
கையெழுத்துப் பிரதியை மீள்கட்டமைப்புச் செய்து அச்சாக்கப் பிரதியை உருவாக்கியவர்: எஸ்.பாலச்சந்திரன்
நான் 4-7-1945 அன்று பிறந்தேன். எனது தந்தை S. ரங்கசாமி அவர்கள் ஒரு ஸ்டேன்ஸ் மில் தொழிலாளி; எனது தாயார் கன்னியம்மாள். நாங்கள் வசித்தது பூசாரிபாளையம் (மணியகாரன்பாளையம்) கிராமத்தில்.
எனது பள்ளிப் பருவம் 1952-இல் தொடங்கியது. 1951 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரையிலும் (மூன்றாம் வகுப்பு வரை) கணபதியில் உள்ள தொடக்கப் பள்ளியிலும், 1954 முதல் 1957 வரை மணியகாரன்பாளையம் ஆரம்பப் பள்ளியிலும் (ஐந்தாம் வகுப்பு வரை) பயின்றேன். அங்கே என்னுடன் பயின்றவர்கள் எம்.கே.ரங்கசாமி, எஸ். கோவிந்தசாமி, ஆர்.ராமசாமி, ஏ. ருக்குமணி, எம்.மீனாட்சி ஆகியோர். மணியகாரன்பாளையத்தில் அரசு தொடங்கிய தொடக்கப் பள்ளியில் நாங்கள்தான் முதல் மாணவர்கள். பொருளாதார நெருக்கடி மிகுந்த குடும்பச் சூழலால் ஐந்தாம் வகுப்போடு எனது பள்ளிப் படிப்பு முடிவுக்கு வந்தது.
5 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது என் தந்தையார் திடீரென இறந்து விட்டார். குடும்பத்தையும் நடத்திக் கொண்டு, என்னையும் எனது சகோதர சகோதரிகளையும் படிக்க வைக்க என் தாயாரால் முடியவில்லை. அப்போது என் தாயாரும் என் அக்காவும் பூ வியாபாரம் செய்து எங்களைக் காப்பாற்றினார்கள். சில நாட்களில் காலையில் ஏதாவது சாப்பிட்டால், பின்னர் மாலை 7 மணிக்கு மேல்தான் சாப்பாடு கிடைக்கும். அது அரிசிச் சோறாகவும் இருக்கலாம், சோளச் சோறாகவும் இருக்கலாம்.
பள்ளிப் படிப்பை முடித்த கையோடு வேலைக்குச் செல்ல வேண்டியதாயிற்று.
எனக்கு 11 வயது இருக்கும்போதே ஒரு விசைத்தறிப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தேன். பின்னர் 13 வயதில், சல்லடை தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றினேன்.
1962-ஆம் ஆண்டு, ஸ்டேன்ஸ் மில்லில் 3 மாதங்கள் வேலை பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் பின் அங்கு வேலை செய்து வந்தேன். அப்போது ஸ்டேன்ஸ் மில் மூடப்பட்டது. மறுபடியும் வேலை தேட வேண்டியிருந்தது. 1963 இல் லட்சுமி மில்லிலும், பின்னர் பயனியர் மில்லிலும் வேலைக்குச் சேர்ந்தேன்.
1964 ஆம் ஆண்டு என் அக்காவுக்குத் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லாமல் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். இறுதியாக, 1966 இல் D.P.F. மில்லில் தொழிலாளியாகப் பணியைத் தொடர்ந்தேன்.
தொழிலாளியாக இருந்தபோதே பொதுவுடைமைச் சிந்தனைகள் என் மனதில் வேரூன்றின. நான் முதலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் (CPI) என்னை இணைத்துக் கொண்டேன்.
1962 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் வந்தது. அது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். சூலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட K.N. சின்னையன் அவர்களுக்காகவும், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான மதன் அவர்களுக்காகவும் நான் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தேன். மணியகாரன்பாளையம் முதல் சூலூர் வரை சைக்கிள் மூலமாகவும், பல இடங்களுக்குக் கால்நடையாகவும் சென்று மக்களிடம் வாக்குச் சேகரித்தேன். 1963-இல் நான் அதிகாரப்பூர்வமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆனேன்.
1964-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. அந்தச் சமயத்தில் நான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தேன். 1963-இல் நான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக ஆவதற்கு மிகவும் உதவியாக இருந்த எனது சித்தப்பா நஞ்சப்பன் அவர்கள் கட்சி பிளவுபட்ட போது சி.பி.எம். கட்சிக்குச் சென்று விட்டார். கட்சியில் ஏற்பட்ட பிளவு எங்கள் குடும்பத்திலும் கருத்து வேற்றுமையும் சண்டையும் ஏற்படக் காரணமாயிற்று. ஆரம்பத்தில் நான் சற்றுத் தனிமைப்படுத்தப்பட்டேன். இருப்பினும், மனந்தளராமல் மணியகாரன்பாளையம் கிளையை உருவாக்கி வலுப்படுத்தினேன்.
கட்சி பிரியும்போது சி.பி.எம். அதிக பலம் கொண்டதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் M.R. நாராயணசாமி, A.P. ராமசாமி,, K. மாணிக்கம் மற்றும் S. நஞ்சப்பன் ஆகியோர் சி.பி.எம். இல் ஒரு வலுவான குழுவாக இருந்து செயல்பட்டார்கள்.
அரசியல் பணிகளோடு ஊர் முன்னேற்றத்திலும் நான் அக்கறை காட்டினேன். 1963-இல் எங்கள் மணியகாரன்பாளையம் தொடக்கப் பள்ளித் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் நகராட்சித் தலைவர் M. பழனிசாமி, பேரூர் யூனியன் சேர்மன் C. வெள்ளிங்கிரி, நகரப் பஞ்சாயத்துத் தலைவர் K. பழனியப்பன் ஆகிய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுடன், பஞ்சாயத்துத் துணைத் தலைவர் ராமநாத முதலியார், பேரூராட்சி உறுப்பினர்கள் A.காளியப்பன், கணபதி ஆகியோரையும் இணைத்துக் கொண்டு அந்த விழாவை முன்னெடுத்தோம்.
1963 ல் கட்சி பிளவுபட்ட பிறகு, இரண்டு தடவை நடந்த பஞ்சாயத்துத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இருப்பினும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 உறுப்பினர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும் இருந்தனர். இரண்டு தடவையும் காங்கிரஸ் வசம் பஞ்சாயத்து போய்விட்டது.
1963 ல் கட்சி ஒன்றாக இருந்தபோது சங்கரலிங்க நாடார் படிப்பகம் இருந்தது. அதிகம் பேர் இயக்கத்தில் ஈடுபபட்டனர். மதுரை மன்னன் சமாதி, மக்கள் தீர்ப்பு ஆகியவை உள்ளிட்ட மூன்று நாடகங்கள் நடத்தப்பட்டன. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பும் மரியாதையும் இருந்தது.
கட்சி உடைந்த பிறகு சி.பி.எம் இன் நடவடிக்கைகள் சி.பி.ஐ.க்கு எதிராகக் குறி வைத்து மேற்கொள்ளப்பட்டன. இந்தப் போக்கு மிகவும் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது. ஆயினும் கட்சிக்கு இந்தப் பிளவு மிகப் பெரிய இழப்பாக ஆனது. மோதல் போக்கின் விளைவாக இரண்டு கட்சிகளும் பலவீனம் அடைந்தன.
கக்கன்ஜி வீதியில் தனி மன்றம் அஜாய் கோஷ் நினைவாக அமைக்கப்பட்டது. V.ராமசாமி, மொட்டை போன்ற தோழர்கள் அதில் தீவிரமாகச் செயல்பட்டனர். மணியகாரன்பாளையம் கட்சியின் ஸ்தாபகர்கள் மொத்தம் 5 பேர் ஆவர். அவர்கள் பெயர் பின் வருமாறு: எஸ். சுப்பண கவுண்டர், எம்.சின்னப்பன், A.P. ராமசாமி, M.R. நாராயணசாமி, K ஆறுமுகம். இத் தோழர்கள் கட்சிக்கு மிகவும் பாடுபட்டவர்கள். 1961 ல் சங்கரலிங்கனார் படிப்பகம் நமது கட்சித் தோழர் சுப்பணகவுண்டர் இல்லத்தில் செயல்பட்டது. மேற்படி படிப்பகத் திறப்பு விழாவில் விருதுநகர் தோழர் பரிமேக் மாரியப்பா கலந்து கொண்டார். கட்சிப் பொதுக் கூட்டத்தில் மேட்டுப்பாளையம் கே. வெள்ளியங்கிரி கலந்து கொண்டார்.
எனது பள்ளிக்கூடப் பருவத்தில் கட்சியின் மீது ஆர்வம் ஏற்பட்டு, பல பொது கூட்டங்களில் கலந்து கொண்டு நான் தலைவர்களின் பேச்சைக் கேட்பது வழக்கம். 1960 ஆம் ஆண்டு வாக்கில் சோவியத் பிரதமர் புல்கானின், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் குருசேவ் ஆகியோர் கோவைக்கு வருகை புரிந்தபோது சிதம்பரம் பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.
1964 ல் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் நமது கட்சியின் சார்பில் நந்தவனத் தோட்டம் M K இராமசாமி M.Sc. அவர்களை வார்டு உறுப்பினருக்கான வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தோம். அவர் கட்சியின் மீது அளவு கடந்த பற்று வைத்திருந்தார். அவர் நாளடைவில் மாநிலத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். சென்னைக்குச் சென்று நமது கட்சியின் பத்திரிகையான ‘ஜனசக்தி’ யின் ஆசிரியர்களில் ஒருவராகப் பல ஆண்டுகள் செயல்பட்டார்.
அப்பொழுது ஜனசக்தியின் துணை ஆசிரியராக இருந்த திறமை வாய்ந்த பேச்சாளரான தா.பாண்டியன் அவர்கள் அடிக்கடி நமது ஊருக்கு வருவார். அப்போது அவரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அப்போதுதான் கட்சியின் மீது எனக்கு ஆழ்ந்த ஈடுபாடும் நம்பிக்கையும் ஏற்பட்டு, கட்சியில் நான் முன்னணியில் நின்று செயல்படத் தொடங்கினேன்.
1964 இல் கட்சி உடைந்த பிறகு, கட்சிக் கிளையில் சி.பி.எம். ஆதரவாளர்கள் அதிகம் பேர் இருந்ததால், அவர்கள் கட்சியியிலிருந்து நீக்கப்பட்டார்கள். மாவட்டக் குழுவின் வழிகாட்டுதலில் நாங்கள் பழைய கிளையைக் கலைத்து விட்டுப் புதிய கிளையை அமைத்தோம். அப்பொழுது நான் கிளைச் செயலாளராகப் பொறுப்பேற்றேன். கிளையில் சுப்பண கவுண்டர், M சின்னப்பன், K சின்னையன், N வேலப்பன், M ஆறுமுகம், A.P. வேலுசாமி போன்ற தோழர்கள் இருந்தார்கள்.
1968 ஆம் ஆண்டில் பூசாரிபாளையத்தில் ஜீவா நினைவுப் படிப்பகம் திறக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் நமது கட்சி தனித்துப் போட்டியிட்டது. தலைவர் பதவிக்கு நல்லதண்ணீர்த் தோட்டம் பழனிசாமியையும் வார்டுக்கு கோயில் தோட்டம் K. நடராஜனையும் போட்டியிட வைத்தோம். வார்டு தேர்தலில் நமது வேட்பாளர் வெற்றி பெற்றார். தலைவர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளர் தங்கம் G.V பழனிசாமி வெற்றி பெற்றார். அந்தத் தேர்தல் முடிவு தெரிந்த பிறகு வேட்பாளரை ஊர்வலமாக அழைத்து வரும்போது நமக்கு எதிராக மற்றவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு நம்மைத் தாக்கியதில், கலவரம் ஏற்பட்டு தி.மு.க.வைச் சேர்ந்த துரை என்பவக்கு அடிபட்டு சுய நினைவு இழந்தார். அத் தருணத்தில் நமது கட்சியை எதிர்க்கக் கூடியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாக்கினார்கள். எனவே, பாதுகாப்புக் கருதி, நமது தோழர்கள் அனைவரும் ஊரை விட்டுச் சென்று, மாவட்ட அலுவலகத்தில் தங்கினோம். நமது கட்சியின் எதிரிகளுக்கு என் மீதுதான் கடுங்கோபம் இருந்தது. ஆகவே நமது தோழர்கள் எனக்குப் பாதுகாப்பு அரணாக நின்றார்கள். சில நாட்கள் நான் தலைமறைவாக இருக்கவும் நேரிட்டது. அப்போது மாவட்டச் செயலாளர் தோழர் பி.கே.ராமசாமி, தோழர். ஆர்.ரங்கசாமி எம்.சி., ஓட்டல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலையிட்டு, சமரசத்தை ஏற்படுத்திய நிலையில், வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
1964 இல் எனது தாயார் திடீரென்று மறைந்தார். எங்கள் குடும்பத்துக்கு இது தாங்க முடியாத பெரிய இழப்பு. அதற்குப் பிறகுதான் எனது தம்பியின் திருமணம் தோழர் தா.பாண்டியன் அவர்களின் தலைமையில் வெள்ளக்கிணறில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
1980 ஆம் ஆண்டில் சி.பி.எம். கட்சியின் போக்கு பிடிக்காமல் அக்கட்சியின் கிளைகளிலிருந்து தோழர்கள் A.P. ராமசாமி, N. ஆறுமுகம், M.R. வெங்கடேஸ், A. வேலுச்சாமி ஆகிய தோழர்கள் நமது கட்சியில் இணைந்தார்கள். அதன் பின் கட்சிக்கு ஒரு வேகம் ஏற்பட்டது.
1967 தேர்தலில் நமது கட்சி தனியாகத் தேர்தலைச் சந்தித்தது. அதில் நாம் கோட்டூர், கோவில்பட்டி ஆகிய இரண்டு இடங்களில் வெற்றி பெற்றோம்
1971 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் நமது கட்சி கூட்டணி அமைத்ததால், தி.மு.க. வேட்பாளர் இரா. மாணிக்கவாசகம் அவர்களை ஆதரித்து வேலை செய்து வெற்றி பெறச் செய்தோம். இத் தேர்தலில் நமது கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தோல்வியடைந்தது.
1971 தேர்தலுக்கு முன்பு நமது பகுதியில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் வார்டு உறுப்பினர் உதவியுடன் கோயில் தோட்டம் கிணற்றிலிருந்து குழாய் அமைத்து, நமது கட்சியால் தனியாகக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் மத்தியில் இதற்குப் பெரும் வரவேற்பு இருந்தது. இதைப் பொறுக்க முடியாத சி.பி.எம். தோழர்கள் ஒரு பொதுக் கூட்டம் முடிந்தவுடன் ஊர்வலமாக வந்து, சில தி.மு.க.வினரோடு சேர்ந்து கொண்டு தோழர் என். ஆறுமுகம் அவர்களின் வீட்டிற்கும் என் வீட்டிற்கும் வந்து, தோழர் ஆறுமுகத்தையும் என்னையும் எனது தம்பி ஆர்.சுந்தரத்தையும் தாக்குவதற்கு முயற்சி செய்தார்கள்.
கதவு, நிலவு ஆகியவற்றை உடைத்து நொறுக்கினார்கள். சுவர்களில் மாட்டப்பட்டிருந்த தலைவர்களின் புகைப்படங்களை உடைத்தார்கள். தோழர்.என்.ஆறுமுகம் அவர்களின் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சட்டி, பானை போன்ற மண் பாத்திரங்களையும் அடித்து நொறுக்கினார்கள். அந்தச் சமயத்தில் அக்கம் பக்கம் இருந்தவர்கள் என் தம்பி சுந்தரத்தைப் பாதுகாத்தார்கள். என்னையும் வீட்டிக்குள் அடைத்து வைத்துப் பாதுகாத்தார்கள். தோழர் N ஆறுமுகம் அவர்களும் தாக்குதலிலிருந்து காப்பாற்றப்பட்டார். காவல்துறைக்குப் புகார் கொடுத்தும் (ஆளும் கட்சியான தி.மு.க.வுக்குச் சாதகமாக நடந்து கொண்டு) வழக்கு போடாமல் விட்டுவிட்டார்கள். முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆர். ரங்கசாமி அவர்கள் முயற்சி செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
1967 ஆம் ஆண்டு வரை நிரந்தர வேலை இல்லாமல் பல மில்களில் வேலை செய்தேன். அதன் பின், D.P.F மில்லில் வேலை கிடைத்தது தினக்கூலி ரூ.2 என்ற வீதப் படி வாரம் ஒருமுறை கூலி கொடுக்கப்பட்டது. அதுவரை நான் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றினேன். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தார் பொருட்காட்சியில் சில நாட்கள் கடை போட்ட போது, அங்கே சென்று பணியாற்றினேன் அப்போது கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகப் பொறுப்பாளராக P. நாராயணன் பணியாற்றி வந்தார். நான் தினசரி அங்கு சென்று விடுவேன். ஆகவே, அங்கு வரக்கூடிய தலைவர்களையும் தெரிந்து கொண்டேன். அப்பொழுது ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களும் ஒரே மாவட்டமாக இருந்தன. மாவட்டச் செயலாளராக P. K. ராமசாமி செயல்பட்டு வந்தார். முன்னாள் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. என்.கே.பழனிச்சாமி எனக்கு அறிமுகம் ஆனார். அப்பொழுது பேரூர்க் கட்சி அமைப்பு ஒரு வட்டாரக் கமிட்டியாக இருந்தது. S.M மருதாசலம் செயலாளராகவும், நான் பல வருடங்கள் துணைச்செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளிலும் செயல்பட்டோம்.
1971 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது. வையம்பாளையம் நாராயணசாமி நாயுடு தலைமையில் கோவை நகரத்தில் மாட்டு வண்டிப் போராட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற போராட்டமாக மாறியது. அப்போது நமது கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தோழர் எம்.கல்யாணசுந்தரம் அவர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்து வழிநடத்தினார். தமிழ்நாடு மாநில முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதியைக் கதிகலங்க வைத்த போராட்டம் அது.
சி.பி.எம். கட்சியோ அப்போது இந்தப் போராட்டத்தை, இது ஏர் ஓட்டும் போராட்டம் அல்ல, கார் ஓட்டும் போராட்டம் என்று கேலி செய்தது. அப்பொழுது தோழர் கே.பாலதண்டாயுதம் அவர்கள் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் இப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டார்.
நமது கட்சி அப்போது அனைத்து விவசாயிகளையும் ஒன்றுபடுத்தி, போராட்டத்தில் ஈடுபட வைத்தது. நமது ஊர் விவசாயிகளில் முக்கியமானவரான பெரியவர் பாப்பான் தோட்டம் கிருஷ்ணக் கவுண்டர் போன்றவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றார்கள்.
நமது கட்சித் தோழர்கள் எம்.ஆர்.வெங்கடேஸ், சின்னப்பன், எஸ்.சுப்பண கவுண்டர், ஏ.பி.ராமசாமி போன்றவர்கள் போராட்டத்தில் உறுதியாகவும் உறுதுணையாகவும் இருந்தார்கள்.
அய்யம்பாளையத்தில் அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது குண்டடிபட்டு நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போது கோவை மாநகரமே ஸ்தம்பித்து விட்டது. தி.முக.வினர் ஓடி ஒளிந்து கொண்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் தி.மு.க.வின் கொடிமரம், பெயர்ப் பலகை ஆகியவை உடைக்கப்பட்டன. நமது ஊரில் தி.மு.க.வைச் சேர்ந்த சில நபர்கள் நமது கட்சியின் கொடி மரத்தை வெட்டித் தள்ளினார்கள். பதிலடியாக, நமது கட்சித் தோழர்களும் தி.மு.க.வின் கொடி மரத்தைப் பிடுங்கியெறிந்தார்கள். அந்தத் தருணத்தில் நமது கட்சித் தோழர்கள் வீரத்துடன் செயல்பட்டார்கள். தோழர் எம்.ஆர். வெங்கடேஸ் வெளிப்படுத்திய வீரம் பாராட்டத்தக்கது.
போராட்டம் வெற்றி பெற்று, சிறையிலிருந்து வெளியே வந்த விவசாயிகளுக்கு ஒரு பாராட்டு விழா நமது ஊரில் நமது கட்சியின் சார்பிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் மணியகாரன்பாளையம் பேருந்து நிறுத்த மைதானத்தில் கிருஷ்ணக் கவுண்டர் தலைமையில் நடைபெற்றது. சிறையிலிருந்து மீண்ட விவசாயிகளைப் பாராட்டி, நமது தலைவர் தியாகச்சுடர் கே.பாலதண்டாயுதம் அவர்கள் உரையாற்றினார். இது நமது கிராமத்தில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சி.பி.எம். தோழர்கள் பொதுக் கூட்டத்தில் கலாட்டா செய்ய முயற்சித்தார்கள். இதனையும் கூட்டத்தில் திரண்டிருந்த நமது தோழர்கள் முறியடித்தார்கள்.
1970 ல் எனக்கும் நஞ்சுண்டாபுரத்திலுள்ள நாச்சம்மாளுக்கும் பேருரில் இருந்த ஒரு திருமண மண்டபத்தில் தோழர்கள் கே.டி.ராஜூ, பி.கே.ராமசாமி ஆகியோரின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து, 1971 இல் நடைபெற்ற தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தோழர் கே.பாலதண்டாயுதம் வெற்றி பெற்றார். நானும் நமது ஊரைச் சேர்ந்த பல தோழர்களும் கோவை மாநகரில் நமது கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பணிகளிலும் ஆதரவு திரட்டுவதிலும் ஈடுபட்டோம்.
1971 ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் தி.மு.க.வின் தொழிற்சங்கத்தைத் தவிர, பிற அனைத்துப் பஞ்சாலைத் தொழிற்சங்கங்களும் கூலி உயர்வு உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளுக்காக மாபெரும் போராட்டத்தை மேற்கொண்டன. தினசரி மறியல்கள் நடைபெற்றன. இந்த மறியல் போராட்டங்களில் நானும் வையாபுரியப்பன், எம்.ஆர்.வெங்கடேஸ் போன்ற தோழர்களும் சிறை புகுந்தோம். எங்கள் குழுவில் இருந்த ஸ்டேன்ஸ் மில் மைக்கேல் அற்புதசாமி, வெள்ளக்கிணறு சுந்தரம், கணபதி கார்த்திகேயா மில் தோழர் வடுகநாதன் ஆகியோரைச் சிறையில் ஒரே அறையில் அடைத்தார்கள். எட்டு நாட்களைச் சிறையில் கழித்தோம்.
திருமணமான மிகச் சில நாட்களிலேயே இப்போராட்டத்தில் நான் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றதில் என் மனைவிக்கு வருத்தம் இருந்தாலும், அதை நான் கண்டு கொள்ளவில்லை. நான் சிறையில் இருந்த போது என் தாயாரும் என் மனைவியும் தினசரி என்னையும் என்னோடு சேர்த்துச் சிறையில் அடைக்கப்பட்டவர்களையும் சிறையில் சந்தித்து மிகவும் வருத்தப்பட்டார்கள். நமது ஊரில் இருந்த பல பேரும் எங்களுக்குப் பழங்களையும் பல்வேறு தின்பண்டங்களையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். தமிழ்நாடு மாநில அரசே நேரடியாகத் தலையிட்டுப் பேசி முடித்ததால், போராட்டம் வெற்றி பெற்று, கூலி உயர்வும் கிடைத்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள். இப்போராட்டத்தின் மூலம் வேறு பல கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஓரிரு நாட்களில் நாங்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டோம்.
எங்கள் சிறை அனுபவம் அலாதியானது. சிறையறையில் கைதிகள் ஆறு பேரையும் மாலை 6 மணிக்கு உள்ளே விட்டுப் பூட்டி விடுவார்கள். பிறகு, அடுத்த நாள் காலை 7 மணிக்குத்தான் திறந்து விடுவார்கள். இரவில் மலஜலம் கழிப்பதற்கு இரண்டு மண் பானைகளைக் கொடுப்பார்கள். இதுதான் அப்போதைய நிலைமை. உணவைப் பொறுத்த வரையில், காலையில் சோளக் கஞ்சியையும் கோதுமைக் கஞ்சியையும் தருவார்கள். மதியம் சாப்பிடுவதற்கு சோளக் களியும் கேழ்வரகுக் களியும். இதற்கு எதிராகப் போராடிய எங்களுக்கு, கோவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தோழர் கே.பாலதண்டாயுதம் முன்னின்று வழி நடத்தினார்.
தோழர் கே.பாலதண்டாயுதம் அவர்கள் 1973 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாளன்று இரவில் புது டில்லிக்கு அருகே நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. இதை உறுதி செய்து மறுநாள் காலை 7 மணிக்கு தோழர் A.P. ராமசாமி இங்கு வந்து தெரிவித்த போது எனக்கும் நந்தவனத் தோட்டம் தோழர் எம்.கே.ராமசாமிக்கும் பேரிடி விழுந்தது போலானது. என் தகப்பனார் இறந்த போது கூட எனக்கு இந்த அளவுக்குத் துயரம் ஏற்பட்டதில்லை. துக்கம் அனுஷ்டிப்பதற்காக அனைத்துக் கட்சிகளும் கடையடைப்புச் செய்தபோது, அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் கூட சி.பி.எம். கலந்து கொள்ளவில்லை. பிற கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். நமது பகுதியில் இரங்கல் ஊர்வலம் பூசாரிபாளையம் ஜீவா திடலில் புறப்பட்டு மணியகாரன்பாளையம் பேருந்து நிலைய மைதானத்தில் வந்து முடிந்தது. அதன் பின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
1971 ஆம் ஆண்டில் என் தம்பி சுந்தரம் 10 ஆம் வகுப்பு வரை படித்து முடித்திருந்தார். அதற்கு மேல் படிப்பதற்கு நிலைமை இடம் தரவில்லை. சிறு வயதிலிருந்தே சுந்தரம் தொடர்ந்து ஜனசக்தி பத்திரிகையைப் படித்து வந்தார். நானும் நமது கட்சியின் அனைத்துக் கூட்டங்களுக்கும் அவரை அழைத்துச் செல்வது வழக்கம். அவருக்கும் கட்சியின் மேல் ஆர்வம் ஏற்பட்டு, கட்சியில் இணைந்து செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து குடும்பமே கட்சிக் குடும்பமாக மாறியது.
அந்த நாட்களில் நமது கட்சியின் தலைவர்கள் யார் நமது பகுதிக்கு வந்தாலும் அவர்களுக்கு அன்று இரவு உணவு எங்கள் வீட்டில்தான். என் தாயாரும் என் மனைவியும் தோழர்களை எந்தக் குறையுமின்றி நன்கு உபசரிப்பார்கள்.
நமது ஊர்ப் பொதுக் கூட்டங்களுக்கு வந்த தோழர்கள் கே.பாலதண்டாயுதம், கே.டி.ராஜு, வி.எஸ். காந்தி, மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி, சக்தி கோதண்டம், சரஸ்வதி சுப்பையா, தா.பாண்டியன் போன்ற, மாநில, மாவட்டத் தலைவர்கள் எங்கள் வீட்டிற்கும் வந்திருக்கிறார்கள். தோழர்கள் கே.சுப்பராயன் எம்.பி., பி.நாராயணன், எஸ்.கண்ணன், எஸ்.கருப்பசாமி, எஸ்.எம்.மருதாசலம் போன்றவர்கள் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
தோழர் கே.பாலதண்டாயுதம் அவர்களின் மறைவையொட்டி, கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அ.தி.மு.க.ஆதரவுடன் களமிறங்கிய நமது கட்சி, வழக்கறிஞர் எஸ்.எம்.மருதாசலம் அவர்களை வேட்பாளராக அறிவித்தது. திடீரென்று அவரும் மறைந்து விட்டார். அடுத்து தோழர் பார்வதி கிருஷ்ணன் அவர்களை நமது கட்சி வேட்பாளராக அறிவித்தது. சி.பி.எம். தனித்துப் போட்டியிட்டது. நமது கட்சியின் நம் ஊர்த் தோழர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் பணியாற்றினார்கள். நான் பேரூர் வட்டம் செல்வபுரம் பகுதி, முத்துநகர், தில்லைநகர் ஹவுசிங் யூனிட், புட்டுவிக்கி ஆகிய பகுதிகளில் பொறுப்பாக இருந்து பணியாற்றினேன். சுமார் 2500 வாக்குகள் வித்தியாசத்தில் தோழர் பார்வதி கிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
கட்சி பிளவுபட்ட பிறகு சி.பி.எம். மிற்குச் சென்ற சில தோழர்கள், 1973 க்குப் பிறகு, நமது ஊரில் சி.பி.எம். கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக, அதிலிருந்து வெளியேறி, நமது கட்சியில் மீண்டும் இணைந்தனர். இவர்களில் தோழர்கள் ஏ.பி.ராமசாமி, எம்.ஆர்.வெங்கடேஸ், எம்.ஆறுமுகம், ஏ.வேலுசாமி ஆகியோர் முக்கியமானவர்கள்.
1972 ஆம் ஆண்டு தோழர் எம்.கே.ராமசாமி அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர் 1975 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அது நமது கட்சிக்குப் பேரிழப்பாகும். நமது கட்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். அவரது மூத்த சகோதரரான தோழர் சுப்புக்குட்டியும் நம் கட்சிக்குப் பெரும் பணியாற்றினார். அவர் ஏ.ஐ.டி.யு.சி.யில் இணைந்து தொழிற்சங்கப் பணியாற்றினார். அவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அதுவும் நம் கட்சிக்குப் பெரும் இழப்பாகும்.
நமது ஊரில் லட்சுமி மில்ஸ் தோழர்கள் எம்.கே.வெங்கடேஸ், வி.பொன்னுசாமி, வையாபுரியப்பன், வெங்கடாசலம், எம்.சண்முகம், க.ராமசாமி, எம்.கருப்பசாமி, வேலப்பன் போன்ற தோழர்கள் நமக்கு ஆதரவாக இருந்தார்கள். இவர்களுக்குப் பின் எம்.சண்முகம் கட்சி உறுப்பினராகத் தொடக்கம் முதல் உறுதியாக இருந்து வருகிறார்.
நம் கட்சி பிளவுபட்ட போதிலும், நமது கிளையில் உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டவர்களில் சிவானந்தா மில் தொழிலாளி R.குப்புசாமி, ஓம் பராசக்தி மில் தொழிலாளி நஞ்சப்பன் ஆகியோர் உறுதியுடன் செயல்பட்டார்கள். 1981 வரையிலும் பூசாரிபாளையம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து, நமது ஊருக்குப் பொது நூலகம் வேண்டியும் வேறு பல பிரச்சினைகளை முன்வைத்தும் நமது கட்சி உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை நடத்தியது. எனினும் இதுவரை நம் ஊருக்குப் பொது நூலகம் வரவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட வேண்டியுள்ளது. கோயில் பெயரைச் சொல்லி, சில நபர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆள் பிடிக்கின்ற வேலையைச் செய்து வருகிறார்கள் என்பதும் வருந்தத்தக்கது.
நமது ஊரில் நம் கட்சி துடிப்புடன் செயல்பட்டு வந்த அந்த நாட்களில் எனது குடும்பம்- குறிப்பாக, நானும் என் தம்பி சுந்தரமும் சந்தித்த விளைவுகள் கடுமையானவை. எனக்குத் துணையாக என் தம்பி இருந்திருக்காவிட்டால், நமது கட்சிக்கு மிகப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்.
நமது கட்சியின் பேரூர் வட்டாரக்குழு கோவை மாநகரக் கமிட்டியுடன் இணைந்த போது நான் கோவை மாநகர வடக்குப் பகுதிச் செயலாளர் என்னும் பொறுப்பை ஏற்றுச் செயல்பட வேண்டியிருந்தது. அப்போது என் தம்பி சுந்தரம் 72 வது டிவிஷன் செயலாளராக இருந்து செயல்பட்டார். அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் போராடிப் பெறுவதற்காகவும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் முயற்சிகளை எடுத்து வந்தார். அவருக்குத் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளித்தும் கூட அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் 03.12.2012 அன்று மரணமடைந்தார். இது எங்கள் குடும்பத்துக்கும் கட்சிக்கும் மிகப் பெரும் இழப்பாகும். என் தம்பி ஆர்.சுந்தரம் மறைந்தாலும் அவரது மகன்களான எஸ்.பால தண்டாயுதம், எஸ்.பிரகாஷ் ஆகிய இருவரும் நமது கட்சியில் உறுப்பினர்களாக ஆனார்கள்.
அதே போன்று, தோழர் ஏ.வேலுச்சாமி அவர்களின் மறைவுக்குப் பின் அவரது மகன்களான சின்னச்சாமி, லட்சுமணன் ஆகிய இருவரும் நமது கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர்.
கல்யாணசுந்தரம், ஜீவானந்தம் ஆகிய என்னுடைய இரு மகன்களும் நமது கட்சியில் இணைந்து கட்சிப் பணியாற்றி வருகிறார்கள். 2010 ஆம் ஆண்டு, மூத்த மகனான கல்யாணசுந்தரம் கிளைச் செயலாளராத் தேர்வு செய்யப்பட்டார். இளைய மகனான ஜீவானந்தம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில் மாவட்ட அளவிலான பொறுப்புகளில் இருந்து வருகிறார்.
( தோழர் ஆர். நடராஜன் அவர்களின் கையெழுத்துப்பிரதி இந்த இடத்தில் முற்றுப் பெறாமலே நின்று விடுகிறது.)