கட்டுரைகள்

நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் பாஜக!

இரா.முத்தரசன்

நாட்டின் மிக உயர்ந்தபட்ச அமைப்பான நாடாளுமன்றம் நிலைகுலைந்து நிற்கின்றது. 543 நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.

இரு அவைகளும் கூடி மக்களுடைய பிரச்சனைகள் குறித்து விவாதித்துத் தீர்வு காணவும், மக்களுக்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றவும் கடமைப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாக்களை முழுமையான விவாதம் நடத்தாமல் நிறைவேற்றப்படுவதால் நீதிமன்றத்தில் வழக்குகள் குவிகின்றன என உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசுக்குச் சுட்டிக்காட்டியதை, மோடி தலைமையிலான அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதியுடன் நிறைவடையும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய நாள் முதல் தினசரி ஒத்தி வைக்கப்பட்டே வருகின்றது. கூட்டம் நாள் முழுவதும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டாலும் செலவினங்கள் குறையாது.

நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களுக்கும் உரிய ஊதியம், அவர்கள் பெறும் தினசரிப் படிகள் தொடர்ந்து வழங்கப்படும். உறுப்பினர்கள் செலவினங்கள் மட்டுமின்றி, அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் இதர செலவுகள் எல்லாம் உண்டு. இச்செலவினங்கள் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஆகும். இவை அனைத்தும் நாட்டு மக்களின் வரிப் பணமேயன்றி வேறில்லை.

நாளேடுகளும், தொலைக்காட்சிகளும் எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் அவை ஒத்திவைக்கப்படுவதாக செய்திகள் வெளியிடுகின்றன. இத்தகைய செய்திகள் மூலம் எதிர்க்கட்சிகள் குறித்து தவறான கருத்தை உருவாக்க ஊடகங்கள் முயல்வது கவலைக்குரியதாகும்.

நாட்டின் முதல் பிரதமரான நேரு அவர்கள் நாள் தவறாமல் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றதுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறும் கருத்துகளை, அரசின் மீதான விமர்சனங்களைக் காது கொடுத்துக் கேட்பார்.

இன்றைய பிரதமர் மேன்மை தாங்கிய நரேந்திர மோடியார், நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் நல்ல பண்பை கொண்டவராக விளங்குகின்றார்.

நமது நாடாளுமன்றத்தைக் காட்டிலும், பிற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்பதைப் பெரும் மகிழ்ச்சியுடன் பின்பற்றி வருகின்றார்.

2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, பிரதமர் மோடி அயல்நாடுகளுக்குச் சென்று வந்த செலவுகள் ரூ.550 கோடி என்று கூறப்படுகின்றது.

சொந்த நாட்டின் நாடாளுமன்றம் பிரதமருக்குப் பெரிதாகத் தெரியவில்லை, தன்னை தேர்ந்தெடுக்காத அயல்நாடுகள் அவருக்கு சொர்க்கம் எனத் தெரிகின்றது.

தேர்தல் காலங்களில் அவர் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் குறித்துக் கவலைப்படுவதே இல்லை.

விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், அரசுப் பணியாளர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாதது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிரான மக்கள் விரோத அரசாக செயல்பட்டும் வருகின்றது.

விவசாயிகளின் போராட்டக் களத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. விவசாயத் தொழிலாளர்களுக்கு கிராமப்புற மக்களுக்கு ஒரு வேளைக் கஞ்சிக்கு வழிவகுத்த மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்டு விட்டது.

மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு தள்ளப்படும் வகையில் தேசியக் கல்விக் கொள்கை வலுக்கட்டாயமான முறையில் திணிக்கப்படுகின்றது. வேலையின்மை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இப்பிரச்சனைகள் குறித்து எல்லாம் அரசு நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இல்லை.

அவர்களின் குறிக்கோள் அனைத்தும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது. அதன் மூலம் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை உருவாக்குவது, அதன் மூலமாக மனுதர்ம ஆட்சியை மேற்கொள்வது என்று படுபிற்போக்குத்தனமான கொள்கைகளை அமல்படுத்திட வெறித்தனமாகப் பணியாற்றி வருகின்றது.

நீட் நுழைவுத் தேர்வும், வினாத்தாள் கசிவும், அதனால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை உணர்ந்த, பாதிக்கப்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் – நீதி கேட்டு ஜூன் 28 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டது மோடியின் கண்களுக்குத் தெரியவில்லை.

வழக்கம்போல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார்கள்- நாட்டின் முன்னேற்றத்தை சீர்குலைக்கச் சதி செய்கின்றனர் என்றார்கள் – மாணவர்களை, இளைஞர்களைத் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டார்கள்.

ஜூலை 20ஆம் நாள் மாணவர்களும், இளைஞர்களும் மிகுந்த மனவலிமையோடு உறுதியான போராட்டமாக நாடாளுமன்றத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டனர். அந்த இளம்தலைமுறை மீது – எதிர்காலச் சிற்பிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியதை நாடு மட்டுமல்ல, உலகமே நன்கறியும். வெறிபிடித்த அத்தகைய தாக்குதலை- காவல்துறையினர், துணை ராணுவப் படையினர், சீருடை அணியாதவர்கள் மேற்கொண்டனர்.

இத்தகைய கொடூரமான, கொலை வெறித் தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அடக்குமுறை மூலம் தீர்வு காண முயன்ற மோடி அரசிற்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. பிரதமர் மோடி ஜூலை 23ஆம் நாள் நீலிக் கண்ணீர் வடித்தார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மாணவர்களுக்காக ராஜினாமா செய்வதாகக் கூறினார் – அது உண்மையானால், மே 3ஆம் தேதி வினாத்தாள் கசிந்த அன்றல்லவா தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும்?

அமைச்சர் ராஜினாமா செய்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விட்டதா? மாணவர்கள், இளைஞர்கள் மீது நடத்தப்பட்டக் கொடூரத் தாக்குதலுக்கு, வன்முறைக்கு யார் பொறுப்பு?

உள்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா? நாடாளுமன்ற அவைக்கு வருகை தந்து, எதிர்க்கட்சிகள் எழுப்பும் வினாவிற்கு நேர்மையான முறையில் விடையளிக்க வேண்டாமா? இதனைத்தானே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரி வருகின்றன.

உள்துறை அமைச்சர் அவைக்கு வர மாட்டார்- பதில் சொல்ல மாட்டார் என்றால், இதுதான் பாஜகவின் ஜனநாயகமா? எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் கூச்சல் குழப்பமா?

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கின்றார்- அவரது பெயர் கிரண் ரிஜிஜு – அவர் என்ன சொல்கிறார்,

“மத்திய உள்துறை அமைச்சர் நாள் முழுவதும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றார், அமைச்சகங்களின் செயல் திட்டங்களின் அடிப்படையில் கூட்டத்தொடரில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்று வருகின்றார்கள். மேலும் எந்த அமைச்சர் அவைக்கு எப்போது வர வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தீர்மானிக்க முடியாது” என்கிறார்.

அப்படியானால், உள்துறை அமைச்சர் பதிலளிக்க மாட்டார் – உன்னால் முடிந்ததை செய்து பார் என்கிற முறையில் அவரது சவால் உள்ளது.

அது மட்டுமல்ல அமித்ஷாவின் பெயரைக் கேட்டாலே தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் நடுக்கம் ஏற்படும் என்று மிரட்டுகின்றார்.

இதன் மூலம் தெரிவது என்ன? நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம் எத்தகைய அராஜகத்தையும் மேற்கொள்வோம் – அதனை கேட்க நீங்கள் யார் என்கிறார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் வேறு எங்கு விவாதிப்பது?

விவாதங்களை அனுமதிக்க மாட்டோம் எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்தப் பிரச்சனைக்கும் பதிலளிக்க மாட்டோம் என ஆணவத்துடன், அகம்பாவத்துடன் ஒன்றிய அரசும், அமைச்சர்களும் அணுகுவது குழப்பமில்லையா?

குழப்பத்தை ஏற்படுத்தி, கூச்சலை உருவாக்கி, சபையை நடக்க விடாமல் தடுப்பது ஆளும்கட்சியா, எதிர்க்கட்சியா?

நாடாளுமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைத்து, எதிர்க்கட்சிகளின் மீது பழிசுமத்தி, திசைதிருப்பி நாடாளுமன்ற ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் சக்திகள் தேச விரோதிகளா? மக்கள் பிரச்சனை மீது, அநீதியின் மீது கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள் தேச விரோதிகளா?

நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் புறம்பாக செயல்படக்கூடிய புல்லுருவிகளான ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த நாட்டு மக்களே அணி திரளுங்கள்; ஓரணியாய் திரளுங்கள். அதுவே மாற்றத்தை உருவாக்கும்- அத்தகைய மாற்றம் மக்களை மதிக்கும் மாற்றமாக அமையட்டும் – அந்நாளை எதிர்கொள்வோம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button