இந்தியா

இயங்கிக்கொண்டே இருக்கும் அமைப்பு இது!

ஏஐடியுசி மாநாட்டில் அமர்ஜித் கவுர் அரசியல் விளக்க உரை

ஏஐடியுசி யின் 43வது அகில இந்திய மாநாடு 22.11.2026 அன்று பெங்களூருவில் பெரும் பேரணியோடு துவங்கியது. மாலையில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர் அரசியல் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார் அதன் சுருக்கம் வருமாறு:

“பொதுச்செயலாளரின் அறிக்கை என்பது, சென்ற மாநாட்டுக்குப் பின் நாம் அனைவரும் சேர்ந்து ஆற்றிய செயல்பாடுகளின் தொகுப்புத்தான். இந்த மூன்று ஆண்டுகளில் நாம் மூன்று நாடு தழுவிய வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளோம். அவற்றில் பங்கேற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 கோடி, 25 கோடி என உயர்ந்து கொண்டே போனது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சவால்களை எதிர்கொள்ள “கியூபா தனியாக இல்லை”, இனப்படுகொலைக்கு ஆளான “பாலஸ்தீன மக்களை ஆதரிக்கிறோம்” என்பது உள்ளிட்ட பல சர்வதேச ஒருமைப்பாட்டு இயக்கங்களை நாம் நடத்தியுள்ளோம்.

உலகத் தொழிற்சங்க சம்மேளனம், ஐ.எல்.ஓ உள்ளிட்ட பன்னாட்டு தொழிற்சங்க அரங்குகளிலும் நாம் நல்ல பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறோம்.

தேசம் தழுவிய, நமது பொதுக்குழு எடுத்த முடிவுகளின்படி நாம் முன்னெடுத்த போராட்டங்கள் எவ்வாறு செயலாக்கப்பட்டன என்பதையே நாம் இந்த அறிக்கையில் தொகுத்துள்ளோம். மாநில, மாவட்ட, தொழில் வாரியான, ஆலைகளில் நடத்தப்பட்ட போராட்டங்கள் ஏராளமானவை. உங்களது மாநில மாநாட்டு அறிக்கைகளில், மாநில மொழிகளில் இன்னும் கூடுதலான விபரங்கள் இருக்கும். ஆனாலும் அவற்றிலும் கூட அத்தனை போராட்டங்களையும் பட்டியலிட்டிருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நலன்களைக் காக்க இயங்கிக்கொண்டே இருக்கும் அமைப்பு இது.

குறைந்தபட்ச ஊதியம் குறித்து தேசிய அளவில் இரண்டு பயிலரங்குகளை நடத்தினோம். அதன் தொடர்ச்சியாக மாநில அளவிலும் பயிலரங்குகள் நடந்தன. புதிதாக வந்த தொழிலாளர் சட்டத்தொகுப்புகள், “தள நிலை ஊதியம்” என்ற புதிய முறையை முன்வைக்கிறது. அதன்படி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட “தினக்கூலி” ரூ. 178/- மட்டுமே!

புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கையும், அவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. நமது மாநிலங்களுக்குள் மட்டுமல்ல, நாடு கடந்து பல நாடுகளிலும் நமது தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களை ஒட்டச் சுரண்டி, அவர்களது உழைப்பின் பயனை நிறுவனங்கள் உறிஞ்சிக் கொழிக்கின்றன. இந்தியாவில் 14 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர்.

அமைப்புச் சாராத தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு குறித்து, இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கான சட்டமுன்வரைவு (மசோதா) ஒன்றையும் நாம் உருவாக்கி இருக்கிறோம்.

நமது தலைவர்களில் ஒருவரான கே.சுப்பராயன் எம்.பி., விவசாயத் தொழிலாளர் தலைவரான வை.செல்வராஜ் எம்.பி. ஆகியோர் மக்களவையிலும், நமது தோழர்கள் சந்தோஷ்குமார், முனீர் ஆகியோர் மாநிலங்களவையிலும் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக இது தனி நபர் மசோதாவாகத் தாக்கல் செய்யப்படும். இந்த மசோதா பற்றி விவாதித்து உரிய திருத்தங்களைச் சேர்த்து முழுமைப்படுத்துவதற்காக 25.11.2026ல் குழுவிவாதம் நடத்தப்படுகிறது.

இது போன்றே, சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம், அமைப்பு நிலை ஆகிய தலைப்புகளையும் சேர்த்து நான்கு குழுக்களாக பிரிந்து விவாதித்து, உங்கள் முடிவுகளை மாநாட்டுக்குத் தரவேண்டும்.

காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை குறிவைத்துக் குறைக்கப்பட்டு விட்டது. தொழிற்சங்கங்கள், நிரந்தரத் தொழிலாளர்களுக்குள் தம்மைச் சுருக்கிக் கொள்ளக் கூடாது. காண்ட்ராக்ட் தொழிலாளர்களையும் சங்கத்தில் உறுப்பினராக்க வேண்டும். அவர்களது ஊதிய, வேலைப்பாதுகாப்பை உறுதிசெய்ய ஒன்றுபட்டுப் போராட வேண்டும். நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளின் ஆபத்தை உணர்ந்து கொள்ளவும், அதற்காகத் திட்டமிட்டு செயல்படவும் வேண்டுமானால், தொழிலாளர்களை/தொழிற்சங்கங்களை அரசியல்படுத்த வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைப் பேணும் அரசியலே, தொழிற்சங்க அரசியல்.இதன் அடிப்படையில் நமது பணி விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இந்தியத் தொழிலாளர்களின் போராட்டம் 1870முதலே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் காலனிய முதலாளிகளை எதிர்த்து நாம் போராடினோம். 1920ல் இந்தியாவின் பல பகுதிகளில் செயல்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து ஏஐடியுசி தொழிற்சங்க மையத்தைத் தொடங்கின. 1921ம் ஆண்டு ஜாரியா நகரத்தில் நடந்த ஏஐடியுசியின் முதலாவது அனைத்திந்திய மாநாட்டில், “இந்தியாவுக்கு முழு விடுதலை வேண்டும்” என்ற அரசியல் முழக்கம் எழுப்பப்பட்டது.

இதனைக் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு ஏஐடியுசி 8 ஆண்டுகள் போராடியது. 1928ல் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றபோது, 5,000க்கு மேற்பட்ட ஏஐடியுசி உறுப்பினர்கள், மாநாட்டுப் பந்தலுக்கு முன்னின்று “முழு விடுதலை” என்ற கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கவேண்டும் என ஆவேசமாக முழங்கினர். அடுத்த மாநாட்டில் முடிவு செய்யலாம் என மகாத்மா காந்தி அவர்களைச் சமாதானப்படுத்தினார். 1929ல் தான் காங்கிரஸ் முழு விடுதலை எனும் கோரிக்கையை வைத்தது.

இந்தக் காலகட்டத்தில், வெள்ளைக்காரனுக்குத் துதிபாடி, விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் ஆளப் போய்விட்டார்கள்.

இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தைக் குலைக்க முயற்சிக்கிறார்கள். மதங்களைக் குறிவைத்து கலகங்களை உருவாக்குகிறார்கள். சொந்தச் சகோதரர்கள் கைகளுக்கு ஆயுதம் தந்து மோத வைத்து ரத்தம் குடிக்கிறார்கள். இந்திய மக்களிடையே நல்லுறவைக் கெடுத்து, குரோதத்தைத் தூண்டிவிட்டு, வெட்கமில்லாமல் “பாரத்மாதா கி ஜே” என்று கோஷம் வேறு போடுகிறார்கள்.

அவர்களுக்கு இந்தியாவை ஆயிரம் ஆண்டுகள் பின்தள்ள வேண்டும். “மனுஸ்மிருதி”யை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளர் கொள்கை (ஷ்ரம் ஷக்தி நிதி) வெளியிட்டார்கள். உழைப்பவனுக்கு எந்த உரிமையும் இல்லை, மேல்தட்டு வர்க்கத்தின் ஆணைகளுக்கு அடிபணிந்து, ஆயுள் முழுவதும் அவர்களின் சொல்படி ஊதியமே இல்லாவிட்டாலும் பணி புரியவேண்டும்” என்று மனுஸ்மிருதி கூறுகிறது.

அதனால்தான், அறிவியல் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் வேண்டுமென்று நாம் கோரினால், தள நிலை ஊதியம் (Floor Level wages) போதும் என்கிறார்கள். உழைப்பவர்கள், இழிந்தவர்கள்; அவர்களைத் தரை மட்டத்திலே வைக்க வேண்டும் என்பது அவர்களின் திட்டம்.

தொழிலாளர் அமைச்சர் நம்மைச் சந்தித்த போது, தொழிலாளர் பற்றி மனுஸ்மிருதி என்ன சொல்கிறது என்று சொன்னோம். அந்தச் சொற்களை நீக்கிவிடலாமா என்று அமைச்சர் கேட்டார். மிகவும் அழுத்தினால் சொற்களை வேண்டுமானால் நீக்குவார்களே தவிர, அதன் உள்ளடக்கம் அப்படியேதான் இருக்கும்.

அரசியல் சாசனத்தையே மாற்றுவதற்குத் தேவையான 400 எம்.பி.க்களைத் தருமாறு மக்களிடம் கேட்டார்கள். ஆனால் இருந்த 303 சீட்டுகளை விடக் குறைவாக 240 இடத்தில் தான் வென்றார்கள். பெரும்பான்மையான 272 இடங்களை எட்டிப் படிக்க, நித்திஷ், சந்திரபாபு நாயுடுவின் கைகளைப் பிடிக்க நேர்ந்தது.

இது ஒரு “தோற்கடிக்கப்பட்ட அரசு”, இவர் ஒரு “தோற்கடிக்கப்பட்ட பிரதமர்”. எனவே அவர்கள் அவசரத்தில் இருக்கிறார்கள். நினைத்ததை எல்லாம் செய்துமுடித்து விட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கு அரசு உதவுகிறது; அரசுக்கு கார்ப்பரேட்டுகள் உதவுகிறார்கள்.

இதே நிலையில் சென்றால் நாளைக்கு ஆட்சி கிடைக்காது என்பதால், தமக்கு எதிராக இருப்பார்கள் எனக் கருதுபவர்களின் வாக்குரிமையைப் பறிக்கிறார்கள். அதற்காக தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுலிருந்து இந்தியத் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் அமித்ஷாவை நியமிக்கிறார் மோடி. அதன்மூலம் தமது கையாளான ஞானேஷ்குமாரை நியமிக்கிறார்கள். 13 கோடிப் பேரை, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குகிறார்கள்.

இந்தியாவின் இளைய தலைமுறை கொதித்து எழுந்துள்ளது. ஏற்கனவே போராட்டங்களால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக நேர்ந்தது. ஆனால் அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸால் செதுக்கப்பட்ட இன்னொருவரை அமர்த்துகிறார்கள்.

கல்வியும், மருத்துவமும் பெருமளவில் வணிக மயமாக்கப்பட்டு விட்டன. தொழிலாளர்களின் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. வேலைநிறுத்தங்கள் சட்ட விரோதமாக்கப்படுகின்றன. சட்டம் என்பது பெயரளவில் இருக்கும்; அது பெருமளவில் உரிமைகளைப் பறிக்கும்; ஏதாவது உரிமைகள் இருந்தாலும் அதனைப் பெற முடியாமல் சட்டமே தடுக்க வழி ஏற்படுத்திக்கொடுக்கும்.

வரும் காலம் கடினமான காலம். ஆனால் எத்தனை வலிமையான தடுப்புகள் இருந்தாலும் அதனைத் தகர்த்தெறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கு உண்டு.

அதற்கு தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட வேண்டும். வெவ்வேறு தொழிற்சங்கங்களை உடனடியாக ஒன்றாக்கிவிடும் வாய்ப்புகள் குறைவென்றாலும், ஒன்றாக நிறுத்த முடியும். அந்தப் பணியில் ஏஐடியுசி ஏற்கனவே ஈடுபட்டுள்ளது.

சங்கங்களை வலிவுறக் கட்டுவோம். புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்துவோம்.வர்க்கமாக ஒன்று சேர்வோம்.” இவ்வாறு பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர் உரையாற்றினார்.

– தொகுப்பு: டி.எம்.மூர்த்தி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button