அறிக்கைகள்

டெல்லியில் காவல்துறை வன்முறை வெறியாட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்  

டெல்லியில் மாணவர், இளைஞர் அமைப்புகளின் தோழர்கள் மீது காவல்துறையினர் நடத்திய வன்முறையையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ஆனி ராஜா கைது செய்யப்பட்டதையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனப் போராட்டம் நடத்துவதற்காக, டெல்லி கன்னாட் பிளேசில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி அமைதியான முறையில் பேரணியாகச் சென்றவர்கள் மீது டெல்லி காவல்துறையினர் கடுமையான தாக்குதலை நடத்திக் கைது செய்துள்ளனர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் (AIYF) பொதுச்செயலாளர் சுக்ஜிந்தர் மகேசரி, தலைவர் ரௌஷன் குமார் சின்ஹா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (AISF) பொதுச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் உள்ளிட்டோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.  AISF, AIYF, SFI, DYFI ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுகளை அறிந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, தேசியச் செயலாளர்கள் பி. சந்தோஷ் குமார் எம்.பி., கே. பிரகாஷ் பாபு, ஆனி ராஜா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, டெல்லி காவல்துறையின் அத்துமீறலைக் கடுமையாகக் கண்டித்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் காவல்துறை தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்துப் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, “டெல்லியில் இதுபோன்ற ஒடுக்குமுறை சம்பவங்களை இதுவரை நான் பார்த்ததில்லை” என்று தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் (முதல் தகவல் அறிக்கை – FIR) திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசியச் செயலாளர் பி. சந்தோஷ் குமார் எம்.பி., கூறும்போது, “தினந்தோறும் நடைபெறும் கைதுகள், தடுப்புக்காவல்களால் எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. எங்கள் போராட்டம் தொடரும். போராட்டம் நடத்துவதற்கென ஓர் இடத்தை ஒதுக்கித் தராவிட்டால், ஒட்டுமொத்த நகரத்தையும் பல ஜந்தர் மந்தர்களாக மாற்றுவோம்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட தோழர்களைச் சந்திப்பதற்காகச் சென்ற தேசியச் செயலாளர் ஆனி ராஜாவை காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தி காவலில் வைத்தனர். யாரையும் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை.  காவல்துறையின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு மருத்துவ உதவியும் கொடுக்கவில்லை. போராட்டத்தில் பங்கெடுத்த பெண்களிடம் காவல்துறையினர் நடந்துகொண்ட விதத்திற்கு கண்டனம் தெரிவித்த ஆனி ராஜா, “பெண் போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் நடந்துகொள்ளும் விதம் கொடூரமானது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறினார்.

ஜனநாயக உரிமைகள் மீதும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான அரசியலமைப்புச் சட்ட உரிமை மீதும் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. காவல்துறையின் வன்முறை, தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க அனுமதி மறுப்பது, மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கான அணுகலைத் தடுப்பது ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாதவை.

கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்; டெல்லி காவல்துறையின் அத்துமீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அச்சுறுத்தலாலும் மூர்க்கமான அடக்குமுறையாலும் ஜனநாயகக் குரல்களை ஒடுக்க முடியாது. அமைதி வழியில் போராட்டம் நடத்த, அரசியலமைப்பு வழங்கியிருக்கும் அடிப்படை ஜனநாயக உரிமையை நசுக்க முடியாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button