கட்டுரைகள்

₹100 முத்திரைத்தாளால் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க முடியுமா? ஆத்தூரில் அம்பலமான ஒப்பந்தத் தொழிலாளர் சுரண்டல்

ம.இராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டின் மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் இலட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் நீண்டகாலமாக மீறப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றன.

குறைந்தபட்ச ஊதியம், மாறுபடும் அகவிலைப்படி (Variable DA), வருங்கால வைப்புநிதி (EPF), இஎஸ்ஐ, போனஸ், ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, தேசிய மற்றும் விடுமுறை ஊதியம் உட்பட பல்வேறு உரிமைகள் நடைமுறையில் மறுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆவணங்களில் பதிவாகாமல் ஒப்பந்த முறையின் மறைவில் தொடர்கின்றது.

ஆனால், ஆத்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஒரு தூய்மைப் பணியாளரிடம் ₹100 முத்திரைத்தாளில், “சட்டப்படி கிடைக்கக்கூடிய சில உரிமைகளை எதிர்காலத்தில் கேட்க மாட்டேன்” என்று உறுதிமொழி எழுதிவாங்கப்பட்ட சம்பவம், நீண்டகாலமாக மறைக்கப்பட்டிருந்த இந்தச் சுரண்டலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

ஆத்தூரில்தான் இந்த அத்துமீறல் நடந்துள்ளது. மற்ற இடங்களில் அது முத்திரைத்தாளில் எழுதி வாங்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நடைமுறையில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றால், வேறுபாடு வடிவத்தில் மட்டுமே உள்ளது; உள்ளடக்கத்தில் இல்லை. எனவே, இது ஒரு ஒப்பந்ததாரரின் தவறோ, ஒரு நகராட்சியின் பிரச்சினையோ அல்ல. தமிழகம் முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையில் ஆழமாக வேரூன்றியுள்ள கட்டமைப்பு ரீதியான சுரண்டலின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டும்.

முத்திரைத்தாள் சட்டங்களை மாற்ற முடியாது

இந்தியாவில் தொழிலாளர் நலச் சட்டங்கள் சமூக நீதி அடிப்படையில் இயற்றப்பட்டவை. தொழிலாளரின் வறுமையையும், வேலை இழப்பின் அச்சத்தையும் பயன்படுத்தி, சட்டம் வழங்கிய உரிமைகளை கைவிடுவதாக தொழிலாளர்களிடம் எழுதி வாங்குவது சட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானது.

இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act, 1872) பிரிவு 23ன் படி, சட்டத்திற்கு முரணான அல்லது பொதுக் கொள்கைக்கு எதிரான ஒப்பந்தங்கள் செல்லாது. எனவே, “வருங்கால வைப்புநிதி (PF) வேண்டாம்”, “இஎஸ்ஐ வேண்டாம்”, “மாறுபட்ட அகவிலைப்படி கேட்க மாட்டேன்”, “சம ஊதியம் கோரமாட்டேன்” என தொழிலாளர்களிடம் எழுதி வாங்கும் எந்த உறுதிமொழியும் அவர்களின் சட்டப்பூர்வ உரிமைக்கு ஈடாக முடியாது. அதனைக் காட்டி உரிமையைப் பறிக்கவும் முடியாது.

ஒப்பந்ததாரர் மட்டும் அல்ல; முதன்மை வேலையளிப்பவருக்கும் பொறுப்பு உண்டு

ஒப்பந்தத் தொழிலாளரை வேலைக்கு அமர்த்துவது ஒப்பந்ததாரராக இருந்தாலும், அதனால் முதன்மை வேலையளிப்பவரின் (Principal Employer) சட்டப்பூர்வப் பொறுப்பு முடிவடைவதில்லை.

ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம், 1970-ன் அடிப்படைக் கொள்கைகளும், தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் நலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பை முதன்மை வேலையளிப்பவர்மீதும் சுமத்துகின்றன.

எனவே, “இது ஒப்பந்ததாரரின் பொறுப்பு” என்று கூறி அரசு நிறுவனங்களோ, உள்ளாட்சி அமைப்புகளோ தங்கள் பொறுப்பிலிருந்து விலக முடியாது. ஒப்பந்ததாரர் சட்டத்தை மீறினால், அதைத் தடுக்கத் தவறிய முதன்மை வேலையளிப்பவரும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டியவரே.

குறைந்தபட்ச ஊதியம், VDA மற்றும் சம வேலைக்கு சம ஊதியம்

Code on Wages, 2019-ன் கீழ் அறிவிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தில் கூட VDA என்பது பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். வாழ்க்கைச் செலவின் உயர்வை ஈடுகட்ட வழங்கப்படும் இந்தத் தொகையை மறுப்பது, குறைந்தபட்ச ஊதியத்தையே கூட மறுப்பதாகும்.

இந்திய அரசியலமைப்பின் Article 39(d) “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கொள்கையை வலியுறுத்துகிறது. இதனை State of Punjab vs Jagjit Singh (2016) வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. நிரந்தர ஊழியர் செய்யும் அதே பணியை, அதே பொறுப்புடன், அதே திறனுடன் ஒப்பந்த அல்லது தற்காலிகத் தொழிலாளரும் செய்தால், அவருக்கும் சமமான ஊதியம் பொருந்தும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதேபோல், ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் சங்கபம் (People’s Union for Democratic Rights vs Union of India -1982) வழக்கில், குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காமல் தொழிலாளரிடம் வேலை வாங்குவது, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 23ல்

தடை செய்யப்பட்டுள்ள கட்டாயத் தொழிலின் ஒரு வடிவமாகக் கருதப்படலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சமூகப் பாதுகாப்பு உரிமைகள் பறிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் – 1952 (Employees’ Provident Funds and Miscellaneous Provisions Act, 1952), தொழிலாளர் அரசுக் காப்பீட்டுச் சட்டம் -1948 (Employees’ State Insurance Act) ஆகியவை தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்கள் ஆகும்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்களுக்கு வருங்கால வைப்புநிதி, இஎஸ்ஐ கட்டுவதற்கான நிர்வாகப் பங்களிப்புத் தொகையையும் ஒப்பந்ததார்களுக்கு வழங்கி விடுகின்றன. ஆனால், நடைமுறையில் தொழிலாளர்களை இஎஸ்ஐ மற்றும் பிஎஃப்பில் பதிவு செய்யாமல் வேலை வாங்குவது, வேறு பெயரில் பதிவு செய்வது, உண்மையான ஊதியத்தை மறைத்து குறைவான தொகை செலுத்துவது, தொழிலாளரின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்தாமல் மோசடி செய்வது போன்ற முறைகேடுகள் பரவலாக நடைபெறுகின்றன.

இவை வெறும் நிர்வாகப் பிழைகள் அல்ல; தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு உரிமையைப் பறிக்கும் கடுமையான சட்ட மீறல்கள் ஆகும்.

விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

ஆத்தூரில் வெளிப்பட்ட முத்திரைத்தாள் ஒரு ஆதாரம் மட்டுமே. இந்த விவகாரத்தை ஒரு நகராட்சி அல்லது ஒரு ஒப்பந்ததாரருடன் மட்டும் சுருக்கிவிட முடியாது. தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளர் அமைப்பில் நடைபெறும் சட்ட மீறல்களை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.

இந்தக் குழுவில் தொழிலாளர் நலச் சட்டங்களில் தேர்ச்சி பெற்ற மூத்த சட்ட வல்லுநர், குறைந்தபட்ச ஊதிய அமலாக்கத்தின் மாநில அளவிலான மூத்த அலுவலர், தொழிலாளர் நலத் துறையின் மூத்த அதிகாரி, EPFO மற்றும் ESIC-யின் மூத்த பிரதிநிதிகள், மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், தொழிலாளர் பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையில் அனுபவம் பெற்ற வெளி நிபுணர்கள் இடம்பெற வேண்டும்.

இந்தக் குழுவிற்கு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் என அரசின் ஒப்பந்தப் பணிகள் நடைபெறும் அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிநிலைகளை ஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

சட்ட மீறல்களுக்கு கடுமையான நடவடிக்கை அவசியம்

விசாரணையில் சட்ட மீறல்கள் உறுதியானால், குறைந்தபட்ச ஊதிய நிலுவை, அகவிலைப்படி, பிஎஃப், இஎஸ்ஐ உட்பட அனைத்து நிலுவைத் தொகைகளும் வட்டியுடன் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்கால அரசு ஒப்பந்தங்களில் பங்கேற்க முடியாத வகையில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். அதேபோல், கண்காணிப்புப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய அல்லது சட்ட மீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஆத்தூர் நகராட்சியில் வெளிச்சத்துக்கு வந்துள்ள ₹100 முத்திரைத்தாள், ஒரு ஒப்பந்ததாரரின் செயலுக்கான சான்று மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளர் அமைப்பில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் உரிமை மறுப்பின் எழுத்துப்பூர்வமான அடையாளமாக மாறியுள்ளது.

₹100 முத்திரைத்தாள் தொழிலாளர் சட்டங்களை விட உயர்ந்ததல்ல. அதில் தொழிலாளி கையெழுத்திட்டதைவிட இந்திய அரசியலமைப்பின் சமூகநீதிக் கொள்கையே உயர்ந்தது.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது ஒரு சட்டக் கடமை மட்டுமல்ல; அது இந்திய அரசியலமைப்பு வலியுறுத்தும் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டிய அரசின் தவிர்க்க முடியாத பொறுப்பாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button