
இன்றைய உலகமய அரசியலில் நவீன அறிவியல் ஊடகத் தொழில்நுட்பம் மிக முக்கிய பாத்திரம் வகிக்கிறது.
இது தொலைக்காட்சி ஊடகமாக ஆதிக்கம் செலுத்தி தற்போது சோசியல் மீடியாவாக செயலூக்கம் பெற்றுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கும் எதுவானாலும் அதன் பயன்பாடு முதலில் கார்ப்பரேட்டுகளையே சென்றடைகிறது. இது வெகு மக்களை சென்று அடைவதற்குள் அறிவியல் தொழில்நுட்பத்தின் அடுத்த கண்டுபிடிப்பு வந்துவிடுகிறது.
ஊடகத் தொழில்நுட்பமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
நவீன அறிவியல் ஊடகத் தொழில்நுட்பம் தேர்தல் முறையை புரட்டிப் போட்டுள்ளது. ஆக்கபூர்வமாக அல்ல.
குஞ்சு பொரிக்காத முட்டை.
விதைக்கு பயன்படாத விளைபொருள்.,
என்பது போன்று சாரமற்றதாக ஆக்கப்பட்டுள்ளது.
அரசியலின் பிரதான அம்சங்களான…
- சித்தாந்த அடிப்படை.
- வாழ்வின் அடிப்படை நெருக்கடி.
- அமைப்பு நிலையின் அவசியம்.
ஆகியவை திட்டமிட்டு மறைக்கப்பட்டு மாற்றி அமைத்து திசை திருப்பப்படுகிறது.
சித்தாந்த அடிப்படை:
சமுதாய நலன் என்ற நல்ல நோக்கில் அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படுகிறது.
ஆனால் இந்த நோக்கில் மட்டும் செயல்படுத்தப்படுவதில்லை.
கார்ப்பரேட் சமுதாயத்தில் உண்மைகளோடு போலிகளும் உருவாக்கப்பட்டு அதில் பொய்களும் பரப்பப்படுகின்றன.
நவீன சோசியல் மீடியா அரசியலில் சித்தாந்த அடிப்படை திட்டமிட்டு மறைக்கப்பட்டு மாற்றி அமைக்கப்படுகிறது.
சமுதாயத்தை எந்த அடிப்படையில் எத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பது சித்தாந்தத்தின் அடிப்படை.
சமூக வாழ்நிலையில் இருந்துதான் சமுதாய சிந்தனை உருவாகிறது என்பது பொருள் முதல்வாத சித்தாந்தம் ஆகும்.
இதற்கு நேர் எதிராக சமூக சிந்தனையில் இருந்துதான் சமூக வாழ்நிலை உருவாகிறது என்பது கருத்து முதல்வாத சித்தாந்தம்.
இந்த இரண்டு அடிப்படை கண்ணோட்டங்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான கண்ணோட்டங்கள் ஆகும்.
காட்சி ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் – கார்ப்பரேட்டர்களுக்கு ஆதரவாக ‘பிம்ப நிலை’ மூலம் கருத்து முதல்வாத சித்தாந்தம் பரப்புகிறது.
பிம்ப நிலை அரசியல்
வாழ்வியலின் அரசியல் சினிமா திரையில் பிரதிபலிக்கும். சினிமாவில் தோன்றுவதெல்லாம் வாழ்நிலையில் பிரதிபலித்து விடாது.
சினிமா என்பது ஒரு ‘பிம்பநிலை’ அது ‘நிஜ வாழ்நிலை’ அல்ல.
வாழ்நிலையில் சினிமாவின் பிரதிபலிப்பு என்று காட்ட முன் வந்தால் அது ஏற்கனவே வாழ் நிலையில் இருந்து சினிமாவில் பிரதிபலித்து அது மீண்டும் வாழ்நிலையின் மறுபிரதிபலிப்பாகவே இருக்கும்.
சினிமாவின் பிம்ப நிலையை நிஜ வாழ்வின் அரசியல் நிலையாக காட்டும் முயற்சி கார்ப்பரேட்டுகளால் கட்டமைக்கப்படுகிறது.
இது இப்போது புதிதாக வந்த மாடல் அல்ல, எம்ஜிஆர் என்ற திரை பிம்ப கதாநாயகன் மாடல்.
சொந்தக் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட யாரும் எளிதில் அணுக முடியாத ஜெயலலிதாவின் அதிகார மாடல்.
ஏழை மக்களுக்காக குரல் கொடுத்து போராடும் கதாநாயகப் பிம்ப நிலை மக்களின் சினிமா உளவியல் மூலம் உருவாக்கப்படும் வாக்கு வங்கி மற்றும் ஒற்றைத் தலைமை மாடல்.
இது இப்போது விஜய் மூலம் மீண்டும் மீள்உருவாக்கம் செய்யப்படுகிறது.
வாழ்வியல் நெருக்கடி!
சமுதாய வாழ்வில் மக்களுக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் உருவாகின்றன.
வாழ்வியலின் அனைத்து நெருக்கடிகளுக்கும் அடிப்படை என்பது பொருளாதார நெருக்கடிதான். அடுத்து சமூக நெருக்கடி, பண்பாட்டு நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றை கூறலாம்.
இந்த நெருக்கடிகள் ஆளும் அரசுகள் தொடர்ந்து கடைபிடித்து வரும் முதலாளித்துவ உழைப்புச் சுரண்டல் கொள்கையால் உருவாகிறது.
இந்த வாழ்வியல் நெருக்கடிகள் வளர்ந்து, முரண்பாடு முற்றி, மக்கள் போராட்டக் களமாக மாறுகிறது. இதன் தொடர்ச்சியாக மக்கள் அமைப்பு ரீதியாக திரளுகிறார்கள். பின்பு தவிர்க்க முடியாமல் அரசியல் நெருக்கடியாக மாறுகிறது.
இத்தகைய அரசியல் போக்கை யாரும் தடுக்க முடியாது. ஆயினும் நவீன ஊடகத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வியல் நெருக்கடியால் உருவாகும் அரசியல் நெருக்கடியை மாற்றி அமைக்கும் முயற்சி திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகிறது.
வாழ்க்கை நெருக்கடியில் இருக்கும் வெகுமக்களின் அடிப்படைத் தேவைகள், எண்ணங்கள், விருப்பங்கள், மன ஓட்டங்கள் குறித்து பல்வேறு தரவுகள் நவீன ஊடக தொழில்நுட்ப கருவிகள் மூலம் சேகரிக்கப்படுகின்றன.
இவைகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
1. நேரடி பொருளாதார நெருக்கடி.
2. இதன் தொடர்பான மற்ற நெருக்கடிகள்.
இதில் வெகு மக்களிடம் பொருளாதார நெருக்கடி முரண்பாடாக முற்றி அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அது ஆளும் கட்சிக்கு எதிரானதாக திரும்பும். இதை அறிந்து கொண்டு கார்ப்பரேட்டுகள் தனது குதிரை சவாரியை அடுத்த கட்சிக்கு மாற்றிக்கொள்ளப் பயன்படுத்துவார்கள்.
மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளை மூடி மறைத்து விட்டு மக்களின் உணர்வுகள் விருப்பங்கள் எதிர்பார்ப்புகள் சேகரிக்கப்படுகிறது.
இவைகள் தொகுக்கப்பட்டு பொதுமைப்படுத்தப்பட்ட பிரச்சனைகள் பிரதானப்படுத்தப்படுகிறது. இவை கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகிறது.
இதன் மீது வாக்காளர்கள் அணி திரட்டப்படுகிறார்கள்..
சிந்தனை குறுக்குதல்
சிந்தனை என்பது ஆய்ந்து அறிவதற்குத்தான். எவ்வளவு ஆழமாக, விரிவாக சிந்திக்கும்போதுதான் சரியான அறிதல், புரிதல் மற்றும் சிந்தனை வளர்ச்சி ஏற்படும்.
வெகுமக்களை அதிகம் சிந்திக்க விடலாமா? கூடவே கூடாது என்பதுதான் கார்ப்பரேட் நிலை.
சிந்தனை விரிவாக்கத்தை தடுக்கும் வகையில் சிந்தனையை குறுக்கும் உத்தியும் கார்ப்பரேட்டுகள் கையாளுகிறார்கள். அதில் ஒருமுறைதான் அல்காரிதம்’.
அல்காரிதம் என்பது ஒரு வகையான டிஜிட்டல் மேலாண்மை என்பதாகும். இது இணையதளத்தில் ஆதிக்கம் செலுத்தும் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளால் திட்டமிட்டு உருவாக்கி செயல்படுத்தப்படுகின்றன.
என்ன தேவை? எத்தகைய கருத்து ஒருவருக்கு பிடிக்கிறதோ அதை ஒட்டிய கருத்துப் பதிவுகளை முன்னிலைப்படுத்தி தொடர்ச்சியாக காட்டுவது இதன் முக்கிய பணியாகும்.
இதன் மூலம் எதிர் கருத்து. மாற்று கருத்து போன்றவை காட்டுவது தவிர்க்கப்படும், இந்த சதியின் சூட்சமம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அமைப்பு நிலை:
அரசியல், அமைப்பு நிலை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றதாகும்.
ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க முடியாது, பிரித்துப் பார்க்கக் கூடாது.
உற்பத்தி முறை, உற்பத்தி சுரண்டல், பொருளாதார நெருக்கடி, சித்தாந்தம்- அரசியல்- கொள்கை- அணிச் சேர்க்கை ஆகியவற்றின் முக்கியத்துவங்கள் தேவையற்றதாக ஆக்கப்படுகிறது.
அரசியலில் சாதிக்க வேண்டிய அனைத்தும் அமைப்புகள் மூலமே சாதிக்க முடியும். இப்படிப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பு நிலை என்பதையே இன்றைய நவீன அரசியல் தகர்க்க முயற்சி செய்கிறது.
இதற்கு மாற்றாக புதிய புதிய தேர்தல் உத்தி வகுப்பாளர்கள் முளைக்கிறார்கள்.
இதில் இந்தியாவில் முதன் முதலில் வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் என்பவர் தானே கட்சி அமைத்து படுதோல்வி அடைந்து மண்ணை கவ்விய வரலாறு மிக முக்கியம்.
தேர்தல் உத்தியாளர்கள்
எந்தக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டாலும், அவர்கள் கார்ப்பரேட் பாணியை பின்பற்றுவர்களாகவே இருப்பார்கள். கார்ப்பரேட் நலன்களுக்காகவே செயல்படுவார்கள்.
அரசியல் அடிப்படைகளை, அமைப்பு நிலைகளை தவிர்த்து விட்டு, வாக்காளர்களை ஒருவித மயக்கத்தில் வைத்திருக்க கார்ப்பரேட் அரசியல் துடிக்கிறது.
எனவே, இந்த புதிய வகை அரசியலை ‘அனஸ்தீசியா அரசியல்’ என்று கூறலாம்.
மருத்துவ அறுவை சிகிச்சையில் தேவைக்கேற்ற அளவில் மட்டுமே இயல்புநிலை திரும்பும் வகையில் அனஸ்தீசியா கொடுக்கப்படும். இன்றைய நவீன அரசியலில்….?