கட்டுரைகள்

அணு ஆயுத ஏகபோகத்தை உடைத்த சோவியத் ஒன்றியம்

ஆனந்த் பாசு

29 ஆகஸ்ட் 1949. சோவியத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கஜகஸ்தானின் செமிபாலாட்டின்ஸ்க் சோதனைத் தளத்தில் காலை 7 மணியளவில் ஒரு அணு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்தது.

அது வெறும் 22 கிலோ டன் அளவிலான அணு வெடிப்பு அல்ல; உலக அரசியலின் அதிகாரச் சமநிலையை மாற்றிய வெடிப்பு. அந்த அணு சாதனத்திற்கு ‘முதல் மின்னல்’ என்று பொருள்படும், ‘First Lightning’ என்று பெயரிடப்பட்டது. ஜப்பானின் ஹிரோஷிமாவைவிட அதிகளவில் நாகசாகியை அழித்த அமெரிக்காவின் ‘பெருத்த மனிதன்’ என்று பொருள்படும் ‘Fat Man’ என்று பெயர் சூட்டப்பட்ட அந்த பேராற்றல் வாய்ந்த அணு குண்டின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘புளூட்டோனியம் உள்வெடிப்பு’ (plutonium implosion) வகை ஆயுதம் அது.

அந்த ஒரே ஒரு அணு வெடிப்பின் மூலம் 1945ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா கையில் வைத்திருந்த அணு ஆயுத ஏகபோகம் முடிவுக்கு வந்தது. ஆம். அணு ஆயுதம் இனி ஒரு நாட்டின் தனிச்சொத்து அல்ல என்று சோவியத் ஒன்றியம் உலகுக்கு உணர்த்தியது. உலக புவிசார் அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது.

இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாயில் அமெரிக்கா மட்டுமே அணு ஆயுதம் வைத்திருந்தது. ஜப்பான் சரணடைந்த நிலையிலும் கூட, 1945 ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மற்றும் ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி என ஜப்பானின் இரு நகரங்களின் மீது அணுகுண்டு வீசியது அமெரிக்கா. லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் காவுகொண்ட அந்தத் தாக்குதல்கள் ஜப்பானிய இராணுவவாதத்தை வீழ்த்துவதற்காக நடத்தப்பட்டவை அல்ல; அணுகுண்டு பயன்படுத்தப்பட்ட உடனேயே அமெரிக்கா தன்னை உலகின் ஒரே அணு வல்லரசாக சுயதம்பட்டம் அடித்தது.

அதே நேரத்தில், சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் கோடிக்கணக்கில் மக்களை இழந்திருந்தது. அதன் தொழிற்சாலைகள், நகரங்கள், விவசாயப் பகுதிகள், போக்குவரத்து அமைப்புகள் பெரும் அழிவைச் சந்தித்திருந்தன. அந்த நிலையில் அமெரிக்க அணு ஆயுத ஏகபோகம் சோவியத் ஒன்றியத்தின் மீது ஜப்பானின் மீதான அணுகுண்டு தாக்குதல் புதிய அச்சுறுத்தலை உருவாக்கியது.

இதனால் சோவியத் தலைமைக்கு முன் இருந்த கேள்வி, “அணுகுண்டு வேண்டுமா, வேண்டாமா?” என்பதல்ல. “அமெரிக்க அணு ஏகபோகத்தின் கீழ் ஒரு சோசலிச நாடு பாதுகாப்பாக இருக்க முடியுமா?” என்பதே. இகோர் குர்ச்சடோவ் தலைமையிலான சோவியத் ஒன்றிய விஞ்ஞானிகள், யூலி காரிட்டன் உள்ளிட்ட இயற்பியலாளர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் என ஒரு மிகப்பெரிய அறிவியல்–தொழில்துறை இயக்கம் உருவாக்கப்பட்டது. மன்ஹாட்டன் திட்டத்திலிருந்து சோவியத் உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்கள் திட்டத்தை விரைவுபடுத்தியதாக வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் உளவுத் தகவல் மட்டும் அணுகுண்டை உருவாக்கிவிட முடியாது.

இரண்டாம் உலகப் போரின் இடிபாடுகளிலிருந்து எழுந்த சோவியத் ஒன்றியம் அதற்குத் தேவையான அறிவியல் தொழில்நுட்பம், மனித வளம் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றி, 1949 ஆகஸ்ட் 29 அன்று வெற்றிகரமான சோதனையை நிகழ்த்தியது. இதனை ஒரு சில வாரங்களில், அமெரிக்கக் கண்காணிப்பு அமைப்புகள், உறுதி செய்தன. அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் சோவியத் ஒன்றியமும் அணுகுண்டை உருவாக்கியிருப்பதை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவின் அணு ஏகபோகம் முடிவுக்கு வந்தது.

ஆனால், இங்கேதான் வரலாற்றின் மிகப் பெரிய முரண்பாடு தொடங்கியது. அமெரிக்க அணு ஏகபோகத்தை உடைத்த சோவியத் அணுகுண்டு உலகை அணு ஆயுதமற்றதாக ஆக்கவில்லை. மாறாக, அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும், அணு ஆயுதத்தோடு நிற்காமல், அதைவிட ஆற்றல்மிக்க ஹைட்ரஜன் குண்டு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM), அணு நீர்மூழ்கிக் கப்பல்கள், குண்டுவீச்சு விமானங்கள் என்று ஏட்டிக்குப் போட்டியாய், ஆயுதப் போட்டி வேகமெடுத்தது. இரு தரப்பும் தங்களைத் தற்காப்புக்காக ஆயுதப்படுத்துவதாகக் கூறின. இதுவே ‘பனிப்போர்’ (Cold War) கால உலக அச்சுறுத்தலாக உருவெடுத்தது. இவ்வாறாக, பாதுகாப்பைத் தேடும் ஆயுதக் குவியல்கள், பாதுகாப்பின்மையையே உருவாக்கியது.

சோவியத் ஒன்றியம் அணு ஆயுதப் போட்டியை நிரந்தரமாக விரும்பியதா? இந்தக் கேள்விக்கான பதில் முக்கியமானது. ‘இல்லை’ என்பதையே வரலாறு பறைசாற்றுகிறது. 1949க்குப் பிறகு சோவியத் ஒன்றியம் அணு ஆயுதத்தை வைத்திருந்தாலும், அணு ஆயுதப் போட்டியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பல்வேறு சர்வதேச முயற்சிகளை மேற்கொண்டது.1950ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே, பொதுவான மற்றும் முழுமையான ஆயுதக்குறைப்பு (General and Complete Disarmament) என்ற கருதுகோளை முன்வைத்தது. அதாவது, அணு ஆயுதங்களை மட்டும் அல்ல; உலகின் அனைத்து நாடுகளின் ஆயுதப் படைகளையும் படிப்படியாகக் குறைத்து, உலக அமைதியை நிலை நாட்ட, முழுமையான ஆயுதக் குறைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் உள்ளடக்கம். இது ஒரு மிக முக்கியமான புவிசார் அரசியல் கருத்தாக்கமாகும்.

இதைத் தொடர்ந்து, 1958-ல் சோவியத் ஒன்றியம் அணு ஆயுதச் சோதனைகளுக்கு ஒருதலைப்பட்ச தடைக்காலத்தை (moratorium) அறிவித்தது. அமெரிக்காவும் பின்னர் சோதனைகளை நிறுத்தியது. ஆனால் ஆயுதங்களை சரிபார்த்தல் (verification), ஆய்வு செய்தல் (inspection), இறையாண்மை (sovereignty) போன்ற பிரச்சினைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆகவே, பனிப்போரின் அடிப்படைப் பிரச்சினையாக, ‘நம்பிக்கையின்மை’ வெளிப்பட்டது.

1961-ல் சோதனைகள் மீண்டும் தொடங்கியிருந்தாலும், அதன் பின்னர் ஏற்பட்ட சர்வதேச அழுத்தம் காரணமாக, 1963ஆம் ஆண்டு, பகுதிசார்ந்த அணுசோதனை தடை ஒப்பந்தத்திற்கு (Partial Test Ban Treaty) வழிவகுத்தது. அதன் மூலம், வளிமண்டலத்தில், கடலுக்குள், விண்வெளியில் அணு சோதனைகள் தடை செய்யப்பட்டன. ஆனால், நிலத்தடி சோதனைகள் தடை செய்யப்படவில்லை. எனவே, இது முழுமையான அணு ஆயுதத் தடை அல்ல. ஆயினும், அணு ஆயுதக் கட்டுப்பாட்டின் வரலாற்றில் முக்கியமான முதல் படியாக அமைந்தது.

அதன் பின்னர், 1968ல் அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty) உருவானது. “அணு ஆயுதம் இல்லாத நாடுகள் அணு ஆயுதம் உருவாக்கக் கூடாது; அணு ஆயுதம் கொண்ட நாடுகள் அணு ஆயுதக் குறைப்பு செய்து, இறுதியில் ‘ஆயுத ஒழிப்பு’ எனும் இலக்கை அடைய முற்பட வேண்டும்.” என்பதே இதன் உள்ளடக்கம்.

இதன் அடிப்படை முரண்பாடு என்னவென்றால், உலகம், ‘அணு ஆயுதம் வைத்திருந்த ஐந்து நாடுகள்’ எதிர் ‘அணு ஆயுதம் இல்லாத மற்ற பெரும்பாலான நாடுகள்’ என்று இருகூறாக்கப்பட்டது. அணு ஆயுதம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு வகை உரிமையும், மற்றவர்களுக்கு வேறு விதமான கட்டுப்பாடும் உருவானது. ஆகவேதான், இது அணு ஆயுதமற்ற உலகை உருவாக்குவதற்கான நிரந்தரத் தீர்வாக அமையவில்லை.

1972-ல் அமெரிக்கா–சோவியத் ஒன்றியம் இடையே உருவான ஒப்பந்தத்தின் வாயிலாக, முதன்முறையாக இரு அணு வல்லரசுகளும், “எவ்வளவு ஆயுதம் வைத்திருக்கலாம்?” என்று விவாதிக்கத் தொடங்கின. இதனால், ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்குப் பதிலாக அவற்றை கட்டுப்படுத்துவது என்ற அணுகுமுறை மேலோங்கியது. அடுத்த கட்டமாக இதைத் தொடர்ந்து 1979ல் அமெரிக்காவின் ஜிம்மி கார்டர் மற்றும் சோவியத்தின் பிரெஸ்னேவ் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை அமெரிக்க செனெட் நாடாளுமன்றம் ஏற்கவில்லை.

1985 ஆம் ஆண்டு, மிகேல் கோர்பச்சேவ் தலைமையில் சோவியத் ஒன்றியம் அணு ஆயுதக் குறைப்பை புதிய அரசியல் உயரத்திற்கு எடுத்துச் சென்றது. அணு சோதனைகளுக்கு தடை அறிவிக்கப்பட்டது. கோர்பச்சேவ் உலகின் அணு ஆயுதங்களை படிப்படியாக ஒழிக்கும் திட்டத்தை முன்வைத்தார். 2000ஆம் ஆண்டுக்குள் உலகை அணு ஆயுதமற்ற உலகாக மாற்றுவது அதன் இறுதி இலக்காக இருந்தது.

1986 அக்டோபரில் ஐஸ்லாந்து நாட்டில் அமெரிக்க அதிபர் ரீகனும், கோர்பசேவும் சந்தித்து, இரு தரப்பும் மிகப்பெரிய அளவில் அணு ஆயுதங்களைக் குறைப்பது குறித்து ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்தனர். உலகம் அணு ஆயுதமற்ற நிலைக்கு மிக அருகில் வந்த தருணம் அது. ஆனால் அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்புத் (missile-defence) திட்டம் இறுதி உடன்பாட்டுக்கு தடையாக நின்றது. ஆனாலும், அதன் தாக்கம் மறையவில்லை.

1987-ல் இருவருக்குமிடையே ‘இடைநிலை-தடுப்பு அணுசக்தி ஒப்பந்தம்’ (Intermediate-Range Nuclear Forces Treaty) கையெழுத்தானது. சோவியத் முன்னெடுத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தின் அடிப்படையில், 500 முதல் 5,500 கிலோமீட்டர் வரை பாயக்கூடிய ஏவுகணைகள் முழுமையாக அகற்றப்பட்டன. மேலும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அணு ஆயுத சரிபார்த்தல் மற்றும் நேரில் சென்று ஆய்வு ஆகிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அணு ஆயுதக் கட்டுப்பாடு சாத்தியம் என்பதை இது நிரூபித்தது. இதையடுத்து, 1991ல் கோர்பசேவ் முன்னெடுப்பில், மிகப் பெரிய அளவில் அணு ஆயுதக் குறைப்பை ஏற்படுத்திய அமெரிக்காவுடனான இன்னொரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால் இதே ஆண்டு வரலாறு வேறு ஒரு திருப்பத்தை எதிர்கொண்டது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. ஒரு சோசலிச அரசின் அணு ஆயுதக் குறைப்பு முயற்சிகள் அதன் புவிசார் அரசியல் அடித்தளத்தையே இழந்தது. 1980களில் கோர்பசெவ் முன்வைத்த, ‘பொதுவான மற்றும் முழுமையான அணுஆயுதக் குறைப்பு’ அணுகுமுறை தொடரவில்லை. 1972ல் போடப்பட்ட அமெரிக்க-சோவியத் ஒப்பந்தம், அமெரிக்காவால் 2002-ல் கைவிடப்பட்டது. 1987 இடைநிலை-தடுப்பு அணுசக்தி ஒப்பந்தம் 2019-ல் முடிவுக்கு வந்தது. அடுத்தடுத்து ஒப்பந்தங்கள் பனலவீனமடைந்தன அல்லது அதன் முடிவை எட்டின.

இன்று உலகம் மீண்டும் எங்கே செல்கிறது? அணு ஆயுதங்களை வெறும் இராணுவப் பிரச்சினையாகப் பார்க்க முடியாது. அவை உலக முதலாளித்துவத்தின் இராணுவ–தொழில்துறை அமைப்போடு நெருக்கமாக இணைந்துள்ளன. மூலதனம் லாபத்தைத் தேடுகிறது. அமெரிக்க அரசு உலக ஏகபோக அதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கிறது.

எனவேதான், 29 ஆகஸ்ட் என்பது ஒரு சோஷலிச நாட்டின் அணு சோதனையின் நினைவு நாள் மட்டுமல்ல. அது ஒரு கேள்வியை உலகத்தின் முன் வைக்கும் நாள். “அணு ஆயுதம் யாரிடம் அதிகம் இருக்க வேண்டும் என்பதா மனிதகுலத்தின் எதிர்காலம்?” அல்லது “எந்த நாட்டிடமும் அணு ஆயுதம் இல்லாத உலகமா மனிதகுலத்தின் எதிர்காலம்?” – இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுப்பதே நாகரிகத்தின் உண்மையான வெற்றி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button