கட்டுரைகள்

போராடுபவர்கள் தேச விரோதிகளா?

இரா.முத்தரசன்

அநீதிகளுக்கு எதிராகப் போராடுபவர்கள்- நக்சலைட்டுகள் அல்லது நகர்ப்புற நக்சலைட்டுகள்- தேச விரோதிகள் என பட்டம் சூட்டுகின்றனர். பட்டம் வழங்கும் இவர்கள் யார்?

இவர்கள் விடுதலைப் போர்க்களத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு வெண்சாமரம் வீசியவர்கள், மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலைப் போராட்டத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இங்கிலாந்து துரைமார்களை நாங்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம்- எங்கள் வாழ்நாள் முழுவதும் முழு விசுவாசத்துடன் உங்களுக்கு சேவகம் செய்திட கடமைப்பட்டுள்ளோம் என்று வெள்ளையர்களின் இரு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தஞ்சமடைந்த தறுதலைக் கூட்டம்.

நாட்டின் இளம் தலைமுறை, உயர்கல்வி பெற வேண்டும் – உயர் பொறுப்புகளை ஏற்று, நாட்டு மக்களுக்கு நல் சேவை செய்ய வேண்டும் என்கிற அர்ப்பணிப்பு உணர்வோடு, கல்வி கற்க முயன்றால், தடை- தடை மேல் தடை.

மீண்டும் மனுதர்மம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன், ஒவ்வொரு அஸ்திரமாக மாணவர்கள் மீது பாய்ச்சுகின்றனர்.

மாணவர்கள் தங்களது விடுமுறை நாட்களில் பெற்றோர் செய்திடும் தொழிலை செய்ய வேண்டும் என்றார் நாட்டின் பிரதமர்!

அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை, இன்றைய பிரதமர் மறைமுகமாக திணிக்கின்றார்!

தேசியக் கல்விக் கொள்கை – இதனை ஏற்கத்தான் வேண்டும் என்கின்றனர் – ஏற்க மறுத்தால், நிதி வழங்க முடியாது என்கின்றார் ஒன்றிய கல்வி அமைச்சர்-கூறியது மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்குரிய நிதி இன்று வரை வழங்கப்படவில்லை.

12 ஆம் வகுப்பில் எவ்வளவு அதிகபட்ச மதிப்பெண் எடுத்தாலும், அதுபற்றி கவலையில்லை- நீட் நுழைவுத் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால்தான், மருத்துவ கல்வியின் படிக்கட்டுகளை மிதிக்க முடியும் – இல்லையெனில் வெளியே போ என விரட்டி அடிக்கின்றனர்.

நுழைவுத் தேர்வுக்கு செல்ல, பல லட்ச ரூபாய்களை செலவிட்டு, பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும்.

ஏழைகள் எங்கே போவார்கள் இலட்சங்களுக்கு?

நீட் தேர்வு தேவையில்லை அல்லது தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு கொடு என்று நீண்ட, நெடும் போராட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறுகின்றது.

ஜனநாயக மாண்பும், பண்பும் அற்ற ஓர் அரசிடம் ஜனநாயக ரீதியில் முறையிட்டால் – அவை அலட்சியப்படுத்தப்பட்டு வந்தது.

நீட் நுழைவுத் தேர்வை நேர்மையான முறையில், வெளிப்படைத் தன்மையுடன், ஊழலற்ற முறையில் நடத்திட வக்கற்ற ஒன்றிய அரசு, நிர்வாகத் திறமையற்ற அரசு – அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கின்றது.

2026 ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

22 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்- மாணவ, மாணவியர் மட்டுமல்ல- 22 லட்சம் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.

வினாத்தாள் கசிந்தது. வினாத்தாள் தயாரிக்கும் பொறுப்பில் இருந்தவர்கள், தங்களுக்கு வேண்டிய மாணவ, மாணவர்களிடத்தில் பல லட்ச ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு வழங்கினர்.

நிலை குலைந்த நிலையில் மே 3ஆம் நாள் நடத்தப்பட்ட தேர்வு, மே 12ஆம் நாள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் 26.7.2026 அன்று நடத்தப்பட்டது.

22 மாணவ, மாணவியர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர் – இல்லை, கொலை செய்யப்பட்டனர் – இக்கொலைக்கு யார் காரணம்?

ஆனால் ஒன்றிய அரசு, சிறிதும் வெட்கமற்ற முறையில் தேர்வு ரத்து செய்து விட்டோம், மறு தேர்வை நடத்திவிட்டோம், இது எங்களின் சாதனை என்கின்றனர்.

ரத்து செய்ததும்- மறு தேர்தல் நடத்தியதும் சாதனை என்றால், நிகழ்ந்த தவறுக்கு, ஊழலுக்கு, முறைகேட்டுக்கு, இதனால் ஏற்பட்ட மரணங்களுக்கு யார் பொறுப்பு?

பொறுப்பேற்க வேண்டும் என்று கோரி ஜூன் 28 ஆம் நாள் டெல்லியில் போராட்டம் தொடங்கியது – நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் ஜந்தர் மந்தர் நோக்கி திரண்ட வண்ணம் இருந்தனர்.

இவர்களுடன் – கல்வியாளர், சூழலியல் செயல்பாட்டாளர் திரு. சோனம் வாங்சுக் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

எதிர்கால தலைமுறை நியாயம் கேட்டு, நீதி கேட்டு போராடுகின்றது.

ஒருவர் உயிரைப் பணயம் வைத்து போராடுகின்றார் – பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று ஆதரவு தெரிவிக்கின்றனர்.

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை என்பது மட்டுமல்ல – ஒரு அதிகாரி கூட செல்வதற்கு தயாராக இல்லை.

போராட்டத்தை ஒன்றிய அரசு முற்றாக அலட்சியப்படுத்தியது மட்டுமல்ல – நாடு முன்னேறிக் கொண்டிருக்கின்றது – இதனைப் பொறுக்க இயலாதவர்கள், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு போராட்டத்தை நடத்துகின்றார்கள் – போராட்டம் நடத்துபவர்கள் தேசவிரோதிகள்- அந்நிய நாடுகளின் சதி செயல்கள் நடைபெற்று வருகின்றன- நாட்டு மக்களே, உஷார் உஷார் என்று ஒப்பாரி வைத்தார்கள்.

ஜூன் 28 இல் போராட்டத்தை தொடங்கிய மாணவர்களும், இளைஞர்களும் அமைதி வழியில் ஒன்றாய் -நூறாய் -ஆயிரமாய் -பல்லாயிரமாய் படையென திரண்டனர்.

ஏதோ அந்நிய நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள், டெல்லியில் படையெடுத்து வந்து விட்டதைப் போன்று, டெல்லி போலீசைக் கொண்டு மட்டுமல்ல – துணை இராணுவப் படையைக் கொண்டும் இந்தியாவின் எதிர்காலத்தினர் மீது கொடூர தாக்குதலை தொடுத்தனர்.

மிருகங்களை வெறிகொண்டவன் தாக்குவதை போன்று தடி கொண்டு தாக்கினர், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்- கொடூரத் தாக்குதலை காட்டுமிராண்டித்தனமாக மேற்கொண்டனர். கற்களை குவித்து வைத்து – கற்களை கொண்டும் தாக்குதல் நடத்தினர்.

அட்டைகளை கையில் பிடித்தபடி அணிவகுத்த – முழக்கங்களை எழுப்பியவர்கள் மீது ஏன் இந்த வன்முறை வெறியாட்டம்? இத்தகைய கொடூர தாக்குதலை மேற்கொள்ள அனுமதித்தது யார்?

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படுகாயமுற்றனர்.

டெல்லியில் தொடங்கிய போராட்டம்- அமைதியான போராட்டம்- ஒன்றிய அரசின் மிருகத்தனமான வன்முறை வெறியாட்டத்தின் காரணமாக நாடு தழுவிய போராட்டமாக மாறியது.

அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் – நாடு, நகரெங்கும் போராட்டம் காட்டுத் தீயென பரவியது.

அனைத்து மாநில தலைநகரங்கள்- மாவட்டங்கள்- பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் என தொடர்ந்தன.

ஆங்காங்கே ஆயிரம் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டக் களம் கண்டனர். தன்னெழுச்சியாகத் திரண்டனர்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில், பொது இடத்தில் போராட்டம் நடத்திட காவல்துறை எங்கும் இடம் தர மறுத்த காரணத்தால், பாலன் இல்ல வளாகத்தில் போராட்டம் நடத்திட, மாநில செயலாளர் தோழர் மு. வீரபாண்டியனை மாணவர்களும், இளைஞர்களும் அணுகினர்.

அவர்களது வேண்டுகோளை இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி ஏற்று, பாலன் இல்ல வளாகத்தை அவர்களுக்காகத் திறந்து விட்டது.

சிறுதுளி பெரு வெள்ளம் என ஒவ்வொரு நாளும் இளம் பட்டாளம், மாணவர்கள்- மாணவிகள் திரண்டனர்.

கட்டுக்கடங்கா பெருங்கூட்டம்- தியாகச் செம்மல் பாலன் இல்ல வளாகம் முழுவதும் நிறைந்தது.

இவ்வளவுக்கும் பிறகு தான் நாட்டின் பிரதமருக்கு ஞானோதயம் பிறந்தது.

23.7.2026 நள்ளிரவு 11.50 மணிக்கு செல்பி வீடியோ வெளியிட்டார்.

“வினாத்தாள் கசிவு சாதாரணமானதல்ல, லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோருக்கு மிகுந்த வேதனை ஏற்படுத்தியது” என்று கூறுகின்றார்.

நடவடிக்கை – அமைச்சர் ராஜினாமா என்று தொடர்கின்றது.- தாங்கள் மிக யோக்கியர் என்று நாடகம் ஆடுகின்றனர்.

இத்தகைய நாடகங்கள் – இது முதல் தடவை அல்ல.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை என்றனர்- சென்னை மெரினா பகுதி இளைஞர்கள் வசமானது – ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது-

விவசாயிகளுக்கு எதிராக மூன்று மசோதாக்களை நிறைவேற்றினார்கள்- கூடாது என்று நாடே கூறியது – கமா, முற்றுப்புள்ளியைக் கூட திருத்த மாட்டோம் என்றார்கள்.

தேச விரோதிகள் போராடுகின்றார்கள்- நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கின்றார்கள் என்றனர்.

13 மாத கால இடைவிடா போராட்டம்- வெயில், மழை, பனி, கடுங்குளிர் – கொடிய கொரோனாவின் கொடுமை- 700 விவசாயிகள் மாண்டு மடிந்தனர்- ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.

வழியின்றி மூன்று சட்டங்களையும் மோடி அரசு திரும்பப்பெற்றது.

தற்போது – அமைச்சர் ராஜினாமா நடவடிக்கை என்கின்றார்கள். ஆர்.எஸ்.எஸ். வேடங்கள் நிரம்ப உள்ளன.

உங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்டு எதனையும் தீர்மானித்து விடலாம் என்று அகம்பாவத்துடன் செயல்படாதீர்கள்- உங்களின் ஆணவத்தை அகம்பாவத்தை மக்கள் திரள் மண்டியிடச் செய்யும்.

போராட்டங்களே நாட்டின் திசைவழியைத் தீர்மானிக்கின்றன.

நீட் தேர்வுக்கு முடிவு காணும் வரை போராட்டம் தொடரும்.

தேசிய கல்விக் கொள்கை கைவிடப்படும் வரை தொடரும்.

தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான நான்கு தொகுப்பு சட்டங்கள் திரும்பப்படும் வரை தொடரும்.

உண்மையான தேசபக்தர்கள் – ஜனநாயகவாதிகள் அணிவகுப்பார்கள்.

தேச விரோத ஆட்சியை அகற்றும் வரை போராடுவார்கள், வெற்றி பெறுவார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button