கட்டுரைகள்

கலகத் தூண்

இரா.முத்தரசன்

எத்தகைய அமைப்பானாலும் அரசியல் கட்சிகள் என்றாலும் அவை சட்டத்திற்கு உட்பட்டு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, ஜனநாயக முறையில் செயல்பட வேண்டும்.

அரசியல் கட்சிகள் ஆனாலும், அமைப்புகள் ஆனாலும், நோக்கம் என்பது – மக்கள் நலனுக்கானதே!

மக்கள் நலன் என்று குறிப்பிடும்போது, முதல் நலன் என்பது – மக்கள் ஒற்றுமை என்பதே முதன்மையானது.

மக்களை ஏதோ ஒரு காரணத்துக்காக பிளவுபடுத்துவது மோதலை உருவாக்குவது போன்ற ஈனத்தனமான செயல்களில் எவரும் எக்கட்சியும் ஈடுபட மாட்டா!

ஆனால் கலகத்தை உருவாக்குவதற்கென்றே அவதாரம் எடுத்து பிறந்ததுதான் ஆர்.எஸ்.எஸ். என்கிற பேராபத்திற்குரிய அமைப்பு.

அத்தகைய அமைப்பு பன்றி குட்டி போட்டது போல் ஏராளமான துணை அமைப்புகளை உருவாக்கி நாடு முழுவதும் செயல்படுத்தி வருகின்றது.

இவர்களின் தலையாய பணிகள் என்பது தொடங்கிய நாள் முதல் இன்று வரை நாடு முழுவதும் கலகத்தீ மூட்டி, மக்களைப் பிளவுபடுத்தி, மத ரீதியாகவும், கடவுளைக் காட்டியும் மோதச்செய்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதே இவர்களின் உண்மையான நோக்கமாகும்.

நம் நாட்டில் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் தொடர்ந்து நடைபெற்று வரும் விரும்பத்தகாத சம்பவங்களைப் பட்டியலிடுங்கள்.

“தேசப் பிதா என போற்றப்பட்ட மகாத்மா ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார்?

குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு சம்பவம் எப்படி நடந்தது? யாரால் நடந்தது? விசாரணை உண்டா? தீர்வு உண்டா? இல்லை – ஆனால், இஸ்லாமிய பெருமக்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டார்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதரர்கள் – சகோதரிகள் – முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.

கர்ப்பமான பெண்களின் வயிற்றில் சூலாயுதத்தைச் செருகி வளர்ந்து வரும் கருவை வெளியே இழுத்து – சூலாயுதத்துடன் சங்பரிவார் அமைப்புகள் காவி அங்கவஸ்திரம் அணிந்தவாறு ஊர்வலம் சென்றார்கள் – காவல்துறை வன்முறையாளர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளித்திட்ட அவமானம் நடந்தேறியது.

குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்று குவித்ததுடன், கர்ப்பிணியான பெண்ணை காட்டுமிராண்டித்தனமாகப் பலரும் சேர்ந்து சூறையாடியதை – நாகரிக மனித குலத்தால் மறந்துவிட முடியுமா? அவ்வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றதும் – குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதும் – பின் அவர்கள் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டதும் – அத்தகைய கொடிய குற்றவாளிகளுக்கு மேளதாளம் முழங்க மாலை மரியாதையுடன் பரிவார அமைப்புகள் வரவேற்பு அளித்ததையும் மனித குலம் மறந்திட இயலாது.

நூற்றாண்டு கால பாபர் மசூதியை இடிக்க பகிரங்கமாக ரத யாத்திரை சென்றதும், ராணுவமும், போலீசும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க – பட்டப்பகலில் தொலைக்காட்சிகள் படம் எடுத்தவாறு – அத்வானி தலைமையில் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திடலாகாது!

இதன் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது.

பாபர் மசூதியை இடித்தது தவறு – இடித்தவர்கள் இவர்கள்தான் என்பதற்கான ஆவணங்கள் ஒரிஜினலாக இல்லை, ஜெராக்ஸ் நகலாக உள்ளது. ஆகவே தலைமை தாங்கிய அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை – பாபர் மசூதி இருந்த இடம் அரசுக்கு சொந்தமான இடமாகும்- அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கப்படுகின்றது – மசூதியை வேறோர் இடத்தில் கட்டிக் கொள்ளலாம்.

எப்படிப்பட்ட தீர்ப்பு – என்ன வகையிலான தீர்ப்பு? கடைக் கோடியில் இருக்கும் கடையனுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தவன் மனதில் என்ன மாதிரியான புரிதல் ஏற்பட்டிருக்கும் என்பதனை வாசகர்கள் சுதந்திரமாக முடிவு செய்து கொள்ளலாம்.

குஜராத் – அடுத்து உத்தரப்பிரதேசம் என சம்பவங்கள் தொடர்ந்தன. பாஜகவின் வெற்றியும் தொடர்ந்தது.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு அயோத்தி மட்டும் போதுமா? பெரிய மாநிலம் ஆயிற்றே! 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளனவே! ஆகவே அடுத்தடுத்து ஏதேனும் செய்ய வேண்டாமா?

உண்மையான கடவுள் பக்தி உடையவர்கள் – மனிதர்களை கடவுள் தான் படைத்தார் என நம்புகின்றார்கள்-

ஆனால் சங் பரிவார் அமைப்புகள், கடவுள் எங்கே பிறந்தார் என்பதனை ஆய்வு செய்து- அவ்விடங்களைத் தேடிப் பிடித்து- இக்கடவுள் இங்கேதான் பிறந்தார் என்று பித்தலாட்டத்தனமான நாடகத்தை நடத்துவதில் கைதேர்ந்தவர்கள்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என அடம்பிடித்து மசூதியை இடித்தார்கள்.

தற்போது மதுராவில் தங்களின் கபட நாடகத்தை ஆடத் தொடங்கி நடத்திக் கொண்டுள்ளார்கள்.

மதுராவில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. மசூதியும் உள்ளது. இரண்டுக்கும் மக்கள் சென்று வழிபட்டு வருகின்றார்கள். தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எந்த மோதலும் இல்லை, பிரச்சனையும் இல்லை.

மோதல் இல்லாமல், அமைதி நிலவினால் – அதனை அனுமதிக்க முடியுமா – முடியாது!

மசூதி இருக்கும் இடத்தில் கிருஷ்ணர் பிறந்தார்- ஆகவே மசூதியை இடிக்க வேண்டும் – குரல் எழுப்பி வருகின்றார்கள்- உ.பி.யில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் இப்பிரச்சாரம் தீவிரம் அடையும்!

இவ்வாறு ஒவ்வொரு மாநிலமாக மதத்தின் பெயரால்- கடவுளின் பெயரால் கலகங்களை உருவாக்குவது இவர்களின் அஜண்டா!

இந்த அஜெண்டாவில் தமிழ்நாடு தப்பித்து இருந்தது- தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் – திருப்பரங்குன்றம் மலையை ஆயுதமாக பயன்படுத்த அற்பர்கள் எடுத்து வரும் மூடத்தனமான முயற்சிக்கு உயர் – உச்ச நீதிமன்றங்களும் செவி சாய்த்து இருப்பது வேதனை அளிக்கின்றது – மத மோதலுக்கு – இரையாகாத தமிழ்நாட்டைக் கூறு போடுவதற்கு- எல்லைக்கல்லைக் கொண்டு கலகம் விளைவித்திட ஆயத்தமாகிவிட்டார்கள்.

இரண்டொரு ஆண்டுகளாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதி சுவாமிநாதன் அவர்களின் நல் ஆசீர்வாதத்தோடு நடைபெற்று வருகின்றது.

நீதிபதி அவர்களின் படங்களை நாளேடுகளில், தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது – அவர் எப்படிப்பட்ட தெய்வ நம்பிக்கை உடையவர் என்பதனை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

அவர் தன்னை இந்துமதத்தைச் சார்ந்தவர் என்பதனையும், சங்கராச்சாரியார்மீது மிகுந்த பற்று உடையவர் என்பதும், கடவுள் நம்பிக்கை உடையவர் என்பதும் நன்கு புலப்படுகின்றது.

அதே நேரத்தில், நம்பிக்கைக்குரிய, நம்பகமானவர் என்ற கருத்து வெளிப்படுவது நீதிமன்றத்தின் பால் மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.

இங்கே தான் இப்படி என்றால் நீதி கிடைக்கும் என்ற பெருத்த நம்பிக்கையோடு உச்ச நீதிமன்றம் சென்றால், அங்கேயும் ஏமாற்றம்தான் என்ற நிலை ஏற்பட்டால், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் இருக்கின்றதா? மதச்சார்பின்மை கொள்கை இருக்கின்றதா அல்லது செத்து மடிந்து விட்டதா என ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு தான் முன்னுதாரணமா எனக் கேள்வி எழுகின்றது.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என்று எவரும் கூறவில்லை. ஆனால், இவற்றுக்கு மாறாக, மலையில் உள்ள, மசூதிக்கு அருகில் உள்ள கல்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒரு சிறு கும்பல் – பரிவாரக் கும்பல் அடம் பிடிக்கின்றது. அக்கும்பலின் அடாவடித்தனத்திற்கு ஆமாம் என்கின்றது நீதிமன்றம்.

தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று சொல்லப்படுகின்ற தூண் – வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் நடப்பட்ட கல் – அளவை அடையாளம் காட்டும் கல் – அந்த கல்லில் தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று அலாவடித்தனமாக அடம்பிடிப்பது ஏன்?

உச்சநீதிமன்றம் மிகக் கெட்டிக்காரத்தனமாக நவம்பர் 20 அன்று இடைக்கால தீர்ப்பை வழங்கியுள்ளது.

அத்தீர்ப்பு ஏற்புடையது அல்ல என்று தமிழ்நாடு மேல்முறையீடு (சீராய்வு மனு) செய்தது.

அவசர வழக்காக 23.11.2026ல் விசாரித்து தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும்.

ஆனால் எடுக்கப்படவில்லை. 24ல் நீதிமன்ற விடுமுறை. அன்றுதான் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு மிக வினோதமாக உள்ளது.

      1. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி இடைக்கால உத்தரவாக தீர்ப்பளித்துள்ளது. ஏன் இந்த அவசரம் – தூண் எப்போது அமைக்கப்பட்டது இதுவரையில் அத்தூணில் எக்காலத்திலாவது தீபம் ஏற்றப்பட்டது உண்டா என ஏதும் இன்றி தீர்ப்பளித்தது நியாயமா?
      2. இந்த அனுமதி நவம்பர் 24 கார்த்திகை தீபத்திருநாளுக்கு மட்டுமான அனுமதி வழக்கின் இறுதி தீர்ப்பு அல்ல என்று கூறுகின்றது. இடைக்காலமாக அவசரமாக இத்தீர்ப்பை வழங்காமல் இருந்தால், அதனால் ஏற்படும் பாதிப்பை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்துமா?
      3. தீபம் ஏற்றுவது தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் அடங்கிய குழுவினர் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் – என்று கூறுகின்றது.
      4. அத்தகைய நபர்களின் எண்ணிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர், தொல்லியல்துறை மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வார் என்று தீர்ப்பு உள்ளது- தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் கொடுக்க வேண்டிய பணி இதுவல்ல- கல்தூண் எத்தகையது என்பதனை ஆய்வு செய்திட ஏற்பாடு செய்திருந்தால் பயனுள்ளதாக அமைவதுடன் – நல்லதொரு நடுநிலையான தீர்ப்பு வழங்கவும் எளிதாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
      5. மதுரை காவல்துறை ஆணையர், போதுமான காவல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் தேவைப்பட்டால் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் (சிஆர்பிஎப்) பொருத்தமான ஒரு படையினரை மத்திய அரசு பணியமர்த்த வேண்டும் என்று தீர்ப்பு உள்ளது.

கல் தூணில் தீபம் ஏற்றப்பட்டே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு உச்சநீதிமன்றம் முடிவாகிவிட்டதைத் தீர்ப்பு உறுதி செய்கின்றது.

ஒரு கருங்கல்லை – அளவைக் கல்லை வைத்து – தமிழ்நாட்டில் கலகத்தை உருவாக்கி – அதன் மூலம் குஜராத்தைப் போன்று, உத்தரப்பிரதேசத்தைப் போன்று இங்கேயும் அதிகார பீடத்தில் அமர்ந்து விடலாம் என்று பரிவாரங்கள் தலைப்பாகை கட்டி வருகின்றது.

மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உடைய நல்லோரே! நல்லெண்ணம் கொண்டோரே கவனமாய் இருங்கள்.
வேண்டாம் குஜராத் மாடல்; வேண்டாம் உ.பி. மாடல்

அன்றே புரட்சி கவிஞர் பாரதிதாசன்,
“மத – ஓடத்திலேறிய மாந்தரே – பலி
பீடத்தில் சாய்ந்தீரே”
-என்று நீண்ட பாடலில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அக்கவிதையை நிறைவு செய்து கவிஞர்
“மூடத்தனத்தை முடுக்கும் மதத்தை நிர்
மூலப் படுத்தக் கை ஓங்குவீர் – பலி
பீடத்தை விட்டினி நீங்குவீர் – செல்வ
நாடு நமக்கென்று வாங்குவீர்.” – என்று முடிக்கிறார்.

பலிபீடத்திற்கு பலியாக வேண்டாம்! நாம் நாமாக இருப்போம்!! கல்தூணை கலகத் தூணாக மாற்ற அனுமதியோம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button