கட்டுரைகள்

மாணவியை இழிவுபடுத்திய அமைச்சர் கீர்த்தனா மீது குற்ற வழக்குப் பதியவேண்டும்

மே.து.ரா.

எழுத்து ஊடகங்களிலும் பொது மேடைகளிலும் நிகழ்ந்துவந்த கருத்துப் போர்கள், இன்றைய நுட்ப வளர்ச்சியில் காணொளிக் காட்சிகளாகப் புது வடிவம் பெற்றுவிட்டன. ஆட்சியாளர் உள்ளிட்ட பலரின் அசைவுகள் அவ்வப்போது காணொளிகளில் பதிவு செய்யப்பட்டுப் பொதுமக்களைச் சென்றடைகின்றன.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு இத்தகைய காணொளிக் காட்சிகளே அடிப்படையாக அமைந்துவிட்டன என்றும் கூற முடியும். எந்தக் காணொளிக் காட்சிகளை வைத்து ஆட்சியைப் பிடித்தார்களோ, அவையே தமிழக வெற்றிக் கழகத்தினருக்குக் கடும் எதிர்ப்பையும் இப்போது தந்துவருகின்றன. ஆட்சியைப் பிடித்த பின் கடைப்பிடிக்கவேண்டிய கட்டுப்பாடுகளை முதல்வரிலிருந்து அமைச்சர்கள் உள்ளிட்டுக் கட்சியின் தொண்டர் வரை எவரும் கண்டுகொள்வதில்லை.

அண்மையில் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனாவின் செயல்பாடுகள், அவரது தகுதிக்கு இழிவை ஏற்படுத்தும் அளவுக்கு வலுவான எதிர்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் அவரது இயல்புக்கு மாறான நடவடிக்கைகள் பெரிதும் பேசப்பட்டன என்றுதான் கருதவேண்டும். அதன் வழியே இருப்பினை வெளிப்படுத்தித் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகும் வாய்ப்பினைப் பெற்றார்.

தேர்தல் பரப்புரையின்போதும் அவரது செயல்கள் வெற்றியைத் தந்ததோடு அமைச்சராகும் ஏற்றத்தையும் கொடுத்தன. தேர்தல் வெற்றியைக் குறிக்கும் சான்றினை பொறுப்பேற்பன்று எடுத்துவரத் தவறியதிலேயே அவருடைய பொறுப்பின்மை வெளிப்பட்டது.

அடுத்து, சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளைக் குறிக்க அவர் பயன்படுத்திய சொற்களுக்கு மன்னிப்புக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கோவையில் பத்து அகவைச் சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளானதைப் பற்றிய ஊடகத்தினரின் வினாக்களுக்கு அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார். அமைச்சராக இருப்பது கூட்டுப் பொறுப்புக்கு உட்பட்டது என்பதைக்கூட அவர் புரிந்துவைத்திருக்கவில்லை. அத்துடன் சிரித்துக்கொண்டே அவர் மறுமொழி தந்த முறை அவரது பக்குவமின்மையை வெளிப்படுத்தியது.

அவரது தொழில் துறைக்குக் கிடைத்த புதிய முதலீடுகளைப் பற்றிய வினாக்களுக்குக்கூடப் பொறுப்பற்ற முறையில் விடையளித்து வந்தார். ஆயினும், தொழில் முதலீடுகளுக்காகக் காணொளிகளை மட்டுமே வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இப்போது மீண்டுமொரு சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கிறார்.

கடந்த சூலை 3ஆம் நாள், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார்.

அவரைச் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த சிவகாசித் தொகுதிக்குள் இப்பள்ளி அமைந்திருப்பதால் அங்கு சென்று ஆய்வு நடத்த அவருக்கு உரிமையும் பொறுப்பும் இருக்கிறது என்பதில் அய்யமில்லை.

சட்டப்பேரவை உறுப்பினர் என்பதற்கும் மேலாக ஒரு அமைச்சராகவும் இருப்பதால், பள்ளிக் கல்வி அலுவலர்களின் பெரும் படையோடும் ஊடகவியலாளர் பலரோடும் சென்றுள்ளார். பள்ளியில் உள்ள கட்டமைப்பு, சமையலறை, கழிவறை, தூய்மை, ஆய்வுக்கூடம், விளையாட்டு ஆசிரியர் இல்லாமை போன்ற பல குறைகளைப் பார்த்து உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அலுவலர்களுக்கு அவர் ஆணையிட்டார்.

அடுத்து அவர் பள்ளியின் வகுப்பறை ஒன்றுக்குச் சென்று மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

ஊக்கம் தராத அமைச்சர்

அப்போது மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் வினா எழுப்ப, மாணவி மறுமொழியளிக்கத் தயங்கியுள்ளார். ‘ஆங்கிலத்தில் ஒரு எளிய வினாவுக்குக்கூட விடையளிக்கத் தெரியவில்லை’ என்று கூறியதுடன், ஆசிரியரை உரையாடக் கேட்டார். ஆசிரியர் வினவியதும் அந்த மாணவியால் இயல்பாக விடைகளைத் தர முடிந்திருக்கிறது.

அந்த மாணவியிடம் தந்தையின் தொழில் குறித்து ஆங்கிலத்தில் வினா எழுப்பியபோது, அந்த இளம் சிறகு தன்னைத் தேற்றிக்கொண்டு கூலி வேலை செய்பவர் என மெல்லிய குரலில் கூறியுள்ளது. அப்போதும்கூட, ‘அதனாலென்ன? நீ படித்து உன் தந்தையையும் தாயையும் காப்பாற்றவேண்டும்’ என்று ஆறுதல் மொழியில் ஊக்கம் தர அமைச்சருக்கு மனம் வரவில்லை. தன்னம்பிக்கையூட்டும் நோக்கமில்லாமல், காணொளிக்கான நாடகமே நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. தன்னை முன்னிறுத்தும் ஆர்வக்கோளாறு அமைச்சரான பின்னரும் தொடர்கிறது.

முன் வரிசையில் இருப்போர் கூறும் மறுமொழியைப் பின்னிருக்கையில் உள்ளோரால் கூறமுடியாது என்று ஏளனமாகப் பேசியதுடன், கற்றுக்கொள்ளும் மாணவியருக்கு முன்னர், கற்றுத் தரும் ஆசிரியரையும் அவர் இழிவுபடுத்தியிருக்கிறார்.

மாணவியரிடமும் ஆசிரியரிடமும் குறை காண்பதற்காகவே ஒரு சூழலை உருவாக்கவேண்டும் என்னும் மனநிலையில்தான் அமைச்சர் கீர்த்தனா நடந்துகொண்டிருக்கிறார். இவைதாம் பெரும் குற்றச்சாட்டாக ஊடகங்களில் தற்போது விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டுவருகின்றன.

இளம் மாணவியின் மன நிலை

பள்ளிக் கல்வி அலுவலர்கள், ஊடகத்தினர், வகுப்பு மாணவியர் ஆகியோர் இருக்கும்போது, இயல்பாக அந்த மாணவிக்கு மறுமொழி கூறும் மனநிலை இல்லாமல் இருந்திருக்கலாம். அரசுப் பள்ளிகளில் எளிய நிலையிலுள்ள மாணவியரே பெரிதும் பயில்வர் என்னும் குறைந்த அறிவுகூட அமைச்சராக உயர்ந்துவிட்ட கீர்த்தனாவிடம் இருக்கவில்லை. அத்துடன், ஆங்கிலத்தை அறிதல் மட்டுமே அறிவாக மாறிவிடாது என்பது அமைச்சருக்கே தெரியவில்லை.

மேலும், தன்னுடைய தந்தை கூலி வேலைக்குத்தான் செல்கிறார் என்பதை அகவை வந்தோர் பெருமையாகக்கூடச் சொல்லலாம். ஆனால், இளம்பெண் அதை எப்படி எடுத்துக்கொள்வார் என்பதைக்கூட அமைச்சர் எண்ணிப் பார்க்கவில்லை.

தனிப்பட்ட முறையில் அல்லாது, பொதுவெளியில் பலருக்கு முன், அதுவும் காணொளிப் பதிவு நிகழும்போது தந்தை தொழில் அல்லது பணி குறித்து வினவுவது பண்பட்ட செயல் அல்ல என்னும் குறைந்த நடைமுறை அறிவுகூட ஓர் அமைச்சரிடம் இருக்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை. தந்தை மறைந்திருக்கலாம், தாயிடமிருந்து மணவிலக்குப் பெற்றிருக்கலாம், நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற நிலைமைகளை அமைச்சர் மனதில் கருதவில்லை.

இதனால் அந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட மன உளைச்சலும் பிற மாணவியருக்கு முன் தான் இழிவுபடுத்தப்பட்டதாக நினைக்கின்ற உள்ளமும் அவருக்கு எத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அமைச்சர் நினைத்துக்கூடப் பார்த்ததாகத் தெரியவில்லை. இதனால் ஏற்படுகின்ற தயக்கம், வெட்கம். மன உளைச்சல் போன்றவற்றால் மாணவியின் வளர்ச்சியும் முன்னேற்றமும் கெடலாம் என்பதையும் புறக்கணித்துவிட முடியாது.

முகம் மறைக்கப்படாத காணொளி

மாணவியின் முகம் மறைக்கப்படாமல் காணொளி பரவலாக வெளிப்பட்டுவிட்டதால், அந்த மாணவி மேலும் சோர்வடைய இடமுண்டு. பின் வரிசையில் இருப்போர் அனைவரும் கல்வியில் பின்தங்கித்தான் இருப்பர் என்ற அமைச்சரின் கருத்துத் தவறானது என்பதைப் பல எடுத்துக்காட்டுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், தற்போது பல பள்ளிகளில் முன்னிருக்கை, பின்னிருக்கை என்ற வேறுபாடு காட்டாமல், சுழற்சி முறையில் அமரவைப்பதும் நடைமுறைக்கு வந்துவிட்டது. மேலும், மாணவரின் உயரத்துக்கு ஏற்ப, இடமளிப்பதும் உண்டு.

சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளத்துக்கு ஏற்றவாறு ஊக்கப்படுத்தி மறுமொழி பெறுவதற்கு மாறாக அமைச்சர் என்ற செருக்கில் உரையாடியதும் உணர்வுகளைக் காட்டியதும்தான் எதிர்ப்புகளுக்கு அடித்தளம் அமைத்தன.

எதிர்ப்புகள் வெவ்வேறு இடங்களிலிருந்து எழுந்தவுடன், தானும் அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் படித்தவள் எனப் பதிவிட்டு, அரசுப் பள்ளியில் படித்தோரை இழிவுபடுத்தக்கூடாது என்று தன் தவறை மறைக்க உண்மைகளை முழுதும் திக்குத்திருப்ப அமைச்சர் முயல்கிறார்.

அரசுப் பள்ளியில் அல்லாமல், அரசு உதவி பெறும் மேம்பட்ட பள்ளி ஒன்றில்தான் படித்தார் என்பன போன்ற விவரங்கள் இப்போது வெளிப்பட்டு, அமைச்சர் கீர்த்தனாவின் நம்பகத் தன்மையும் அய்யத்துக்கிடமாகியுள்ளது.

மாணவியரின் ஆங்கில அறிவை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சரது ஆங்கிலப் பேச்சுக்களில் உள்ள பிழைகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன. தமிழ்வழியில் பயின்று முன்னேறியுள்ள அவரது பேச்சுக்களில் காணும் இடர்பாடுகளைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. இதற்காக அவரது பிற நடவடிக்கைகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

கடந்த ஆட்சியில் பள்ளிகளின் கட்டமைப்புகள் மேம்படாததால்தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறுவது உண்மையாகக்கூட இருக்கலாம். அதனால்தானே மாற்று ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்தத் தவறுகளைச் சீராக்க என்ன செய்யவேண்டும் என்று ஆய்வு செய்வதற்கு மாறாக, ஆசிரியர், மாணவியரை நேரடியாக இழிவுபடுத்திவிட்டு வந்ததை ஒரு பொருட்டாகவே கருதாமல் மறைக்க விரும்புகிறார்.

பள்ளியில் நடந்த ஏதோவொரு நிகழ்வில் கலந்துகொள்ள அமைச்சர் செல்லவில்லை. அந்தப் பள்ளியை மேம்படுத்தும் எண்ணத்தோடு மட்டுமே சென்றதாகக்கூட வைத்துக் கொள்ளலாம். இருந்தாலும், கட்டமைப்பு போன்ற பிற மேம்பாடுகளைச் சுட்டிக்காட்டியதுடன் அவர் நின்றிருக்கவேண்டும். சட்டமன்ற உறுப்பினர் என்ற அளவில், தனது எதிர்பார்ப்புகளையும் கருத்துக்களையும் பள்ளிக் கல்வி அமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் மடல் வாயிலாகத் தெரிவித்திருக்கலாம். ஆனால்,

வகுப்பறைக்குள் நுழைந்து மாணவியர் அனைவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தையே அவரது செயல்கள் வெளிப்படுத்துகின்றன. இதன் வழியாகத் தன்னுடைய பெருமைகளை நிலைநாட்டும் மன நிலையே மேலோங்கியிருந்தது புலனாகிறது.

அமைச்சர் ஒப்புதலுடன் எடுத்த காணொளி

காணொளியினைத் தனது குழுவினர் எடுக்கவில்லை என்றும், ஊடகத்தினர்தான் வெளியிட்டனர் என்றும் தற்போது அவர் விளக்கம் தருகிறார். காணொளியினை அவரே வெளியிட்டிருந்தும், எதிர்ப்புகள் எழும் வரை அத்தகையதொரு கருத்து அவரிடமிருந்து வரவில்லை.

தான் பங்கு பெற்றுள்ள ஆட்சியில் இருக்கும் ஒரு பள்ளியின் நிலையினை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர், பள்ளிக் கல்வித் துறையின் உயர் அலுவலர்களை அழைத்துச் சென்றதுகூட ஏற்றுக்கொள்ளக் கூடியதாகலாம். ஆனால், அங்கு ஊடகத்தினருக்கு என்ன வேலை என்றுதான் தெரியவில்லை.

கடந்த ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்காக மட்டுமே ஊடகத்தினர் அழைக்கப்பட்டனர் என்றும் கூற முடியாது. ஏனென்றால் இதையெல்லாம் தெரிந்துதான் ஆட்சி மாற்றமே நடைபெற்றுள்ளது. தான் செயல்படுகின்ற அமைச்சராக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாகவே இது தெரிகிறது.

இந்த முயற்சியில் அகவை முதிர்வு ஏற்படாத இளம்பருவத்தினரின் உரிமைகளும் மீறப்பட்டிருக்கின்றன என்பதை இன்னும் அந்த அமைச்சர் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

உயர் அலுவலர் ஏன் தடுக்கவில்லை?

செய்யும் தவறுகளுக்கு அறியாமை எப்போதும் மன்னிப்பை வழங்குவதில்லை.

அமைச்சர் கூறுவது போல ஊடகத்தினர்தான் இந்தக் காணொளியை எடுத்தனர் என்றால், பள்ளியில் ஒரு வகுப்பறையில் அமைச்சர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும்போது, அது காணொளியில் பதிவாகக் கூடாது என்று தடுத்து நிறுத்த அங்கிருந்த உயர் அலுவலர்களுக்கு ஏன் தெரியாமல் போனது என்பதும் ஒரு வினாவாக உள்ளது.

தனிப்பட்ட ஒரு பெண்ணையோ அல்லது மாணவியரையோ காணொளியில் படம் பிடித்துப் பொதுவெளியில் வெளியிடுவதற்கான உரிமை ஊடகத்தினருக்கும் இல்லை என்பது அமைச்சருக்குத்தான் தெரியாதென்றால், உயர் அலுவலர்களுக்கும் தெரியாமல் போய்விட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்.

அமைச்சரே ஆணையிட்டுக் காணொளி எடுப்பதை உறுதிப்படுத்தியதால், உயர் அலுவலர்கள் எதுவும் செய்ய முடியாமல் கைகட்டி, வாய் மூடி நின்றிருக்கலாம்.

பாலியல் குற்றச்சாட்டு மட்டுமல்லாது வேறு நிகழ்வுகளிலும் இழிவு ஏற்படுத்தும் வகையில் மகளிரின் முக அடையாளத்தினை வெளியிடக் கூடாது என்னும் விதிகள் உள்ளன. இதுவே இளம் பருவத்தினர் என்றால் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்த நிலையில், தலைமையாசிரியர், ஆசிரியர், பெற்றோர் அல்லது மாணவியர் ஒப்புதலின்றி காணொளி எடுத்ததும், இளம் மாணவியரின் முக அடையாளம் தெரிகின்ற வகையில் காணொளியினை வெளியிட்டதும் பெரும் குற்றச் செயலாகும்.

அத்துடன், மாணவியரின் செயல்பாட்டினை இழிவுபடுத்தும் வகையில் அந்தக் காணொளி அமைந்தது குற்றச்சாட்டினை மேலும் விரிவாக்குகிறது; வலுவாக்குகிறது.

குற்ற வழக்குப் பதியவேண்டும்

இந்த நிகழ்வுகள் குறித்துக் குழந்தைகள் காப்புத் தேசிய ஆணையத்துக்கு ஆய்வு நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் கடமைகள் முடிந்துவிட்டதாக எண்ணிக்கொண்டால், இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கும்.

உயர் கல்வி அமைச்சர் குத்தாட்டம் போட்டதுடன் நிற்காமல், மாணவியரின் உடல் பகுதிகளைத் தொட்டுத் தடவி ஆறுதல் கூறியதாக விளக்கம் தருகிறார். மற்றொரு அமைச்சர் பொதுவெளியில் மயக்க மாத்திரையினை உட்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆய்வு என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் அத்துமீறக்கூடாது என்றும் காணொளி எடுத்து வெளியிடக்கூடாது என்றும் முதலமைச்சர் அலுவலகம் அனைவருக்கும் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இத்தகைய காணொளிகள் தொடர்கின்றன. காணொளிகளால் ஆட்சியைப் பிடித்ததால் இவை தொடரட்டும் என்றுகூட ஆட்சியில் இருப்போர் நினைக்கலாம். அதனால்தான், கண்டும் காணாதது போல இத்தகைய போக்குகளுக்கு மறைமுகமாக ஒப்புதல் தரப்படுகின்றன. ஆனால் இவற்றுக்கு முடிவு காணவேண்டும்.

இதில் மாணவர், ஆசிரியர் அமைப்புகள் வேண்டிய அளவுக்கு ஏன் குரல் எழுப்பவில்லை எனத் தெரியவில்லை. பெருமளவில் போராட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகம், பொது இடம் என எதுவாக இருந்தாலும் அங்கு காணொளி எடுக்க, உரிய பொறுப்பாளர்களிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்பதுதான் சட்டம். இத்தகைய ஒப்புதல் பெறாமல் எடுக்கப்பட்ட காணொளிகள் தொடர்பாக ஏன் இது வரை வழக்குகள் எதுவும் தொடரப்படவில்லை என்பதற்குத் ‘தூய’ ஆட்சியினர்தாம் விளக்கம் தரவேண்டும்.

இந்நிகழ்வுகள் அனைத்தும் குறித்துக் காவல் துறையினர் தாமாகக் குற்ற வழக்குகளைப் பதிவு செய்யவேண்டும். இதில் அமைச்சர்கள் என்றாலும் விலக்குகள் இருக்க இயலாது.

பள்ளி நிகழ்வில், அமைச்சர் கீர்த்தனா மட்டுமின்றி, உடனிருந்த உயர் அலுவலர்களும் குற்ற வழக்கில் சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் உண்மைகள் தெளிவாகும்.

சட்டம் கொடுக்கின்ற தண்டத்தினை அவர்களுக்கு வழங்குவதுதான், அந்த மாணவிக்கு மட்டும் இல்லாமல், அவரையொத்த பிறருக்கும் கிடைக்கின்ற நீதியாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button