
2018ம் ஆண்டின் தமிழ்நாடு தொழில் நடத்துவதை எளிதாக்கல் சட்டம் (Tamilnadu Business Facilitation act – 2018) த.வெ.க. அரசால் திருத்தம் செய்யப்பட்டு, 2026 செப்டம்பர் 15 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டு, நவம்பர் 3 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.
இந்தத் திருத்தம், முதலீட்டாளர்களுக்கு விரைவாக அனுமதி வழங்க, ஒற்றைச் சாளர நடைமுறையை உருவாக்குகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் இது அலட்சியப்படுத்துகிறது.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தொழிலாளர்களின் உரிமைகளும், விவசாயிகளின் வாழ்வாதாரமும், மீனவர்களின் தொழிலும், பழங்குடியின மக்களின் உரிமைகளும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுமானால் அந்த வளர்ச்சியின் பயன் யாருக்கானது?
இந்தச் திருத்தச் சட்டத்தின் 2ஆம் பிரிவின்படி, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் 22 சட்டங்கள் விதிக்கும் நிபந்தனைகள் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. அவற்றில் நிலம், நகரமைப்பு, பொதுச் சுகாதாரம், குடிநீர் மற்றும் வடிகால், உள்ளாட்சி அமைப்புகள், மின்சாரம், மருத்துவ நிறுவனங்கள், தீயணைப்புப் பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான முக்கியமான சட்டங்களும் அடங்கும்.
ஒற்றைச் சாளர இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் போதும். ஒரு தொழிற்சாலை அமைக்கப்படும் இடத்தில் நிலத்தடி நீரின் நிலை என்ன? அருகில் விவசாய நிலங்கள் உள்ளனவா? குடியிருப்புகள் உள்ளனவா? நீர்நிலைகள் பாதிக்கப்படுமா? அப்பகுதியில் ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதா? இவை தொடர்பான சட்டங்களின் வழி வகைகள் கடைப்பிடிக்கப் பட்டுள்ளதா? என்பது அவசியமில்லை. அந்தச் சட்டங்களில் உள்ள படிவங்களை நிரப்ப வேண்டியது கூட இல்லை.
அந்தச் சட்டங்களின் விதிமுறைகள் அனைத்தையும் செயல்படுத்துகிறோம் என்று ஆலை முதலாளி “சுய சான்றிதழை” அவரே கொடுத்துக்கொள்ளலாம். அது உண்மைதானா என்று அரசு அதிகாரிகள் ஆய்வு செய்யத் தேவையில்லை.
இந்த விண்ணப்பத்தை பெருமுதலாளிகள் கொடுத்துவிட்டால், 21 நாட்களுக்குள் அரசு முடிவெடுக்க வேண்டும். எந்தப் பதிலும் தராவிட்டால், தானாகவே அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்!
ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ள இடத்தின் நீர்வளம், சுற்றுச்சூழல், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம், பொதுச் சுகாதாரம் போன்றவற்றை ஆராய்வதற்கு இந்தக் காலக்கெடு போதுமானதாக இருக்குமா?
கால நெருக்கடியின் காரணமாக,அவசரமாக வழங்கப்படும் அனுமதிகள், உரிய ஆய்வுகள் முழுமையாக நடைபெறாமல் போகும் சூழலை உருவாக்கும். அதன் சுமையை சுற்றியுள்ள மக்களும் தொழிலாளர்களும் தான் தாங்க வேண்டியிருக்கும்.
16-A பிரிவின் படி தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் ஒன்றை உருவாக்குகிறது. தலைமைச் செயலாளர் இதன் தலைவராகவும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் செயலாளர், உறுப்பினர் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்கள்.
200 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட நேரடி முதலீடு, 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய திட்டங்கள் உள்ளிட்ட பெரிய முதலீட்டுத் திட்டங்களுக்கு இந்த ஆணையம் உதவுவதற்கான அதிகாரங்களைக் கொண்டுள்ளது. தொடர்புடைய அரசு அமைப்புகளுக்கு அனுமதிகளை விரைவுபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்க முடியும்.
இவ்வளவு உயர்மட்ட அதிகாரம் கொண்ட அமைப்பில் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியினர், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய உள்ளூர் மக்களுக்கு பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படவில்லை.
முதலீட்டாளர்களின் தேவைகளைக் கவனிக்க உயர்மட்ட ஆணையம் இருக்கும்போது, அந்த முதலீடுகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களின் உரிமைகளைக் கவனிக்க இணையான அமைப்பு இல்லை என்பது கவலைக்குரியது.
16-A பிரிவின் கீழ், சிப்காட், டிட்கோ, சிட்கோ, தாட்கோ, எல்காட் போன்ற அமைப்புகளால் ஒதுக்கப்பட்ட தொழில் நிலங்களின் பயன்பாட்டையும் இந்த ஆணையம் மறுபரிசீலனை செய்ய முடியும்.
தொழில் நிலங்களின் பயன்பாட்டை ஆய்வு செய்வது என்ற பெயரில் நிலத்தின் பயன்பாடு தொடர்பான முடிவுகள் மாற்றப்படும் சூழல் உருவானால், அது விவசாய நிலங்கள், நீர்நிலைகள், பொதுப் பயன்பாட்டு நிலங்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். குறிப்பாக, சுற்றுச்சூழல், பொதுச் சுகாதாரம், உள்ளாட்சி நிர்வாகம் போன்றவற்றில் நிபுணத்துவம் சார்ந்த ஆய்வு முடிவுகள் அலட்சியப்படுத்தப்படும் அபாயமும் உள்ளது.
பழங்குடியினர், தலைமுறைகளாக அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். அந்த மக்களின் உரிமைகளும் கருத்துகளும் புறக்கணிக்கப்படும்.
மேலே சொன்ன 22 சட்டங்களின் விதிமுறைகள், முதலாளிகளின் திட்டங்களோடு முரண்படும் இடங்களில், தொழில் எளிதாக்கல் சட்டம், சில விதிமுறைகளை தள்ளிவைத்துவிடலாம்.
அந்த 22 சட்டங்களோடு, தேவைப்பட்டால் இன்னும் கூடுதலாக நடைமுறையில் உள்ள வேறு சட்டங்களையும் பட்டியலில் இணைக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்படுகிறது. சரியாகச் சொன்னால், 200 கோடி ரூபாயை முதலீடு செய்யும் முதலாளியை எந்தச் சட்டமும் தடுக்க முடியாது என்பதை ஒரு சட்டத்தின் மூலமே தமிழ்நாடு அரசு அறிவிக்கிறது.
ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் சட்டங்கள், வன உரிமைச் சட்டம், கடலோர ஒழுங்குமுறை விதிகள் போன்றவை இந்த மாநிலச் சட்டத்திருத்தத்தால் தானாகவே ரத்து செய்யப்படுவதில்லை. அவை தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. இருப்பினும், மாநில அளவிலான அனுமதிகளை விரைவுபடுத்தும் நடைமுறைகள், அவற்றுடன் தொடர்புடைய ஆய்வுகளின் தரத்தையும் கண்காணிப்பையும் பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளது.
மேலும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், ரசாயனக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள் ஆகியவை முறையாகக் கையாளப்படாவிட்டால் நிலம், நீர், காற்று மாசுபடும். இதனால் விவசாயம் பாதிக்கப்படும்; மீன்வளம் பாதிக்கப்படும்; குடிநீர் தட்டுப்பாடு உருவாகும்; பொதுமக்களின் உடல் நலமும் பாதிக்கப்படும்.
இதன் நேரடிப் பாதிப்பைச் சந்திப்பவர்கள் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மட்டுமல்ல. கழிவுகளைச் சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள், கழிவுநீர் கால்வாய்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகியோரும் கடுமையான ஆபத்துகளை எதிர்கொள்கிறார்கள்.
மொத்தத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தால் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியினர், சிறு தொழில் சார்ந்த மக்கள் மற்றும் தொழிற்சாலைகளைச் சுற்றி வாழும் பொதுமக்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரமும் உடல்நலமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் புறக்கணிக்கப்படுகிறது.
-
-
- தொழில் நடத்துவதை எளிமையாக்குகிறோம் என்ற பெயரில் வழங்கப்படும் தொழில் அனுமதிகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.
- சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ளிட்ட பொருத்தமான சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- பாதிக்கப்படும் மக்களின் கருத்துகளைக் கேட்கும் முறையும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் உத்தரவாதமும் இருக்க வேண்டும்.
- முதலீட்டு ஆணையத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்.
- இவை அரசுக்கு அளிக்கும் மனுக்களால் மட்டும் நிறைவேறிவிடாது. தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள், பழங்குடியினர் சங்கங்கள், சுற்றுச்சூழல் இயக்கங்கள், மக்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து சட்டத்திருத்தத்தின் பாதிப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
- தேவையான திருத்தங்களுக்காகவும் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும் ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
- தொழிலாளர்களின் போராட்டம் என்பது ஊதியம், போனஸ், வேலைநிரந்தரம், ஓய்வூதியம் ஆகியவற்றோடு, பாதுகாப்பான பணிச்சூழல், தூய்மையான காற்று, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவு மேலாண்மை, வெப்பப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு ஆகியவைக்கான போராட்டங்களாக வளர வேண்டும்.
-
முதலீடுகள் வரட்டும்; தொழில்கள் வளரட்டும். ஆனால், அந்த வளர்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரமும், இயற்கை வளங்களும் பலியிடப்படக் கூடாது. வளர்ச்சி என்பது முதலீட்டின் அளவால் மட்டும் அளவிடப்படக் கூடாது; அது மக்களின் வாழ்க்கையை எந்த அளவுக்கு மேம்படுத்துகிறது என்பதில்தான் மதிப்பிடப்பட வேண்டும்.