
1992 டிசம்பர் 6-ம் நாள் சுதந்திர இந்தியாவில் ஒரு கருப்பு நாள் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதி, இந்து சங்பரிவார் மத வெறியர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நாள்: 2019 நவம்பர் 9-ம் நாள் இன்னொரு கருப்பு நாள் பாபர் மசூதியை இடித்தவர்கள் கைகளிலேயே இடிக்கப்பட்ட மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள் !
பாபர் மசூதி – ராமஜென்ம பூமி பிரச்சினை உச்சகட்டத்திலிருந்த போது காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது. நரசிம்ம ராவ் பிரதமர் தோழர் இந்திரஜித் குப்தா மற்றும் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்முயற்சியால் நாடாளுமன்றத்தில் 1991-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் “வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சிறப்பு சட்டம்” இயற்றப்பட்டது. மத நல்லிணக்க வரலாற்றில் இந்த சட்டம் – ஒரு முக்கியமான மைல்கல்.
1. இந்த நாட்டில் இந்து கோவில்கள், மசூதிகள் சர்ச்சுகள், குருத்துவாராக்கள் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் 1947 ஆகஸ்ட் 15-ம் நாளன்று எந்தெந்த மதத்தினர் கைவசமிருந்ததோ அந்தந்த மதத்தினரின் வழிபாட்டு உரிமை தொடரும். இந்த சட்டம் அமலுக்கு வந்த தேதி (17.09.1991) முதல் வழிபாட்டுத்தலத்தின் மத அடையாளத்தை கேள்வி கேட்டு மாற்றத்தை உண்டாக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்ய யாருக்கும் உரிமையில்லை.
ஒரு வழிபாட்டுத்தலத்தின் மத அடையாளத்தை பலவந்தமாக மாற்ற முயற்சிப்பவர்கள் மீது கிரிமினல் சட்டம் பாயும். இந்த சட்டத்திலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்ட ஒரே வழக்கு, அன்று சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலிருந்த பாபர் மசூதி ராமஜென்ம பூமி வழக்கு மட்டுமே! இந்த சட்டம் அமலுக்கு வரும் தேதியில் நீதிமன்றங்களில் நிலுவையிலிருக்கும் வழிபாட்டுத்தலங்கள், உரிமை சம்பந்தமான அனைத்து வழக்குகளும் விசாரணையின்றி அப்படியே தள்ளுபடி செய்யப்படும் என்றும் சட்டம் தெளிவாக கூறியிருக்கிறது.
2. உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் 2019-ம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பு ஆர்.எஸ்.எஸ்.சங் பரிவார் மதவெறியர்களுக்கு புதிய தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்தது. உத்திரபிரதேச மாநிலத்தை மதவெறி உலைக்களமாக மாற்றும் நடவடிக்கைகளைத் தொடங்கினார்கள். ராமர் ஜென்ம பூமி போன்று, மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கை மீண்டும் கையிலெடுத்தார்கள். இன்று ஷாஹி இட்கா மசூதி” இருக்குமிடத்தில் தான் கிருஷ்ணன் பிறந்தான். ஆகையால் ஷாஹி இட்கா மசூதி இடிக்கப்பட்டு அந்த இடம் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சிவில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
3. வாரணாசியில் விஸ்வநாதர் ஆலயத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு, அந்த அழிவின் மேல் ஒளரங்கசீப் மன்னர் 1669-ம் ஆண்டில் “கியான் வாப்ஸி” மசூதியை கட்டினார் என்றும், அந்த மசூதியையும் இடித்துவிட்டு அந்த இடத்தை விஸ்வநாதர் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிவில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
4. 1991-ம் ஆண்டில் மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சிறப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்குகளை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்யாமல் நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதேன்? இந்த மதுரா, வாரணாசி வழக்குகள் போக சிறிதும் பெரிதுமாக உ.பி.மாநிலத்தில் மட்டும் 299 “கோவில் – மசூதி” சிவில் வழக்குகளை சங்பரிவார் ஆட்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு உ.பி.மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால் இந்த வழக்குகள் கொதி நிலையை அடையும். மக்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு தேர்தல் ஆதாய அறுவடைக்கு இப்போதிருந்தே பி.ஜே.பி.ஆட்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
5. இவை தவிர நாடு முழுவதும் 1800 வழிபாட்டுத்தல வழக்குகள் இன்னும் தள்ளுபடி செய்யப்படாமல் நிலுவையிலிருந்து வருகின்றன. வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்யாமல் நிலுவையில் வைத்திருப்பது 1991-ம் வருடத்திய “வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டத்திற்கும், அரசியல் சட்டத்துக்கும்” விரோதமானது. மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சங் பரிவாரின் அரசியல் சதிக்கு நீதிமன்றங்கள் துணை போவதா என்று சமூகநீதி செயற்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.
6. இந்த மோசமான சூழ்நிலையில்தான், ம.பி.மாநிலம் தார் மாவட்டத்தில் கி.பி.11-ம் நூற்றாண்டில் போஜ மன்னன் கட்டியிருந்த “சரஸ்வதி கோவில்” இடிக்கப்பட்டு அதன்மீது “கமல் மௌலானா மசூதி” கட்டப்பட்டுள்ளது என்றும், கமல் மௌலானா மசூதி இருக்கும் இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என்று ம.பி.மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் பெஞ்ச் சென்ற வாரம் (மே-15) தீர்ப்பு வழங்கியுள்ளது. இது மதநல்லிணக்கத்துக்கு இன்னொரு பெருத்த அடியாகும்.
இந்த “போஜ்சாலா- கமல் மௌலானா வழக்கில்” தீர்ப்பு சொல்லப்பட்ட அடுத்த நாளே, வழக்கு தொடுத்த “இந்து மக்கள் பாதுகாப்பு கமிட்டி” நூற்றுக்கணக்கான சங்பரிவார் ஆட்களை அந்த மசூதிக்குள் அழைத்துச் சென்று சரஸ்வதி பூஜை செய்திருக்கிறார்கள். தீர்ப்பு இறுதியானதல்ல. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முஸ்லீம்கள் அமைப்பு (ஜமாத்-இ-ஹிந்த்) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நடவடிக்கையெடுத்து வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நினைவுச்சின்னம் 2003-ம் ஆண்டிலிருந்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் (ASI) கட்டுப்பாட்டில் இருக்கிறது. தேர்தல் கமிஷன் போல் இந்தத் துறையும் சங் பரிவார் அரசியல் சார்புடன் கமல் மௌலானா மசூதிக்குள் “சரஸ்வதி பூஜை“ நடத்த அனுமதித்திருப்பது தான் கண்டனத்துக்குரியது. இந்துக்கள் கூட்டமாகச் சென்று எல்லா நாட்களிலும் வழிபடலாம் என்று தீர்ப்பில் எங்கும் சொல்லப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
மொத்தத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நீதிபதிகளே, மதவெறி சக்திகளுக்கு தங்கள் தீர்ப்பு மூலம் உதவியாக இருப்பது இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஆபத்தான போக்கு என்பதை மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். திருப்பரங்குன்றம் வழக்கு தமிழ் நாட்டுக்கு அண்மைக் கால அனுபவம்.