத்தின் படம் அல்ல.

இது பொழுதுபோக்கு செய்தி அல்ல.

இது ஒரு சாதாரண கருத்தும் அல்ல.

இது ஒரு அலறல்.

அலறல்கள் அமைதியாக இருப்பதில்லை.

அவை கேட்கப்படுகின்றன.

அவை பரவுகின்றன.

அவை மக்கள் இயக்கமாக மாறுகின்றன.

இன்று நான் உங்களிடம் “லைக்” கேட்கவில்லை.

இந்த செய்தியை உலகிற்கு பரப்புமாறு கேட்கிறேன்.

உலகம் அறியட்டும் —

கியூபாவில் ஒரு சாதாரண நெருக்கடி இல்லை.

ஒரு குற்றம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மௌனமாக இருக்காதீர்கள்.

இந்த குற்றச்சாட்டை தடைகளைத் தாண்டி உலகம் முழுவதும் கொண்டு செல்லுங்கள்.

நான் ஒரு சாதாரண கியூப பெண்,

ஆனால் தன் மக்களை விட்டுக்கொடுக்க மறுக்கும் ஒரு குரல்.

கட்டுரையாளர் இல்காய் ரோமே (Ilkay Romay)
கியூபாவைச் சேர்ந்த ஒரு நடிகை.
Maite (1994), Guantanamera (1995), The Useless Death of My Pal,
மற்றும் Manolo (1989) போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக
அவர் அறியப்படுகிறார்.
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
W.T.Whitney Jr.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button