
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பில் பங்கேற்றனர். நவம்பர் 19, 2026 அன்று சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு 80 நிமிடங்கள் வரை நீடித்தது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு மூன்று நாடுகளும் அமைதி மற்றும் மூலோபாய நிலைத்தன்மை குறித்த கூட்டறிக்கை வெளியிட்டன. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
1. ஐ.நா. சீர்திருத்தம்: உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டன.
2. எரிசக்தி உற்பத்தி: உலக நாடுகளின் நலனுக்காக சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
3. அணுஆயுதக் கட்டுப்பாடு: அணு ஆயுத அபாயங்களைக் குறைப்பது மற்றும் அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது குறித்து மூன்று நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. அணு ஆயுதப் போரில் யாரும் வெல்ல முடியாது. எனவே ஒருபோதும் அணு ஆயுதப் போர் நடத்தப்படக் கூடாது என மூன்று தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.
4. சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு : சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போன்ற அமைப்புகள் தங்கள் அதிகார வரம்பை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. நாடுகளின் ஒப்புதல் மற்றும் தூதரக விலக்குரிமை ஆகியவற்றுக்கு மரியாதை அளிக்க வேண்டும்
இதற்கு “அமைதியை நோக்கிய கூட்டறிக்கை” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள மிகப்பெரிய மூன்று நாடுகளின் தலைவர்கள், ஒரே மேசையில் அமர்ந்து பேசி, வெளியிடப்படும் முதல் கூட்டறிக்கை இதுவாகும்.
“மூன்று பெரும் நாடுகளின் ஒத்துழைப்பு உலக அமைதிக்கு அவசியம்” என்றும் “இந்தச் சந்திப்பு உலக அமைதிக்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது” என்றும் ஐரோப்பிய, அமெரிக்க முதலாளித்துவ ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான சர்வதேச அரசியல் ஒழுங்கு மாற்றமடைந்து வரும் நிலையில், அந்த மாற்றத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்ற போட்டியின் வெளிப்பாடுதான் இந்தச் சந்திப்பு. குறிப்பாக,
-
- அமெரிக்கா தனது உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்கவைக்க விரும்புகிறது.
- சீனா தனது பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்த நினைக்கிறது.
- ரஷ்யா தனது பிராந்திய பொருளாதார, அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க முயல்கிறது.
இம்மூன்று நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தாலும், தங்களுடைய அதிகாரம், இறையாண்மை, வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் ஒன்றுபடுகின்றன. (அமரிக்கா ஏகாதிபத்திய நாடு. ரஷ்யா, சீனா ஏகாதிபத்திய நாடுகள் அல்ல, பெரு முதலாளித்துவ நாடுகள்)
பேரம் பேசுவதற்கான கருவிகள்
கூட்டறிக்கையின் நான்கு அம்சங்களும் — ஐ.நா. சீர்திருத்தம், எரிசக்தி, அணு ஆயுதம், சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு — ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே பேரம் பேசுவதற்கான கருவிகள் தானே தவிர, உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்கானவை அல்ல.
அணு ஆயுதப் போர்
“அணு ஆயுதப் போரில் வெல்ல முடியாது, அது நடத்தப்படக் கூடாது” என்ற வாசகம் 1985-ல் ரீகனும் கோர்பச்சேவும் கையெழுத்திட்டதில் இருந்து மீண்டும் மீண்டும் சொல்லப்படும் வெற்றுச் சொற்றொடர். கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திப்பதற்கு சற்று முன்பு, அதிபர் டிரம்ப் “அணு ஆயுதச் சோதனையை” அமெரிக்கா மீண்டும் தொடங்கும் என அறிவித்தார். இப்படி அணு ஆயுதப் போட்டியை முடுக்கிவிடும் அதே அரசுகள் “அணு ஆயுதப் போர் வேண்டாம்” என்று பிரகடனம் செய்வது நயவஞ்சகம், மோசடி.
அணு ஆயுதம் வைத்திருக்கும் அரசுகள், தொடர்ந்து அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்துகின்றன. ஏவுகணைத் தற்காப்பு மற்றும் தாக்குதல் அமைப்புகளை விரிவுபடுத்துகின்றன. இராணுவச் செலவினங்களை அதிகரிக்கின்றன. ஆனால் அணு ஆயுதத் தடுப்புக் கொள்கைகளைத் தங்களுடைய வெளியுறவுக் கொள்கையின் ஓர் அங்கமாக வைத்திருக்கின்றன.
எனவே, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அரசுகள் உண்மையில் அணு ஆயுதமற்ற உலகை விரும்புகின்றனவா? அணு ஆயுதங்கள் மூலம் தங்களுடைய உலகளாவிய அதிகாரத்தைப் பாதுகாக்க விரும்புகின்றனவா? என்ற கேள்வியை எழுப்பினால், அவற்றின் மோசடி வெளிச்சத்திற்கு வரும்.
சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் “சர்வதேச நீதியின்” நடுநிலை அமைப்பு அல்ல. சர்வதேச நீதியின் செயல்பாட்டில் அதிகாரச் சமத்துவமின்மை, அரசியல் அழுத்தம், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை செயல்படுத்த அதிகாரமின்மை, வல்லரசு நாடுகளின் ஒத்துழையாமை போன்றவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் தாக்கம் செலுத்துகின்றன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆப்பிரிக்கத் தலைவர்களை விசாரிக்கிறது, ஆனால் ஈராக், ஆப்கானிஸ்தான், காசா ஆகியவற்றில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் செய்த போர்க்குற்றங்களை விசாரிக்க முடிவதில்லை. அதன் அதிகாரமும் செயல்பாடுகளும் வரம்புக்கு உட்பட்டதாக குறுக்கப்படுகின்றன. இதற்கான பரஸ்பர உத்தரவாதத்தைப் பேசிக்கொள்ளும் பேரம்தான் இந்தத் தீர்மானம்.
உக்ரைன் போர்:
உக்ரைன் போர் நேட்டோ நடத்திவரும் பதிலாள் போர் (proxy war) ஆகும். நேட்டோ விரிவாக்கமும் ரஷ்யாவை அடிபணியச் செய்யும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் முயற்சியுமே போரைத் தூண்டிய முதன்மைக் காரணிகள் ஆகும்.
“அமைதியை நோக்கிய கூட்டறிக்கை” வெளியிடப்பட்ட காலத்தில், ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நவம்பர் 19 அன்று நடைபெற்ற உச்சி மாநாட்டில் 37 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். உக்ரைனுக்கான இராணுவ மற்றும் நிதி உதவியைத் தொடர்வது, போர் நிறுத்தத்திற்குப் பிறகுள்ள பாதுகாப்பு உத்தரவாதம், அமைதிப் பேச்சுவார்த்தை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்த இரு நிகழ்வுகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். “அமைதி” பற்றிய அனைத்து வார்த்தைஜாலங்களுக்கும் பின்னால், உலகை வன்முறை வழியில் மீண்டும் பங்கிடுவதற்கான முயற்சியே நடக்கிறது.
உலகின் மூன்று பெரும் நாடுகளின் தலைவர்கள் ஒரே மேசையில் அமர்ந்து அமைதியைப் பற்றிப் பேசுவது மட்டும் உலக அமைதியைக் கொண்டுவந்து விடாது. உலகின் வளங்கள், சந்தைகள், உழைப்பு ஆகியவற்றின் மீதான ஆதிக்கப் போட்டி தொடரும் வரை போர்களுக்கான அடிப்படைக் காரணங்களும் நீடிக்கின்றன. உண்மையான உலக அமைதி என்பது வல்லரசுகளுக்கு இடையிலான அதிகாரச் சமநிலை மட்டுமல்ல; நாடுகளின் இறையாண்மை, மக்களின் சுயநிர்ணய உரிமை, சமூக நீதி, பொருளாதார சமத்துவம் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான அமைதி என்பது உலக மக்களுக்கான அமைதியாக இருக்காது. அதேபோல், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டமாக மாறிவிடாது.
எனவே, உண்மையான அமைதி என்பது வல்லரசுகள் தங்களுக்குள் செய்துகொள்ளும் அதிகாரப் பங்கீடு அல்ல; சுரண்டல், ஆதிக்கம், போர் ஆகியவற்றை உருவாக்கும் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மாற்றியமைப்பதன் விளைவதாகும். உழைக்கும் வர்க்கம் அமைப்பு ரீதியாகத் திரள்வதும் சோசலிசப் புரட்சிக்கான போராட்டமுமே இதனைச் சாதிக்கும்.