சட்டமன்றத்தில் மக்களின் குரலை வலுவாக ஒலிக்கச் செய்வோம்!
இடைத்தேர்தல் குறித்து இடதுசாரித் தலைவர்கள் அறிவிப்பு

அரசின் குரலாக அல்லாமல், ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் குரலாக சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குரலுக்கு கூடுதல் பலம் சேர்க்க இடதுசாரி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் 15.09.2026 அன்று கூட்டாக வேட்பாளர்களை அறிமுகம் செய்தனர். பின்னர் அவர்கள் பேசிய விவர,ம் வருமாறு:
தோழர் மு.வீரபாண்டியன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசியது வருமாறு:
“மக்களை அரசியலுக்கு அப்பால் நிறுத்துகிற முயற்சிகள் நடைபெறுகின்றன; மக்களை அரசியல் மயமாக்க விரும்புகிறோம். சாதி, மதங்களுக்கு அப்பால், இன பேதங்களுக்கு அப்பால், பிரதேச வெறிகளுக்கு அப்பால், தமிழக மக்கள் நற்சிந்தனையுடன், தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ் மண்ணை இடதுபக்கம் திருப்ப வேண்டிய பெரும் பொறுப்பு இருப்பதாகக் கருதுகிறோம்.
எனவே மக்களோடு உரையாட இந்தத் தேர்தலை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கிராமப் புறங்களில் இருக்கிறவர்கள் புலம்பெயர்கிறார்கள், வாழ்வுக்காக தூர தேசங்களுக்குச் செல்கிறார்கள். அதுபற்றி சட்டமன்றத்தில் உரையாடல் இல்லை. நாடு இவ்வளவு வளர்ச்சி அடைந்த பிறகும் கிராமப்புற மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை; போதிய அவசரகால ஊர்திகள் இல்லை.
கல்வி நிறுவனங்கள் அரசின் பொறுப்பிலிருந்து மெல்ல மெல்ல நழுவி அது தனியார் பொறுப்பாகி விட்டது. பள்ளிக்கூடங்களும் அவ்வாறே புற்றீசல்போல் தனியார் மயமாகி வருகின்றது, மருத்துவமனைகளும் தனியார் மயமாகி வருகின்றது. அரசு சேமநல அரசு என்பதனுடைய பொருளை இழந்து வருகிறது.
இந்தச் சூழலில் கம்யூனிஸ்டுகள் சட்டமன்றத்திற்குச் சென்றால் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், உழைக்கும் மக்களின், ஏழை எளிய மக்களின் குரலாகவும் சட்டமன்றத்தில் ஒலிப்பார்கள். சட்டமன்றம் வெறும் கூச்சல் அரங்காக இல்லாமல், அதிகம் சத்தம் போடுகிற சத்தக் கடையாக இல்லாமல், மக்கள் அரங்கமாக மாற்றுவதற்கு பல அறிஞர்கள் முயற்சித்திருக்கிறார்கள், பல்வேறு விற்பன்னர்கள் முயற்சித்திருக்கிறார்கள். அவையாவற்றையும் உள்வாங்கி சட்டமன்றத்தின் விழுமியங்களை உயர்த்துவதற்கு இடதுசாரி வேட்பாளர்கள் பாடுபடுவார்கள்.
அரசின் குரலாக அல்லாமல், மக்களின் குரலாக, ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் குரலாகவே சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குரலுக்கு கூடுதல் பலம் சேர்க்க, எங்கள் இரு கட்சியின் வேட்பாளர்களையும் சட்டமன்றத்திற்கு அனுப்பிட வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவின் சார்பிலும், இடதுசாரிகளின் கட்சிகளின் சார்பிலும் தமிழ்கூறும் நல்லுலகை கரம்கூப்பி கேட்டுக்கொள்கிறோம்.” – இவ்வாறு மு.வீரபாண்டியன் கூறினார்.
தோழர் பெ.சண்முகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியது வருமாறு:
“சட்டமன்றத்தில் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், இடதுசாரி கட்சிகளின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள் என்பதையும், மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
எங்களுக்கு இரண்டு, இரண்டு உறுப்பினர்கள் என்பதால், மிகக் குறைவான நேரத்தைச் சபாநாயகர் கொடுத்தாலும், அதை ஆக்கப்பூர்வமாகவும், மக்களுடைய பிரச்சினைகளை எதிரொலிக்கக்கூடிய வகையிலும் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தியிருப்பதை சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், பல்வேறு பத்திரிகைகள், ஊடகங்களில் அவர்களைப் பற்றி வந்திருக்கக்கூடிய செய்திகளே அதை வெளிப்படுத்தும்.
ஆகவே மக்கள் நலன் சார்ந்து, சட்டமன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியதில் கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி இடதுசாரிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகத்தான பங்கு உண்டு. அதை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் தாராபுரம், மதுராந்தகம் இரண்டிலும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்கள் குரல் சட்டமன்றத்தில் வலுவாக எதிரொலிக்கும்.
ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்திருப்பதாலேயே அந்த அரசாங்கம் (தவெக அரசு) செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவு தருவதாகவும் பொறுப்பேற்பதாகவும் அர்த்தமாகாது.
இந்த 120 நாள் ஆட்சியில் எந்தெந்தப் பிரச்சினைகளில் எல்லாம் த.வெ.க. ஆட்சியின் நடவடிக்கைகளில் இடதுசாரிகள் மாறுபட்டிருக்கிறோம் என்பதை தெளிவாக நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். நாங்கள் உடன்படுகிற விஷயத்தில் வரவேற்கவும், மாறுபடுகிற விஷயங்களில் எங்களுடைய எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தவும் தயங்கவே இல்லை. இந்த அணுகுமுறை எதிர்காலத்திலும் தொடரும்.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் மக்கள் எந்த வேட்பாளரை, எந்தக் கட்சியை நம்பி வாக்களித்தார்களோ, அந்த மக்களுக்குத் துரோகம் செய்யக்கூடிய வகையில், 20 நாள்களுக்குள் விரலில் வைத்த மை அழிவதற்கு முன்பாக, அவர்கள் வேறொரு கட்சியிலே போய்ச் சேர்ந்தது என்பது மக்களுக்கு இழைத்தத் துரோகம். அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
அதே நபர்கள் மீண்டும் இங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். நாளை இங்கிருந்து வேறு இடத்திற்குப் போக மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அல்லது என்ன காரணத்துக்காக, எதை எதிர்பார்த்து அங்கே போய்ச் சேர்ந்தார்கள் என்பதற்கான விளக்கத்தையும் அவர்கள் சொல்ல வேண்டும். இது தேர்தல் பரப்புரையில் மிக முக்கியமான இடத்தை, அந்த வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்கிற முறையில் நிச்சயமாக நாங்கள் முன்வைப்போம்.” இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார்.
தோழர் பழ.ஆசைத்தம்பி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி பேசியது வருமாறு:
“தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பாக இரண்டு தொகுதிகளிலும் கம்யூனிஸ்டுகள் போட்டியிடுகிறோம். இந்த இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் ஏன் நடைபெறுகிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். இடைத்தேர்தல் என்பது எந்தச் சூழலில் நடைபெறுகிறது? 2026 தேர்தல் முடிந்து 2 மாதம் வருவதற்கு முன்பாகவே வாக்களித்த மக்களையெல்லாம் மதிக்காமல் தூக்கி எறிந்துவிட்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியில் நுழைகிறார்கள்.
எனவே அண்ணா தி.மு.க.வைப் பொறுத்தவரை தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிபெற வைத்துவிட்டார்கள். ஆனால், அந்த வேட்பாளர்கள் என்ன செய்தார்கள் என்பதிலேயே அந்தக் கட்சியினுடைய தோல்வி இருக்கிறது. வேட்பாளர்களுடைய தோல்வி இல்லை, கட்சியினுடைய தோல்வியே அதில் இருக்கிறது. மீண்டும் அதே கட்சியை அதே தொகுதியில் இன்னொரு வேட்பாளரை நிறுத்தி அவர்களையும் தேர்தலில் களம் காண வைக்கிறார்கள்.
வாக்களித்த அந்த வாக்காளர்களை மதிக்காமல், ஒரு கட்சியில் இருக்கிற சட்டமன்ற உறுப்பினரை தன் கட்சியிலே இணைத்துக் கொண்டிருக்கிற த.வெ.க., அப்படி என்றால், தூய சக்தி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற, தீய சக்திகளை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டோம் என்று சொல்லுகிற த.வெ.க. அவர்களை அணைத்துக் கொண்டது. அப்பொழுதே இடதுசாரிகள் கண்டித்தோம். ஆனால் அதற்குப் பிறகு அதே வேட்பாளர்களை அதே தொகுதியிலே களம் இறக்குகிறது.
எனவே இந்த இரண்டு அரசியல் கட்சியினுடைய நிலை என்னவென்று தெரியும். தி.மு.க.வை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதும் தெரியும். இந்த நிலையில்தான் இடதுசாரிகள் உண்மையிலேயே மக்களுக்காகப் போராடுகிற கம்யூனிஸ்டுகள் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடுகிறோம். மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சி.பி.ஐ. (எம்.எல்) விடுதலைக் கட்சி அவர்களோடு இணைந்து நின்று அவர்களுடைய வெற்றிக்காகப் பாடுபடும்.” – இவ்வாறு பழ.ஆசைத்தம்பி உரையாற்றினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயாளர் எம்.ரவி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் வகிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நம்புராஜன், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா, சிபிஐ (எம்எல்)எல் மாவட்டச் செயலாளர் இரணியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
