
அய்ந்து ஆண்டுகளைத் தொடும் ரசிய – உக்ரைன் போரினைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்திய ஒன்றியம் மூன்று நிலையிலான திட்டத்தினை முன்மொழிந்துள்ளது.
அமெரிக்கா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் இத்தகைய போர் நிறுத்தத்துக்கான திட்டங்களைக் கொடுத்திருந்தாலும், இந்திய ஒன்றியம் வழங்கியிருப்பது வரவேற்புப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் தலைவர் செலன்ஸ்கி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் இந்திய ஒன்றியத்தின் முன் முயற்சி குறித்து ஆய்வு செய்துவருவதாக வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.
மோடியின் ஆர்வத்தையும் எண்ணத்தையும் பெருமைப்படுத்தி ரசியத் தலைவர் புதின் பேசியிருந்தாலும், அந்நாட்டின் நிலையினை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
மூன்று கூறுகள்
1. பகை நாட்டின் ஆற்றல் உள்ளிட்ட எண்ணெய் வளம் மற்றும் கட்டமைப்புகளைத் தாக்குவதை ரசியா, உக்ரைன் நாடுகள் நிறுத்தவேண்டும்.
2. கருங்கடல் துறைமுகங்களின் வழியே உணவுப் பொருள்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட ஆற்றல் வளங்கள் தடையின்றிச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
3. மாலுமிகளின் உயிரினை உறுதி செய்வதற்கு ஏதுவாக வணிகக் கப்பல்களைத் தாக்குவதை நிறுத்தவேண்டும்.
ஆகியன தோற்றத்துக்குச் சிறப்பான முன்மொழிவுகளாகத் தெரிந்தாலும், இதில் பல சிக்கல்கள் அல்லது இடைவெளிகள் இருக்கின்றன என்பதையும் காணவேண்டும்.
இந்தத் திட்டங்கள் இரு நாட்டு எல்லைகளில் நடைபெறும் படைகளின் மோதலை நிறுத்துவதற்கான பரிந்துரைகளைக் கொண்டிருக்கவில்லை. அத்துடன், எண்ணெய் வளங்கள் உள்ளிட்ட ஆற்றல் தொடர்பான அழிவுகள் அல்லாத பிற தாக்குதல்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
இரு நாடுகளின் எதிர்பார்ப்புகள்
இரு நாடுகளுக்கும் அடிப்படையாக உள்ள சிக்கல்களை முதலில் களையவேண்டும் என்னும் ரசியத் தலைவர் புதின் எதிர்பார்ப்புகளை இவை உள்ளடக்கியிருக்கவில்லை.
அதேபோன்று, உக்ரைன் நாட்டின் 80% நிலப்பகுதிகளைக் கைப்பற்றி ரசியாவின் மாநிலங்களாக இணைத்துக்கொண்டிருப்பதை ஏற்காமல், இந்தப் பகுதியிலிருந்து ரசிய வீரர்கள் வெளியேறவேண்டும் எனக் கூறும் உக்ரைன் தலைவரது விருப்பத்தையும் நிறைவேற்றத் தக்கதாக இல்லை.
ரசிய மொழி பேசும் இன மக்களைக் காப்பாற்றும் வகையில் ரசியா நடத்தும் போருக்குச் செல்வத்தினை அள்ளித்தரும் எண்ணெய் வளங்களை அழித்து, அதன் வணிகத்தையே முற்றிலுமாக நிறுத்துவதால் போரில் வெற்றிகொள்ள முடியும் எனக் கருதும் உக்ரைன் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்றதாகவும் இல்லை.
உக்ரைன் நாட்டின் கட்டமைப்புகளை அழித்து மக்கள் வாழ்வை முடக்குவதன் வழியாக உக்ரைன் நாட்டை வழிக்குக் கொண்டுவர முடியும் என்னும் புதினது நம்பிக்கையையும் இவை உள்ளடக்கியிருக்கவில்லை.
இந்திய ஒன்றியத்தின் நிலை
இந்தியாவுக்குத் தற்போதைய நிலையில் பல பொருளிய, அரசியல் சிக்கல்கள் இருக்கின்றன.
பல நாடுகளிலிருந்து தூய்மைப்படுத்தாத எண்ணெய் வாங்கப்பட்டாலும், ரசியாவிலிருந்து இந்தியா வாங்குவது மிகுதி. அத்துடன் விலையும் குறைவு. தற்போது ஈரான் ஏற்படுத்திய தடைகளால் ஓர்முசு நீரிணைவு வழியாகக் கப்பல்கள் எளிதாகக் கடக்கும் நிலை இல்லாததால், ரசியாவிலிருந்து மிகு அளவில் எண்ணெய் பெறவேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.
அடுத்து, ரசியாவிடம் வணிக உறவு கொண்டுள்ள நாடுகளுக்கு 100% கூடுதல் வரி பெறப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கான கெடு 2026 திசம்பர் இடையில் முடிகிறது.
ஈரான் – அமெரிக்கப் போரினை முடித்து வைப்பதற்காகப் பாக்கித்தான் முயற்சியெடுத்து, அந்நாட்டில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடைபெற்றன. இந்திய ஒன்றிய அரசு தனிமைப்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள்கூட எழுந்தன.
உலக நாடுகளிடையே தன்னுடைய இருப்பையும் செல்வாக்கையும் பெருமையையும் புகழையும் நிலைநிறுத்திக் கொள்ளவேண்டியதொரு தேடலில் இந்தியா இருந்தது.
வெற்றி காணாத முன்முயற்சிகள்
போர் நிறுத்தம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா எடுத்த பலகட்ட முயற்சிகள் எத்தகைய பயனையும் தரவில்லை. தற்போது அய்ரோப்பிய நாடுகளின் ஏற்பினைப் பெறுவதைவிட ரசியாவின் பொருளிய உறவுகளை மேம்படுத்துவதே அமெரிக்காவிற்கு நல்லது என்னும் முடிவில் டிரம்ப் இருந்தாலும். அய்ரோப்பிய நாடுகளின் அழுத்தத்தை அவரால் புறக்கணிக்க முடியவில்லை.
குறைவான போர் வீரர்கள், புதிய வீரர்களைப் படையில் சேர்க்க இயலாமை, படைக்கருவிகளின் பற்றாக்குறை, வெளிநாடுகள் தரும் கருவிகளின் போதாமை, உயர்நுட்பக் கருவிகள் இல்லாமை, பொருளிய நெருக்கடி ஆகியவற்றுடன், நாட்டின் மின்னிணைப்பு, போக்குவரவு, தொடர்பு போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள அழிவுகள் ஆகியவற்றால் ஏதோவொரு வகையில் போர் நிறுத்தத்தை உக்ரைன் தலைவர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். சற்று இடைவெளி கிடைத்தால், அதைப் பயன்படுத்திக்கொண்டு காப்பு முயற்சிகளை மேம்படுத்திக்கொள்ள முடியும் என அவர் நம்புகிறார். ஆளில்லா வானூர்தி நுட்பத்தினால் மட்டுமே தன் நாட்டைக் காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை தற்போது தளர்ந்துவிட்டது.
ரசியாவின் வலிமை
முதல் கட்டமாக ஈரானிலிருந்து ஆளில்லா வானூர்திகளை வாங்கிய ரசியா, அடுத்த சில திங்கள்களில் தனது திறனை மேம்படுத்திக் கொண்டது. அறிவியல் நுட்ப ஆற்றல், உற்பத்தித் திறன், பொருளிய வளம் ஆகியன ரசியாவுக்குப் பெரிதும் துணையாயின. ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு தாக்குதல்களை விரிவுபடுத்திய ரசியா, புதிய நுட்பங்களைப் புகுத்தி, உக்ரைன் வானில் அதனை அழிக்க முடியாத அளவிற்கு வலிமைப்படுத்திக் கொண்டது.
அமெரிக்காவும் அய்ரோப்பிய நாடுகளும் வழங்கும் உயர்நுட்பப் போர்க் கருவிகளுக்கு ஈடாக மட்டுமல்லாமல், அவற்றையெல்லாம் முறியடித்துவிடும் அடுத்த தலைமுறைக் கருவிகளையும் ரசியா தன்னிடத்தில் கொண்டிருப்பதால், உக்ரைனுக்கு எதிராகத் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறது.
ரசியாவைத் தனிமைப்படுத்த இயலவில்லை
பொருளியத் தடைகளாலும் பிற கட்டுப்பாடுகளாலும் வங்கிகளின் பண மாற்றத் தடுப்பாலும் ரசியாவைத் தனிமைப்படுத்திவிட முடியும் என்ற முதலாளித்துவ நாடுகளின் எதிர்பார்ப்புகள் ஈடேறவில்லை. அமெரிக்கா, அய்ரோப்பா உள்ளிட்ட சில வளர்ந்த நாடுகளைத் தவிர பிற நாடுகள் ரசியாவுடன் வணிகத் தொடர்புகளையும பொருளிய உதவிகளையும் அரசியல் உறவுகளையும் நிறுத்திக் கொள்ளவில்லை.
மாறாக, வணிக, பொருளிய, அரசியல் தொடர்புகளை அறுத்துக்கொண்ட முதலாளித்துவ நாடுகள் அனைத்தும் பல்வேறு பொருளியச் சிக்கல்களைத் தங்களது நாடுகளில் காண்கின்றன.
இந்த நிலையில், இந்திய ஒன்றியத்தின் இடைக்காலத் தீர்வுகள் எந்த வகையில் பயன் தரும் என்பது புரியவில்லை.
நிலையான தீர்வுக்கான அடிப்படையாகவும் இல்லாமல் முழுமையான போர் ஓய்வுக்கான வழியாகவும் அமையாமல், இடைக்காலத் திட்டங்களை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
தொடக்கத்தில் துருக்கியின் தலைநகரில் நடந்த ரசிய – உக்ரைன் பேச்சுக்கள், அடுத்து அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் போன்ற எவையும் குறிக்கத்தக்க பயன்களைக் கொண்டுவரவில்லை.
ஒவ்வொரு முறையும் அமெரிக்கா தீர்வினை முன்மொழிந்தபோது, அது ரசியாவுக்குச் சார்பாக உள்ளது என்றுதான் உக்ரைன் ஏற்றுக்கொள்ள மறுத்தது. தற்போது எண்ணெய் வளங்கள் மீதான தாக்குதல் நிறுத்தம், கருங்கடல் வழியான தடையற்ற கப்பல் போக்குவரவு என்பவை மட்டுமே உக்ரைன் நாட்டுக்குப் போதுமானதாக இருக்காது. ஏனெனில், ரசியா மீதான தாக்குதல்களில் எண்ணெய் வளங்களையும் இருப்புகளையும் அழிப்பதை மட்டுமே உக்ரைன் மேற்கொள்ள முடிகிறது. ரசிய நாட்டின் பிற கட்டமைப்புகளைத் தாக்கக்கூடிய வலிமையும் வாய்ப்புகளும் அமையவில்லை. வேறு சில வணிகக் கிடங்குகள் போன்றவற்றின் மீதான ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் ரசிய மக்களது அன்றாட வாழ்வைப் பெருமளவில் சீர்குலைக்கவில்லை.
ஆனால் இவற்றுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் போக்குவரவு, தொலைத்தொடர்பு மின்னிணைப்புப் போன்ற கட்டமைப்புகளைத் தாக்கி அழிக்கும் வலிமையும் வாய்ப்புகளும் ரசியாவிடம் மிகுந்திருக்கின்றன.
இதனால்தான், இடைக்காலப் போர் நிறுத்தம் என்ற தீர்வை உக்ரைன் முன்மொழிந்தாலும், அமெரிக்கா வற்புறுத்தினாலும், ரசியா ஏற்கும் மனநிலையில் இருக்கவில்லை.
நிலையான தீர்வுதான் வேண்டும்
ரசிய மொழி இன மக்களின் உரிமைகளை நிலைநாட்டக்கூடிய தீர்வு மட்டுமே நிலையான மாற்றாக இருக்க முடியும்.
2014இல் ரசியா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றின் பங்களிப்புடன் ஏற்பட்ட மின்ஸ்க் உடன்பாட்டின் அடிப்படையில், ரசிய இன மக்களுக்குத் தன்னுரிமை வழங்கியிருந்தால் இன்றைய போர் தொடங்கியிருக்க வாய்ப்பில்லை.
உக்ரைன் மக்களின் வாக்குகளைப் பெருமளவில் பெற்றுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யானுகோவிச், ரசியாவுடன் உறவுகளைப் பேணினார் என்பதற்காக மட்டுமே அமெரிக்க, அய்ரோப்பிய முதலாளித்துவ நாடுகளின் தூண்டுதலில் நீக்கம் செய்யப்பட்டதால் சிக்கல்கள் தொடங்கின. இதனை எதிர்த்த ரசிய இன மக்கள் மேல் படை கொண்டு தாக்குதல் நடத்தி, அவர்களுடைய மொழி, பண்பாட்டு உரிமைகளைப் பறித்ததாலேயே இன்றைய நெருக்கடிகள் வளர்ந்தன.
இந்தச் சிக்கல்கள் அடுத்தடுத்து வெவ்வேறு கட்டங்களை எட்டிவிட்டன. பல ஆண்டுகள் ரசிய இனத்தினர் தங்களுடைய உரிமைகளைக் காத்துக்கொள்ள நடத்திய போராட்டங்கள், பெரும் போராக மாறிவிட்டது. இதற்கு ரசியா படைக்கருவிகளைக் கொடுத்துத் துணை நின்றது. தற்போது ரசிய மக்கள் பெரிதும் பரவியிருக்கும் அய்ந்து மாநிலங்கள் ரசிய ஒன்றியத்துடன் தேர்தல் வாயிலாக இணைக்கப்பட்டுவிட்டன. இந்த வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளுவது எளிதில் இயலக்கூடியதல்ல.
இந்தக் கட்டத்தில், இடைக்காலத் தீர்வு எதுவாக இருந்தாலும் நடைமுறைக்கு வருவது புதிராகவே தொடர்கிறது.
அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் நிலைமைகளைப் புரிந்து உக்ரைன் நாட்டுக்கு அறிவுரை வழங்கினால்தான் போர் முடிவுக்கு வரும்.
ரசிய வளத்தைக் கைப்பற்றவும் சீன வளர்ச்சியைத் தடுக்கவும் முன்னேறிய நாடுகள் நடத்தும் பல போர்களில் இதுவும் ஒன்று. அறிவியல் நுட்ப மேம்பாடு, உற்பத்திப் பெருக்கம், வணிகப் பங்களிப்பு, பொருளிய வளம் என்னும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத இந்திய ஒன்றியத்தின் தலையீடு, போர் நிறுத்தத்தை முடிவுசெய்யக்கூடிய நிலையில் இருக்கிறதா என்பதை மோடியும் பா.ச.க.வும் அவர்கள் நடத்தும் ஆட்சியும் எண்ணிப் பார்க்கவேண்டும்.